Tuesday, April 19, 2011

தண்ணீர் சாபம்

”என் லைப்ல இது மாதிரி மழையப் பார்த்ததே இல்ல” என்கிறான் மேல் வீட்டுப் பையன் லோகித். அவனது வயது ஆறு.

கழனி எடுக்க வந்த மீனா பாட்டி, “எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து இது மாதிரி மழையப் பார்த்ததே இல்ல” என்கிறார். அவருக்கு எழுபத்தி ஐந்து வயது.

எனக்கும்கூட அப்படித்தான் தோன்றுகிறது. இருபது நாட்களாகக் கொட்டித் தீர்த்து விட்டது.எந்த ஆண்டையும் விட இந்த ஆண்டு இருபது சதவிகிதம் அதிகம் மழை பெய்துள்ளதாக செய்தித் தாள்கள் கூறுகின்றன.

“மாமழைப் போற்றுதும்
மாமழைப் போற்றுதும்”
என்று இளங்கோ அடிகள் மழையை வணங்கிப் போற்றுகிறார்.

இன்றோ , “இந்தச் சனியம் புடிச்ச மழை பேஞ்சும் கெடுக்குது: காஞ்சும் கெடுக்குது” என்று தெருவெங்கும் திசையெங்கும் பாதிக்கப் பட்ட மக்கள் மழையைச் சபிக்கிறார்கள்.

வைகையாற்றில் வரலாறு காணாத வெள்ளம். வெள்ளம் எனில் வெள்ளம், அப்படி ஒரு வெள்ளம்.

“கூட்டம் கூட்டம் கூட்டம்
கூடல் மாநகரில்
கூட்டம் பார்க்க
கூட்டம் கூட்டம் கூட்டம்”
என்பார் மீரா.கூட்டம் பார்க்கவே கூடும் தமிழ் ஜனத் திரள் அன்று தண்ணீர் பார்க்க வைகைக் கரையில் திரண்டது.

இளைஞர்கள் தண்ணீரைக் கொண்டாடிக் கொண்டாடிக் கூத்தாடியதைப் பார்க்க முடிந்தது.

“தண்ணீரைப் பார்க்க எவ்வளவு சந்தோசமா இருக்குத் தெரியுமா?. லீவு போட்டுட்டு இதைப் பார்க்க வந்தேன் என்கிறான் ஒரு இளைஞன்.

தொலைக் காட்சியில் நாம் கண்ட அந்தக் காட்சி, சிலம்பில் வரும் ஒரு காட்சியோடு பெருமளவு ஒத்துப் போனது. இளங்கோ அடிகள் காவிரியில் வெள்ளம் கண்டு பொங்கிப் பூரித்துக் கொண்டாடிய ஜனங்களின் ஆர்ப்பரிப்பை சிலம்பில் இப்படிப் பதிகிறார்.

“உழவர் ஓதை
மதகோதை
உடை நீர் ஓதை
தன் பதங்கொள் விழவர் ஓதை
சிறந்து ஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி”

காவிரியில் பெருகி ஆர்ப்பரித்து ஓடி வரும் நீரின் ஓசை, பெண்களின் குலவை ஒலி,  விவசாயிகளின் ஆனந்தக் கூப்பாடு எல்லாம் அந்தக் காலம் எனில், கரவொலி, விசில், குத்தாட்டம் என்பன இந்தக் காலம்.

ஆறுகளில் அன்றும் தண்ணீர் வந்தது, இன்றும் வருகிறது.

ஆனால் அன்று இல்லாத தண்ணீர்ப் பஞ்சம் இன்று தலை விரித்து ஆடுகிறது. அது ஏன்?

“ அப்ப இருந்ததை விடவும் இப்ப ஜனத் தொகை கூடிப் போச்சு இல்ல” என்று சொல்லக் கூடும்.

ஆமாம், ஒத்துக் கொள்ள வேண்டும்தான். ஆனால் அதுமட்டும்தான் காரணமா?

