Wednesday, August 12, 2015

17 இப்போதும் காலம் கடந்துவிடவில்லை…

“ இதே ஒற்றுமையோடு, இதே புரிதலோடு இரண்டு இடதுசாரிக் கட்சிகளும் இணைந்து, இந்தப் பூமி எங்கும் விரிந்து பரவி எப்போதும் வேலை பார்க்க வேண்டும் என்பதே எனது ஆயுட்கால ஆசை” _ மூத்த எழுத்தாளர் தி.க.சி


தன் நண்பன் ஒருவனிடம் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டுக் கொண்டிருக்கிறான் ஒருவன். பணத்தைக் கொடுத்தவன் எது கேட்டாலும் வாங்கியவன் “ இந்தியாவின் தலை நகரம் டெல்லி” என்றே சொல்லிக் கொண்டிருக்கிறான்.கோவத்தின் விளிம்புவரை சென்றவன் “ஒன்னு தரேன்னு சொல்லு. இல்லாட்டி இல்லேன்னாலும் சொல்லு. தருவியா மாட்டியாடா?” என்று கேட்கிறான். அப்பொழுதும் சற்றும் சளைக்காதவனாய் “ இந்தியாவின் தலை நகரம் டெல்லி” என்கிறான்.

கோவம் எல்லை தாண்ட அவனை அடிக்க கையை ஓங்குகிறான். அப்போது அந்தப் பக்கமாக வந்த பொது ஜனங்களை அழைத்து “ இங்க பாருங்க, இந்தியாவோட தலை நகரம் டெல்லிங்கறேன். இல்லைனுட்டு அடிக்க வருகிறான்” என்கிறான் பணத்தை வாங்கியவன்.

“ சரியாத் தானே சொல்றான். அவன ஏண்டா அடிக்கப் போற பொறுக்கிப் பயலே ” என்று பணம் கொடுத்தவனை தர்மத்திற்கு நாலு போட்டுவிட்டு போகிறார்கள் பொது ஜனங்கள்.

இப்படியெல்லாம் லூசுத்தனமா ஏதேனும் நடக்குமா? என்று சிலர் கேட்கக் கூடும். இப்படி ஒரு காரியத்தைதான் பாரதிய ஜனதாக் கட்சியும் கார்பரேட் முதலைகளும் அவர்கள் அண்டிப் பிழைக்கும் ஊடகங்களும் செய்து கொண்டிருக்கின்றன.

“2002 இல் மூர்க்கமான மத வெறியோடு கொலை பாதகமாடினீர்களே…” என்று கேட்டால் “ மோடிதான் வருங்காலப் பிரதமர்” என்கிறார்கள். “ஒரு பெண் குழந்தையை வேவு பார்த்தீர்களே” என்று கேட்டாலும் , “ மோடிதான் வருங்காலப் பிரதமர் ” என்கிறார்கள். தவறிப்போய் , “நேற்று  உங்களுக்குப் பேரன் பிறந்திருக்கிறானாமே. எப்படி இருக்கிறார்கள் குழந்தையும் மகளும்” என்று கேட்டாலும், “ மோடிதான் வருங்காலப் பிரதமர்” என்கிறார்கள்.

மோடிதான் வருங்காலப் பிரதமர் என்பதையே ஊடகங்களின் வழி திரும்பத் திரும்பச் சொல்லி அப்படியான ஒரு பிம்பத்தை, பொது புத்தியை பொதுமக்கள் மத்தியில் கட்டமைக்க முயற்சி செய்கிறார்கள்.

தொடர்ந்து ஊதிக் கொண்டே இருக்கிறார்கள். வயிறு பெறுத்துக் கொண்டே வருவதும்கூட கொஞ்சம் உண்மைதான். கர்ப்பப் பையில் இருப்பது குழந்தை எனில் ஆசையோடு வலி பொறுத்து சுமக்கலாம். கட்டி எனில் அறுத்து எடுத்தால்தானே உயிர் பிழைக்க முடியும். அந்த நிலையில்தான் தேசம் இருக்கிறது இன்று.

