Monday, August 24, 2015

13 வேட்டி கட்டிய அம்மாயி டீ ஆத்திக் கொண்டிருக்கிறாள்

”சிரபுஞ்சியில் மழையே சரியாப் பெய்றடு இல்லையாமேப்பா?”

படிக்கட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது கீர்த்திம கேட்டாள்.

“ஆமாண்டா”

“அப்புறம் ஏன், இன்னமும் உலகத்துலேயே அதிக மழை அங்கதான் பெய்யுதுன்னு பொய் பொய்யா நடத்துறீங்க”

இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன்.

நாங்கள் சொல்லித் தருகிற பொய் இது ஒன்று மட்டும்தானா மகளே என்று கேட்கத் தோன்றியது.

ஏன் ஒன்றைச் சொல்லி ஒரு நூறை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று எண்ணி மௌனத்தை விரித்துக் கொண்டிருந்தேன். அவளாகவே அடுத்ததைக் கேட்டாள்.

”நம்ம ஊரைப் போலவே அங்கையும் மழை இல்லைனா நம்ம ஊரைப் போலவே அங்கையும் பூமி வறண்டு வெடித்துதான் கிடக்குமா?”

எனக்கு வேலை வைக்காமல் இடை மறித்த விக்டோரியா,

“நம்ம ஜனங்க மாதிரி எல்லா ஊர் ஜனகளுக்கும் மனசு வறண்டுதானே கிடக்குது, மனசு வறண்டு கிடந்தா பூமியும் வறண்டுதானே கிடக்கும்.

மனசு ஈரப்பட்டாதானே பூமியும் ஈரப்படும்.”

“அதானே”

ஏதோ பெரிதாய் புரிந்ததுபோல் கீர்த்தி சொல்லி வைத்தாள்.

ஆமாம், ஜனங்களின் மனதில் ஈரமே இல்லையா?

கொடைக் கரிசலாய் மனித மனங்கள் வறண்டு வெடித்துதான் கிடக்கின்றனவா?

இல்லை என்று முகத்தில் அறைந்து சொல்லின, போன முறை சென்னி போய் திரும்பியபோது நிகழ்ந்த இரண்டு சம்பவங்கள்.

பொதுவாகவே “ தாய்மை:” என்பதை புனிதம் என்று சொல்வதுகூட பெண்களை இன்னும் கொஞ்சம் கசக்கி வேலை வாங்கத்தானோ என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டுதான்.

தாய்மைக்கு நிகர் எதுவுமே இல்லை என்பதன் மூலம் தகப்பனது பொறுப்பை, வேலைப் பகிர்வை தள்ளுபடி செய்து பெண்ணின் உழைப்பை இந்தச் சமூகம் சுரண்டுவதாகவே படும்.

ஆனால் எல்லாம் கடந்து தாய்மை ஈரமானது என்பது மீண்டும் இன்னொரு முறை நிரூபனமானது அன்று காலை.

அன்று கால பயணச்சீட்டு வாங்குவதற்காக சைதாப்பேட்டை ரயிலடியில் வரிசையில் நின்று கொண்டிருந்தேன். கொஞ்சம் நீண்ட வரிசை. வெளியே சைக்கிள் ஸ்டாண்ட் வரைக்கும் நீண்டிருந்தது.

சன்னமாய் தூறத் தொடங்கியது.

உள்ளே ஓடி விடலாம் என்றால் எனக்கும் கட்டிடத்திற்கும் இடையில் நான்கைந்து பேர்களே இருந்தனர். எனக்குப் பின்னே ஏறத்தாழ அறுபது அல்லது எழுபது பேர் நின்றிருந்தனர். கொஞ்சம் நனைவதற்கு பயந்து உள்ளே போனால்பிறகு கடைசி ஆளாய் நிறு பயணச்சீட்டு வாங்க ஒரு மணி நேரம் கூடுதலாக செலவழிக்க நேரிடும். எனவே சன்னமாய் நனைந்து விடுவது என்று முடிவெடுத்தேன்.

