Wednesday, August 11, 2010

சரஸ்வதி ஒரு தரம்... சரஸ்வதி ரெண்டு தரம்..... சரஸ்வதி மூன்று தரம்...!



எந்த ஒன்று நடந்திருக்கக் கூடாதோ அந்த ஒன்று நடந்தே விட்டது. இரண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த ஒரே ஒரு குழந்தையும் மாற்றுச் சான்றிதழோடு வேறு இடம் நோக்கி நகர்ந்து விடவே வேடசந்தூர் அருகே உள்ள சீத்தப் பட்டியில் அறிவாலயம் ஒன்று இழுத்து மூடப் பட்டிருக்கிறது. ஆறு குழந்தைகள் படித்துக் கொண்டிருந்த பள்ளி இரண்டு குழந்தைகள் பள்ளியாய் மாறி, இரண்டும் ஒன்றாகி இப்போது பூட்டியேயாகி விட்டது.

இது ஏதோ சீத்தப்பட்டி என்னும் ஒரு கிராமத்தின் நிகழ்வு என்று மட்டும் கொண்டுவிடக் கூடாது. இரண்டு வகுப்பரைகளே இருந்த பள்ளியில் இரண்டு வகுப்பரைகளுமே மூடப்பட்டு விட்டதால் மொத்தப் பள்ளியும் மரணித்துப் போகவே விஷயம் வெளிசசத்திற்கு வந்திருக்கிறது. இதுவே இருபது வகுப்பரைகள் கொண்ட ஒரு பள்ளியில் இரண்டு வகுப்புகள் மூடப் பட்டிருந்தால் அது யாருடைய கவனத்திற்கும் வந்திருக்காது. இப்படித்தான் தமிழகத்தின் பல நூற்றுக்கணக்கான பொதுப் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே ஒன்று இரண்டென்று மூடப் பட்டு வரும் வகுப்பரைகள் குறித்த தகவலெதுவும் தமிழகத்துப் பொதுப் புத்திக்கு கொண்டு போகப் பட்டதாகவே படவில்லை

பொதுவாகவே பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் "ஒன்று" , "ஆறு", "ஒன்பது", மற்றும் பதினொன்றாம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். பெற்றோரின் பணியிட மாற்றம், பிழைப்பு சார்ந்த புலம் பெயர்வு, மற்றும் இதையொத்த காரணங்களை முன்னிட்டு மற்ற காலங்களிலும் எல்லா வகுப்புகளிலும் பள்ளி விட்டு பள்ளி மாறும் மாணவர்களும் உண்டு.

தமிழ்நாட்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் சுமார் நான்காயிரத்து ஐநூறு தேறும். இத்தோடு அரசு உதவி பெறும் பள்ளிகளையும் சேர்த்தால் குத்துமதிப்பாய் ஆறாயிரத்துக்கும் சற்று கூடுதலான எண்ணிக்கையில் பொதுப் பள்ளிகள் தேறும். இதில் பெரும்பாலான பள்ளிகள் ஒவ்வொன்றிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் ஐம்பது முதல் நூறு வரை துண்டு விழுந்திருக்கக் கூடும்.

தொகுத்துப் பார்த்தால், இந்த ஆண்டு சற்றேரக் குறைய மூன்று லட்சத்தை ஒட்டிய எண்ணிக்கையிலான குழந்தைகள் பொதுக் கல்வியை நிராகரித்திருக்கிறார்கள். இது குறித்த கவலை பொதுத் தளத்தில் இல்லை என்பதுதான் நாம் கவலைப்பட வேண்டிய முக்கியமான விஷயம். இதை இப்படியே விட்டு விட்டால் பொதுக் கல்வியின் மரணத்தை நம் காலத்திலேயே பார்த்துவிட்டு சாகும் சாபம் தவிர்க்க முடியாதது.

"கள்வர்களால்
கொள்ளை போகாது
கடைத் தெருவில் விற்காது"
என்ற நமது மூத்தக் கிழவியின் நம்பிக்கை பொய்த்துப் போகும். கல்விக் கூடங்களே கல்விச் சந்தையாய் மாறிப் போகும்.

" சுத்த பேத்தல்அதெல்லாம். எங்களுக்கு தெரியாததா? எவ்வளவு செஞ்சிருக்கோம். கட்டணம் இலவசம், புத்தகம் இலவசம், பேருந்து இலவசம், மிதி வண்டி இலவசம், சத்துணவு, வாரம் மூன்று முட்டை, என்று எவ்வளவு செஞ்சிருக்கோம். நபார்டு வங்கி உதவி, மற்றும் நமக்கு நாமே திட்டம் மூலம் சகல வசதிகளோடும் கட்டப் பட்டுள்ள கட்டிடங்கள் .அப்புறம் எப்படி பொதுக்கல்வி சாகும்? வேலயத்தவனுங்களோட பொலம்பலுங்க இது" என்றும் சிலர் வரலாம்.

எனவே புரியும் படிக்கு பேசிவிடுவதே உத்தமம் என்றே படுகிறது.

