Wednesday, July 7, 2010

பாகவதமேளா – புதுப்பிக்கப்படும் பொறுப்புணர்வு




“All mothers are great but my mother is the greatest” என்று இருபது ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசியபோது பாலுமகேந்திரா பேசியதாக ஞாபகம்.

“எல்லோரும் எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதி  கொண்டவர்கள்தான், எல்லாத் தாய்மார்களும் ஆனால் எல்லாத் தாய்மார்களும் எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதியைப் பெற்றவள் எனது தாய்” என்று இதை தமிழ்ப் படுத்திக் கொள்ளலாம்.

“தாய்” என்பதை ‘மொழி’ என்பதன் குறியீடாகவும் கொள்ள முடியும். எனில்,

“எல்லா மொழிகளும் எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதியைப் பெற்ற மொழி எனது தாய் மொழி” என்று ஆகும். அவரவரும் அவரவர் தாயை, தாய்மொழியை இப்படிப் பொருத்திப் பார்த்து பூரித்துக் கொண்டாட உரிமை உண்டு.

தனது மொழியின் தொன்மத்தை, பழமையை, வளத்தைக் குறித்து வறட்டுப் பெருமை பேசும் எந்த மொழியைச் சார்ந்த மேதைகளைக் காட்டிலும், தனது மொழியோடு தன்னை அடையாளப்படுத்தி, அதனைப் புழங்கி, காலாகாலத்திற்கும் தன் மொழி உயிர்த்திருப்பதற்கு பங்காற்றும் சனத்திரளின் மொழி அக்கரையே மெச்சத் தக்கதாகும்.

தங்களது மொழிப்பற்றை, மொழி குறித்த அக்கறையை, தங்கள் கலாச்சாரத்தின் விழுமியங்களைப் பாதுகாக்கும் பணியை எந்த ஆராவாரமும் இன்றி, விளம்பரமின்றி ஓராண்டு, ஈராண்டல்ல முன்னூற்றி அறுபத்தைந்து ஆண்டுகளாக உழைத்துவரும் ஒரு தெருவின் சனங்களை சமீபத்தில் சந்திக்க முடிந்தது.

“சாலியமங்களம்” என்றதும் அங்கு 365 ஆண்டுகளாக விடாது, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வைகாசி சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும் ‘பாகவத மேளா’ தான் நினைவுக்கு வரும்.

முன்னூற்றி அறுபத்தைந்து ஆண்டுகளா? அதுவும் விடாது தொடர்ந்தா? சாத்தியமா?

சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள் சாலியமங்களத்தின் அக்ரஹாரத்தை சாந்த தொன்னூறு குடும்பத்தினர்.

பதினேழாம் நூற்றாண்டின் தஞ்சையை விசயநகர அரசர் அச்சுதப்ப நாயக்கர் வெற்றி கொள்கிறார். மன்னர், மந்திரிமார்கள், மற்றும் தம்மோடு வந்திருக்கும் தமது உறவினர்களது சமயச் சடங்குகளை நிறைவேற்றவும், தமக்கு ராச ஆலோசனைகள் வழங்கவும் தனது சொந்த நாட்டிலிருந்து தெலுங்கு பேசும் பிராமணர்களை அழைத்து வருகிறார். அவர்களை, “சாலியமங்களம்”, ‘மெலட்டூர்’ “தேபெருமாநல்லூர்”, ‘ஊத்துக்காடு’ மற்றும் சூலமங்களம் ஆகிய கிராமங்களில் அக்ரஹாரங்களை ஏற்படுத்தி குடியமர்த்துகிறார். அவர்களுக்கு ஏராளமான விளைநிலங்களை தானமாக வழங்குகிறார்.

அந்த வகையில் சாலியமங்களம் அக்ரஹாரத்தில் சற்றேரக்குறைய தொன்னூறு தெலுங்கு பிராமணக் குடும்பங்கள் குடியேறுகிறார்கள். வெற்றியின் விளைவாக தம்மோடு தஞ்சை நாட்டில் குடியேறிய தனது குடிகள் இந்த மண்ணோடும், மக்களோடும் கலந்து, கரைந்து பையப் பையத் தமது மொழியை, கலாச்சாரத்தின் விழுமியங்களை மறந்து போவார்களோ, என்ற அச்சம் மன்னருக்கு வருகிறது.

