Thursday, March 31, 2016

65/66 காக்கைச் சிறகினிலே ஏப்ரல் 2016

நடைமுறைபடுத்தவே முடியாத தடைகளை இத்தனை பத்து ஆண்டுகளாக அமெரிக்கா கியூபாமீது விதித்திருக்கிறதுஎன்று சில மாதங்களுக்கு முன்னால் அமெரிக்க அதிபர் திரு ஒபாமா அவர்கள் கூறியபோது உள்ளபடியே அப்படி ஒரு மகிழ்ச்சி அப்பிக்கொண்டது. இவ்வளவு கொண்டாடி விடாதே எட்வின். இதில் எத்தனை உள்குத்தும் உள்நோக்கமும் இருக்கிறதோ என்று சில நண்பர்கள் கூறினார்கள். அதில் உண்மை இல்லாமலும் இல்லை. ஆனாலும் நான் அதை கொண்டாடவே செய்தேன்.

திரு மண்டேலா அவர்களின் இறுதி நிகழ்ச்சி என்று நினைக்கிறேன். மேடையில் ஒபாமா ஏறியபோது கியூபா அதிபர் திரு ரால் அவர்கள் எழுந்துநின்று மிஸ்டர் ப்ரெசிடெண்ட் என்று நீட்டிய கரங்கள் ஒருவிதமான உதாசீன மனோபாவத்தோடு குலுக்கி அலட்சியமாக நகர்ந்தார் ஒபாமா. அதுமட்டுமல்லஒபாமாவோடு ரால் கை குலுக்கிவிட்டதால் மாத்திரம் இருநாடுகளின் உறவுநிலையில் எந்தவித மாற்றமும் நிகழ்ந்துவிடப் போவதில்லை என்று வெள்ளை மாளிகை மிகுந்த அலட்சியத்தோடுஅறிக்கை ஒன்றினை வெளியிட்டது.

இந்த அறிக்கைக்கு சில காலம் கழித்துதான் ஒபாமா அவர்கள் மேலே கண்டுள்ள அபிப்பிராயத்தை வெளியிட்டார்கள். அந்த அறிக்கையில்கூட கியூபாவின் நலன் குறித்து எதுவும் இல்லைதான். கியூபாவின்மீதான அமெரிக்காவின் தடை என்பது நடைமுறை படுத்த இயலாத ஒன்று என்ற வகையிலேயே அதிபரின் அறிக்கை இருந்தது. அது அமெரிக்காவின் கியூப நிலைபாட்டின் மீதான சுய பரிசீலனையாக இருந்தது.

தன்னால் நடைமுறைபடுத்த முடியாத ஒரு காரியம் என்பதை அமெரிக்கா ஒத்துக்கொண்டதே நடைமுறையில் எங்கும் பார்க்க இயலாத விஷயம்.

கியூபாவின் நலன்குறித்த அக்கறை கொள்ளாத ஒரு அறிக்கையை கொண்டாடியதற்கு காரணம் இருந்தது. கியூபாமீதான தடையை நீக்குவதைத் தவிர அமெரிக்காவிற்கு வேறு வழியே இல்லை என்ற எதார்த்தத்தை ஒபாமாவின் அறிக்கை தெளிவுபடுத்தியது.

இந்தத் தடையினால் அன்பும் மனிதாபிமானமும் நிறைந்த கியூப மக்களை எவ்வளவு சிரமப் படுத்தியது என்பது சொல்லி மாளாது. அத்தனைக்கு மத்தியிலும் உலகின் எந்தப் பகுதியில் எந்த மாதிரியான பேரிடர் நிகழ்ந்தாலும் கியூப மருத்துவர்களின் தியாகம் செரிந்த பங்களிப்பை தொடர்ந்து நம்மால் பார்க்க முடிந்தது.

இன்னொரு விஷயத்தையும் நாம் பரிசிலீக்க வேண்டும். அமெரிக்க மருத்துவம் அற்புதமானது. அதி நவீனமானது. ஆனால் அது அமெரிக்க ஏழைகளுக்கே எட்டாதது. அவ்வளவு செலவு பிடிக்கக்கூடியது. ஏழை அமெரிக்க மக்களுக்கு கண்புறை அருவை சிகிச்சையே இயலாத ஒன்றாக இருந்தது. கியூபா ஹெலிகாப்டர்கள் மூலம் அத்தகைய ஏழை அமெரிக்க மக்களை அழைத்து சென்று அவர்களுக்கு இலவசமாக கண்புறை அறுவை சிகிச்சையை செய்து பிறகு அமெரிக்க கொண்டுவந்து விடுவதை வழக்கத்தில் கொண்டிருந்ததாக நான் எங்கோ வாசித்திருக்கிறேன்.  

