Sunday, April 24, 2011

கனவான்களை என்ன செய்யப் போகிறோம்?


ஆசிரியர் அறை முழுக்க அனல். அலை அலையாய் என்னைத் தாக்க, என்ன காரணம் என்று யோசிக்கத் துவங்கினேன். எல்லார் முகங்களிலும் எள்ளும் கொள்ளும் வெடித்தது. என்ன நடந்திருக்கும்? தலைமை ஆசிரியர் யாரையேனும் கடிந்துகொள்ள கொதிநிலைக் கூடிப் போனதா? அப்படியும் தெரியவில்லை. அப்படி ஏதேனும் நிகழ்ந்திருந்தால் இவ்வளவு நேரம் அவரிடம்தானே பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்தேன். நிச்சயம் சொல்லியிருப்பாரே. பழுக்கக் காய்ச்சிய கோபம் எல்லோரது முகங்களிலும் படர்ந்து கிடந்தது. ஒருக்கால் நண்பர்களுக்கிடையில் ஒருவருக்கொருவர் ஏதேனும் பிரச்சினையா? தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்படாத நிலையில் வாக்குவாதம் சன்னமாய்த் தொடங்கி, வலுப்பெற்று, இப்படிக் கொதி நிலைக்குப் போய்விட்டதா? வாய்ப்புகள் உண்டுதான் எனினும் நன்கு பக்குவப் பட்ட, எந்த ஒரு அனலையும் ஆற்றுப் படுத்திவிடும் வித்தை தெரிந்த செல்வம் போன்றவர்கள் இருக்கும் போது அதற்கும் சாத்தியம் குறைவுதான். அப்புறம் இந்தக் கொதிநிலைக்கு காரணம் என்னவாய்த்தான் இருக்கும்?


எதுவாய் இருந்தாலும் தானாய் வரும். அதுவரைக் காத்திருப்பது. நாமாய் உள்ளே நுழைந்து ஒழுங்காய் இருக்கிற மூக்கை சேதப் படுத்திக் கொள்ள வேண்டாமென்று முடிவெடுத்து கையோடு கொண்டு போயிருந்த சுகுணா திவாகரின் புத்தகத்தைத் (பெரியார் -அறம், அரசியல், அவதூறுகள்)  திறந்தேன். ஓடி வந்து புத்தகத்தை பிடுங்கினார் சேவியர்.

“ மொதல்ல இதுக்கு ஒரு பதில சொல்லிட்டு அப்புறம் இந்தப் பெரியாரவெல்லாம் படிங்க”:

நாமதான் இந்த உஷ்ணத்திற்குக் காரணமா? நம்மை அறியாமலே யாரைப் பற்றியேனும் யாரிடமேனும் தவறாகப் பேசி, விஷயம் கசிந்து , சூடாகிப் போனார்களா நண்பர்கள். எதுவாய் இருந்தாலும் நேரடியாய் உளறி வாங்கி கட்டிக் கொள்வதுதானே நமது இயல்பு. மீறியும் இப்படிக் கோபப்பட்டு பதற வேண்டிய அளவுக்கு நம்மை அவ்வளவு பெரிய பொருட்டாக யாரும் பார்ப்பதில்லையே. ஏதோ லூசுக்கு கொஞ்சம் ஒசரமா நம்மை வைத்திருக்கிறார்கள். அவ்வளவுதானே. ரொம்பவும்தான் குழம்பிப் போனேன்.

“ என்னடா, என்ன பிரச்சினை. புத்தகத்தப் போட்டு கிழிச்சுடாத”

“ நாடே கிழியா கிழிஞ்சு கிடக்காம். உங்களுக்கு புத்தகம்
கிழியறதுதான் பெரிசாத் தெரியுதா?”

“ இந்த நாட்ட நான் ஒன்னும் காசு போட்டு வாங்கல. ஆனா இந்தப்
புத்தகத்த அறுபத்தி அஞ்சு ரூபா கொடுத்து வாங்கியிருக்கேன் தெரியுமா?”

இந்த எள்ளலில் கொஞ்சம் கறைந்தவராய் “ பெரிய எழுத்தாளர், உங்க ப்ளாக் தவிர வேற எதையும் பாக்கறதே இல்லையா?”

”ஏண்டா சேவி ஏம் ப்ளாக்கை யாரும் படிக்கறதில்லேங்கறதுக்காக
நானும் படிக்கலேன்னா எப்படிப்பா?”

“ இந்த நக்கலுக்கெல்லாம் ஒன்னும் கொறச்சல் இல்ல. இதப்
பாருங்க முதல்ல. இன்னிக்குப் போனதும் உங்க வலையில இதப் பத்தி எழுதுங்க”

அவர் வீசிய செய்தித் தாளில் அமெரிக்க அதிபர் ஒபாமா
அமெரிக்கர்கள் செலவு குறைச்சலைக் காரணம் காட்டி மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவிற்கும் மெக்ஸிகோவிற்கும் செல்வதற்கு எதிராக சில கருத்துக்களைக் கூறியிருந்தார்.
அது நண்பர்களை உஷ்னப் படுத்தியிருக்கிறது.