இப்படி ஒரு காரியத்தை செய்வதற்கான தேவை பாரதிய ஜனதா கட்சிக்கு இருக்கலாம். ஆனால் ஊடகங்களுக்கு அதனால் என்ன லாபம் என்று ஒரு கேள்வி எழலாம். பெரிய பெரிய உலக கார்ப்பரேட்டுகள் எல்லாம் சொல்லமுடியாத அளவு சரிவை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ரிலையன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ, பாரதி ஏர்டெல் போன்ற கார்ப்பரேட்டுகள் எந்தவித தொய்வுமின்றி லாபம் சம்பாதிக்கிறார்கள் என்கிற எதார்த்த நிலை இது எப்படி சாத்தியம்? என்றொரு கேள்வியைத் தருகிறது. இவர்கள் சரிவை சந்தித்துவிடக் கூடாது என்பதில் கவனமாயிருக்கும் ஆட்சியாளர்கள் அள்ளி வழங்கும் சலுகைகளே இவர்களை லாபக் குதிரைகளில் தொடர்ந்து பயணிக்க உதவுகிறது.

இதனால்தான் கார்ப்பரேட்டுகளும் அவர்களை அண்டிப் பிழைக்கும் ஊடகங்களும் இத்தகைய காரியங்களை செய்து கொண்டிருக்கக் காரணம். அப்போதும் இன்னொரு கேள்வி முளைக்கிறது. இதற்காகத்தான் இவர்கள் மோடியை இப்படித் தூக்கிச் சுமக்கிறார்கள் என்றால் காங்கிரசும் இதைத்தானே இத்தனை ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறது. பிறகு ஏன் இவர்கள் மோடியை இவ்வளவு பிரதானப் படுத்த வேண்டும்?

குஜராத்தில் அவர்கள் அனுபவிக்கும் சலுகைப் பெருவெள்ளம் ஒரு காரணம். கார்ப்பரேடுகள் நிம்மதியாக கொழுக்க வேண்டுமெனில் நாடு எப்போதும் ஒரு வித பதற்றத்தோடு இருக்க வேண்டும். எனில், தொடர்ந்து பதற்றத்தை உருவாக்கிக் கொண்டும் அதன் வெப்பத்தில் குளிர்காயத் தெரிந்தும் வைத்திருக்கக் கூடிய ஒரு தலைவன் அவர்களுக்குத் தேவைப் படுகிறார். மோடி அதற்கு மிகவும் பொருத்தமானவர் என்பதை கடந்த கால குஜராத் நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

அதற்காக ராகுலை இவர்கள் கைவிட்டு விட்டார்கள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. காங்கிரசின் தேர்தல் செலவுகளையும் கார்ப்பரேட்டுகளே பார்த்துக் கொள்கிறார்கள் என்பதே உண்மை. ஒருக்கால் காங்கிரஸ் வந்து விடுமானால் அதே புள்ளியில் இவர்கள் ராகுலை சுவீகரித்து விடுவார்கள். அதே நேரத்தில் அப்போதும் இவர்கள் மோடியைப் புறக்கணித்து விட மாட்டார்கள். ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் இவர்களை சமமாகப் பாவிக்க வேண்டும். அப்படியானதொரு சூழலை உருவாக்கும் சூத்திரத்தில் கை தேர்ந்தவர்கள் இந்தக் கார்ப்பரேட்டுகள்.


இவரா அவரா என்று மட்டுமே மக்களை சிந்திக்க வைக்க வேண்டும் என்பதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள். இதுவா அல்லது அதுவா என்று யோசிப்பதற்கான சூழலை மக்களுக்கு இவர்கள் தர மாட்டார்கள். அதாவது மாற்று மனிதரை மட்டுமே மக்கள் யோசிக்க வேண்டும். மாற்று அரசியலை மக்கள் நாடிவிடக் கூடாது என்கிற கவனம்தான் இவர்களுக்கு. ஒரு நல்ல மாற்று அரசியல் மக்களை தெளிவாக்கிவிடும் என்பதிலும் அப்படி ஒன்று நந்துவிட்டால் தங்களுக்கான பிழைப்பில் மண் விழுந்துவிடும் என்பதிலும் இவர்கள் தெளிவாயிருக்கிறார்கள்.