உதாரணத்திற்கு ஒரு பொதுப் பள்ளியை எடுத்துக் கொள்வோம். அந்தப் பள்ளியில் சென்ற ஆண்டு ஆறாம் வகுப்பில் மூன்று , ஏழாம் வகுப்பில் மூன்று , எட்டாம் வகுப்பில் மூன்று , ஒன்பதில் மூன்று , பத்தாம் வகுப்பில் மூன்று என்று மொத்தம் பதினைந்து பிரிவுகள் இருந்தன என்று வைத்துக் கொள்வோம். என்றால் ஆறு முதல் எட்டு வரை உள்ள வகுப்புகளுக்கு பாடங்களை போதிக்க ஒன்பது ஆசிரியர்களும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு பாடம் நடத்த ஆறு ஆசிரியர்களும் இருந்திருப்பார்கள். இது போக மாணவர்களின் எண்ணிக்கைக்கு தக்கவாறு தமிழாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், கலை மற்றும் தொழில் ஆசிரியர்கள் என்று இருந்திருப்பார்கள். குறைந்த பட்சம் பதினைந்து வகுப்பறைகளாவது இருந்திருக்கும்.

அந்தப் பள்ளியில் இந்த ஆண்டு ஆறாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் ஒரு நாற்பது அல்லது ஐம்பது என்று துண்டு விழுகிறது எனக் கொள்வோம். வளைவாக ஆறாம் வகுப்பில் இரண்டு பிரிவுகள் மட்டுமே என்றாகும். ஒரு அறை இழுத்து மூடப்படும். ஒரு ஆசிரியர் நிரவலில் வேறு பள்ளிக்கு சென்று விடுவார். இதன் விளைவாக அடுத்த ஆண்டு ஏழாம் வகுப்பில் ஒரு பிரிவு குறைந்து இரண்டு பிரிவுகளாகி விடும். இந்த ஆண்டும் ஆறம் வகுப்பில் சேர்க்கை குறைந்தால் ஆறாம் வகுப்பில் இன்னும் ஒரு பிரிவு குறைந்து ஒரே ஒரு பிரிவாக மாறும். ஆக மொத்ததில் அடுத்த ஆண்டு இரண்டு வகுப்பறைகள் புதிதாய் பூட்டப் பட்டு விடும் . இன்னும் இரண்டு ஆசிரியர்கள் பணி நிரவலில் வேறு பள்ளிகளுக்கு போய் விடுவார்கள்.

இப்படியே ஐந்தாறு ஆண்டுகள் தொடர்கிறது என்று கொள்வோம்.இப்போது ஆறாம் வகுப்பில் சேர அந்தப் பள்ளிக்கு ஒரு பத்து மாணவ்ர்கள் வருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்தப் பள்ளியில் போதுமான அளவிற்கு வகுப்பறைகள் இருக்கும். ஆனால் ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். அந்த மாணவர்கள் நிச்சயம் தனியார் சுய நிதிப் பள்ளிகளில் சேர்ந்து படிக்க இயலாத ஏழை மாணவர்களாகத்தான் இருப்பர்.

ஆக அந்த மாணவர்களால் காசு கொட்டியும் படிக்க இயலாது. பொதுப் பள்ளியும் என்ற நிலையில் மீண்டும் குலத் தொழில் நோக்கி நகர வேண்டிய நிர்ப்பந்தம் தவிர்க்க இயலாததாகி விடும்.

இரண்டு கேள்விகள் நம் முன் நிற்கின்றன. ஏன் பொதுக் கல்வி நிராகரிக்கப் படுகிறது? என்பது ஒன்று. பொதுக் கல்வியை காப்பாற்ற என்ன செய்யலாம்? என்பது இரண்டு.

முதலில் மக்கள் பொது கல்வியை நிராகரிப்பதற்கு முன் வைக்கும் காரணங்களைப் பார்ப்போம்.

1) போதுமான ஆசிரியர்கள் இல்லை.

2) ஆசிரியர்கள் தேவையான அளவு அக்கறையோ சிரத்தையோ எடுப்பதில்லை

3)போதுமான அளவிற்கு தளவாடங்களோ, கட்டட வசதியோ, கழிப்பிட வசதியோ இல்லை

4) சாதகமான கல்விச் சூழல் இல்லை.

5) ஆங்கில வழியில் படித்தால் மட்டுமே நல்ல வேலை வாய்ப்பை பெற முடியும்

6) தரமான மற்றும் மதிப்பெண்களுக்கு உத்திரவாதமான கல்வி சுயநிதி பள்ளிகளில் மட்டுமே சாத்தியம்

7) இவை போல இன்னும் சில

இவற்றுள் பொதுப் பள்ளிகளில் போதுமான அளவிற்கு ஆசிரியர்கள் இல்லை என்பதை நாம் கவலையோடு ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். கல்வியை சேவை பட்டியலிலிருந்து காசுக் கேற்ற கல்வி என்ற வகையில் நுகர் பொருளாக மாற்றி சந்தைக்கு கொண்டு போய்விட வேண்டும் என்று உலக மயமும் தாராள மயமும் விரித்த வஞ்சக வலையில் நமது அரசுகள் மகிழ்ச்சியோடு தாமாய் சென்று பதுங்கி கொண்டதன் விளைவே இது.

