Wednesday, March 30, 2016

23 வகுப்பிற்கு ஒரு ஆசிரியர்

இரண்டு வாரங்களுக்கு முன்னால் பத்திரிக்கைகளில் வந்த செய்தி என்னை சுக்குநூறாக்கியது. ஒரு ஆசிரியனாய் கூனிக் குறுகிப் போனேன். பார்க்கிற யாரும் அதுபற்றி பேசத் தொடங்கிவிட்டால் எப்படி ஜமாளிப்பது என்ற தயக்கத்தோடேயே அன்றையப் பொழுதை கழித்தேன். நல்ல வேளையாக தேர்தல் கூட்டணி எப்படிப் போகும், விஜயகாந்த் எந்தப் பக்கம் நகர்வார் என்பதிலேயே மக்கள் தீவிரமாக இருந்ததால் சேதப்படாமல் தப்பித்தேன்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூர் ஒன்றில் இருந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்திருக்கிறார். சிறிது நேரத்தில் நிலைதடுமாறி கீழே சரிந்திருக்கிறார். குழந்தைகள் சிலர் தங்களது வீடுகளுக்கு பதறியபடி ஓடி தங்களது பெற்றோர்களிடம் தங்களது தலைமை ஆசிரியர் கீழே விழுந்து கிடக்கும் விவரத்தை சொல்லியிருக்கிறார்கள்.

தலைமை ஆசிரியருக்கு என்ன ஆனதோ என்று பதைபதைத்தபடியே சில பெற்ரோர்கள் பள்ளிக்கு ஓடி வந்திருக்கிறார்கள். வீசிய நெடி அவர்களுக்கு உண்மையை சொன்னது. தண்ணீர் தெளித்து கொஞ்சம் படுக்க வைக்கலாம் என்று சிலர் முயற்சித்துக் கொண்டிருக்கும்போதே அவர்களில் ஒருவர் கல்வித்துறை அதிகாரிக்கு விஷயத்தை புகார் செய்கிறார்.

சற்று நேரத்திற்கெல்லாம் கல்வித்துறை அதிகாரி வந்து சேர்கிறார். நிறைய விசாரிக்க வேண்டிய அவசியமெல்லாம் அவருக்கு இருக்கவில்லை. அவரது உயரதிகாரியோடு ஆலோசிக்கிறார். அவரது ஆலோசனையின் பெயரில் அந்த்த் தலைமை ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்கிறார். அத்தோடு அந்தப் பிரச்சினையை நாளேடுகள் முடித்துக் கொள்கின்றன.

காலம் கெட்டுப் போச்சு. வாத்திக பள்ளிக்கூடத்துல போயி பைனான்ஸ் வேலையத்தான் பாக்குறாய்ங்கன்னு பார்த்தோம். இப்ப குடிச்சிட்டே பள்ளிக்கூடத்துக்கு போக ஆரம்பிச்சுட்டாய்ங்க. இனி வெளங்கன மாதிரிதான்என்பதுமாதிரி ஒருநாள் ஆசிரியர்களை நக்கலடித்துவிட்டு மனதிருப்தி அடைந்துபோயினர் பொதுமக்கள் வழக்கம்போலவே.

எனக்கிருக்கிற கவலை எல்லாம் இருந்த ஒரு ஆசிரியரும் குடித்துவிட்டு வந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு அன்றைக்கு அந்த பள்ளி தொடர்ந்து நடைபெற்றதா? என்பது பற்ரித்தான். ஒருக்கால் அன்றைய தினம் தொடர்ந்து பள்ளி நடந்தது எனில் எப்படி?

ஆசிரியர்களின் நடத்தை குறித்து பொதுமக்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதே என்னைப் பொறுத்தவரை ஆசிரியன் என்கிற முறையில் மரியாதைக்குரிய மகிழ்ச்சிதான்.

மதுவின் தீமைகுறித்து மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி மதுவிற்கு எதிராக மாணவர்களை நெறிப்படுத்தவேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. நல்ல நெறிகளை மாணவர்களுக்கு தமது வாழ்க்கையின் மூலம் கற்றுத்தருவதுதான் வரவேற்கத் தக்கது.