இதனால்தான் இந்தியத் தேர்தலிலும் அமெரிக்கா அக்கறை காட்டுவது. காங்கிரசோ பி.ஜே.பி யோ யாரோ வரட்டும் ஆனால் இடதுசாரிகள் மாத்திரம் சொல்லிக் கொள்கிற எண்ணிக்கையில் வந்துவிடக் கூடாது என்பதில் கவனம் கொண்டு அதற்காக இங்குள்ள கார்ப்பரேட்டுகளையும் ஊடகங்களையும் செலவு செய்து முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறது. 62 இடது சாரி பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் இல்லாது இருந்திருந்தால் அணுப் பரவல் ஒப்பந்தத்தை எவ்வளவோ விரைவாக, எளிதாக அவர்களால் நிறைவேற்றிக் கொண்டு போயிருக்க முடியும்.

மோடியா ராகுலா என்பது போல ஒரு தோற்றம் இப்போது தெரிந்தாலும் உண்மை அதுவல்ல. அவர்கள் இருவரில் யார் வருவதிலும் அவர்களுக்கு எந்தக் கருத்தும் இல்லை. கம்யூனிஸ்டுகள் துடைக்கப் பட வேண்டும். அவர்கள்தான் ஆட்சிக்கு வரப் போவது இல்லையே. பிறகு ஏன் இப்படி?

காரணம் எளிதானது. வங்கித் துறையில், இன்சூரன்ஸ் துறையில் , சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை கொண்டு வந்து சேர்க்க வேண்டும். சற்றே ஆளுமை செலுத்தக் கூடிய எண்ணிக்கையில் இடது சாரிகள் வந்து விட்டாலும் இது சாத்தியப் படாது. இவைதான் இவர்கள் மோடியை இப்படிக் கொண்டாட காரணம்.

இந்தத் தேர்தல் காங்கிரசை ஒரு பரிதாப நிலைக்குத் தள்ளியிருக்கிறது. இத்தனை ஆண்டுக்காலம் நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் அவர்களே தமிழ் மண்ணில் நிற்கப் பயப்படுகிறார். காங்கிரசின் மூளை என்று சொல்லப் படும் தலைவர் அவர். அவர் வெகு மக்களுக்கு விரோதமாக திட்டம் தீட்டுகிறார் என்பதில்தான் அவரோடு நமக்கு பிரச்சினையே அன்றி அவரது ஞானத்தின் மீதோ ஆளுமையின் மீதோ, உலக அரங்கில் அவருக்கான இடம் குறித்தோ எல்லாம் நமக்கு கொஞ்சமும் அய்யம் கிடையாது. அவரே தான் தேர்தலில் நிற்கவில்லை என்று அறிவிக்க வேண்டிய ஒரு சூழல்.

ஒன்றிரண்டு இடங்களிலேனும் ஜாமீன் பெறலாம் எனில் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் விடுதலை செய்வதாக தமிழக முதல்வர் அறிவித்ததை எதிர்த்து மனு செய்த பிறகு ஜாமீனுக்கும் நம்பிக்கை அற்றுப் போன ஒரு அவலமான நிலைதான் காங்கிரசிற்கு.

இந்த நல்ல மனிதர் ஏன் காங்கிரசில் இருக்கிறார் நாம் பல நேரம் எண்ணிப் பார்க்கும்படியான ஒரு மனிதர் அந்தோனி. தனிப்பட்ட முறையில் மக்களிடம் அதுவும் கேரள மக்களிடம் பேரதிகமான மரியாதையை தக்க வைத்துக் கொண்டிருப்பவர். அவரே இந்தத் தேர்தலில் நிற்கவில்லை என்று சொல்லுமளவிற்குத்தான் வெற்றி வாய்ப்பு அவருக்கு இருக்கிறது. எஞ்சி இருக்கும் வாய்ப்புகளில் கணிசமான பகுதியை உளறியே ஒழித்து விடுவார் ராகுல்.

ராகுல்தான் இப்படி என்றால் ஊடகங்களின் நாயகனான மோடியும் சற்றும் அவருக்கு சளைக்காத வகையில்தான் உளறிக் கொண்டிருக்கிறார்.

ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரஹம் நடந்தது. மோடி வ.உ.சி தலைமையில் நடந்ததாக திருச்சியில் சொல்கிறார்.

குப்தர்களின் காலம் பொற்காலம் என்றும், குப்தர் வம்சத்தைச் சார்ந்த சந்திர குப்தரது நீதி பரி பாலணம் தன் நினைவுக்கு வருவதாகவும் பாட்னா பொதுக் கூட்டத்தில் பேசியிருக்கிறார். சந்திர குப்தர் குப்தரே அல்ல. அவர் மௌரியப் பேரரசர்.

