Sunday, November 29, 2015

3 வீட்டுப் பாடம்


 மாலை முழுதும் விளையாட்டா
அடேய் பாரதி….
வீட்டுப் பாடத்த
உங்க தாத்தாவா செய்வார்?”

என்று அந்தக் கவிஞர் வாசித்தபோது  சென்னை LLA அரங்கமே அதிர்ந்தது. தலைமை வகித்த கவிஞர் வண்ணை வளவன் எழுந்து ஓடி அந்தக் கவிஞரைக் கட்டிப் பிடித்து வாழ்த்தினார். இது நடந்து முப்பது ஆண்டுகளைக் கடந்து விட்ட படியால் எவ்வளவு முயன்றும் அந்தக் கவிஞரின் பெயரைக் கண்டடைய முடியவில்லை.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் கல்வி இந்த அளவிற்கு வணிகப் பட்டும் இல்லை, இந்த அளவிற்கு இயந்திரத் தனமாகவும் மாறியிருக்கவுமில்லை. குழந்தைகளின் மாலை நேர விளையாட்டு முற்றாய்க் களவாடப் பட்டிருக்க வில்லை. அப்போதே இப்படிப் பாடினாரென்றால் இப்போது எப்படி பாடுவார் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

அப்போதெல்லாம் மூன்றாம் வகுப்புவரை கல்லு சிலேட்டும், சிலேட்டுக் குச்சியும் மட்டும்தான். நான் ஏழாம் வகுப்பு படிக்கிறபோதுதான் ரப்பர் சிலேட்டு என்று அழைக்கப் பட்ட அட்டை சிலேட்டு அறிமுகமானது. இது கல்லு சிலேட்டைவிட லேசானது. உடையாது, ஆனால் தண்ணீர் பட்டால் ஊறி வீணாகிவிடும். எங்களுக்கான கொடுப்பினை என்னவோ கல்லு சிலேட்டுதான். அது ஒரு மாதிரியான கருப்பு மாவினால் செய்யப் பட்டிருக்கும். விழுந்தால் உடைந்துவிடும். அதை மாற்றுவதற்குள் வீட்டில் ஆர்ப்பாட்டம் செய்து அடியெல்லாம் வாங்க வேண்டியிருக்கும்.

ஆக, எங்களது வீட்டுப் பாடம் என்பது சிலேட்டின் இரண்டுப் பக்கங்களுக்கு மேல் போகாது. ஏதேனும் தப்பு செய்துவிட்டால் திருத்துவது மிகவும் சுலபம். நாக்கை துறுத்தி வலது கை சுட்டு விரலால் ஒரு சொட்டு எச்சிலெடுத்து அழித்து அதன் மேலேயே திருத்தி விடுவோம். ஆனால் சிலேட்டில் எழுதிய வீட்டுப் பாட்த்தை அழிந்துவிடாமல் பாதுகாப்பாய் பள்ளிக்கு எடுத்துப் போவதுதான் அப்போதெல்லாம் சிரமம்.

நான் நான்காம் வகுப்பு படிக்கிறபோதுதான் சிலேட்டோடு நோட்டில் எழுதுவதற்கும் அனுமதிக்கப் பட்டேன். நோட்டென்றால் நாற்பது பக்க ரெண்டுகோடு நோட்டு ஒன்று, நாலுகோடு நோட்டு ஒன்று. அவ்வளவுதான். அதுவும் எழுதுவதற்கு பென்சில்தான். பேனாவெல்லாம் ஆறாம் வகுப்பில்தான்.

ஆறாம் வகுப்பிலும் ரஃப் நோட் உள்ளிட்டு அரை குயர் நோட்டுகள் ஒரு ஐந்தாறு தேறும், அவ்வளவுதான். அனைத்து புத்தகங்களையும் நோட்டுகளையும்கூட பள்ளிக்கு தினமும் எடுத்துப் போகத் தேவை இல்லை. அன்று என்னென்ன பாடங்கள் இருக்கிறதோ அவற்குரிய புத்தகங்களையும் நோட்டுக்களையும் மட்டும்  எடுத்துப் போனால் போதும். அதிலும் மதிய உணவிற்கு வீட்டிற்கு போக முடிந்தவர்கள் எனில் காலையில் உள்ள பாடங்களுக்கானவற்றை மட்டும் காலையிலும் மதியம் உள்ள பாடங்களுக்கான நோட்டுக்களையும் புத்தகங்களையும் மதியமும் எடுத்துப் போனால் போதுமானது. சொன்னால் ஆச்சரியமாக இருக்கும், நானெல்லாம் ஆறாம் வகுப்பிலிருந்து முதுகலை பட்ட வகுப்பு வரை புத்தகப் பையே எடுத்துப் போனதில்லை.