முன்பெல்லாம் எவ்வளவு மழைப் பெய்தாலும் ஆறுகளில் இவ்வளவு வெள்ளப் பெருக்கு வராது என்றும், பெய்த மழை நீர் ஒன்பது முதல் பத்து மாதங்களுக்கு நதிகளில் சீராக ஓடி வரும் என்றும், இப்போதோ பெய்கிற மழை நீர் மூன்று அல்லது நான்கே மாதங்களில் அவசர அவசரமாய்ப் பாய்ந்தோடி, கடலில் கலந்து வீணாவதாகவும் ஓசை காளிதாஸ் சொல்கிறார்.

மட்டுமல்ல, மழை நீர் வெள்ளமாய் வருகிறபோது உயிர்ச் சேதம் உட்பட அனைத்துச் சேதங்களையும் உப விளைவுகளாகத் தருவதாகவும் சொல்கிறார்.

அப்போது மிதமாய் ஓடிய ஆற்று நீரை இப்போது வேகம் பெறச் செய்த சக்தி எது? அவரிடமே கேட்டோம்.

”அதற்கு நதி எப்படி உற்பத்தியாகிறது என்பது புரிய வேண்டும்.அப்போதுதான் இது விளங்கும்,” என்றார்.

”நதி ஏரியில் இருந்துதான் பிறக்கும்”

“இல்லை” என்று அவர் மறுத்த போது வியப்பின் உச்சிக்கே போனேன்.

மலைகளில் ‘சோலாஸ்’ என்று அழைக்கப் படும் சோலைக் காடுகள் உண்டு.அந்தக் காடுகள் ஒரு விதமான சிறப்புத் தன்மை கொண்டவை.

சோலாஸ் அமைந்துள்ள நிலப் பகுதி மழை நீரை முற்றாய் உறிஞ்சி சேமித்து வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை.அவ்வாறு சேமிக்கப் பட்ட நீர் முற்றாய் வழிந்து விடாமல் பையப் பையக் கசியச் செய்யும் தன்மையை சோலாஸ் கொண்டுள்ளன. இவ்வாறு பையப் பைய நீர் கசிந்ததால் தென்னக நதிகளில் நீண்ட காலத்திற்கு நீர் வரத்து இருந்தது. சோலாஸ் எனப்படும் சோலைக் காடுகளில் இருந்து கசியும் நீரே நமது தென்னக நதிகள் என்கிற உண்மையை அவர் சொன்னபோது இருபத்தி ஐந்து ஆண்டுகால ஆசிரியன் மாணவனாய் ஆனேன்.

இவைதான் நீர்ப்பிடிப்பு ஆதாரங்கள். இந்தக் கசிவு ஏறத்தாழ பத்து மாதங்கள் வரை நீடித்தது.

“இப்போது ஏன் இப்படி?”

தேயிலைத் தோட்டங்களுக்காகவும், காபித் தோட்டங்களுக்காகவும் இச்சோலைக் காடுகள் அழிக்கப் பட்டதன் விளைவாக, நீர்ப்பிடிப்பு ஆதாரங்கள் குறைந்துபோய் ,  பெய்கிற மழை நீர் முற்றாய் விரைவாய் செலவழிக்கப் படுகிறது.

அன்றைக்கு நதி மிதமாக ஓடியிருக்கிறது. அதனால்தான் இளங்கோ அடிகள்  ”நடந்தாய் வாழி காவேரி” என்று பாடியிருக்கிறார்.

இவ்வளவு மழை பெய்தும் இவ்வளவு தண்ணீர்ப் பஞ்சம் வருவதற்கான ஒரு காரணம் இது.

பணப் பயிர் வளர்க்க வேண்டியும், பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்புமாய் எஞ்சியிருக்கின்ற சோலாஸென்று அழைக்கப் படும் நீர்ப் பிடிப்பு ஆதாரங்களை முற்றாய் அழித்துப் போடுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

இது அதிக அளவில் தண்ணீர்ப் பஞ்சத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.

இரண்டாவதாக இயற்கை தரும் தண்ணீரைச் சேமித்து வைக்காமல் ஊதாரித் தனமாய் செலவு செய்யும் மனிதர்களாய் நாம் மாறிப் போனோம். நீரைச் சேமித்து செலவு செய்யும் பழக்கம் நமது முன்னோர்களுக்கு இருந்திருக்கிறது. நாம்தான் நல்லப் பழக்கங்களையெல்லாம் பையப் பையத் தொலைப்பதில் மன்னர்களாயிற்றே.