ஆக தன்மீது தடைவிதித்திருந்த நாட்டின் ஏழைகளுக்கும் இலவசமாக மருத்துவம் பார்த்த மக்கள் கியூப மக்கள். இன்னொன்றையும் சொல்ல வேண்டும் அமெரிக்க மக்களும் கியூப மக்கள்மீது அப்படி ஒரு அன்போடு இருப்பவர்கள்தான்.

நமது அமெரிக்க எதிர்ப்பு என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடுதானே தவிர அமெரிக்க மக்களோடு அல்ல.

எண்பத்தி எட்டு ஆண்டுகளுக்குபிறகு ஒரு அமெரிக்க அதிபர் கியூபா சென்றிருக்கிறார். கியூப மண்ணை மிதிப்பதற்கே அமெரிக்க அதிபர் ஒருவருக்கு துணிச்சல் வேண்டும். அமெரிக்க வல்லூறுகளின் கடுமையான எதிர்ப்பை அவர் இதற்காக சந்திக்க நேரிடும். அவரது பதவிக்காலம் முடிவைவதால் இந்த்த் துணிச்சல் வந்திருக்கலாம் என்ற விமர்சனத்தையும் நிராகரிக்க வில்லை.

ஆனால் அதிபரின் இந்தப் பயணம் இரு நாட்டு மக்களிடத்தும் மகிழ்வையும் தோழமையையும் உருவாக்கும் என்ற உண்மையும், கியூப மக்களை கட்டிப்போட்டிருந்த தடை விலகும் வாய்ப்பு உள்ளதால் அவர்கள் அனைத்து துறைக்களிலும் பாய்ச்சலை நிகழ்த்துவார்கள் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது.

இந்தச் சந்திப்பு கியூப கட்டுமானத்தை இம்மியளவும் மாற்றிவிடாது என்ற திரு ரால் அவர்களின் உறுதி மகிழ்ச்சியைத் தருகிறது.

தோழர் ராலுக்கும் கியூப மக்களுக்கும் எங்களது அன்பும் மகிழ்ச்சியும்.

வெனிசுலா மற்றும் அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகள், மற்றும் அனைத்து நாடுகள் குறிப்பாக வளைகுடா நாடுகள்மீதான அமெரிக்காவின் அணுகுமுறையை நீங்கள் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற கோரிக்கையோடு உங்களுக்கும் அமெரிக்க மக்களுக்கும் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
***************************************************** 
**************************************

கோட்சே தனது வாக்குமூலத்தில் இந்திய சுதந்திரம் பெற்றதற்கு காந்தியின் பங்களிப்பு ஏதுமில்லை என்று கூறியவன்  சுதந்திரத்திற்கு காரணமானவர்கள் என்று பட்டியல் ஒன்றைத் தருகிறான். அதில் என்.சி.கேல்கர், இந்து சபாத் தலைவர்கள் போன்றோரைக் குறிப்பிடும் அவன் மதிப்பிற்குரிய சர்தார் படேல் அவர்களின் சகோதரர் விதல்பாய் படேல் என்று வல்லபாய் படேலுக்கு அழுத்தம் தருவதை தோழர் அருணன் அவர்கள் கோட்சேயின் குருமார்கள் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

கோட்சேயின் மரியாதைக்குரியவராக படேல் இருந்ததே நமக்கு அவர்மீதான மரியாதையை குறைத்திருந்தது.

1948 ஜனவரி 14 அன்று பிர்லா மாளிகையில் உண்ணாவிரதம் இருந்த மகாத்மாவை படேல் சந்திக்கிறார். பாகிஸ்தானுக்குரிய பங்கான 55 கோடி ரூபாயை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற  காந்தியின் கோரிக்கையை முரட்டுத்தனமாக நிராகரிக்கிறார். காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகளையும் இந்தப் பணப்பிரச்சினையையும் வேறு வேறாக தன்னால் பார்க்க முடியாது என்று அவர் சொல்கிறார். நொந்துபோன காந்தி படேலின் முகத்துக்கு நேராகநான் அறிந்திருந்த சர்தார் நீங்கள் அல்லஎன்று கூறுகிறார். அநேகமாக காந்தி படேலிடம் இறுதியாக கூறிய வார்த்தைகள் இவையாகத்தானிருக்கும்.