அதே கூட்டத்தில், உலகத்தையே வென்ற அலக்சாண்டர் பீஹாரில் உள்ள தக்க சீலத்தில் தோற்று ஓடியதாகவும் பெருமைபட பேசியிருக்கிறார். திரண்டிருந்தவர்களில் வரலாறு தெரிந்தவர்கள் சிரித்திருக்கிறார்கள். காரணாம் கங்கையைக் கடந்து பீஹார் பக்கம் அலசாண்டர் வரவேயில்லை. தக்கசீலம் பீஹாரிலேயே இல்லை. பாகிஸ்தானில் இருக்கிறது.

பட்டேலின் இறுதி நிகழ்ச்சிகளில் நேரு கலந்து கொள்ளவே இல்லை என்றொரு பொய்யையும் மோடி போகிற போக்கில் சொல்லியிருக்கிறார்.

வரலாறு தெரியாமல் உளறுகிறார் என்கிறார்கள் பலர். ஆறாம் வகுப்பு படிக்கும் குழந்தை இப்படி வரலாறை தேர்வில் எழுதினால் ஆசிரியர் அந்தக் குழந்தையின் காதைப் பிடித்துத் திருகி தலையில் நாலு கொட்டுப் போடுவார். இப்படி வரலாறை எழுதினால் மாணவனே தோற்றுப் போவான். எனில் இவ்வளவு மோசமாக வரலாறை கூச்சமின்றி சொல்லும் அவர் எப்படி பிரதமராவது.

அல்லது வரலாறைத் திரிப்பது என்று முடிவானபின் இவற்றையும் சேர்த்து திரித்து விடலாமே என்று செய்ய வேண்டும். அப்படி தெரிந்தே திரிக்கிறார் என்றாலும் அவர் பிரதமராவதற்கு உரிய தகுதியை இழக்கிறார்.

ஊழலை தேசத்திலிருந்து ஒழிக்க வேண்டும். அதற்கு முற்றிலும் தகுதியானவர் மோடிதான் என்று கேப்டன் சொல்லியிருப்பதாக செய்தித் தாள்கள் சொல்கின்றன.

வருடம் சரியாய் நினைவில் இல்லை. அன்றைய பி.ஜே.பி தலைவர் பங்காரு லட்சுமணன் கையூட்டு பெறுவதை ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டதை எல்லோரும் பார்த்தோம். அந்தக் குற்றம் மெய்ப்பிக்கப் பட்டு அவரும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். “ சட்டவிரோதமாக சுரங்கத் தொழில் நடத்த வேண்டாம் என்று தாங்கள் எப்படியெல்லாமோ எடுத்து சொல்லியும் அவற்றை அலட்சியப் படுத்தினார் எடியூரப்பா. அதன் விளைவுகளைத்தான் இப்போது அவர் அனுபவித்துக் கொண்டிருக்கிறார். பி.ஜே.பியும் ஊழல் பிடியிலிருந்து தப்ப முடியவில்லை” என்று நாக்பூரில் அத்வானியே ஒருமுறை பேசியுள்ளார்.

இவ்வளவு ஏன்? கார்கிலில் பனியில் விறைத்த நிலையில் நம் வீரர்களின் உடல்கள் எடுக்கப் பட்டன. இறந்தபிறகும் தேசத்தை காத்தல் செய்த அந்த தீரம் மிக்க வீரர்களை நல்லடக்கம் செய்வதற்கு வாங்கப் பட்ட சவப்பெட்டிகளில்கூட ஊழலின் முத்திரையைப் பதித்தவர்களாயிற்றே பி.ஜே.பியினர்.

L&T நிறுவனத்திற்கு சதுரமீட்டர் ஒரு ரூபாய் என்ற விலையில் எட்டு லட்சம் சதுரமீட்டர் நிலத்தை மோடி அரசு கொடுத்திருக்கிறது. அன்றைய தேதியில் அந்த இடத்தின் அரசு மதிப்பு 950 ரூபாய். அரசு மதிப்பே 950 எனில் வெளிச் சந்தையில் அதன் மதிப்பு இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும். அரசு மதிப்பிற்கே வைத்துக் கொண்டாலும் 75,92,00,000 அரசுக்கு இழப்பல்லவா?

