Wednesday, May 15, 2013

“ கை கால் முளைத்த கவிதைகள் ”

தனது குழந்தை நிலாவை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டுக் கல்விமுறையில் அவளுக்கு கல்வியை வழங்கலாம் என்று விரும்புவதாக தனது முகநூலில் எழுதியிருக்கிறார் ஆர்த்தி வேந்தன். 

வீட்டுக் கல்வி இயக்கத்தில் பெரும்பங்காற்றிய ஜான்ஹோல்ட் அவர்களது அனுபவத்திலிருந்தும் தனது அனுபத்திலிருந்தும் அவர் எடுத்து வைக்கும் காரணங்கள் குறித்து நம்மால் விவாதிக்க முடியும். ஆனால் இறுதியாக அவர் வைக்கும் காரணம் நம்மை வெட்கித் தலை குனியவே வைக்கிறது.

குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு அதிகமாய் இரையாகும் இந்த காலகட்டத்தில் தனது மூன்று வயது குழந்தையை எப்படி பள்ளிக்கு அனுப்புவது?  என்ற அவரது கேள்வி உப்புப் போட்டு உணவெடுக்கும் சுரணையுள்ள எவரையும் ஓங்கி அறையவே செய்யும்.

ஒரு காலத்தில் பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் தயங்கினார்கள். மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வயதுக்கு வரும் வரைக்கும் அவர்களை கல்விகற்க அனுமதித்தார்கள். மிக நீண்ட , அழுத்தமான போராட்டத்தின் பின்பே பெண் கல்வி இந்த அளவிற்கு சாத்தியப் பட்டது. இன்று ஆண் குழந்தகளைவிடவும் பெண் குழந்தைகளே தேர்ச்சி விழுக்காட்டிலும் மதிப்பெண்களிலும் சிறந்து விளங்குகின்றனர். அழுத்தமான போராட்டத்தின் பின்பே பெண் கல்வி இந்த அளவிற்கு சாத்தியப்பட்டது.

அதில் மண்ணள்ளிப் போட்டிருக்கிறார்கள் பாவிகள். இந்த ஆண்டு பள்ளிச் சேர்க்கையின்போது இதன் பாதிப்பு தெரியக் கூடும்.

17 வயதுப் பெண்ணிற்கு திருமண ஏற்பாடு செய்தாலே , “ பாவம் பச்ச மண்ணு. அவளுக்கு என்ன தெரியும்னு இப்ப கல்யாண ஏற்பாடு செய்றீங்க” என்று கேட்கிற சமூகத்தில் 5 வயது குழந்தையை சீரழித்திருக்கிறார்கள் என்றால் இந்தக் காலத்தில் வாழ்வதற்காகக் கூட வெட்கப் படவே வேண்டும்.

சிதைப்பதற்காக அந்தக் குழந்தையை அவன் தூக்கியபோது குழந்தைமையோடு அவன் கன்னத்தை அவள் வருடியிருக்கவும் கூடும். எப்படியடா...?

ஏற்கனவே பெண் குழந்தைகளை பெற்றெடுக்க தயங்குகிற சமூகத்தில் இனி சட்டத்திற்குப் புறம்பாக என்ன குழந்தை என்பதை ஸ்கேன் எடுத்துப் பார்ப்பதும் பெண் குழந்தை எனில் கருக்கலைப்பதும் தீவிரப்படும்.

இது, பெண்களின் விகிதாச்சாரத்தை பெருமளவு குறைக்கும். இதன் விளைவாக இயற்கை சமமிழந்து போவதோடு, பெண்களுக்கு மேலதிக எதிர்விளைவுகளையே கொண்டு வந்து சேர்க்கும்.

ஏதோ ஒரு குழந்தை யாருக்கோ காற்று வழி அனுப்பும் முத்தத்தின் ஒரு துளி எப்படியோ நம் மீது படுமானால் அந்தச் சின்னத் துளி நம் சோர்வையெல்லாம் துடைத்தெறியும் வல்லமை வாய்ந்ததாயிற்றே.

ஒவ்வொரு நாளும் god bless mummy என்று தங்கள் பிரார்த்தனையைத் தொடங்கும் குழந்தைகள் god bless all என்றுதான் முடிக்கிறார்கள். எல்லோருக்காகவு பிரார்த்திக்கிற குழந்தைகளைச் சீரழிக்க எப்படி வரும் மனம்? கொடியவர்களே , வேண்டாம், குழந்தைகளின் சாபத்தை நம்மால் தாங்க முடியாது.

“ காக்கைச் சிறகினிலே”  மே மாத இதழுக்கு எழுதிய தலையங்கம்

4 comments:

 1. vethanai therikkum vaarthaikal...!

  ReplyDelete
 2. சரியாக சொன்னீர்கள்...

  /// அழுத்தமான போராட்டத்தின் பின்பே பெண் கல்வி இந்த அளவிற்கு சாத்தியப்பட்டது. ///

  100% உண்மை...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தனபால்

   Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...