எந்தப் பணியில் இருப்பவர் ஆயினும் ஒருவர் போதையோடு தனது பணித்தளத்திற்கு செல்வதை ஏற்க இயலாது. ஆசிரியர் பள்ளிக்கு போதையோடு வருவது என்பதை ஏற்கவே இயலாது. அதுவும் ஒரு தலைமை ஆசிரியருக்கு ஆசிரியரைவிடவும் சற்று கூடுதலான பொறுப்பு இருக்கிறது. நிலை தடுமாறி சாயுமளவிற்கு ஒரு தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வந்திருக்கிறார் என்றால்பணியிடை நீக்கம்என்பதே மிக மெல்லிய தண்டனைதான். விளையாட்டில் கூட ஊக்க மருந்து உட்கொண்டிருப்பது நிரூபிக்கப் படுமானால் ஆயுளுக்கும் விளையாட முடியாது. ஆனால் தற்போதுபணியிடை நீக்கம்செய்யப்பட்டிருக்கும் இந்த தலைமை ஆசிரியர் சிறிது காலத்திற்குப் பிறகு நிச்சயமாக பணிக்குத் திரும்பி விடுவார்.

தவறு செய்பவனை ஓரிரு நாட்கள் நக்கலடிப்பதோடு திருப்தி பட்டுக்கொள்ளும் பொது ஜனத்தின்மீது எனக்கு கோவம் கோவமாய் வருகிறது. தங்கள் குழந்தைகளுக்கு கல்வியையும் ஒழுக்கத்தையும் சொல்லித் தரவேண்டிய ஆசிரியர் ஒழுங்கீனத்தின் உச்சநிலையில் பள்ளிக்கு வந்திருக்கிறார். அவரை பணிநீக்கம் செய்யும்வரை ஓயாது போராடியிருக்க வேண்டும். தங்கள் குழந்தைக்கு யோக்கியமான ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்றும் போராடியிருக்க வேண்டும்.

அன்றைய தினம் தொடர்ந்து பள்ளி நடைபெற்றதா என்ற எனது கவலைக்கு காரணமிருக்கிறது. எல்லா அச்சு ஊடகங்களும் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அந்த மனிதரைதலைமை ஆசிரியர்என்றே குறிப்பிடுகின்றன. அதுவே மிகவும் தவறு என்பதை பொது ஜனங்கள் முதலில் உணர வேண்டும். தலைமை ஆசிரியர் என்றால் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் எத்தனை பேர்? அந்தப் பள்ளிக்கூடத்தில் அவரைத் தவிர வேறு எந்த ஆசிரியரும் பணியாற்றவில்லை. துணைக்கு ஒரு ஆசிரியர்கூட இல்லாத நிலையில் அவரை தலைமை ஆசிரியர் என்று அழைப்பது எப்படி சரியாகும்?


இப்போது அநேகமாக ஓராசிரியர் பள்ளிகள் இல்லை என்று நினைக்கிறேன். எல்லாப் பள்ளிகளுக்கும் இரண்டு ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டு ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனவே தவிர இரண்டு ஆசிரியர் பணியிடங்களும் எல்லாப் பள்ளிகளிலும் நிரப்பப்பட்டிருக்கின்றனவா என்றால் பெரும்பான்மைப் பள்ளிகளில் இல்லை.  

ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரை உள்ள அத்துனை குழந்தைகளுக்கும் அவர் ஒருவரே ஆசிரியர். அவர் ஒன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு எழுதக் கற்றுத் தருகிறார் என்று வைத்துக் கொள்வோம். ஐந்தாம் வகுப்பு குழந்தைகள் அந்த நேரத்தில் என்ன செய்வார்கள்? இரண்டு ஆசிரியர்கள் இருந்தாலும் ஏதோ இரண்டு வகுப்பு மாணவர்களைத்தானே கவனிக்க இயலும். மற்ற மூன்று வகுப்பு குழந்தைகள் என்ன செய்வார்கள்.

குழந்தைகள் குறைவாகத்தானே இருக்கிறார்கள். அனைத்து குழந்தைகளையும் ஒருவரே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறை தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாழாக்கும் என்கிற உண்மையை பெற்றோர்கள் உணர்ந்துள்ளனரா என்பது தெரியவில்லை.

இப்போதெல்லாம் அடிக்கடி பணியிடைப் பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு நடக்கின்றன. போதாக்குறைக்கு வாரத்திற்கு இரண்டு நாட்களேனும் ஏதேனும் தகவல்களை அதிகாரிகள் கேட்பார்கள். அதை எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்கு ஆசிரியர்கள் போக வேண்டும்.