சிறிது நேரத்தில் எல்லோரும் தாள் திருத்துவது, மதிப்பெண்
பட்டியல் தயாரிப்பது, தத்தம் வகுப்புகளின் தேர்வு முடிவுகளைத்
தயாரிப்பது என்று அவரவர் வேலைகளில் மூழ்கிப் போனார்கள்.

பொதுவாகவே இங்குள்ள பணக்காரர்களும், பெரியப் பெரிய அரசியல் வாதிகளும் தங்களது மருத்துவ சிகிச்சைக்காக
அமெரிக்கா செல்வதும் அது குறித்த தகவல்கள் தினசரிகளிலும் மற்றும் அனைத்துவகைப் பத்திரிக்கைகளிலும்,காட்சி ஊடகங்களிலும் தொடர்ச்சியாய் வருவதும் வாடிக்கை.

ஏதோ அமெரிக்காவில்தான் எல்லா நோய்களுக்குமான மருத்துவம் உள்ளது போலவும், இந்தியாவில் எதுவுமே இல்லை என்பது போலவுமான பிம்பங்களை இது மாதிரி நிகழ்ச்சிகள் ஏற்படுத்தியிருந்தன.

”வாராத நோய் வந்துவிட்டால் பணக்காரங்களும் அரசியல் வாதிகளும் வேணும்னா அமெரிக்கா போய் மருத்துவம் பார்க்கலாம்.ஏழ பாழைங்க இங்க இந்தியாவிலேயே கிடந்து சாக வேண்டியதுதான்” என்று மக்கள் புலம்புவதைப்
பார்த்திருக்கிறேன்.

ஆனால் ஓபாமாவின் இந்தப் பேச்சு மேற்காணும் பிம்பத்தை
உடைத்துப் போட வல்லதாகவே நான் கருதியிருந்தேன். ஆனால்
அதற்கு நேர் மாறாக ”இந்தியாவுக்குப் போகக் கூடாதுங்குறான். அவ்வளவு கேவலமா இந்தியா? ” என்கிற கோணத்தில் நண்பர்களின் கோபம் வெளிப்பட ஆரம்பித்துள்ளது கண்டு அதிர்ந்தே போனேன்.

முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்திவிட வேண்டும். அமெரிக்காவைவிட இந்தியாவில் மருத்துவச் செலவு மிகவும் குறைவு. அது எந்த அளவுக்கென்றால் அமெரிக்காவில் இருந்து குடும்பமே புறப்பட்டு வந்து இந்தியாவிலே தங்கி மருத்துவம் பார்த்துக் கொண்டு திரும்புவதற்கு ஆகும் செலவை விட அமெரிக்காவில் அதே சிகிச்சைக்கான செலவு சில மடங்கு அதிகம் என்கிறார்கள்.

அப்புறம் ஏன் இங்குள்ளவர்கள் அமெரிக்கா பறக்கிறார்கள்?  அதை இரண்டு மூன்று காரணங்களுக்குள் அடக்கலாம்.

1) இந்தியாவை விட அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை தரமாக இருக்கும் என்கிற தவறான நம்பிக்கை
அல்லது
2) அமெரிக்கா சென்று வைத்தியம் பார்ப்பதை கௌரவமாக நினைப்பது
அல்லது
3)வெளி நாட்டுப் பயணத்திற்கான ஒரு வாய்ப்பாக இதைக் கருதுவது.

போக, அமெரிக்காவில் மட்டுமே சிகிச்சைக்கான வசதிகள் உள்ள நோய்களும் இருக்கக்கூடும்.அதை இந்தக் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவை இல்லை.

ஏதோ அமெரிக்கா சொர்க்கபுரி என்பது மாதிரியான கருத்துக்களை முதலில் துடைத்துப் போடவேண்டும்.  அங்குள்ள் ஏழையும் இங்குள்ள ஏழையும் ஒன்றான படிநிலை வாழ்க்கையையே கொண்டிருக்கிறான்.

அங்குள்ள ஏழை அமெரிக்கனால் அங்கு வைத்தியம் பார்த்துக் கொள்வது இயலாது. அமெரிக்கா என்பது கோடீசுவரர்களுக்கு மட்டுமே சொர்க்கம்.