மன்னர்களுக்கும் அந்தக் காலத்து மந்திரிகளுக்கும் நீரின் அருமையும் நீர் சேமிப்பின் முக்கியத்துவமும் நன்கு தெரிந்திருக்கிறது. பள்ளியில் நமக்குக் கொட்டிக் கொட்டிச் சொல்லிக் கொடுத்தார்கள். ராஜராஜச் சோழன் குளம் வெட்டினான், ராஜேந்திரச் சோழன் குளம் வெட்டினான், திருமலை நாயக்கர் குளம் வெட்டினார் என்று. எல்லா மன்னர்களும் ஏரி, குளங்களை வெட்டி நீரைச் சேமித்து வளமான ஒரு வாழ்க்கையைத் தம் மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

கேட்கலாம், ராஜ ராஜன்தான் நிறைய ஏரிகளையும் குளங்களையும் வெட்டினானே பிற்கு ஏரிகளையும் குளங்களையும் வெட்ட வேண்டிய அவசியம் ராஜேந்திரச் சோழனுக்கு ஏன் வந்தது?. வரலாற்றின் பரந்த பக்கங்களில் இந்தப் பூமியின் எல்லப் பரப்பிலும் ஒவ்வொரு மன்னனும் ஏரிகளையும் குளங்களையும் வெட்டியிருக்கிறார்களே. அவர்களுக்கெல்லாம் என்ன பைத்தியமா?

ஒவ்வொரு நாளும் பெருகி வரும் ஜனத்தொகை நீர்த் தேவையை அதிகரிக்கும் என்ற அடிப்படை அறிவு, இன்றைய தொழில் நுட்ப அறிவுக்கு வாய்ப்பே இல்லாத அன்றைய மன்னர்களுக்கும் மந்திரிகளுக்கும் இருந்திருக்கிறது. அவர்கள் புதிது புதிதாய் ஏரிகளையும் குளங்களையும் வெட்டி நீரைச் சேமித்து இருக்கிறார்கள்.

எனில் மக்களாட்சியில் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இன்னமும் கூடுதலான பொறுப்புணர்வுமக்கறையும் இருந்திருக்க வேண்டும். இருந்திருக்கும் பட்சத்தில் ஏரிகளும், குளங்களும், தடுப்பணைகளும் நிறையப் பெருகியிருக்க வேண்டும்.

செய்தோமா?

இருந்த ஏரிகளையும் குளங்களையும் ப்ளாட் போட்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்தும் பாவப் பட்டல்லவா போனோம்.

ஒரு பக்கம் நதி நீரின் விரைந்த பயணம், மறுபக்கம் நீரைச் சேமிக்க புதிய ஏற்பாடுகளைச் செய்யத் தவறியதோடு இருந்த ஏற்பாடுகளையுமழித்தொழித்த குற்றவாளிகளாய்க் குறுகி நிற்கிறோம்.

இன்னொருபக்கம் ஒரு தனிப் பதிவிற்கே தேவை இருக்குமளவிற்கு நீள்கிறது மணல் திருட்டு.

ஏரிகளில் குளங்களில் நீர் தேங்கி நின்றால்தான் நிலத்தடி நீர் சமனிலைப் படும். நிலத்தை நீரைச் சமனிலைப் படுத்தத் தவறியதோடு இருக்கிற நிலத்தடி நீரையும் பன்னாட்டு நிறுவனங்கள் உறிஞ்சிக் கொழுக்க அனுமதித்து இருக்கிறோம்.

இப்படியே போனால் இன்னும் இருபது அல்லது முப்பது ஆண்டுகளில் ஒரு குடம் குடிநீருக்காக நம் போமியில் கொலையேகூட நடக்கலாம்.

சரி, என்ன செய்யலாம்?