உடனே அய்ந்து கிராமங்களிலும் உள்ள தெலுங்கு பிராமணர்களை அழைத்து தனது கவலையை அவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார். தமது மொழியை கலாச்சாரத்தின் வேர்களைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று ஆலோசிக்கிறார். “ஏதாவது செய்யுங்கள்” என்று உத்தரவிடுகிறார்.

விளைவு, மேற்சொன்ன அய்ந்து கிராமங்களிலும் பாகவத மேளாக்கள். இதில் சாலியமங்களம் தவிர மற்ற ஊர்களில் நின்றுபோகிறது அல்லது தொடர்ச்சியற்று விட்டுவிட்டு நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் சாலியமங்களத்தில் மட்டும் விடாது 365 ஆண்டுகளாக தொடர்ந்து “பாகவத மேளா” நடைபெற்று வருகிறது.

“வெற்றி விழா” ‘பொன்விழா’ ‘வைரவிழா’ என்பது போன்று 365 ஆண்டுகளாக தொடர்ந்து சாலியமங்களத்தில் நடைபெற்று வரும் பாகவதமேளாவை என்ன பெயரிட்டு அழைக்கலாம்.

1645 ஆண்டு முதல் தொடர்ந்து நடப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக பக்த சமாசத்தின் பொருளாளர் எஸ்.சி.வெங்கடகிருஷ்ணன் கூறுகிறார். அவரும், சென்னை ரயில்வேயில் உயர் அதிகாரியாகப் பணியாற்றும் திரு.சுப்பிரமணியன் அவர்களும் நிறையப் பகிர்ந்து கொண்டார்கள்.

பாகவத மேளாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடகம். ஒரு நாள் “சீதா கல்யாணம்” ஒரு நாள் “ருக்மணி கல்யாணம்” ஒரு நாள் ‘ருக் மாங்கதா’ ஒரு நாள் “பிரகலாத சரித்திரம்” என்று கடந்த காலங்களில் அமர்க்கலப்பட்டிருக்கிறது. அந்தத் தெருவின் சனங்கள்தான் நடிப்பதும் பார்ப்பதும். நரசிம்ம அவதாரம் பூண்டு இறைவன் இரணியனை வதம் செய்யும் காட்சிகாண மொத்த ஊரும் திரண்டு விடுமாம்.

ஏறத்தாழ தொண்ணூறு குடும்பங்களில் இருந்தும் வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள். எவர் எங்கு இருப்பினும், என்ன செலவேயாயினும் அனைவரும் அந்த காலத்தில் வந்துவிடுகின்றனர்.

இப்போது நாடகங்களைக் கொஞ்சம் குறைத்திருக்கிறார்கள். இளந்தலை முறையினருக்கு தெலுங்கு எழுதப்படிக்கத் தெரியாததே காரணம் என்பதை கவலையோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

“இங்க நாங்க குடியேறியபோது எல்லா குடும்பத்து சனங்களுக்கும் தெலுங்கு எழுதப் படிக்க பேசத் தெரிந்திருந்தது. இப்போது ஒன்றிரண்டு குடும்பத்து இளைய தலைமுறை தவிர ஏனையோருக்கு இது இயலாததாகி உள்ளது. நாங்கள் எங்கள் மொழியை, கலாச்சாரத்தை என்ன செய்தேனும் காப்பாற்ற வேண்டும் என்ற கவலை கலந்த அக்கறை எங்களுக்கு” வேதனையோடு சொல்கிறார் வெங்கடகிருஷ்ணன். பாகவத மேளாவில் கூடும் பெரியவர்கள் இது குறித்து ஆலோசித்து வருவதாகவும் சொல்கிறார்.