இந்தப் பள்ளியும் ஈராசிரியர் பள்ளிதான். சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரும் அவரது மனைவியும் இங்கு பணியாற்றி வந்திருக்கிறாரள். என்ன காரணத்திற்காகவோ இவரது மனைவி வேறு ஒரு பள்ளிக்கு பணிமாற்றம் செய்யப் பட்டிருக்கிறார். அதிலிருந்து அவரது பணியிடம் காலிப் பணியிடமாகவே வெகுகாலமாக அந்தப் பள்ளியில் இருக்கிறது.

 தனது கால் முறிந்து இருப்பதாகவும், அதற்கான தொடர் சிகிச்சையில் இருப்பதாகவும் அந்தத் தலைமை ஆசிரியர் கூறியிருக்கிறார். மாற்று ஆசிரியர் இல்லாத காரணத்தால் தன்னால் விடுப்பு எடுக்க இயலவில்லை என்றும் மிகுதியான கால்வலியோடு பள்ளிக்கு வரவேண்டி இருந்ததால் வலிமறப்பதற்காக குடித்துவிட்டு பள்ளிக்கு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். எதன்பொருட்டே ஆயினும் குடித்துவிட்டு போதையோடு பள்ளிக்கு வந்ததை யாராலும் ஏற்க இயலாது.

ஆனால் ஆத்திர அவசரத்திற்கு இதுமாதிரிப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களால் விடுப்பு எடுக்க இயலாது என்கிற சிரமத்தை நாம் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டும். இதுமாதிரி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் யாரேனும் தங்களது நெருங்கிய உறவினரின் மரணாத்தின் பொருட்டு விடுப்பு எடுக்கும் நிலை ஏற்பட்டால்கூட அருகில் உள்ள பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களில் ஒருவரை இங்கு மாற்றுப் பணிக்கு ஏற்பாடு செய்தால்தான் விடுப்பு சாத்தியப் படும். அருகில் உள்ள பள்ளியின் ஆசிரியர் விடுப்பு எடுத்திருந்தாலோ அல்லது அந்தப் பள்ளியிலும் ஒரு ஆசிரியர் மட்டுமே இருந்தாலோ எதன்பொருட்டும் இவரால் விடுப்பு எடுக்க முடியாது.

கால்வலி மறப்பதற்காகத்தான் மது அருந்தியதாக அவர் சொல்வதை நம்மால் ஏற்க முடியாது. ஆனால் கால் ஒடிந்திருந்தாலும் உயிர்போகும் வலி இருந்தாலும் மாற்றுப் பணிக்கு ஆள் இல்லாத பட்சத்தில் அந்த வலியோடே பள்ளிக்கு வந்தே ஆகவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது வன்முறை அல்லவா


யாரேனும் ஒரு ஆசிரியர் விடுப்பு எடுத்திருந்தால் அவரது வகுப்பையும் சேர்த்து ஒருநாள் முழுக்கப் பார்ப்பது என்பது மிகவும் கடினமான காரியம். வருடம் முழுவதும் காலை முதல் மாலைவரை ஐந்து வகுப்புகளையும் ஒரே இடத்தில் அமரவைத்து ஒரு ஆசிரியரே பாடம் நடத்துவது என்பது நினைத்தே பார்க்க முடியாத காரியம்.

வகுப்புக்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமிக்கக் கோரினால் ஒரு ஆசிரியருக்கே மாணவர்கள் இல்லை இதில் ஐந்து ஆசிரியர்களை எப்படி நியமிப்பது என்று திருப்பி கேட்கிறார்கள். இதில் மாணவர்களின் எண்ணிக்கையை அளவுகோலாக வைப்பதே அயோக்கியத்தனமான அபத்தம். மாணவர்களின் எண்ணிக்கை ஆசிரியர் பணிநியமனத்தின் போது ஏன் பார்க்கப் பட்டது என்றால் ஒரு ஆசிரியருக்கு அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கும் பட்சத்தில் பட்சத்தில் அந்த வகுப்பை ஒரு ஆசிரியரால் நிர்வகிக்க இயலாது. எனவே ஒரு அளவிற்கு அதிகமாக மாணவர்கள் சேர்ந்துவிடும்போது அந்த வகுப்பை இரண்டாகப் பிரித்து ஆசிரியரின் சுமையைக் குறப்பதற்கும் கல்வித் தரத்தை பாதுகாப்பதற்காவும்தான்.