இன்றென்னடாவென்றால் பத்து கிலோ எடையுள்ள LKG குழந்தை பதினைந்து கிலோ புத்தக மூட்டையை முதுகில் சுமக்கிறாள். MA படிக்கும் மாணவன் ஒரே ஒரு நோட்டை எடுத்தபடி கல்லூரிக்குப் போகிறான். அதிலும் சிலர்  இரண்டு ஆண்டுகளையும் ஒரே நோட்டில் முடித்து விடுகிறார்கள்.

LKG குழந்தையிடம் புத்தக மூட்டையையும் MA படிக்கும் மாணவனிடம் ஒரே ஒரு நோட்டையும் கொடுத்திருக்கும் இன்றைய கல்வி முறையை என்ன செய்வது?

அம்சப்பிரியாபறத்தலை விரும்பும் பறவைகள்என்கிற தனது நூலில் கற்பனையான சம்பவமொன்றை சொல்வார்,

திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்தபோது பள்ளிக் குழந்தை ஒருத்தியைத் தவிர யாரும் அங்கில்லை. குழந்தைக்கு ஃபைவ் ஸ்டார் இரண்டைக் கொடுத்து ஏமாற்றிவிட்டு பொருட்களையும் நகைகளையும் மூட்டைக் கட்டிக் கொண்டு கிளம்புகிறார்கள். கிட்டத்தட்ட வீடே சுத்தம். வெளியேறிக் கொண்டிருந்தவர்களைஏய் திருட்டு அங்கிள்என்று குழந்தை அழைக்கவே ஒருக்கனம் அவர்கள் அப்படியே ஆடிப் போகிறார்கள். மிரட்சியோடு பார்த்தவர்களிடம் தனது புத்தக மூட்டையைக் காட்டிஎல்லாத்தையும் எடுத்துட்டு போறீங்களே, இத உங்க அப்பனா எடுத்துட்டுப் போவான்என்று கேட்டாளாம்.

பள்ளி தொடங்கும் நாட்களில் குழந்தைகளின் புது புத்தகப்பை கனவு என்பது எவ்வளவு அழகானது, அழுத்தமானது என்பதை உணர்ந்தவர்களுக்கு அந்தக் குழந்தையின் வலி சொல்லாமலேயே புரியும். அழுது ஆர்ப்பாட்டமெல்லாம் செய்து ஆசை ஆசையாய் வாங்கிய புத்தகப் பை அது. அந்தப் பையில் ஜிப்புகளின் எண்ணிக்கை அந்தக் குழந்தையின் கண்களை எப்படி ஜொலிக்க வைத்தது என்பது அருகிருந்து பார்த்தவர்களுக்குப் புரியும். கடையிலிருந்து வீட்டிற்கு வந்த்திலிருந்து அந்த ஜிப்புகளை இழுத்து மூடவும் பென்சில் டப்பாவை மூடி மூடித் திறக்கவுமாகவே அவற்றோடு ஒன்றிப் போகும் குழந்தைகள். ”பள்ளிக்கூடம் திறக்குறதுக்குள்ள இழுத்து இழுத்தே கிழிச்சுடுவ போலிருக்கேஎன்று அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டே விடாது அதே வேலையை செய்து கொண்டுதானே இருந்திருப்பாள் அந்தக் குழந்தை.

மட்டுமா, கடை கடையாய் ஏறி பார்த்து பார்த்து வாங்கிய அழகான லேபிள்கள் ஒட்டி பக்கத்து வீட்டு அக்காவிடம் முத்து முத்து எழுத்துக்களால் தன் பெயரை எழுதி வாங்கிய புத்தகங்களையும்தான் ஏன் எடுத்துப் போகவில்லை என்று எரிச்சலோடு அந்தக் குழந்தை கேட்கிறாள் என்றால் அவளது எரிச்சலுக்கு காரணம் என்னவாக இருக்கும்?

காரணங்களை வரிசையாக ஒரு குயருக்கு பட்டியலிடலாம். ஆனால் களவுபோன குழந்தைகளின் மாலை நேரத்து விளையாட்டுக்கள், ஞாயிற்றுக் கிழமை உள்ளிட்டு எல்லா நாட்களிலும்ஓவர் டைம்பார்க்கும் ஒரு ஆலைத் தொழிலாளிக்கு ஏற்படும் உடல் அசதிக்கு சற்றும் குறையாத உடல் அசதி. இவற்றையே இதற்கான ஆகப் பெருங்காரணங்களாகக் கொள்ள வேண்டும்.