பாகவத மேளாவில் பக்தி உண்டு. ஆனால் அதில் உள்ள பக்தியை மட்டுமே நாம் தவறாகக் கண்டிருக்கிறோம். நாயக்க மன்னரோடு புலம் பெயர்ந்த ஒரு நூறு குடும்பத்தினரின் மொழி மற்றும் கலாச்சார விழுமியங்களைக் காப்பாற்றத் துடிக்கும் கவலை கலந்த அக்கறையை எடுத்துக் கொள்ளத் தவறியிருக்கிறோம்.

படாதபாடு பட்டு, வருடா வருடம் இங்கு கூடுவது பக்தியோடு சேர்ந்து தங்களது மொழி மற்றும் கலாச்சார வேரினை தரிசிக்கவும், அதனைக் காக்க வேண்டிய தங்களது பொறுப்புணர்வினை புதுப்பித்துக் கொண்டு போகவும் சேர்த்துதான்.

அவசர அவசரமாக அழிந்துவரும் மொழிகளுள் தமிழும் ஒன்று என்கிறது யுனெஸ்கோ. மொழி குறித்து அக்கறையுள்ள தமிழர்களுக்கு கற்றுக்கொள்ள சாலியமங்களத்து அக்ரஹாரத்தில் நிறைய இருக்கிறது.


நன்றி;   "கல்கி"   

6 comments:

  1. sir,I am a school student.i want some points or quotes about "puthulagu padaithiduvoum"

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    ஆச்சரியமான செய்தி.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  3. பாகவத மேளா பின்னுள்ள செய்தியை சரியாக சொல்லி இருக்கிறீர்கள்;வாழ்த்துகள்
    கடைசி 3வரிகள் கட்டுரையின் வலியை குறைத்து விடுகிறது

    ReplyDelete
  4. அரிய பகிர்வு. கல்கிக்கும் தங்களுக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. தாய்மொழியை மறந்தால் வாழ்வில் செழிப்பிருக்காது என்பது உண்மை. என்னதான் நாம் ஆங்கிலத்தில் பெருமையாகப் பேசிப் பழகினாலும் உணர்வுப்புர்வமான ஒரு பரிமாற்றத்தை நம்மால் ஏற்படுதவே முடியாது. நம் இளையதலைமுறை ஏன் தமிழை மறந்து ஆங்கிலத்தை நாடுகிறது என்பதற்கு முழுமையான காரணம் அவர்கள்தான் என்று குறிப்பிட்டுவிட முடியாது. ஏனெனில் தமிழகத்தில் உள்ள 90 விழுக்காடு பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியே காணப்படுகிறது. அதனால் மக்களிடத்தில் ஆங்கில மோகம் தமிழை விழுங்குவதில் ஆச்சரியம் எதற்கு?!!! என்னைப்பொருத்தவரை தமிழ் மொழியைக் மீட்பதில் தமிழக அரசுக்கே பெரும்பங்கு உண்டு என்று சொல்வேன். பாடப்படிப்பில் முழுதாக இல்லாவிடிலும் தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் சமமான பங்கு கிடைத்தால் கூட அது சிறப்பே ஆகும். அதே சமயம் கலாம் ஐயா சொன்னது போல் தாய்மொழி வழிக் கல்வியால் மட்டுமே குழந்தைகளின் படைப்பாற்றல் திறன்பட உயரும் என்பதற்கும் ஒரு அடித்தளமாகவும் அது அமையும். இதை தமிழகம் முழுவதும் கட்டாயப் படுத்துவது தமிழக அரசு கையில் தான் இருக்கிறது! இல்லையேல் மேதகு. மயில்சாமி அண்ணாதுரை சொன்னதுபோல் "அன்னைத் தமிழும் பாழில்லை அரசுப் பள்ளியும் பாழில்லை அறியா மனமே பாழ் என்பேன்" என்று ஆவது உறுதி!
    குறிப்பு: நான் மேலே குறிப்பிட்ட இரு விஞ்ஞானிகளும் தமிழ்மொழி வழியில் பயின்றவர்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்!

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...