ஆதிக்கமிக்க இடை சாதியில் பிறந்து அதன் அடையாளங்களை முற்றாய் துறந்து இன்னும் சொல்லப் போனால் அதற்கு நேரெதிராக பீக்கதைகள் போன்ற படைப்புகளை மணக்க மணக்க கொடுத்ததைத் தவிர வேறென்ன தவறு செய்தார் பெருமாள் முருகன்.
எழுதியவரே திரும்பப் பெருவதோ... ஆதிக்க வன்முறையும் காவல்துறையும் அத்துமீறி எங்கள் அலமாரிகளை சூறையாடுவதோ வேண்டுமானால் நடக்கலாம். வாசித்த படைப்புகளை நெஞ்சில் சுமக்கிறோம். அதை யாரால் என்ன செய்ய முடியும்?
தோழர்.நெய்வேலி பாரதி குமார் காக்கையில் ஒரு படம் பற்றி எழுதியிருந்தார்.
அந்த நாட்டின் பாசிசத் திமிர் பிடித்த ஆளும் வர்க்கம் தங்களுக்கு எதிரான நூல்களை கொளுத்துகின்றனர். அப்போது சிலர் கூடி நூல்களைக் காப்பாற்ற முடிவெடுக்கின்றனர். புத்தகங்களைக் காப்பாற்ற முடியாது என்று தெரிய வருகிறது. உடனே ஒரு காரியம் செய்கின்றனர். ஆளுக்கொரு நூலை மனப்பாடம் செய்கின்றனர். அந்த நூலின் பெயரையே தங்களது பெயராக்கிக் கொள்கின்றனர். மறந்து போகாமல் இருக்க தினமும் தினமும் சொல்லிப் பார்த்து பாதுகாக்கின்றனர்.
மரணத்திற்குள் அடுத்த ஒருவரிடம் இந்த பொறுப்பை ஒப்படைக்கின்றனர். இப்படியாக கைமாற்றி கைமாற்றி காலங்கள் நகர்கிறது.
என்றாவது ஒரு நாள் நிலைமை மாறுகிறபோது இவர்கள் சொல்ல சொல்ல அந்த நூல்களை அச்சேற்றிவிடலாம் என்பது அவர்களது நம்பிக்கை.
போகிறேன் என்கிறார், திரும்பப் பெருகிறேன் என்கிறார் தோழன் பெருமாள் முருகன். திரும்பி வருவார் என்பது எனது திடமான நம்பிக்கை.
காலமும் நிச்சயமாய் மாறும்.
வரும்போது தமிழ் வாசகன் மனப்பாடமாய் உங்கள் படைப்புகளை மட்டுமல்ல தாக்கப்படும் யாருடைய படைப்பையும் தருவான். ஈஜின் நிலவறை நூலகம் மாதிரிவாசகத்தளம் உங்களது படைப்புகளைப் பாதுகாத்து தரும்.
இரண்டு விஷயங்கள்,
1) நாடறிந்த பெருமாள் முருகனையே இந்தப் பாடு படுத்துகிறார்கள் என்றால் அவர்கள் என் போன்ற எந்த அடையாளமுமற்றவர்களிடம் வரும் போது தற்கொலை செய்கிறவரை எங்களை விடமாட்டார்கள். என்ன செய்யப் போகிறோம்?
2) ஏன் பெருமாள் இப்படி ஒரு முடிவெடுத்தீர்கள்? அயோக்கியர்களும் பாசிஸ்டுகளும் ஒன்றை பிழை என்று சொன்னால் சத்தியமாய் அது சரியான ஒன்றாய்தானே இருக்கும்?
பின் குறிப்பு: பெருமாள் முருகன்மீதான அல்லது யார்மீதுமான யாருடைய விமர்சனத்தையும்மரியாதையோடு கையேந்தி வரவேற்கவே செய்கிறோம்.
காலம் நிச்சயமாய் மாறும் தோழர்
ReplyDeleteதம 2
மாற்றவும் வேண்டும் தோழர்
Deleteமாற்றம் ஒன்றே மாறாதது என்பதும் உண்டே. நம் மனதில் உள்ளதை யாரால் பெற முடியும்.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Delete