Saturday, September 7, 2013

7 அடர் கருப்பு

கருப்பு என்பது துக்கத்தின் அடையாளமாகவே கொள்ளப்படுகிற சூழலில் தனது வலைக்கு “ அடர் கருப்பு” என்று பெயர் வைத்திருக்கிறாரே, ஒருக்கால் பெரியாரிஸ்டாக இருப்பாரோ என்ற அய்யம் இவரது வலைக்குள் பயணத்தைத் தொடங்கிய பத்து நிமிடங்களுக்கெல்லாம் தகர்ந்து போனது. இடதுசாரியாகவே அவரை அடையாளங்காண முடிந்தது. ஆமாம் என்றே அவரைப் பற்றிய ஆரம்பகட்ட விசாரனைகள் சொல்லின.

கருப்புகள் சிவப்பைக் கையிலெடுப்பதும் சிவப்புகள் கருப்பையும் சேர்த்து கையெடுப்பதும் கனவிலும் நடக்காதா என்று ஏங்கித் தவித்த நமக்கு ஒரு சிவப்பு தனது வலைக்கு “ அடர் கருப்பு” என்று பெயர் வைத்திருப்பதுஆச்சரியத்தை மட்டுமல்ல, மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் சேர்த்தே சேர்த்தே கொண்டுவந்து சேர்த்தது.

இருள் என்பது குறைந்த ஒளி என்ற எதனிலிருந்தும் வேறுபடுகிற பிரகடனத்தைப் பார்த்ததும் உச்சி முதல் உள்ளங்கால்வரைநம்பிக்கை நிரம்பிக் கசியத் தொடங்குகிறது.

ஐநூறுக்கும் மேற்பட்ட பதிவுகள்.

இருப்பதை எடுத்துச் சொல்வதோடு திருப்தி படுகிற சராசரியாக இவர் இல்லை.மாற்றத்தை முன் வைக்கிற படைப்புகளே ஏறத்தாழ வலையின் அத்தனை பக்கங்களிலும் விரவிக் கிடக்கின்றன.


புத்தனுக்கு போதி மரம். எனக்கு வைப்பர் வேலைசெய்யாத அரசுப் பேருந்து என்று ஒருமுறை எழுதினேன். ஆழமான தேடலும் கூரிய கவனமும் கொண்ட எவருக்கும் பேருந்துகள் போதி மரங்களே. இவரது “மூன்று பேருந்து பயணங்கள்” என்ற பதிவு இதை உறுதி செய்கிறது.

ஒரு பயணத்தில் இவருக்குப் பின்னிருக்கையில் அமர்ந்திருக்கும் இருவரின் உரையாடலை இவர் கேட்கிறார். அதில் ஒருவர் ட்ரெடில் அச்சகத்தில் மணிக்கு 14 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர். ஒரு நாளைக்கு 5 மணி நேரத்திற்கு மேல் வேலை கிடைக்காத அவலம். வழமையாக ரேஷன் அரிசி சாப்பாடுதான் என்பதும் என்றைக்கவது உறவினர்கள் வந்தால்தான் நல்ல அரிசி சோறு என்பதும், ஒன்றியப் பெருந்தலைவர் ஒருவர் தனது மகளது திருமணத்திற்கு 82000 ரூபாய் செலவில் பத்திரிக்கை அடிக்கிறபோது இவரது இரண்டு குழந்தைகளுக்குமான பள்ளிக் கட்டணமான 3000 ரூபாய்க்கு இவர் விழி பிதுங்கி நிற்பதையும் வலிக்க வலிக்க எழுதுகிறார். வெறும் வலியை தருவதோடு மட்டும் இவரது எழுத்து நின்று விடவில்லை. வாசகனுக்கு இந்த அமைப்பின்மீது ஒரு கோவத்தையும் சேர்த்தே கொடுக்கிறது. இந்தக் கோவம்தான் நாளைய மாற்றத்திற்கான ஆதாரப் படிகள். 