"one eight particulars" என்ற விவரம் ஒன்றினை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பள்ளியும் ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைக் கல்வி அலுவலருக்கு வழங்க வேண்டும் என்றிருக்கிறது. இந்த விவரத்தில் பள்ளியின் வகுப்பு வாரியான மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பற்றிய விவரங்கள் இருக்கும். இந்த அறிக்கையின் அடிப்படையில்தான் ஒவ்வொரு பள்ளிக்குமான ஆசிரியர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப் படும். இரண்டு மூன்று மாணவர்கள் குறைந்தமைக்காகக் கூட ஒரு ஆசிரியரை மிகுந்த கடமை உணர்ச்சியோடு நிரவலில் வேறு பள்ளிக்கு மாற்ரிய நிறைய அதிகாரிகளை எனக்குத் தெரியும்.

இது மட்டுமல்ல இந்த விவரங்கள் கிடைக்கப் பெற்றதும் இந்த அறிக்கையை சரி பார்க்க குழுக்கள் அமைக்கப் பட்டு அவர்கள் பள்ளிகளை பிரித்துக் கொண்டு வந்து மாணவர் வருகைப் பதிவேடுகளை கையில் எடுத்துக் கொண்டு வகுப்பு வகுப்பாக தலை எண்ண அலைகிற காட்சி இருக்கிறதே, அப்பப்பா கண்கள் பூத்தே போகும் போங்கள்.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் பணி நிரவலில் மாற்றப் படும் ஆசிரியருக்கு அந்த ஆண்டு இடையில்தான் உத்திரவு வருமென்பதால் அவரது குழந்தைகளை பள்ளி மாற்றுவது குடும்பத்தை இடம் பெயர்ப்பது என அவர் படும் சிரமங்கள் இருக்கிறதே, அது சொல்லி மாளாது.

கேட்டால் குறைந்த மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலிருந்து உபரி ஆசிரியர்களைத்தானே எடுக்கிறோம். எடுத்த ஆசிரியர்களை வீட்டுக்கா அனுப்புகிறோம். அதிக மாணவர்களோடு போதிய ஆசிரியர்கள் இல்லாமல் அவதிப் படும் பள்லிகளுக்குத்தானே அனுப்புகிறோம் என்கிறார்கள். மேம்போக்காய் கேட்டால் இது சரியென்றே படும். அடிப்படையில் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதிக மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு அதிக ஆசிரியர்கள் தேவை என்றுதான் நாமும் சொல்கிறோம். ஆனால் பணி நிரவலில் அதை ஈடு கட்டாமல் புதிய ஆசிரியப் பணியிடங்களை உருவாக்குவதன் மூலம் ஈடு கட்ட வேண்டும் என்பதே நம் கோரிக்கை.

இருபத்தி ஐந்து மாணவர்களுக்கு ஒருஆசிரியர் என்ற நீண்ட நாள் நியாயமான கோரிக்கையை அரசு நிறை வேற்ற வேண்டும்.

மற்றபடி பொதுப் பள்ளி ஆசிரியர்களின் அக்கரை மற்றும் அர்ப்பணிப்பு இவையெல்லாம் மிக நன்றாகவே உள்ளது. ஆனால் பொதுக் கல்வியை காப்பாற்ற வேண்டியதில் தங்களுக்குரிய பொறுப்புணர்வினை அவர்கள் போதுமான அளவிற்கு உணர்ந்திருக்கிறார்களா என்ற ஐயத்தில் நியாயம் இல்லை என்று சொல்லிவிட முடியாது.

மற்றபடி ஆங்கிலத்தில் படித்தால் மட்டுமே வேலை வாய்ப்பு என்கிற தவறான பொதுப் புத்தியை உடைக்க வேண்டிய பொறுப்பு சமூக அக்கறையுள்ள எல்லோருக்கும் உண்டு என்றாலும் அரசுதான் இதில் கூடுதலான முழு அக்கறை கொள்ள வேண்டும்.

சுய நிதி மற்றும் ஆங்கிலப் பள்ளிகளை அதிக அக்கறையோடு கண்காணிக்க வேண்டும். இந்தப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்பு பாடங்களும், பதினொன்றாம் வகுப்பிலேயே பன்னிரண்டாம் வகுப்பு பாடங்களும் நடத்தப் படுகின்றன. இதன் மூலம் பொதுப் பள்ளிகளில் ஓராண்டில் படிக்க வேண்டிய பாடங்களை இந்தப் பள்ளிகளில் இரண்டாண்டுகள் படிப்பதன் மூலம் நிறைய மதிப்பெண்கள் பெற வாய்ப்பாகிறது. மதிப் பெண்களே குறியாகிப் போன இந்த சமூகத்தில் பொதுக் கல்வி நிராகரிக்கப் படுவதற்கான ஆகப் பெரிய காரணம் இதுதான். அரசும் அதிகாரிகளும் பொறுப்புணர்வோடு இதை கண்காணிக்காவிட்டால் பொதுக் கல்வியின் மரணத்திற்கான பெரும் பொருப்பாளிகளாவார்கள்.