ஆலைத் தொழிலாளியாவது வீட்டிற்கு வந்ததும் ஓய்வு எடுக்கலாம். குழந்தைகளுக்கோ பள்ளி, பள்ளி முடிந்ததும் தனிப் பயிற்சி. இரண்டும் முடிந்து வீட்டிற்கு வந்தால் இரு புறத்திருந்தும் பெறப்பட்ட வீட்டுப் பாடங்கள். எல்லாம் முடிந்து படுக்கப் போனால் தூங்கவிடாமல் அடுத்த நாளுக்கான டெஸ்டுகளின் நினைவு வரிசையாய் வந்து தொந்தரவு செய்யும்.

வீட்டுப் பாடம் எழுத இரண்டுக் கைகள் போதாத காரணத்தால் முருகனிடம் உள்ள பன்னிரண்டு கைகளில் ஐந்தாறை ஒரு குழந்தை யாசித்து நிற்பது மாதிரி அதே நூலில் பிரிதொரு இடத்தில் அம்சப்பிரியா எழுதுவார். என்ன கொடுமையெனில் அழுதுக் கடக்க வேண்டிய அந்தப் பகுதியை நகைச்சுவையாகப் பார்த்து சிரித்துக் கடக்கிறோம்.  

எட்டுமணிநேர உழைப்பு, எட்டுமணிநேர ஓய்வு, எட்டுமணிநேர உறக்கம் என்கிற உழைப்பாளிக்கான கணக்கை நாம் பள்ளிக் குழந்தைகளிடம் நீட்டுகிறோமா? உண்மையைச் சொல்வதெனில் நாம் தொழிலாளர்களை விடவும் பேரதிகமாய் குழந்தைகளை கசக்கிச் சுரண்டுகிறோம்.

நான்கு மணிக்கெல்லாம் குழந்தைகளை எழுப்பி விடுகிறோம். காலைக் கடன்களை முடித்து பல் துலக்கி நான்கரை அல்லது நாலே முக்காலுக்குள் படிக்க அமர்ந்து விட வேண்டும். ஆறரை மணி வரை இது நீளும். பிறகு குளியல், சாப்பாடு என்பதையெல்லாம் ஏழு மணிக்குள் முடித்துவிட வேண்டும். ஏழரை மணிக்கு வேனேறிவிட வேண்டும். எட்டரை மணியிலிருந்து பள்ளியில் சிறப்பு வகுப்பு. இது ஒன்பது இருபத்தி ஐந்துவரை நடக்கும். ஒன்பது முப்பதுக்கு கூட்டு பிரார்த்தனை வழிபாடு. இடைபட்ட ஐந்து நிமிடங்களில் குழந்தைகள் வரிசையாய் நின்று வழிபாட்டுத் திடலுக்கு போக வேண்டும். பிறகு வகுப்புகள், பாடங்கள், தண்டனைகள், டெஸ்டுகள்.

ஒரு வழியாய் நான்கரை மணிக்கு பள்ளி விடும். முன்பெல்லாம் பள்ளி விட்டதும் குழந்தைகளின் எழும் குழந்தைகளின் கூச்சல் அவ்வளவு இனிமையாக இருக்கும். இப்போதெல்லாம் அந்த நேரத்திலும் மயான அமைதியாகவே இருக்கின்றன பள்ளிகள். காரணம் நான்கரைக்கு பள்ளி முடிந்தாலும் நான்கே முக்காலுக்கெல்லாம் ஸ்டடி தொடங்கி விடும். இந்தக் கால் மணி நேரத்திற்குள் அத்துனைக் குழந்தைகளும் பள்ளிகளில் உள்ள குறைந்த அளவிலான கழிவறைகளைப் பயன்படுத்தி ஆசுவாசப் படுத்திக் கொண்டு வந்துவிட வேண்டும். ஸ்டடி பெரும்பாலும் மைதானத்தில்தான். வரிசையாய் தரையில் அமர்ந்து ஐந்தரை வரைக்கும் படிக்க வேண்டும். பிறகு வீடு. ஆறரைக்கெல்லாம் தனிப் பயிற்சிக்குப் போக வேண்டும். ஏட்டரை மணிக்கு தனிப் பயிற்சி முடியும். ஒன்பது மணி வாக்கில் வீடு திரும்பியபின் முகம் கழுவி சாப்பிட்டு ஒன்பதரைக்கு உட்கார்ந்து வீட்டுப் பாடங்களை முடிக்க வேண்டும். பிறகு அடுத்தநாள் டெஸ்ட்டிற்கு தாயார் செய்ய வேண்டும். இப்படியாக ஒரு குழந்தை படிக்கப் போகும்போது மணி பதினொன்று முப்பது அல்லது சில நேரம் பன்னிரண்டுகூட ஆகும்.