நானோ நிறுவனத்திற்கு இவர்கள் அள்ளி வழங்கியுள்ள சலுகைகளை எப்படி பட்டியலிடுவதென்றே தெரியவில்லை. சதுர அடி 10,000 ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 900 ரூபாய்க்கு கொடுத்திருக்கிறார்கள். இவர்களது சக்தியைப் பயன்படுத்தி 0.01 வட்டி விகிதத்தில் நானோவிற்கு 9570 கோடி ரூபாய் கடன் கிடைக்கிறது. கல்விக் கடனுக்கு 14% வட்டி. நானோவிற்கு 0.01%. மட்டுமல்ல 20 ஆண்டுகள் கழித்து கடனைக் கட்ட ஆரம்பித்தால் போதும் என்கிற அளவில் தளர்ந்த நிபந்தனை.

மட்டுமல்ல நானோவின் செலவினத்தின் மதிப்பே 2200 கோடிதான். பெற்ற கடனோ 9570 கோடி.

ஒரு லட்சம் ரூபாய்க்கு வீடு கட்டினால் 80,000 தான் கடன் கிடைக்கும். நானோ 2200 கோடி செலவு செய்கிறது. அதற்கு 9570 கோடி கடன் கிடைக்கிறது. நானோ தயாரிக்கும் ஒவ்வொரு காருக்கும் ஏறத்தாழ 60,000 ரூபாயை சலுகையாகப் பெறுகிறது.

இதுதான் மோடி.

குஜராத்தில் நிகழும் மரணங்களுள் 31% தற்கொலை மூலம் நிகழ்வதாக தேசிய குற்றவியல் பதிவுகள் வாரியம் சொல்கிறது.

“ இந்தியாவில் விபத்து மரணங்களும் தற்கொலைகளும் 2012” என்ற தனது ஆய்வறிக்கையில் 2011 ஆம் ஆண்டு மட்டும் 6382 பேர் குஜராத்தில் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்றும் இது 2012 இல் 7110 ஆக உயர்ந்தது என்றும் கூறுகிறது. 

தற்கொலை செய்து கொள்ளும் குஜராத் மக்களில் ஏறத்தாழ 40% பேர் 15 வயதிற்கும் 29 வயதிற்கும் இடைப் பட்டவர்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

குஜராத் சந்தித்த இந்த அவலத்தை மொத்த இந்தியாவும் சந்திக்கக் கூடாது என்பதற்காகவே நாம் மோடியை நிராகரிக்கிறோம்.

மோடி பிரதமரானால் அவரைப் பயன்படுத்தி ஈழத்தை சாத்தியமாக்குவார் வைகோ என்கிறார்கள் நண்பர்கள். 2002 இல் அன்றைய துணைப் பிரதமர் அத்வானி அவர்கள் இலங்கையிடம் ராஜீவ் கொலையில் குற்றவாளியாகத் தேடப்படும் பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டார்.

ஆணையிரவுப் போர் என்பது புலிகளின் ஈழப் போரில் பொன் எழுத்துக்களால் பொறித்துக் கொண்டாட வேண்டிய ஒரு நிகழ்வு. வியக்கத் தக்க அளவு வெற்றிகரமாக முன்னேறிய புலிகள் யாழ்ப்பாணத்தை வசப்படுத்தி விடுகின்றனர். யாழ் நகரை வசப் படுத்திய அடுத்த கனம் அவர்கள் யாழ் கோட்டையை முற்றுகையிடுகின்றனர். யாழ் கோட்டையில் பதுங்கியிருந்த அல்லது தங்கியிருந்த ஏறத்தாழ 4000 இலங்கை ராணுவ வீரர்களுக்கும் புலிகளிடம் சரணடைவதைத் தவிர வேறு வழி இல்லை என்கிற சூழல். இது நடந்தது 2002 இல்.

இது மட்டும் நடந்திருக்குமானால் ஒருக்கால் ஈழப் போரின் முகம் சற்று மாறியிருக்கக் கூடும். 4000 இலங்கை வீரர்கள் புலிகளிடம் சரணடைந்திருந்தால் அந்த 4000 வீரர்களையும் மீட்டெடுக்க வேறு வழியின்றி இலங்கையும் சற்று இறங்கி வந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கக் கூடும்.

