பெரம்பலூரில் வசுந்தரா என்றொரு காய்கறிக் கடை இருக்கிறது. குளிர்பதனப் படுத்தப் பட்டுள்ள அந்தக் கடையில் ஏறக்குறைய 20 பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் 20 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் 10 பேராவது இருப்பார்கள்.
நான் முதன்முறை அங்கு சென்று காய்களை வாங்கிவிட்டு பில் போடும் போது விலையைப் பார்த்தேன். மார்க்கெட் விலையை விட கொஞ்சம் கூடுதலாக இருந்தது.
இவ்வளவு கூட இருக்கேப்பா உங்களுக்காவது நல்ல சம்பளம் தருவார்களா? என்று கேட்டேன்.
அந்தக் குழந்தை சொன்னாள், “ எங்களை படிக்க வைக்கிறதே அவங்கதான் சார்”
ஆச்சரியத்தோடு பார்த்தேன். அந்தக் கடையில் உள்ள ஏறத்தாழ 10 பெண் குழந்தைகளும் ஏதோ ஒரு கல்லூரியில் படிக்கிறார்கள். சிலர் காலை ஷிஃப்ட். சிலர் மாலை ஷிஃப்ட். காலை ஷிட் கல்லூரி போகிறவர்கள் மதியம் கடையை பார்த்துக் கொள்கிறார்கள். மாலை ஷிஃப்ட் போகும் குழந்தைகள் காலையில் கடையைப் பார்த்துக் கொள்கிறார்கள். இரவில் அப்படியும் இப்படியுமாக கலந்தடித்து கடையினை கவனித்துக் கொள்கிறார்கள்.
தேர்விருக்கும் பிள்ளைகள் ஒதுங்கி படிக்கிறார்கள். செமஸ்டர் சமயத்தில் கடையில் அவர்களைப் பார்த்தால் “ உங்களை படிக்கிறதுக்குக்காகத்தான் காய் விக்கச் சொல்றது. காய் விக்கறதுக்காக படிக்கச் சொல்லல. போய் படி” என்பாராம். நெகிழ்ந்து போனேன்.
அடுத்தமுறை முதலாளியைப் பார்த்தேன். பிள்ளைகள் சொன்னதை அவரிடம் சொல்லி மிகவும் மகிழ்ச்சியாய் இருப்பதாக சொன்னேன். “ அப்படியா சொன்னாங்க.அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க சார், அவங்கதான் நமக்கு ஒரு பிசினச தறாங்க.” என்றார்.
இது நடந்து ஒரு வருடம் இருக்கும். எழுத நினைப்பேன் ஒவ்வொரு முறையும். தட்டிக் கொண்டே போகும். நேற்று ஒரு புதுக் குழந்தையை பார்த்தேன். என்னமா செய்ற என்ற போது MBA படித்துக் கொண்டிருப்பதாக சொன்னாள். படிக்க சிரமப் படுவதைப் பார்த்த தோழி ஒருவரின் ஏற்பாடு என்றாள்.
நேற்றும் முதலாளி நின்று கொண்டிருந்தார். புன்னகையோடு அவரைக் கடந்தேன். ஏதும் பேசவில்லை அவரிடம். ஒருக்கால் பேசியிருந்தால் இதை எழுதியிருக்க மாட்டேனோ என்னவோ?
இனி நமக்கு வசுந்தராதான்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்