ஒரு வகுப்பில் அதிகபட்சமாக இவ்வளவு மாணவர்கள்தான் இருக்க வேண்டும் என்பதற்காக நடைமுறைப் படுத்தப்பட்ட இந்த ஏற்பாடு காலப்போக்கில் குறைந்த பட்சம் இவ்வளவு மாணவர்கள் இருந்தால்தான் ஒரு ஆசிரியரை நியமிக்க முடியும் என்று திரிந்து போனது.

இதை மாற்றுவதற்கு சாத்தியமே இல்லை. நிதிச்சுமையை தாங்க இயலாது என்று சொல்பவர்களுக்கு நாம் அவர்களே அடிக்கடி விய்ந்து கொண்டாடும் நாளந்தாவை உதாரணமாகக் காட்டுவதற்கு கடமை பட்டிருக்கிறோம்.

பொதுவாகவே இந்தியாவின் கல்வி மேன்மையை சொல்ல விரும்பும் யாவரும் நாளந்தாவைப் பற்றி எடுத்துச் சொல்லாமல் நகர்வதே இல்லை. வாகன ஏற்பாடுகள் அறவே இல்லாத அந்தக் காலத்தில் நாளந்தாவில் பத்தாயிரம் மாணவர்கள் படித்ததாக கூறுவார்கள்.

இரவு வகுப்புகள் நடந்தன அந்தக் காலத்திலேயே என்கிறார்கள். மின்சாரம் இல்லாத அந்தக் காலத்திலேயே ஆசிரியர்கள் தியாக சிந்தனையோடு தீப்பந்த வெளிச்சத்தில் கற்றுத் தந்திருக்கிறார்கள்இப்போது எல்லா வசதியும் இருக்கிறது. ஆசிரியர்கள் கொஞ்சம் சிரமத்தைப் பொறுத்துக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சொல்லித்தரக் கூடாதா என்று கல்வித்துறை அதிகாரிகள் பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன்.

எந்த வசதியும் இல்லாத அந்தக் காலத்திலேயே பத்தாயிரம் மாணவர்களை சேர்த்திருக்கிறார்கள் என்றால் இப்போது ஏன் முடியாது. ஆசிரியர்கள் பொறுப்போடு உழைத்தால் அது சாத்தியப்படும் என்பதாக ஏதோ இதில் அதிகாரிகளுக்கு பொறுப்பே இல்லை என்று தொண்டை வலிக்கும்வரை பேசித் தீர்க்கும் கல்வித்துறை அதிகாரிகளை எனக்குத் தெரியும்.

நொடிக்கு நூறுதரம் பத்தாயிரம் மாணவர்கள் படித்தார்கள் என்பதை பேசும் இவர்கள் அங்கே எத்தனை ஆசிரியர்கள், எத்தனை ஊழியர்கள் வேலை பார்த்தார்கள் என்ற விவரத்தை மட்டும் சொல்லவே மாட்டார்கள்.

பத்தாயிரம் மாணவர்கள் படித்த நாளந்தாவில் மூவாயிரம் ஆசிரியர்களும் இரண்டாயிரம் ஆசிரியரல்லாத ஊழியர்களும் பணிபுரிந்திருக்கிறார்கள். அதாவது பத்தாயிரம் மாணவர்களுக்கு மூவாயிரம் ஆசிரியர்கள் என்றால் ஆயிரம் மாணவர்களுக்கு முன்னூறு ஆசிரியர்கள். தெளிவாய் உடைத்தால் ஒவ்வொரு மூன்று மாணவனுக்கும் ஒரு ஆசிரியர், ஒவ்வொரு ஐந்து மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியரல்லாத ஊழியர்.

இரண்டு மூன்று கிராமங்களின் மொத்த வருவாயைக் கொட்டி நாளந்தாவை கட்டமைத்திருக்கிறார்கள்.


நாளந்தாவைப் போல மூன்று மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரைக்கூட நாம் கேட்கவில்லை. வகுப்பிற்கு ஒரு ஆசிரியராவது ஒதுக்குக்குங்கள் என்றுதான் கேட்கிறோம். பள்ளிக்கு குறைந்தபட்சம் ஒரு ஊழியராவது அவசியம் என்றுதான் கோருகிறோம். இந்த கோரிக்கைகள் நியாயம் என்பதை உணர்து கொள்ளும் அரசொன்று வாய்க்காதா என்று ஏக்கமாக இருக்கிறது.         

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...