ஒன்று, சோலாஸ் எனப்படும் இயற்கை நீர்ப் பிடிப்புஆதாரங்களைப் புதிதாய் ஏற்படுத்த முடியுமா என்பதை ஆராய வேண்டும்.இதற்காக நிதி நிலை அறிக்கையில் போதுமான அளவு நிதி ஒதுக்க வேண்டும்

அண்டம் நோக்கி, வெளி குறித்து, நமக்கு இருக்கும் அக்கறையை நாம் இது குறித்தும் நீட்டிப்புச் செய்ய வேண்டும். விஞ்ஞானிகளின் நேரத்தை, செயலை இது நோக்கியும் நகர்த்த நிர்ப்பந்திக்க வேண்டும்.

இரண்டாவதாக, ஏற்கனவே இருக்கிற நீர்ப் பிடிப்பு ஆதாரங்களை அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்.

ஏரிகள், குளங்கள் இருந்த இடங்களில் கட்டப் பட்டுள்ள வீடுகளைத் தகுந்த மாற்று ஏற்பாடுகளோடு அப்புறப் படுத்தி அவற்றை மீட்டெடுக்க வேண்டும். அஙே பன்னாட்டு நிறுவனக்களினாலைகள் இருப்பின் அவற்றை அ ந்நிய ஆக்கிரமிப்பாகவே கருதி அகற்ற வேண்டும்.

புதிது புதிதாய் ஏரிகளை குளங்களை தடுப்பணைகளை ஏற்படுத்த வேண்டும்.

நிலத்தடி நீரை உறிஞ்சி கொழுக்கும் நிறுவனங்களை அடித்து விரட்ட வேண்டும்.

இல்லாது போனால் முன்பே சொன்னதுதான்.

ஒரு குடம் குடி நீருக்காய் இந்தப் பூமியில் கொலைகளே விழும்

எனது “ பத்து கிலோ ஞானம்” என்ற கட்டுரைத் தொகுப்பிலிருந்து.

38 comments:

 1. எத்தனை அருமையான கருத்துக்கள் ஏரி, குளங்களைப் பற்றி. நாம் சொல்லும் வார்த்தைகள், எழுதும் எண்ணங்கள் காற்றிலே கரைந்து விடுமோ, கருப்பு எழுத்துக்களாய் பதிவுகளில் இருந்திடுமோ? எம் வலைபதிவிலும் சில வரிகளை கிறுக்கி வைத்துள்ளேன் நீரின் அவசியத்தை, சொயல்படுத்த வேச்டிய முறையை. வாழ்த்துக்கள், முயன்றவரை முனைப்போடு முயல்வோம்.

  ReplyDelete
 2. அருமையான பதிவு. தண்ணீர் வரும் காலத்தில் ஒரு அறிய பொருளாகி விடும். எனது இணைய தளத்தை பாருங்கள்.
  http://rathnavel-natarajan.blogspot.com
  அதில் எங்கள் ஊர் (ஸ்ரீ வில்லிபுத்தூர்) திருமுககுளத்தை பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.
  நன்றி.

  ReplyDelete
 3. மிகத் தேவையான பதிவு.நன்றி

  ReplyDelete
 4. Dear sir, Tamil Nadu people may not know the value of land, but as an Eelam tamil diaspora we long for some land to call ourself as our own. We expect you will take care of your land and the land will takecare of you.

  ReplyDelete
 5. இயற்கைகளை அழிப்பதால் நமக்குத்தான் பாதிப்பு.
  தெரிந்துகொண்டும் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள் !

  ReplyDelete
 6. @Dhavappudhalvan
  தவப் புதல்வன் அய்யா அவர்களுக்கு வணக்கம். தங்களது வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்

  ReplyDelete
 7. @Rathnavel
  அய்யா,
  வணக்கம். தங்களது வருகைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து கவனித்து ஆலோசனைகளை சொல்லுங்கள். உங்கள் வலையில் உங்களூர் குளங்களைப் பார்த்தேன். ரொம்பப் பொறாமையா இருந்தது.

  ReplyDelete
 8. @மிருணா
  மிக்க நன்றி தோழா.
  அடுத்தப் பதிவு எப்ப?

  ReplyDelete
 9. @ஹேமா
  அன்பின் ஹேமா,
  வணக்கம்.
  மிக்க நன்றி. அவர்கள் தொடர்ந்து கொண்டேதான் இருப்பார்கள். நாமும் தொடர்ந்த நமது எதிர்ப்பினை சொல்லுவோம்.