4000 இலங்கை வீரர்களும் சிங்களவர்கள் என்பதால் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டிருக்கும். சிங்கள மக்கள் என்ன செய்தேனும் அவர்களை மீட்டெடுக்க அரசாங்கத்தை நெருக்கி இருப்பார்கள். சர்வதேச நெருக்கடியும் ஏற்பட்டிருக்கும் இலங்கைக்கு.
அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தலையிட்டு அந்த நெருக்கடியிலிருந்து 4000 வீரர்களையும் மீட்டெடுக்க இலங்கைக்கு உதவினார் என்ற ஒரு செய்தியும் உண்டு.

எனில் ஈழ விஷயத்தில் வெண்ணெய் திரண்டு வந்தபோது தாழியை உடைத்தவர்கள் ஆகிறார்கள் பி.ஜே.பி யினர். 

மத்தியப் பிரதேச பி.ஜே.பி முதல்வர் சிவராஜ்சிங் சௌஹான் சாஞ்சியில் கட்டப்பட்டுள்ள புத்தப் பல்கலைக் கழகத்தை துவக்கி வைக்க ராஜபக்‌ஷேவைத்தான் அழைத்தார். கருப்புக் கொடி காட்டப் போன வைகோ அவர்களை கைது செய்து திறந்த வெளியில் அவர்களை இரவு பகலாக வைத்திருந்தது பி.ஜே.பி அரசு. மட்டுமல்ல, இவர்களில் யாரேனும் ரயில் மார்க்கமாக வந்து விடக்கூடும் என பயந்த அவர்கள் அன்றைய தினம் போபால் மற்றும் விதிஷா இடையே எந்த ரயிலும் நிற்க அனுமதிக்க வேண்டாம் என்று ரயில்வே அமைச்சகத்திற்கு விண்ணப்பம் வைக்கிறது. 20.09.12 அன்று 11 ரயில்கள் அந்த ரயில் நிலையங்களில் நிற்கவில்லை.

விண்ணப்பித்தது பி.ஜே.பி. ஒத்துழைத்தது காங்கிரஸ். ராஜ பக்‌ஷேவைக் காப்பாற்றவெனில் இருவரும் எப்போதும் கரம் கோர்க்கவே செய்வார்கள்.  
19.09.12 அன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த வைகோ 2000 இந்து கோயில்களை இடித்து நாசப் படுத்தியவர் ராஜபக்‌ஷே என்று கூட கட்காரியிடம் தான் சொல்லிப் பார்த்ததாகவும் ஆனாலும் அவர் இளகவில்லை என்றும் சொன்னார்.

ஆக, ஊழலைப் போலவே ஈழ விஷயத்திலும் காங்கிரசும் பி.ஜே.பி யும் ஒன்றுதான். இங்கு பி.ஜே.பியைப் பற்றி பேசிய அளவிற்கு காங்கிரசைப் பேசாததற்கு தேவை தவிர வேறு எதுவும் காரணம் இல்லை.
மற்றபடி மதம் என்பதைத் தவிர இருவரும் ஒன்றுதான். மதம் என்று வரும் போதுகூட இவர்கள் இடிப்பார்கள், அவர்கள் வேடிக்கைப் பார்ப்பார்கள். அவ்வளவுதான்.

தி.மு.க விற்கு இந்தத் தேர்தல் என்பது 2Gயிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வது என்பதில்தான். அ.தி.மு.க விற்கென மக்கள் சார்ந்த நோக்கமெல்லாம் இல்லை. அதுவும் சில பலூன் கனவுகளோடுதான் இந்தத் தேர்தலை அணுகுகிறது.

மாறாக இந்தத் தேர்தல் செய்த சில நல்லதுகளுள் மிக முக்கியமான நல்லது இரண்டு இடதுசாரிகளையும் இணைந்து தேர்தலை சந்திக்க வைத்ததுதான்.

தனது 50 ஆண்டுகால வாழ்க்கையில் தனது கட்சிக்கு ஓட்டுப் போடும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்திருப்பதாக எழுத்தாளர் மாதவராஜ் பூரிப்போடு எழுதுகிறார்.