ஓரத்தில் சாக்கு விரித்து அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அம்மா சொன்னார்,

“இந்த ரயிலு இல்லேன்னா அடுத்த ரயிலு, ஓடியாப் போகப் போகுது. நனையாமக் கொஞ்சம் ஒதுங்குப்பா. ஏற்கனவே தும்முற.காச்ச கீச்ச வந்துறப் போகுது.”

ஒரு த்ய்ய் எந்த நிலையில் இருந்தாலும் பொங்கிப் பிரவாகிக்கவே செய்யும் ஈரம்.

ஒரு வழியாய் ரயில் பிடித்து தாம்பரம் இறங்கி அங்கிருந்து பேரம்பலூருக்கு பேருந்து ஏறினேன்.

நல்ல பசி.

எங்கேனும் சாப்பிட நிறுத்த மாட்டார்களா என்று வயிறு கிடந்து அலைந்தது.

இன்னும் கொஞ்சம் விட்டால் பெருங்குடல் சிறு குடலைத் தின்றுவிடும் என்கிற ஒரு உச்சத்திற்கு பசி போன நிலையில் ஒரு வழியாய் பேருந்து ஒரு மோட்டலுக்குள் நுழைந்தது.

நடத்துனருக்கும் ஓட்டுனருக்கும் நன்றி சொன்னது வயிறு.

இறங்கியதும் இளநீர் விற்குமிடத்தைத் தேடினேன்.

இரண்டு காரணங்களுக்காக நான் மோட்டல்களுக்குள் நுழைவதில்லை.

ஒன்று,

அங்கு கிடைக்கும் உணவின் தரம்.

மற்றொன்று,

மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து மோட்டலில் சாப்பிடும் காசை வைத்துசின்னதாய் ஒரு சாப்பாட்டுக் கடை வைத்து விடலாம். அப்படியொரு கொள்ளை விலை.

நமக்கென்றுதான் ஒரு ராசி உண்டே. மோட்டலைச் சுற்ரி சுற்ரி வந்தும் இளநீர் கிடைக்கவில்லை. வேறு வழி இல்லை. உள்ளே போய்விட வேண்டியதுதான் என்று எட்டிப் பார்த்தேன்.

குழம்பின் நிறமே வயிற்ருக்கு எரிச்சலைக் கொண்டு வந்தது.

சரி என்று சொல்லி தேநீர் ஸ்டாலுக்குப் போனேன். கடும் வெயிலாக இருந்ததால் கூட்டமே இல்லை. ஒரு சம்சாவை எடுத்தேன். முடித்ததும்,

“ஒரு காபி கொடுங்க”

இன்னொரு சம்சாவை எடுக்கப் போனேன்.

“சார், வேணாம் சார். வெயில். வயித்துக்கு ஒத்துக்காது. பன்னோ பிஸ்கட்டோ சாப்பிடுங்க சார்”

யாரும் பார்க்கிறார்களோ என்ற பயத்தோடு சன்னமான குரலில் சொன்னார் டீ மாஸ்டர்.

“ ஏண்டா ராஸ்கோலு, எப்ப பாத்தாலும் இப்படி வடையும் சம்சாவுமா வாங்கிட்டு வர. கண்ட கண்ட எண்ணெயில சுத்தமில்லாத மாவுல செஞ்சு தொலச்சிருப்பானுங்க. புள்ளைங்களுக்கு ஒத்துக்காதுன்னு எத்தன தவ சொல்றது” என்று பிள்ளைகளுக்கு வடை அல்லது சம்சா வாங்கி வரும் போதெல்லாம் அம்மாயி திட்டுவது நினைவுக்கு வந்தது.

மீண்டும் டீ மாஸ்டரைப் பார்த்தேன்.

அங்கே வேட்டி கட்டிய அம்மாயி டீ ஆத்திக் கொண்டிருப்பதாகவே பட்டது.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...