பொது மக்கள் தங்கள் குழந்தைகளை நம்பிக்கையோடு பொதுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். பிள்ளைகளுக்கு தரமான கல்வியை தரவேண்டும் என்று போராடும் சமூக அக்கறையுள்ள அமைப்புகளோடு இணைந்து போராட வேண்டும். பொது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டுமெனில் முதலில் படித்தவர்கள், அரசு ஊழியர்கள் மிக முக்கியமாக ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளை பொதுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.

இல்லையேல் பொதுக் கல்வி பையப் பைய மரணித்துப் போகும்

நன்றி:  "கீற்று" மற்றும் "கவண்" மற்றும் "ஈகரை"

26 comments:

  1. // பொது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டுமெனில் முதலில் படித்தவர்கள், அரசு ஊழியர்கள் மிக முக்கியமாக ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளை பொதுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்//சரிதான் ... ஆனால், எல்லாப் பெற்றவங்களும் தன் பிள்ளையின் முதல் மாதச் சம்பளமே லகரத்தைத் தொடணும் என்ற பேராவல் பீடித்துக் கிடக்கிறார்களே... விழிப்புணரச் செய்ய வேண்டிய பொறுப்புணர்ந்த தங்கள் பதிவுக்கு வந்தனம்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி நிலா. பசங்க எல்லாம் நலமா?

    ReplyDelete
  3. Very good to read this critical analysis of school education. Involvement of parents & teachers is also very much required in reforming the school education.

    A.Hari
    http://inspireminds.in/

    ReplyDelete
  4. நீங்கள் கூறியிருப்பது உண்மை தான்.

    இது நம்பிக்கை சார்ந்த விடயம் மட்டுமல்ல, கெளரவம், போலி கெளரவம் போன்றவைகளும் இவற்றில் அடக்கம்

    ReplyDelete
  5. அருமையான பதிவு.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  6. பொதுப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கைத் தொடர்ந்து குறைந்து வருவது மிகவும் வேதனையான செய்தி. கல்வி தனியார்மயமாகுவதும் அதனால் சிறந்தக் கல்வி அங்கு கிடைக்கும் என ஏங்குவதும் இதற்குக் காரணம். மேலும் தனியார் பள்ளிகளை மேற்பார்வையிடவேண்டும். அவர்கள் பாடங்களை முன்கூட்டியே நடத்துகிறார்கள்.

    ReplyDelete
  7. //ஆசிரியர்கள் தேவையான அளவு அக்கறையோ சிரத்தையோ எடுப்பதில்லை// திறமை நம்பி யாரும் வேளைக்கு வரவில்லை - எப்படி அவர்கள் மட்டும் அக்கறைய பாடம் எடுப்பார்கள். குடுத்த பணம் கிடைத்த கோட்டா வ யூஸ் தான் செய்வாங்க

    ReplyDelete
  8. அட்லீஸ்ட் கல்வியை யாவது விட்டு வைக்கலாம்.

    ReplyDelete
  9. ///A.HARI said...
    Very good to read this critical analysis of school education. Involvement of parents & teachers is also very much required in reforming the school education.

    A.Hari ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  10. /// நட்புடன் ஜமால் said...
    நீங்கள் கூறியிருப்பது உண்மை தான்.

    இது நம்பிக்கை சார்ந்த விடயம் மட்டுமல்ல, கெளரவம், போலி கெளரவம் போன்றவைகளும் இவற்றில் அடக்கம் ///

    மிகச் சரியாக சொன்னீர்கள் தோழர். மிக்க நன்றி

    ReplyDelete
  11. /// Rathnavel Natarajan said...
    அருமையான பதிவு.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    மிக்க நன்றி. ///

    மிக்க நன்றிங்க அய்யா

    ReplyDelete
  12. ///yazhan Aathi said...
    பொதுப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கைத் தொடர்ந்து குறைந்து வருவது மிகவும் வேதனையான செய்தி. கல்வி தனியார்மயமாகுவதும் அதனால் சிறந்தக் கல்வி அங்கு கிடைக்கும் என ஏங்குவதும் இதற்குக் காரணம். மேலும் தனியார் பள்ளிகளை மேற்பார்வையிடவேண்டும். அவர்கள் பாடங்களை முன்கூட்டியே நடத்துகிறார்கள். ///

    மிக்க நன்றி தோழர்.

    ReplyDelete
  13. /// sendilvelan subramanian said...
    அட்லீஸ்ட் கல்வியை யாவது விட்டு வைக்கலாம். ///

    கல்வியை விட்டு வைக்காத சமூகம் அதற்குரிய விலையைக் கொடுத்தே தீரும்

    ReplyDelete
  14. எல்லாத்துக்குமே விலையென்று வந்துவிட்ட நுகர்வோர் வாழ்க்கையில், கல்வி மட்டும் எப்படி விதிவிலக்காகும். இருந்தாலும், இதில் சில நடைமுறை காரணங்களும் உண்டு. உதாரணத்துக்கு, (௧) ஆங்கில பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் அதிகமாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை. (௨) தரமான விஞ்ஞான, கணித பாடத்திட்டங்கள் அவசியமே. (௩) அடிப்படைக் கல்வியை தாய் மொழியில் கொடுத்துவிட்டு, பின்பு ஆங்கிலத்துக்கு மாறலாம் எப்போது மாறலாம் என்பது இன்னொரு சர்ச்சை.