ஆக, ஒரு பள்ளிக் குழந்தை சராசரியாக ஐந்துமணி நேரமே தூங்குவதற்கு அனுமதிக்கப் படுகிறான்வருடம் முழுவதும் ஓய்வற்று உழைக்கிறான்.

பள்ளிப் பாடங்களில் ஏற்படும் சிக்கலைத் தீர்ப்பதற்காகத்தான் தனிப் பயிற்சி என்ற ஒன்றே தோன்றியிருக்க வேண்டும். ஆனால், இப்போது குழந்தைகளுக்கு இரண்டு பள்ளிகள் என்ற அளவிலானாது நடைமுறை. அவர்களும் வீட்டுப் பாடம் தருகிறார்கள், இவர்களும் வீட்டுப் பாடம் தருகிறார்கள். அவர்களும் டெஸ்ட் வைக்கிறார்கள், இவர்களும் டெஸ்ட் வைக்கிறார்கள். அவர்களும் தண்டிக்கிறார்கள், இவர்களும் தண்டிக்கிறார்கள். இரட்டைச் சுமையாகிப் போனது குழந்தைகளுக்கு.

காலாண்டு விடுமுறை, அரையாண்டு விடுமுறை என்பதெல்லாம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டம் வகுப்பு குழந்தைகளுக்கு கிடையாது. முழு ஆண்டு விடுமுறை என்பது ஒன்பது மற்றும் பதினொன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு கிடையாது. முழு ஆண்டு விடுமுறையில் அவர்களுக்கு பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பாடங்கள் ஆரம்பமாகிவிடும்.

கேட்டால் குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்காகத்தானே இவ்வளவும் செய்கிறோம் என்கிறார்கள்.            

1)   இப்படி கசங்கி பிழியப்படும் குழந்தைகள் சிறுவயதிலேயே கிழடு தட்டி தளர்ந்து போவார்கள் என்று அக்கறையுள்ள சான்றோர்கள் கத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
2)   உச்சமாக, இதுமாதிரி வதைபடும் குழந்தைகள் சைக்கோவாக மாற வாய்ப்புகளுண்டு என்பதையும் சமூக அறிஞர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
3)   இந்த பிரபஞ்சத்தை இந்த அளவிற்கு முன்னேற்றிய யாரும் இது மாதிரி கசக்கிப் பிழியப் படாதவர்களே என்கிற உண்மையையும், எனவே இதுமாதிரி கசக்கிப் பிழியாமலே குழந்தைகளை மனிதம் கசியும் சான்றோர்களாக்க முடியும் என்பதை நாமும் சந்து கிடைக்கும் இடங்களிலெல்லாம் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறோம்.

கிஷோரை சாதாரன தமிழ்வழி பொதுப் பள்ளியில்தான் படிக்க வைத்தேன். இவ்வளவு சுமை அவனுக்கு இல்லை. ஆனாலும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த அன்று சீருடையை கழட்டிப் போட்டபடியே சொன்னான், “அப்பாடா , ஒரு வாரம் நிம்மதியாத் தூங்கனும்”. ‘ஏண்டா தம்பி இப்படி நொந்துக்கற?”

கட்டிலில் விழப் போனவன் சொன்னான்,

பள்ளிக்கூடத்துல சேர்த்ததுக்கு பேசாம வெசத்த வச்சு கொன்னிருக்கலாம்

உண்மையை சொல்கிறேன், செத்தே போகலாம் என்றிருந்தது எனக்கு.

மூன்று சொல்லி முடிக்கலாம்,

1)   இந்த அளவிற்கு வதைகூடங்களாக மாறிப் போகாத பொதுப்பள்ளிக் கட்டுமானத்தை பாதுகாத்து வளர்த்தெடுப்பது.

2)   கல்வி நிலையங்களை வெடிப்புகளாலும், சிரிப்புகளாலும் கசியும் பள்ளிகளாக மாற்றுவது
3)   வீட்டுப் பாடங்களை அறவே ஒழிப்பது
4)   நீதி போதனை, விளையாட்டு, ஆடல், பாடல், பேச்சு, ரசனை, போன்ற வாழ்க்கையோடு தொடர்புடைய அனைத்தும் கிடைக்கும் இடமாக பள்ளிகளை மாற்றுவது.

முடியாது போனால்,

கல்வித்துறை அதிகாரிகள், ஊழல் அரசியல்வாதிகள், கல்வித் தந்தைகள், ஆகியோரை இரண்டு ஆண்டுகள் பள்ளிக்குப் போய் படிக்கச் செய்வது.

09.10.15 தினமணி இணைய இதழ்


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...