கண்புரை நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள இயலாத அமெரிக்கர்கள் ஏராளம். வாரா வாரமோ தினம் தினமோ தெரியவில்லை, கியூபா இத்தகைய ஏழை, உழைக்கும், அடித்தட்டு மக்களை இலவசமாக ஹெலிகாப்டரில் அழைத்துப் போய் அறுவை செய்து குணமாக்கி மீண்டும் கொண்டு வந்து இலவசமாகவே விடுகிறார்கள் என்று படித்திருக்கிறேன். இதனால்தான் அமெரிக்க உழைக்கும் மக்கள் கியூபாவைத் தங்கள் தோழனாகப் பார்க்கிறார்கள். ஏழை, உழைக்கும் அடித்தட்டு மக்களுக்கும் கியூபாவிற்கும் இடையே உள்ள இந்த வர்க்க ரீதியான உறவுதான் புஷ், கிளிண்டன், ஓபாமா இன்னபிற எந்தக் கொம்பனாலும் கியூபாவை ஒன்றும் செய்ய இயலாமல் செய்து போட்டிருக்கிறது.

மீண்டும் ஒபாமாவின் அறிக்கைக்கு வருவோம். அவரது அறிக்கை ஒன்றைத் தெளிவு படுத்தியிருக்கிறது. அமெரிக்காவை விட இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்கான செலவு குறைச்சல். ஏழை, உழைக்கும் ,அடித் தட்டு அமெரிக்க மக்கள் தங்களது சிகிச்சைக்காக அமெரிக்காவைவிட இந்தியாவையே அதிகம் சார்ந்து இருக்கிறார்கள்.அதிக அளவு உழைப்பாளி அமெரிக்கர்கள் இந்தியாவில் வந்து வைத்தியம் பார்த்து குணமடைந்து சென்றிருக்கிறார்கள்.

ஆக, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் உழைப்பவன் நிலைமை ஒன்றாக ஒத்தே இருக்கிறது. இவர்களது பிரச்சினைகளும் ஒன்றாகவே கிடக்கின்றன. கொஞ்சம் மேலே போனால் இவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வுக்கான வழியும் ஒன்றாய் ஒத்தே இருக்கிறது. இவர்களது வாழ்வு, சிக்கல், தீர்வு , போராட்டம் ஆகியவை இவர்களை ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கும் நிலையும் உள்ளது.

மட்டுமல்ல உலகம் முழுவதிலும் உழைக்கும் மக்களின் சகலமும் ஒருவரை ஒருவர் சார்ந்தேதான் இருக்கிறது. எனவேதான் சரியாய் சொல்கிறோம்” உழைக்கும் தொழிலாளிகளே ஒன்று படுங்கள் “ என்று. சொன்னால் சில பேருக்குப் பொத்துக் கொண்டு வருகிறது. இந்த உயிர்ப்பான முழக்கத்தை எவன் சந்தேகித்தாலும், எவன் கேலி செய்தாலும், எதிர்மறையாய் எவன் பேசினாலும் அவன் உழைக்கும் திரளின் எதிரியே.

சரி, ஒபாமா இந்தியாவைக் கேவலப் படுத்தவில்லையா? என்றால் இல்லை என்பதே எனது பதில். தன் நாட்டு மக்கள் இன்னொரு நாட்டை சார்ந்து வாழ்வதை அவர் விரும்ப வில்லை என்பதை சரியானதொரு பார்வையாகவே நான் பார்க்கிறேன். அங்குள்ள அடித்தட்டு மக்களுக்கு அங்கேயே இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ வைத்தியத்திற்கான  ஏற்பாடுகளை அவர் செய்தால் சத்தியமாய் அவரை நான் பாராட்டவே செய்வேன். நம்மைப் பொறுத்தவரை எந்த நாட்டு உழைப்பாளியாக இருந்தாலும் எங்கள் உறவே.

நமக்கான நியாயமான கேள்வி இதுதான். இந்தியாவை சார்ந்து அமெரிக்க மக்கள் இருக்கக் கூடாது என்று நியாயமாக நினைக்கும் போது ஒட்டு மொத்த இந்தியாவையும் அமெரிக்காவை சார்ந்தும் எதிர் பார்த்தும் இருக்கிற நிலைக்கு ”ஒன், டூ, த்ரீ”  என்று தள்ளிய கனவான்களை என்ன செய்யப் போகிறோம்?    

2 comments:

  1. நல்ல பதிவு.
    நாம் நிறைய விஷயங்களில் முன்னேறி இருக்கிறோம். தொழில் துறையிலும், மருத்துவத் துறையிலும், மற்ற துறைகளிலும். இருந்தாலும் நமது நாட்டு மக்களுக்கும் நம் மீதே நம்பிக்கையில்லை. வெளிநாட்டு மோகம் இன்னும் குறையவில்லை. நமது தயாரிப்பையே (Made in India என எழுதி இருக்காது) வெளி நாட்டில் போய் வாங்கி சுமந்து கொண்டு வருவார்கள்.
    நன்கு எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். உங்களது வலைத்தள முகப்ப நன்காக அமைக்கப்பட்டிருக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. @Rathnavel

    அன்பின் அய்யா,
    வணக்கம். ஊர் சென்று திரும்பினேன். அதுதான் தாமதம்.உற்சாகமளிக்கும் உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி அய்யா

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...