    ReplyDelete
  15. கல்வியும் மருத்துவமும் சமூகத்தில் சேவையாக மட்டுமே ஆக்கப்பட வேண்டும்.. இந்த கனவெல்லாம் நினைவாக நாம் ஒவ்வொருவரும் பொறுப்பேற்றுக் கொள்வது அவசியம். ஒவ்வொரு முறையும் மதிப்பெண் பட்டியல் வெளியானதும் எங்கள் பள்ளியில் இத்தனை குதிரைகள் பந்தயத்தில் இத்தனை இடங்களைக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறது. எங்கள் பள்ளிக்கு வாருங்கள். உங்கள் குதிரையும் இந்த மாதிரியே வந்துவிடும்.. வாருங்கள்..சேனை கட்டுவோம்.. என்ற விதத்தில்தான் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதை முதலில் நிறுத்த வேண்டும்.. மதிப்பெண்களைக் கொண்டு முன்னிலைபடுத்தல் முதலில் களையப்பட வேண்டும்..

    பெற்றோர்கள் முதலில் தெளிவாக இருத்தல் நலம். பாவம் அவர்கள் மட்டும் என்ன செய்வார்கள்.எல்லாமே வணிகமாகிவிட்ட நிலையில் அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பணம் செலவில்லாமல் படிக்க வைக்க முடியும் என்ற நிலையில் அவர்களும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.. மேலும் குழந்தைகள் பன்னிரெண்டாவது முடிக்கும் வரையாவது பெற்றோர்களுடனும் சுற்றத்துடனும் அந்த சூழலில் தங்கி படிப்பது நலம் என நினைக்கிறேன்.. அதை விடுத்து மதிப்பெண்களுக்காகவே பல மைல் தூரம் சென்று அவசரம் என்றால் கூட பேசமுடியாத பிள்ளைகளிடம் பெற்றோர்கள் என்ன ஆனந்தத்தைக் கண்டு விடப்போகிறார்கள்... மதிப்பெண்கள் ஒருபொழுதும் பின்னாட்களில் மாணவர்களுக்கு எல்லாவிதத்திலும் துணை நிற்கப்போவதில்லை..

    பிள்ளைகள் தாங்கள் விரும்பிப் படிப்பதற்கான/ விருப்பப்பாடத்திற்கான சூழலைப் பெற்றோர்கள் உருவாக்கித் தந்தாலே போதுமானது.. தவிர்த்து மற்ற எந்த அழுத்ததையும் அவர்களின் மேல் திணிப்பது ஆகாது.

    ஆசிரியர்களும் தங்களின் சமூகப் பொறுப்பையும் உணர்ந்து மதிப்பெண்களை மட்டும் குறிவைக்காமல் பாடம் எடுத்தல் நலம்(சில ஆசிரியர்கள் இந்தவிதம் இருக்கத்தான் செய்கிறார்கள்)

    நான் பத்தாவது முடித்து பதினொன்றாவது செல்லும்போது அனைத்து மாணவர்களிடமும் பத்தாவது மதிப்பெண்களைக் கேட்டுக் கொண்டிருந்தார் கணித ஆசிரியர்.. வரிசையாகச் சொல்ல... ஒரு மாணவன் சராசரி மதிப்பெண்களைச் சொன்னான். அவனை முறைத்த ஆசிரியர் நீயெல்லாம் எதுக்கு ஃபர்ஸ்ட் க்ரூப் வர்ர.. இப்போ ஸ்கேலார், வெக்டார் எடுக்க போறேன்.. அப்படியே கன்னத்தில் இங்கும் அங்கும் அடிப்பது போல இருக்கும்.. பாத்துக்கோ என்றார்(நல்ல ஆரம்பம் இல்லையா)

    பன்னிரண்டாவதில் அவரே என்னிடம் ஒருமுறை... எடுக்குறது 120,130 மார்க்கு.. இதுல என்ட்ரன்ஸ் க்ளாஸ் போறானாம் என்று ஏளனம் செய்தார்.. இதனைப் போன்ற பேச்சுக்களுக்காகவே பெரும்பலான மாணவர்களுக்கு அவரைப் பிடிப்பதில்லை..

    நல்ல பதிவு ஐயா.. தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  16. // பொதுப் பள்ளி ஆசிரியர்களின் அக்கறை மற்றும் அர்ப்பணிப்பு இவையெல்லாம் மிக நன்றாகவே உள்ளது.// இக்கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை தோழர். அவர்களுக்கு உண்மையிலேயே அக்கறையும் அர்ப்பணிப்பும் இருக்குமானால், அவர்தம் மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வில் பாரதிதாசன் என்னும் பெயரை பாதிதசன் என எழுதும் நிலையில் இருப்பார்களா?