காந்தியின் கொலை குறித்த நேருவிற்கும் படேலுக்குமான கடிதவழி உரையாடலும் தோழர் அருணனின் அதே நூலில் இருக்கிறது. நேரு காந்தியின் கொலைக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ் இயங்கி இருக்கிறது என்று கூறுகிறார். ‘ தீவிர உணர்ச்சி தந்த அழுத்தத்தில் ஒருவன் செய்த செயல்என்று காந்தியின் கொலையை முடிக்கிற படேலை அங்கே பார்க்கிறோம்.

இப்படியாக படேலைப் பற்றிய எதிர்மறை பிம்பங்களையே அறிந்திருந்த நமக்கு அவரது இன்னொரு முகத்தை தோழர் திருமாவளவன் காட்டுகிறார். 9.3.2016 அன்றைய தனதுதி இந்துகட்டுரையில் 1932 செப்டம்பர் 24 அன்று உருவான புனா ஒப்பந்தத்தில் படேல் அவர்களின் பங்கு அழுத்தமானது என்று குறிப்பிடுகிறார். “ஒடுக்கப்பட்டவர்களுக்கு அனைத்து ஆட்சியதிகாரங்களிலும் கொடுக்கப்படவேண்டிய பங்குகள் எவ்வித தடையுமின்றி வழங்கப்படும்”  என்பதே அந்த ஓப்பந்தத்தின் சாரம்.

பிறகு அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான அவையில் பேசும்போதுஇந்த ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் இன்னும் பாதுகாக்கப் படவில்லை. நாம்தான் அவர்களின் அறங்காவலர்கள்.புனே ஒப்பந்தத்தின் படி இதற்கான வாக்குறுதியை நாம் அளித்திருக்கிறோம். அந்த வாக்கூறுதியை நாம் நிறைவேற்றியிருக்கிறோமா? அந்த வகையில் நாம் குற்றம் இழைத்தவர்கள் ஆகிறோம்.” என்று பேசுகிறார்.

ஒடுக்கப்பட்டவர்களுக்காக பேசும் படேல் இதுவரை பலர் அறியாதது.

இங்கும் ஒன்றை நாம் பார்க்க வேண்டியுள்ளது. இங்குகூட அவர் அனைவரும் ஒன்றெல்லாம் கூறவில்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்கான அறங்காவலர்களாகவே அவர் தம்மையும் ஆதிக்க மற்றும் இடைசாதி சமூகத்தைப் பார்ப்பதையும் நாம் கண்டுகொள்ளத் தவறக்கூடாது . அதே சமயம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் தவறிய வருத்தம் அவரது குரலில் இருப்பதையும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப் பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்ட்தாக படேலால்கூட ஒத்துக் கொள்ள இயலவில்லை என்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டியுள்ளது.
***********************************************************

பதிப்பகம் துவங்கி முதல் நூலையும் கொண்டு வந்திருக்கிறோம். குரூஸ் அவர்களின்அஸ்தினாபுரம்என்ற நாவல் அச்சாகி வந்து விட்டது. 26.03.2016 அன்று மாலை சென்னை இக்சா அரங்கில் வெளியிடுகிறோம்.

வரும் சென்னை புத்தகத் திருவிழாவில் ஸ்டால் எடுப்பது என்று முடிவெடுத்திருக்கிறோம்.

காக்கையை அனைத்து தரப்பினரும் கொண்டாடுவது மகிழ்ச்சியாய் இருக்கிறது. மகிழ்ச்சி உந்தித் தள்ளுகிறது. ஐம்பத்தி சொச்சம் இதழ்களில் நிறைய படைப்பாளிகளை அடையாளம் காட்டியிருக்கிறோம். நமது இதழில் வெளிவந்த கட்டுரைகளை பல நாளிதழ்கள் எடுத்து வெளியிட்டிருக்கின்றன.

எல்லாம் சரி, காக்கை தொடர்ந்து பறக்க இவற்றோடு சந்தாவும் அவசியம் என்பதை உணரவேண்டுமாய் தோழர்களை அன்போடு வேண்டுகிறேன்.
*************************************************** 
 




No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...