90 களில் நடந்த ஜாதிக் கலவரத்தில் அடுத்த சாதிக்காரனை தன் புடவைக்கு கீழே மறைத்து கொலைவெறியோடு வந்த தன் சாதிக்காரனிடமிருந்து காப்பாற்றிய ஒரு தாயைப் பற்றி ஒரு பயணத்தில் கேள்வி படுகிறார். எழுதுகிறார்,

“ஒரு உயிரின் விலை என்ன என்பதை எமனை விடவும், கடவுளை விடவும், எவனை விடவும் துள்ளியமாக தெரிந்து வைத்திருப்பவள் தாய்.” அப்பப்பா , எப்படி ஒரு துள்ளியமான எழுத்து.

சாதியக் கொடுமைகளை அதற்கான மாற்றுகளை பெருமளவு யோக்கியத் தனத்தோடு தனது “ சத்யமேவ ஜெயதே” என்ற நிகழ்ச்சியின் மூலம் கொடுத்த அமீர்கானுக்கு நன்றி சொல்லும் ஒரு பதிவிருக்கிறது.

1000 மாணவிகள் படிக்கக் கூடிய ஒரு பெண்கள் பள்ளியில் இருந்த மூன்று அருந்ததிய மாணவிகளைக் கொண்டு பள்ளியின் கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்த அயோக்கியத் தனத்தை கேள்வி கேட்கிறது அந்தப் பதிவு.

1835 இல் இங்கிலாந்து பராளுமன்றம் மெகாலேயின் ஒரு அறிக்கையை விவாதித்தது. அந்த அறிக்கை சொன்னது,

“ தங்களின் நிறம், தாங்கள் சாப்பிடும் உணவு, உடுத்தும் உடை, படிக்கும் கல்வி, கீழானது என்று அவர்கள மூளைக்குள் புகுத்திவிட்டால் போதும் நாம் இந்தியாவை வெற்றி கண்டு விடலாம்”

ஆழ நிலைகுத்தி நின்று நம்மை அவர்கள் 200 ஆண்டுகள் ஆண்டமைக்கு மேற்காணும் பத்தியை அவர்கள் சரியாக கைஎடுத்ததே காரணம். இபோது இதே யுக்தியைதான் பன்னாட்டு பெரு முதலாளிகள் கையெடுத்திருக்கிறார்கள். கவனத்தோடு இதை எதிர்கொள்ளவில்லை என்றால் நமது பூமி ஒரு மறு காலனியாதிக்கத்தின் கீழ் வந்தே தீரும் என்பதை இந்தப் பதிவு தெளிவாகவும், புரிகிற பாஷையிலும் சொல்கிறது.

உத்தபுரத்து அவலங்களை கொதிக்கக் கொதிக்கப் பதிகிறார். பள்ளி விட்டு பேருந்தில் வந்து கொண்டிருந்த ஒரு தலித் மாணவனது கை தவறிப் பட்டுவிட்டதற்காக அவனை கட்டி வைத்து உதைத்ததை, “ அண்ணே” என்று கூப்பிட்ட ஒரு தலித் சிறுவனை, “நீ என்ன எங்கப்பனுக்கா பொறந்த” என்று கட்டி வைத்து உதைத்ததையும் ரத்தம் கொதிக்கப் பதிந்தவர், இந்தக் கயமையை “ காட்டுமிராண்டித் தனம்” என்று சொல்வது தவறு. காரணாம் காட்டு வாசிகளிடம் ஈரமும் மனிதபிமானமும் இருக்கும். எனவே இதை “ உயர்மிராண்டித் தனம்” என்று அழைக்க வேண்டுமென்கிறார்.

எவ்வளவு சரியான பிரயோகம். மொழிக்கு ஒரு சரியான புது வார்த்தையைத் தந்திருக்கிறார்.

“ வெள்ளைக்குள் ஒளிந்திருக்கும் நிறங்கள்” போன்ற சிறு கதைகளும் இவரது வலையில் இருக்கின்றன.