    ReplyDelete
  17. // அரசு ஊழியர்கள் மிக முக்கியமாக ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளை பொதுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.// தமக்கு அரசு வேலை வேண்டும்; ஆனால் தம் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளியில் கல்வி வேண்டா இரட்டை நிலை என்றைக்கு மாறும்? யார் மாற்றுவார்கள்? அரசு ஊழியர்களின்ஊதிய உயர்விற்கும் பணிப்பாதுகாப்பிற்கும் மட்டும்தான் அவர்தம் தொழிற் சங்கங்கள் போராட்ட வேண்டுமா? பொதுக்கல்வி என்னும் பொதுச் சொத்தைக் காக்க அரசு ஊழியர்களுக்கு பொதுப்பள்ளியின் தேவையை எடுத்துரைப்பதும் அங்கே தம் பிள்ளைச் சேர்ப்பது, சங்கத்திற்கு சந்தா செலுத்துவதைப் போல அதிமுக்கியக் கடமை என எடுத்துரைப்பதும் அவர்களை அரசியற் படுத்தும் செயல் ஆகாதா?

    ReplyDelete
  18. ஆறாம் வகுப்பு எடுக்கும் ஆசிரியர் syllabus முடித்துவிட்டேன். இனி மாணவர்கள்தேர்வுக்கு படித்துக்கொள்ள வேண்டியதுதான். என்னிடம் கூறினார்.
    ”ஏழை ஒருவனுக்கு எழுத்து கற்பிப்பவன்
    இறைவனாவான்” பாரதி கருத்தை மறந்து விட்டனர்.
    கல்லூரிகள் பள்ளிகளாகிவிட்டன.
    பள்ளிகள் கல்லூரிகளாகிவிட்டன.

    ReplyDelete
  19. இதில் அரசின் பங்கு பெரும் பங்கு இருந்தாலும் , பெற்றவர்களின் கௌரம் தான் முக்கிய காரணமாக எனக்குப் படுகிறது..... ஒன்றுமே முடியாத பெற்றோர்கள் தான் அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கிறார்கள்..... நீங்கள் குறிப்பிட்ட கருத்துக்கள் முற்றிலும் உண்மை... அதற்கான தீர்வுகளூம் ஏற்கக் கூடியதே.... தனி மனித மாற்றங்களே ஒரு அரசை , சமுதாயத்தை அசைக்க முடியும்..... தனி மனித சிந்தனை மாற்றம் வேண்டுமென நினைக்கிறேன் நான்..... கமல்ராஜ் ருவியே

    ReplyDelete
  20. பள்ளிகள் பற்றிய செய்திகளை நன்றாக உணர்ந்து எழுதியிருக்கின்றீர்கள். (நீங்கள் ஆசிரியர் என்று நினைக்கின்றேன். காரணம் பதிவைப்பார்க்கையில் வலிகள் நிறைந்திருக்கின்றன. சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் அதனுடைய நிறை, குறைகளை ஆராய முடியும்) போலி கௌரவம் பார்க்கும் பெற்றோரும், வருமானத்தை மட்டுமே பார்க்கும் அரசாங்கமும்தான் இதற்கு முடிவெடுக்க வேண்டும்.

    ReplyDelete
  21. //// Anonymous said...
    இதில் அரசின் பங்கு பெரும் பங்கு இருந்தாலும் , பெற்றவர்களின் கௌரம் தான் முக்கிய காரணமாக எனக்குப் படுகிறது..... ஒன்றுமே முடியாத பெற்றோர்கள் தான் அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கிறார்கள்..... நீங்கள் குறிப்பிட்ட கருத்துக்கள் முற்றிலும் உண்மை... அதற்கான தீர்வுகளூம் ஏற்கக் கூடியதே.... தனி மனித மாற்றங்களே ஒரு அரசை , சமுதாயத்தை அசைக்க முடியும்..... தனி மனித சிந்தனை மாற்றம் வேண்டுமென நினைக்கிறேன் நான்..... கமல்ராஜ் ருவியே ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  22. //// SANTHOSHI said...
    பள்ளிகள் பற்றிய செய்திகளை நன்றாக உணர்ந்து எழுதியிருக்கின்றீர்கள். (நீங்கள் ஆசிரியர் என்று நினைக்கின்றேன். காரணம் பதிவைப்பார்க்கையில் வலிகள் நிறைந்திருக்கின்றன. சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் அதனுடைய நிறை, குறைகளை ஆராய முடியும்) போலி கௌரவம் பார்க்கும் பெற்றோரும், வருமானத்தை மட்டுமே பார்க்கும் அரசாங்கமும்தான் இதற்கு முடிவெடுக்க வேண்டும். ///