  ReplyDelete
 10. தண்ணீரின் முக்கியத்துவத்தினையும், இவ் உலகில் தண்ணீருக்காக எதிர் காலத்தில் நிகழும் சம்பவங்களையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 11. @நிரூபன்
  மிக்க நன்றி தோழர் நிரூபன்

  ReplyDelete
 12. மூன்றாம் உலக யுத்தம் என்று ஒன்று வந்தால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு தண்ணீர் தட்டுப்பாடு உலகளாவிய கிரச்சனையாக மாறி உள்ளது. தண்ணீரை தேக்கி வைப்பதன் அவசியம்பற்றிய உங்கள் பதிவு இன்றைய சூழலில் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. உலக அமைப்புகள் தண்ணீர் பிரச்சனைப்பற்றி நிறைய பேசிக்கொணடே உள்ளன. ஆனால் உருப்டியாக திட்டங்கள் எதுவும் இல்லை.

  ReplyDelete
 13. நல்ல பதிவு...

  //ஒவ்வொரு நாளும் பெருகி வரும் ஜனத்தொகை நீர்த் தேவையை அதிகரிக்கும் என்ற அடிப்படை அறிவு, இன்றைய தொழில் நுட்ப அறிவுக்கு வாய்ப்பே இல்லாத அன்றைய மன்னர்களுக்கும் மந்திரிகளுக்கும் இருந்திருக்கிறது.//

  அவர்கள் மக்களுக்காக சிந்தித்தார்கள்... அவர்களுக்கு அறிவு தானாக உதித்தது... இவர்கள் தன்னுடைய மக்களுக்காக மட்டும் சிந்திப்பதினால் அறிவு சுருங்கி விட்டது..

  ReplyDelete
 14. தண்ணீரின் முக்கியத்துவத்தினையும், இவ் உலகில் தண்ணீருக்காக எதிர் காலத்தில் நிகழும் சம்பவங்களையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 15. இன்றைய காலத்திற்க்கு தேவையான நல்ல பதிவு. நன்றி!

  ReplyDelete
 16. ந்மககு நாமே கெடுதல் செய்வதை எப்ப உணர?..

  ReplyDelete
 17. சோலாஸ் அமைந்துள்ள நிலப் பகுதி மழை நீரை முற்றாய் உறிஞ்சி சேமித்து வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை// புதிய தகவல்

  ReplyDelete
 18. பயனுள்ள சிந்தனை.
  சமூக நோக்குள்ள தலைவர்கள் எவரும் இன்று இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

  ReplyDelete
 19. Nice & thought provoking article. International experts are of the opinion that scarcity of water will be the biggest crisis in future. The next world war is likely over sharing of water resources. Govt & NGOs must launch result oriented programmes to conserve water.

  A.Hari
  http://inspireminds.in/

  ReplyDelete
 20. ஆனந்தன்October 17, 2011 at 11:08 AM

  வணக்கம் சகோ! மழை மற்றும் நீர்த் தேவைகள் பற்றிய கட்டுரையில், இளங்கோவை அழைத்த தாங்கள், “பரிபாடலை” விட்டு விட்டீர்களே...? என்ன தான் உயர்வு நவிற்சியில் பரிபாடலில் பாடியிருந்தாலும், வைகையை கடக்கும் போதெல்லாம் மனம் புழுங்கித்தான் போகிறது.
  சரி கருத்துக்கு வருவோம்...
  இன்றைய நாகரீக(??!!) மக்கள் தம் முன்னோர்களை விட தாம் மிக அறிவாளிகளென்று பறைசாற்றிக் கொள்ளும் பொழுதெல்லாம் நான் கொடுத்த ஒப்பீடுகள், ரா.சோழர்கள் தான். ஆயிரமாண்டுகளுக்கு முன்னாலிருந்த மனிதர்களை விட ஆயிரம் வருடம் பிந்தைய சிந்தனை கொண்டவர்களே நம்மை ஆண்டு கொண்டிருப்பவர்கள். சந்ததிகளுக்கு வெறும் காசுகளை வைத்துவிட்டு அவர்களின் ஆக்ஸிஜனை பிடிங்கிக்கொண்டு போகிறார்கள்.