18 பாராளுமன்றத் தொகுதிகள். எனில் 108 சட்டமன்றத் தொகுதிகள். ஆக 108 சட்டமன்றத் தொகுதிகளில் அருவாள் சுத்தியலும், கதிர் அருவாளும் சுவர்களில் பூக்கும். இது எவ்வளவு பலமான விளைவுகளை வருங்காலத்தில் கொண்டு வரும் என்பதை எண்ணிப் பார்த்தாலே பூரிப்பாய் இருக்கிறது.

108 தொகுதிகளிலும் தோழர்கள் வீடு வீடாய் போய் மக்களைச் சந்திக்கப் போகிறார்கள். சின்னமும் கட்சியும் , கொள்கையும் மக்களிடம் கொண்டுபோகப் படுவதற்கு ஒரு பெரிய வாய்ப்பினை இந்தத் தேர்தல் தந்திருக்கிறது.

மக்களுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையே ஒரு நெருக்கமான உறவு மலர்வதற்கு இது ஒரு சரியான வாய்ப்பு.

எல்லாமே மோசம் என்றொரு பொது புத்தி இருக்கிறது. அதை உடைக்க வேண்டும். நாம் ஓட்டு போட்டு அனுப்பியவர்கள் என்ன செய்தார்கள் என்று பரிசீலியுங்கள். யாருமே எதுவுமே செய்யவில்லையா. இன்றளவும் பொதுத்துறைகளை இன்சூரன்சை பி.ஜே.பி மற்றும் காங்கிரசிடமிருந்து காக்கிற வேலையை இடது சாரிகள் செய்திருப்பது தெரியும்.

13 ஆண்டுகாலம் MLA வாக உள்ள பாலபாரதியிடம் 10 பவுன்கூட இல்லை. இதை விகடன் சொன்னது. ஐந்து ஆண்டுகள் MLA வாக இருந்த தோழியின் தாயார் இன்னமும் மண் சுமந்துதான் பிழைக்கிறார்கள்.

தோழர் நன்மாறன் 5000 ரூபாய் இல்லாமல் அரசு கல்லூரியில் தன் பையனை படிக்க வைத்திருக்கிறார். 10 ஆண்டுகாலம் MLA வாக இருந்தவர்.
பொதுத் தொகுதியில் ஒரு தலித் வேட்பாளரை நிறுத்தும் துணிச்சல் இடதுசாரிகளுக்கு மட்டுமே உண்டு. ஆனானப் பட்டவர் என்று சொல்லப் பட்ட ஆ.ராசாவே பெரம்பலூர் பொதுத் தொகுதியானதும் தனித் தொகுதியான நீலகிரிக்குப் பயணப்பட வேண்டி வந்ததை பொறுத்திப் பார்த்தால் இது எவ்வளவு துணிச்சலான செயல் என்பது விளங்கும்.
எல்லாம் மோசம் இல்லை.

இடதுசாரிகளிடம் நமக்குள்ள கோவம். இன்னும் கொஞ்சம் முன்னமே முடிவெடுத்து ஒரு ஆதரவு சக்தியை கொண்டு வந்திருக்க வேண்டும். அ.தி.மு.க, தி.மு.க வோடே கூட்டு சேர்ந்தவர்கள் ஆம் ஆத்மியை அரவணைத்திருக்க வேண்டும்.

அதை ஏன் செய்ய மறுத்தார்கள் என்று தெரியவில்லை. தாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் யாருக்கு ஆதரவு என்பதை சொல்வதாக சொல்லியிருக்கிரார்கள். அநேகமாக ஆம் ஆத்மியை ஆதரிக்கக் கூடும். ஒரு உடன்பாடு இவர்களுக்குள் ஏற்பட்டிருக்குமாயின் கோவை, விருதுநகர், மற்றும் கன்னியாகுமரியில் ஏகத்திற்கும் பலம் கூடியிருக்கும்.

இப்போதும் காலம் கடந்துவிடவில்லை என்றே படுகிறது.

ஜெயிக்கறவங்களுக்குப் போடலாமே என்பதும் உடைத்தெறியப் படவேண்டிய ஒரு பொதுப் புத்திதான். நல்லவர்களை ஜெயிக்க வைப்போம். ஜெயிக்காது போயினும்கூட நல்லவர்களுக்கு வாக்களித்த திருப்தி இருக்கிறது பாருங்கள்…. அதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் புரியும்.

அனுபவித்துப் பாருங்கள்.
   

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...