    ஆமாம் ஆசிரியந்தான் தோழர். மிக்க நன்றி

    ReplyDelete
  23. இன்று பெற்றோரும் சரி பள்ளிக்கூடங்களும் சரி, இந்த எண்-விளையாட்டுக்கு (Number Game)தள்ளப்பட்டிருப்பதற்கு காரணம், வேலை அதுதரும் ஊதியம், ஓரு நிறுவனத்திற்கு வேலைக்கென விண்ணப்பித்தால், இவனுடைய திறமை என்ன என்பதை அறிவதைக்காட்டிலும் என்ன சதவீதம் வாங்கியிருக்கிறாய்? நாங்கள் நிர்ணயிக்கும் சதவீதம் 10 மற்றும் 12 வகுப்பின் மதிப்பெண்களில் இருந்தாலொழிய விண்ணப்பிக்க வேண்டாம். என்ற மடமையே காரணம். அதற்கடுத்து, ஆங்கிலம் என்ற அரக்கன், இது இரண்டும் இன்று இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை என்ற மாயையினால் ஏற்படும் தாழ்வுமனப்பான்மை.
    இத்ற்கு மருந்து நம்மிடம் மட்டுமே இருக்கிறது -தாய்மொழியில் கற்பது, அமெரிக்காவின் டாலர்களை நம்பியிராமல் - தனது திறமைக்கேற்ற தொழில்களை உருவாக்குதல் போன்றவையே. இதை ஏற்கவில்லையென்றால், விரயமாவது, நம் பொருள்,நேரம் மட்டுமல்ல, ஏதோ ஒரு அன்னிய நாடு வளர்வதற்கா, கல்விகற்று, பணியாற்ற- திணிக்கும் இன்றைய கல்வியினால் பாதிக்கப்போவது நம் குழந்தையின் எதிர்காலமும் தான்.

    ReplyDelete
  24. /// புதுசுரபி said...
    இன்று பெற்றோரும் சரி பள்ளிக்கூடங்களும் சரி, இந்த எண்-விளையாட்டுக்கு (Number Game)தள்ளப்பட்டிருப்பதற்கு காரணம், வேலை அதுதரும் ஊதியம், ஓரு நிறுவனத்திற்கு வேலைக்கென விண்ணப்பித்தால், இவனுடைய திறமை என்ன என்பதை அறிவதைக்காட்டிலும் என்ன சதவீதம் வாங்கியிருக்கிறாய்? நாங்கள் நிர்ணயிக்கும் சதவீதம் 10 மற்றும் 12 வகுப்பின் மதிப்பெண்களில் இருந்தாலொழிய விண்ணப்பிக்க வேண்டாம். என்ற மடமையே காரணம். அதற்கடுத்து, ஆங்கிலம் என்ற அரக்கன், இது இரண்டும் இன்று இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை என்ற மாயையினால் ஏற்படும் தாழ்வுமனப்பான்மை.
    இத்ற்கு மருந்து நம்மிடம் மட்டுமே இருக்கிறது -தாய்மொழியில் கற்பது, அமெரிக்காவின் டாலர்களை நம்பியிராமல் - தனது திறமைக்கேற்ற தொழில்களை உருவாக்குதல் போன்றவையே. இதை ஏற்கவில்லையென்றால், விரயமாவது, நம் பொருள்,நேரம் மட்டுமல்ல, ஏதோ ஒரு அன்னிய நாடு வளர்வதற்கா, கல்விகற்று, பணியாற்ற- திணிக்கும் இன்றைய கல்வியினால் பாதிக்கப்போவது நம் குழந்தையின் எதிர்காலமும் தான். ////

    மிகச் சரியாக சொன்னீர்கள் தோழர். மிக்க நன்றி

    ReplyDelete
  25. முத்து பாலகன்August 5, 2012 at 10:08 AM

    கல்வியின் தரமுயர்த்துகிறோம் என்ற பெயரில் அரசு அடிக்கும் கூத்துகளும், தனியார் பள்ளிகள் அடிக்கும் கொள்ளைகளும் கேவலமான அவலங்களே. எனக்குத் தெரிந்த ஒரு பிரபலமான தனியார் பள்ளி சென்னையில் ஆரம்பிக்கப் பட்டு பல வருடங்கள் ஓலைக் கொட்டகையில் நடத்தப்பட்டது. ஆனால் இன்று பல தொழில் நுட்பக் கல்லூரிகளும், ஏன் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கும் அளவிற்கு செல்வம் திரட்டியுள்ளது கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில். அதன் மொத்த மதிப்பு கணக்கிட்டால் பல ஆயிரங்கோடிகளைத் தாண்டும். அவர்கள் மிதிவண்டியில் வந்து பள்ளியை நடத்தியவர்கள் இன்று மேல் நாட்டு அதி சொகுசுக் கார்களில் வருகிறார்கள்.
    இது அரசுக்கோ மக்களுக்கோ தெரியாதா. இருவரும் நமக்கென்ன என்று இருக்கின்றார்கள். முடிந்தவரை லாபம் அடைய வழி பார்க்கிறார்கள்.

    மேலும் அந்தப் பள்ளியில் மாண்வர்கள் மதிப்பெண் அடிப்படையில் தரம் பிரித்துக் குறைந்த மதிப்பெண் பெரும் மாணவர்களை தனி வகுப்பாக்கி பாடம் எடுக்கின்றனர். ஏன் என்று காரணம் கேட்டால் அவர்களுக்கு தனி வகுப்புகள் நடத்தி படிக்க வைக்கின்றோம் எனச் சொல்லி வகுப்பும் எடுக்கின்றனர்.

    ஆனால் உண்மையான காரணம்... பள்ளி இறுதித் தேர்வில் அதாவது பத்தாம் மற்றும் +2 இறுதித் தேர்வில் மாணவர்களைக் காப்பி அடிக்க விடுவதற்காகவும், பள்ளி நிர்வாகமே அவர்களுக்கு விடை சொல்லிக் கொடுக்கவும் தான். இதன் மூலம் 100/100 சதவீதம் தேர்வு என விளம்பரப்படுத்தி வருமாணம் பார்க்கவும் ஏதுவான வழியாகிறது. இதற்கு அரசின் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும், அரசின் தேர்வு அதிரடி சோதனைக்குழுவும் உடந்தை. இந்தக் கேவலத்திற்கு என்ன சொல்ல?