நாலந்தா பற்றிய இவரது பதிவு சிறப்பான கவனத்திற்கு உரியது.

10000 மாணவர்களுக்கு 2000 ஆசிரியர்கள். 5 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில். 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் காலத்தில் இது விவாதிக்கப் பட்டால் எவ்வளவு நல்லதாக இருக்கும்.
“ நான் எழுதுகிற எழுத்தை, படைப்பை எனது தாய், என் மனைவி, என் மகள் மட்டுமல்லாது பக்கத்து வீட்டுப் பெண்களும் படிக்கிறமாதிரி எழுதினால் மட்டுமே அது படைப்பு. அப்படி இல்லாதவை கக்கூசில் வெளியேறும் அருவருப்பு” என்று எழுதுகிறார்.

யார்மீது வேண்டுமாயினும் சத்தியம் செய்து சொல்கிறேன்,

நிசமான எழுத்துக்கள் இவருடையவை.

போய்ப் பாருங்கள்.

நன்றி: புதிய தரிசனம்

12 comments:

 1. மிக அருமை அய்யா வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. அடர் கருப்பு - சிவப்பு சிந்தனையாளனின் மனதில் பதிந்த கருப்பு நிகழ்வுகளின் தொகுப்பு என்பது, தங்களது கை வண்ணத்தில் தீட்டப்பட்ட வரிகளின் மூலம் வெளிப்படுகிறது..புதிய தரிசனம் மூலம் தரிசனம் தந்த இவரின் எழுத்துக்களை மிக கரிசனத்துடன் பாராட்டிய உங்களின் உள்ளத்துக்கு அன்பு வணக்கமும்..வாழ்த்துக்களும்..
  எழுத்தை நேசிக்கும் எட்வின்..தொடர்க உங்கள் பணி....
  அன்புடன் : காந்தி.கருணாநிதி..

  ReplyDelete
  Replies
  1. எழுத்தை நேசிப்பவராகத்தான் நீங்களும் இருக்கிறீர்கள் தோழர்.

   Delete
 3. அடர் கருப்பு - ஒரு சிவப்பு சிந்தனையளானின் உள்ளத்தில் பதிந்த கருப்பு
  நிகழ்வுகளில் தொகுப்பு என்பது உங்கள் பதிவு மூலம் வெளிப்படுத்தியுள்ளது..
  புதிய தரிசனம் மூலம் தரிசனமானவரின் எழுத்துக்களை மிக கவனமாக கூர் ஆய்வு செய்து கரிசனத்துடன் எழுதப்பட்ட உங்கள் உரை அருமை..
  சக எழுத்தாளனை நேசிக்கும் தங்கள் அன்புக்கு வணக்கமும், வாழ்த்துக்களும்...
  தொடர்க உங்கள் பணி...
  அன்புடன் : காந்தி.கருணாநிதி...

  ReplyDelete
 4. அருமையான உங்கள் பணி பாராட்டதக்கது அய்யா..!!

  ReplyDelete
 5. "உயர்மிராண்டித்தனம்" நல்ல பிரயோகம். மிகவும் நேர்த்தியான வலைப்பூ அறிமுகம், நன்றி தோழர்.

  ReplyDelete
  Replies
  1. மிக அருமையான சொல்லாக்கம் தோழர். மிக்க நன்றி

   Delete
 6. அறிமுகத்திற்க நன்றி ஐயா. இதோ அடர் கருப்பைச் சுவாசிக்க்கச் செல்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. வாசித்துவிட்டு சொல்லுங்கள் தோழர். மிக நல்ல வலை

   Delete
 7. நான் எழுதுகிற எழுத்தை, படைப்பை எனது தாய், என் மனைவி, என் மகள் மட்டுமல்லாது பக்கத்து வீட்டுப் பெண்களும் படிக்கிறமாதிரி எழுதினால் மட்டுமே அது படைப்பு. அப்படி இல்லாதவை கக்கூசில் வெளியேறும் அருவருப்பு

  ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...