  மேற்கண்ட புலம்பல்கள் நம்மைப் போன்ற எல்லோரும் புலம்பினாலும், நடைமுறைகுச் சாத்தியமான தீர்வுகள் யாரேனும் சொன்னால், நம்மைப் போன்ற எளிய மக்களாவது செயலாற்றத் தொடங்களாம்.
  நல்லா கருத்தினைப் பகிர்ந்த சகோதரருக்கு மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 21. அருமையான பதிவு. ஆனால் தண்ணீரை பற்றி கவலைப்படும் அளவுக்கு காலம் நம்மை நகர்த்தியிருக்கிறது. நிற்க, தற்போது இருக்கும்
  நீர் நிலைகளை யாவது பாதுகாப்பது முக்கியம். குறைந்த பட்சம் வீடுகளில் மழை நீர் சேமிப்யையாவது அனைவரும் செய்ய வேண்டும்.
  இதைப் பற்றி நிறைய எழுத வேண்டும்...பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். நன்றி தோழர்...

  ReplyDelete
 22. ilangovan balakirshnanOctober 17, 2011 at 11:31 AM

  நல்ல பதிவு. பொறுப்புணர்வுடன் எழுதப்பட்டுள்ளது. இயற்கையையோ அரசியல் வாதியையோ குறை சொல்லாமல் தனி மனிதன் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டிய காரியம் இது என்பதால் இத்தகைய படைப்புக்களுக்கு வீரியம் அதிகப்படுகிறது. கனிவான வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 23. "ஒரு குடம் குடி நீருக்காய் இந்தப் பூமியில் கொலைகளே விழும் " சிந்திக்க வைக்கும் பதிவு ........... மானுடத்தின் தேவையை, அதன் கடமையை உணரச் செய்யும் வரிகள் ..... அருமை தோழரே ......

  ReplyDelete
 24. அருமையான பதிவு தோழரே. மீண்டும் மீண்டும் பட்டுக்கோட்டையின் பாட்டு வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. "எல்லாந்தான் படிச்சீங்க
  என்ன பண்ணிக் கிழிச்சீங்க?"
  நாகரிகம் என்கிற பெயரில் பல அநாகரிகங்கள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சொரணைகளற்று நகர்கிற பொழுதுகளோடு நகர்கிறது வாழ்க்கை... எனது 'உடைந்து கிடந்தது நிலவு' கவிதைத் தொகுப்பில் உள்ள இநதக் கவிதையையும் உங்கள் பதிவோடு சேர்த்துக் கொள்ளுங்கள்...

  "கண்மாய்க்குள் வீடுகட்டித்
  தொட்டிபோட்டுச் சேகரிப்போம்
  மழை நீர்."

  ReplyDelete
 25. அருமையான, அவசியமான பதிவு. ஆனால், சுயநலமே வடிவமாக மாறிப்போன சமுதாயத்தில், மழை, மண், நதி பற்றி யார்தான் கவலைகொள்ளப் போகிறார்கள்...? எல்லாவற்றுக்கும் ஆதாரமான மரங்களை நடுவதையாவது நாம் செய்யலாம்.

  ReplyDelete
 26. Wonderful post. I wish everyone reads this.

  ReplyDelete
 27. @ ஜமாலன்

  மிக்க நன்றி தோழர் ஜமாலன். தண்ணீர்ப் பிரச்சினையை ஒழுங்காக கையாளாவிட்டால் உலகிற்கு ஆக அருகாமையில் தண்ணீரால் கண்டம்தான். உங்கள் வருகை மகிழ்ச்சியைத் தருகிறது. மீண்டும் என் நன்றிகள் தோழர்

  ReplyDelete
 28. @
  Venkadesan
  பாலாசி (ஜி) தமிழன் குவைத்
  தே.ஞானமுத்து
  எண்ணங்கள் 13189034291840215795
  A.Hari

  தோழர்களுக்கு அன்பும் நன்றியும்

  ReplyDelete
 29. @ஆனந்தன்
  மிக்க நன்றி தோழர்.
  பரிபாடல் மீது கோவமெல்லாம் ஒன்றும் இல்லை தோழர். தெரியாது என்பதுதான் உண்மை