    ஒவ்வொரு வருடமும் தொழில் நுட்பக் கல்விச் சேர்க்கை நடக்கும் போது சுய நிதிக் கல்லூரிகள் வங்கும் பணத்திற்கு ஏதாவது கணக்கு உண்டா? இல்லை யாராவது கேட்பதுண்டா?

    அவர்கள் நடத்தும் அனைத்துப் பணப் பரிவர்த்தனைகளையும் வங்கி மூலமாகத்தான் செய்ய வேண்டும், எனக் கொண்டுவந்து கண்காணித்தாலே போதும்.


    பணி நிரவல் என்பது அரசியல்வாதிகள் தங்கள் வருமானத்திற்காக வந்ததே ஒழிய பள்ளிக் கல்வியின் மேல் உள்ள அக்கறையில் அல்ல.

    ReplyDelete
  26. ////முத்து பாலகன் said...
    கல்வியின் தரமுயர்த்துகிறோம் என்ற பெயரில் அரசு அடிக்கும் கூத்துகளும், தனியார் பள்ளிகள் அடிக்கும் கொள்ளைகளும் கேவலமான அவலங்களே. எனக்குத் தெரிந்த ஒரு பிரபலமான தனியார் பள்ளி சென்னையில் ஆரம்பிக்கப் பட்டு பல வருடங்கள் ஓலைக் கொட்டகையில் நடத்தப்பட்டது. ஆனால் இன்று பல தொழில் நுட்பக் கல்லூரிகளும், ஏன் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கும் அளவிற்கு செல்வம் திரட்டியுள்ளது கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில். அதன் மொத்த மதிப்பு கணக்கிட்டால் பல ஆயிரங்கோடிகளைத் தாண்டும். அவர்கள் மிதிவண்டியில் வந்து பள்ளியை நடத்தியவர்கள் இன்று மேல் நாட்டு அதி சொகுசுக் கார்களில் வருகிறார்கள்.
    இது அரசுக்கோ மக்களுக்கோ தெரியாதா. இருவரும் நமக்கென்ன என்று இருக்கின்றார்கள். முடிந்தவரை லாபம் அடைய வழி பார்க்கிறார்கள்.

    மேலும் அந்தப் பள்ளியில் மாண்வர்கள் மதிப்பெண் அடிப்படையில் தரம் பிரித்துக் குறைந்த மதிப்பெண் பெரும் மாணவர்களை தனி வகுப்பாக்கி பாடம் எடுக்கின்றனர். ஏன் என்று காரணம் கேட்டால் அவர்களுக்கு தனி வகுப்புகள் நடத்தி படிக்க வைக்கின்றோம் எனச் சொல்லி வகுப்பும் எடுக்கின்றனர்.

    ஆனால் உண்மையான காரணம்... பள்ளி இறுதித் தேர்வில் அதாவது பத்தாம் மற்றும் +2 இறுதித் தேர்வில் மாணவர்களைக் காப்பி அடிக்க விடுவதற்காகவும், பள்ளி நிர்வாகமே அவர்களுக்கு விடை சொல்லிக் கொடுக்கவும் தான். இதன் மூலம் 100/100 சதவீதம் தேர்வு என விளம்பரப்படுத்தி வருமாணம் பார்க்கவும் ஏதுவான வழியாகிறது. இதற்கு அரசின் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும், அரசின் தேர்வு அதிரடி சோதனைக்குழுவும் உடந்தை. இந்தக் கேவலத்திற்கு என்ன சொல்ல?

    ஒவ்வொரு வருடமும் தொழில் நுட்பக் கல்விச் சேர்க்கை நடக்கும் போது சுய நிதிக் கல்லூரிகள் வங்கும் பணத்திற்கு ஏதாவது கணக்கு உண்டா? இல்லை யாராவது கேட்பதுண்டா?

    அவர்கள் நடத்தும் அனைத்துப் பணப் பரிவர்த்தனைகளையும் வங்கி மூலமாகத்தான் செய்ய வேண்டும், எனக் கொண்டுவந்து கண்காணித்தாலே போதும்.


    பணி நிரவல் என்பது அரசியல்வாதிகள் தங்கள் வருமானத்திற்காக வந்ததே ஒழிய பள்ளிக் கல்வியின் மேல் உள்ள அக்கறையில் அல்ல.////


    சத்தியமான வார்த்தைகள் தோழர். எனக்குத் தெரிய எங்கள் ஊரில் சாராயக் கடை வைத்திருந்தவர் ஒரு பத்து வருடங்களுக்குள் ஏறத்தாழ 15 பொறியியல் கல்லூரிகள் , 5 கலை அறிவியல் கல்லூரிகள், 5 பாலிடெக்னிக்குகள், கல்வியியல் கல்லூரிகள் ஒரு பெரிய மருத்துவக் கல்லூரி, நிறைய பள்ளிகள் என்று....

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...