Sunday, February 8, 2015

கொம்பன்கள் வரைந்த கோடுகளைத் திமிறோடு தாண்டிப் படரும் கவிதைகள்...

இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எந்த விதமான சட்டத்திற்குள்ளும் கவிதை ஒருபோதும் சிக்கிக் கொள்வதில்லை. எத்தகைய எல்லைக் கோட்டையும் அல்லது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையும் தாண்டி அசைந்து சிரிக்கவே செய்யும் கவிதையின் கொழுந்திலைகள்.

தாங்கள் வரைந்து வைத்திருக்கிற வரம்புகளுக்குள் சிக்காத கவிதைகளைக் கண்டதும் சில கவிதைக் காரியதஸ்தர்கள் இந்தக் கவிதைகள் அடங்குகிற மாதிரி இந்தக் கவிதைகளைச் சுற்றி கோடு கிழிப்பார்கள். பிறகு அப்படியே அவர்கள் வரைந்த கோட்டினை ரசித்தபடியே அந்தக் கவிதைகளை ரசிக்கிற மாதிரி பாசாங்கு செய்வார்கள்.

மறு வாசிப்பில் இந்தக் கொம்பர்களின் கோடுகளைக் கடந்து படர்ந்து நம்மை மகிழ்வித்தபடியே இந்தக் கோட்டோவியர்களைப் பார்த்து பகடி செய்யும் நல்ல கவிதைகள்.

வசீகரமான வார்த்தைகளும் நளினமாய் வளைந்து நெளியும் கைவண்ணமும் வாய்த்தவர்கள் விஷயங்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப் படாதவர்களாய் தங்களது கவிதைகளைத் தொகுத்து தொகுத்து குவிக்கிறார்கள்.

மறுபுறம் வடிவங்களைப் பற்றி கவலைப் படாமல் ஆழமான விஷய ஞானத்தோடு எழுதுகிறார்கள். ஆனால் இவர்களுக்கு உழைக்கிற மற்றும் ஒடுக்கப் பட்ட மக்களைப் பற்றி எழுத ஒருபோதும் மனம் வருவதேயில்லை.

இன்னும் சிலர் உழைக்கிற மற்றும் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு எதிராக வண்டி வண்டியாக எழுதி குவிக்கிறார்கள்.

இந்தச் சூழலில் நீரை மகேந்திரன் இந்தக்

கொம்பன்கள் வரைந்த கோடுகளைத் திமிறோடு தாண்டிப் படரும் என் உழைக்கிற மற்றும் ஒடுக்கப் பட்ட மக்களுக்கான தன் கவிதைகளை தொகுத்து “அக்காவின் தோழிகள்” என்றொரு கவிதை நூலினைக் கொண்டு வந்திருக்கிறான்.

நாகை மாவட்டத்து கழனிகளும், கன்மாய்களும், மந்தைகளும் இவனுக்கு வண்டி வண்டியாய் கவிதைக்கான சரக்குகளை அள்ளித் தந்திருக்கின்றன.

மிஞ்சி மிஞ்சிப் போனால் முப்பது கூட இருக்காது இவனுக்கு. இவ்வளவு சின்னப் பிள்ளைக்கு,

“இறங்க வேண்டிய
நிறுத்தமென்பது
சேரவேண்டிய இடமல்ல
அங்கிருந்தும் தொடங்குகிறது
மற்றொரு பயணம்”

என்று எப்படி எழுத முடிகிறது என்று ஆச்சரியமாயிருக்கிறது. வாழ்வைப் பற்றிய எவ்வளவு சரியான தெளிவு. வாழ்வைப் பற்றி ஐம்பது கடந்த நமக்கு முப்பதின் பேனா எழுத்துக் கூட்டி பாடம் நடத்துகிறது.

நானொரு தேநீர்ப் பிரியன். தேநீர் பருக எனக்கு எந்தக் காரணமும் தேவை இல்லை. ஆனாலும் நாம் ஏன் இப்படி தேநீர்ப் பித்துப் பிடித்து இப்படி அலைகிறோம் என்று பல நேரம் நினைப்பதுண்டு. ஆனால் இந்தத் தேநீர் பித்துக்கான காரணங்களுக்குள் ஒரு கவிதையை என்னால் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து தரிசிக்கவே முடியவில்லை. ஆனால் மகேந்திரனால் இதை கவிதைப் படுத்த முடிகிறது. அந்தக் கவிதையை,

“எல்லா மனநிலைக்கும்
பசுந்தேயிலையின்
சுவை மாறுவதேயில்லை”

என்று முடிக்கிறான். இலக்கிய ஜாம்பவான்கள் ரொம்ப விட்டேந்தியாக போகிற போக்கில் இவன் எழுதிய “பசுந்தேயிலையின் சுவை” படிமமா உவமையா என்று பிய்த்துக் கொள்ளட்டும். எனக்கு அந்தக் கவலை எல்லாம் இல்லை. எனது கடைசித் தேநீர் கோப்பையும் இவனது இந்தக் கவிதையால் நுரைத்திருக்கும்.

”தேவனே” என்றொரு கவிதை. தேரில் வரும் சவேரியாரை இந்திரா காலனி முக்கத்தோடு நிறுத்தி வந்த வழியே திருப்பி அனுப்பும் சாதி அரசியலை ஆழமாக உணர்த்துகிறது. கிறிஸ்தவத்தை ஏன் விமர்சிக்க மறுக்கிறீர்கள் என்று எதையும் வாசிக்காமலே வசைபாடும் நண்பர்களுக்கு இந்தக் கவிதையை நான் சிபாரிசு செய்கிறேன்.

“ குழந்தைகள் அமராத
விலங்கின் இருக்கை
வெறுமனே சுற்றுகிறது
குடை ராட்டினத்தில்”

குழந்தைகளற்ற வெறுமையை எவ்வளவு அழகியலோடு பதிகிறான் இவன்.

“இஸ்மாயில்” என்ற ஒற்றை கவிதை போதும் எனக்கு இந்த நூலைக் கொண்டாட.

“இறங்க வேண்டிய
நிறுத்தமென்பது
சேரவேண்டிய இடமல்ல
அங்கிருந்தும் தொடங்குகிறது
மற்றொரு பயணம்”

என்ற இவனது வரிகளை இவனுக்கு நினைவு படுத்துகிறேன். “அக்காவின் தோழிகள்” அடுத்த நூலுக்கான இவனது பயணத்தின் தொடக்கமாக அமைய வேண்டும்.

கவிதை குறித்த நல்ல புரிதலுள்ள தம்பி விஷ்ணுபுரம் சரவணன் இவனது அறைத்தோழன் என்பது இருவருக்குமான வரம். இவர்களுக்கு இடையேயான கவிதை மற்றும் இலக்கியம் குறித்த தொடர் உரையாடல்கள் காத்திரமான படைப்புகளை இருவரிடமிருந்தும் கொண்டுவரும் என்ற நம்பிக்கையே மகிழ்ச்சியைத் தருகிறது.

மகேந்திரன் என்னை அப்பா என்று அழைக்கிறான். அதற்கு நான் என்னை தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

( அகநாழிகை வெளியீடு இது)

4 comments:

 1. மகேந்திரன் பாராட்டிற்கு உரியவர்
  நன்றி தோழர்

  ReplyDelete
 2. எனக்கு புத்தகம் வேண்டுமே ....நீரை மகேந்திரனுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கீதா. பாண்டியன் கடைக்கு புத்தகங்களை அனுப்பி வைக்க சொல்கிறேன்

   Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...