  ReplyDelete
 30. சோலாஸ் அமைந்துள்ள நிலப் பகுதி மழை நீரை முற்றாய் உறிஞ்சி சேமித்து வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை.அவ்வாறு சேமிக்கப் பட்ட நீர் முற்றாய் வழிந்து விடாமல் பையப் பையக் கசியச் செய்யும் தன்மையை சோலாஸ் கொண்டுள்ளன. இவ்வாறு பையப் பைய நீர் கசிந்ததால் தென்னக நதிகளில் நீண்ட காலத்திற்கு நீர் வரத்து இருந்தது. சோலாஸ் எனப்படும் சோலைக் காடுகளில் இருந்து கசியும் நீரே நமது தென்னக நதிகள் என்கிற உண்மையை ///தெரிந்து கொள்ள செய்த நட்பிற்கு நன்றி.
  நாம்தான் நல்லப் பழக்கங்களையெல்லாம் பையப் பையத் தொலைப்பதில் மன்னர்களாயிற்றே.!!!!

  பள்ளியில் நமக்குக் கொட்டிக் கொட்டிச் சொல்லிக் கொடுத்தார்கள். ராஜராஜச் சோழன் குளம் வெட்டினான், ராஜேந்திரச் சோழன் குளம் வெட்டினான், திருமலை நாயக்கர் குளம் வெட்டினார் என்று. எல்லா மன்னர்களும் ஏரி, குளங்களை வெட்டி நீரைச் சேமித்து வளமான ஒரு வாழ்க்கையைத் தம் மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.///ஓ இப்படி எல்லாம் வாழ்ந்தார்கள் அதை கொண்டு எப்படி எல்லாம் கற்க வேண்டும் என்று சொல்ல பட்டதற்காகவா இந்த வரலாறு. பின் ஏன் எந்த சந்தேகம் கேட்டாலும் புக்கில் உள்ளதை படி எழுது, மார்க் வாங்குற வழியைப்பார். என்று மிரட்டல்,அல்லது அடி அதனாலும் நாங்கள் மார்க் மார்க் என்று தான் படித்தோம் சாமி.
  ஒவ்வொரு நாளும் பெருகி வரும் ஜனத்தொகை நீர்த் தேவையை அதிகரிக்கும் என்ற அடிப்படை அறிவு, இன்றைய தொழில் நுட்ப அறிவுக்கு வாய்ப்பே இல்லாத அன்றைய மன்னர்களுக்கும் மந்திரிகளுக்கும் இருந்திருக்கிறது. அவர்கள் மக்களுக்காய் .
  அண்டம் நோக்கி, வெளி குறித்து, நமக்கு இருக்கும் அக்கறையை நாம் இது குறித்தும் நீட்டிப்புச் செய்ய வேண்டும். விஞ்ஞானிகளின் நேரத்தை, செயலை இது நோக்கியும் நகர்த்த நிர்ப்பந்திக்க வேண்டும்.

  இரண்டாவதாக, ஏற்கனவே இருக்கிற நீர்ப் பிடிப்பு ஆதாரங்களை அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்.///மிக சரியான கருத்து உண்ணா நோம்மிருந்து சொன்னா கூட கேட்க மாட்டோம் (பதவியில் உள்ளவர்கள்) நீர் ஊதுர சங்கை ஊது நடப்பது நடக்கட்டும் நாங்களும் படித்து விட்டு அடுத்த வேலை பாக்க போகனும்.

  ReplyDelete
 31. மிக்க நன்றி அருள்

  ReplyDelete
 32. மிக அருமையான பதிவு! இப்போதும் கூட ஆவன செய்யாவிடில் அழிவு நமக்குதான்!
  மிக தேவையான நல்ல காரியங்களைக்கூட போராடி கேட்டுத்தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற துர்பாக்கிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டால் எதற்கு ஆட்சியும் அதிகாரமும் சுரண்டுவதற்கு மட்டும்தானா?

  ReplyDelete
 33. ஏறத்தாழ அதற்குத்தான் என்று தோன்றுகிறது உமா

  ReplyDelete
 34. எட்வின் சாருக்கு.,
  இந்த கட்டுரையை படித்ததன் மூலம் நிறைய விஷயங்களை புரிந்து கொண்டேன் சில விஷயங்களை பகிரவும் ஆசைப்படுகிறேன் முதலாவது மயிலாடுதுறையில் நகரின் நடுமையத்தில் இருந்த சிறு வடிகால் வாய்க்கால் இன்று உயர்தர பள்ளிக்கூடமாக மாறிவிட்டது எப்படி இதற்க்கு அனுமதி அளித்தார்கள் அதிகாரிகள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்(ஆண்டவன் என்பது இறைவனை அல்ல)அந்த வாய்க்கள் தான் நகரின் மிக முக்கிய சாலைகளில் வழியும் மழை நீரை காவிரியுடன் இணைக்க முக்கிய வடிகால் வசதி இப்பொழுது கொஞ்சம் மழை பெய்தால் கூட மயிலாடுதுறை மழைகாடாக விளங்குவதன் நோக்கம் இது போல பல வாய்க்கால் குளங்கள் அதிகாரிகளின் கையூட்டு மற்றும் சுயநலத்தால் தூர்க்க பட்டு விட்டது, இரண்டாவது கோவில் நிலங்களை மாநில அரசு கையகபடுத்தி அதில் செயற்கை காடுகளை வளர்க்கலாம் ஆனால் அதில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினை அவைகள் இருப்பது அரசியல் வாதிகள் கையில் சமிபத்தில் திருவிழந்தூர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் சதுர அடி 150 ஆனால் பட்டா எனில் சதுர அடி 850 ருபாய் பெரும்பாலானோர் கோவில் நிலங்களையே விரும்புகின்றனர். பிரிதொன்று கடந்த வருடம் மழையின் பொது ஒரு பொது பேருந்து நிறுத்தத்தில் நிற்கவேண்டிய சூழல் கிராமம் அது சில வயதான பெண்களும் அருகில் நின்று கொடு இருந்தனர், மழை நீர் சேகரிப்பு தொட்டி மழை நீரை உள் வாங்க முடியாமல் எதிர்த்து வெளியேறியது ஏன் என வினவியதற்கு காரணம் சொன்னேன் அதற்க்கு அந்த வயதான பெரியம்மா சொன்னது என்னங்க தம்பி அறிவியல் முன்னாடி நாங்க கிணறு வெட்டி தண்ணி எடுத்தோம் இப்போ நீங்க கெணறு வெட்டி உள்ள அனுப்புரிக,கொஞ்ச நாள் போன தண்ணி போலவே காத்துக்கும் சேகரிக்க ஏற்ப்பாடு செய்வீக போலருக்கேப்பா இதுக்கு எதுக்கு தம்பி இத்தினி விஞ்ஞாணிக அறிவியல் எந்த அறிவியலும் இல்லாம இந்த வயகாடும் ஊரும் எங்க காலத்துல நல்லாத்தானே இருந்துது. என்றார் , மழை பெய்து கொண்டிருந்தது இருந்தாலும் வந்து விட்டேன் நனைந்து கொண்டே அந்த பெரியம்மா தந்த அழகிய பூமியை அடுத்த தலைமுறைக்கு அப்படியே கொண்டு சென்று சேர்க்க தவறிய குற்றவாளியாய்

  ReplyDelete
 35. இருந்த ஏரிகளையும் குளங்களையும் ப்ளாட் போட்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்தும் பாவப் பட்டல்லவா போனோம்.

  அருமையான பதிவு. நன்றி ஐயா.

  ReplyDelete
 36. அருமையான பதிவு தோழா்! குடிக்கிற தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் காலம் வரும் என்று என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு பாடலில் பாடியிருப்பாா் (சாியான வாிகள் நினைவிலில்லை). நீங்கள் சொல்வதுபோல் குடிக்கிற தண்ணீருக்காய் உயிரை வாங்கும் காலம் கண்டிப்பாய் வரும் போல் தொிகிறது, உங்கள் கட்டுரையை கண்டுகொள்ளாமல் போனால்.

  ReplyDelete
 37. அருமையான பதிவு தோழர்

  ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...