Thursday, November 26, 2015

2 ஒரே ஒரு மாணவனுக்காகவும்


 ஒரே ஒரு வாக்காளருக்காக அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு அதிகாரிகள் வாக்காளருக்காக காத்துக் கிடந்தனர்என்ற செய்தியை 30.04.2006 அன்று தீக்கதிரில் பார்த்ததிலிருந்து இந்தக் கட்டுரையை தட்டச்சு செய்யும் இந்தப் புள்ளிவரை அது கொடுத்த அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலுமிருந்து மீளாதாவனாகவே இருக்கிறேன்.

ஒரே ஒரு வாக்காளருக்காக ஒரு வாக்குச் சாவடியா? அதுவும் இந்தியாவிலா? ஒரே ஒரு வாக்காளருக்காக ஆறேழு வாக்குச் சாவடி அதிகாரிகளும், ஐந்தாறு கிராமப் பஞ்சாயத்து பணியாளர்களும், மூன்று காவலர்களும் பணியில் காத்துக் கிடந்தனரா? ஒரே ஒரு வாக்காளருக்காக வாக்குச் சீட்டு, படிவங்கள், வாக்காளர் பட்டியல் முறையாகத் தயாரிக்கப்பட்டதா?

இவையெல்லாம் சாத்தியமா? இதுகூட நடக்குமா? அதுவும் இந்தியாவில்.

சாத்தியப் பட்டிருக்கிறது.

எனில், ஏதோ ஒரு பெரும்புள்ளிக்காக இது நிகழ்ந்திருக்கும். ஏனெனில் இந்திய ஜனநாயகம் இத்தகைய முக்கியப் புள்ளிகளுக்காக எந்த அளவிற்கும் வளையும், ஒடியும் என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் நடந்தது வேறு.

அதை நடத்திக் காட்டியவர் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு சாமானியர். அதுவும் அன்றாடம் வயிற்றுப் பாட்டிற்காக மாடுகளை மேய்த்துப் பிழைக்கும் ஒரு ஏழைத் தொழிலாளி.

அடிமை என்று பொருள்படும்தாசன்என்ற பெயரைக் கொண்ட ஒரு எளிய மனிதன்தான் இப்படி ஒரு ஆச்சரியத்தை நடத்திக் காட்டியவர்.

நடந்தது இதுதான்,

கேரளாவில் கோட்டயத்தை அடுத்து பசுமையாய் புரண்டுப் படுத்திருக்கிறதுபம்பாடிஎன்கிற மலைக் கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ளசரங்காட்டு எஸ்டேட்என்ற இடத்தில்தான் தாசன் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அவரோடு சேர்ந்து ஏறத்தாழ 350 எஸ்டேட் ஊழியர்களும் அந்த எஸ்டேட்டில் வேலை பார்த்து வந்தனர். ஏதோ காரணங்களால் இவரைத் தவிர மற்ற அனைவரும் எஸ்டேட்டை காலி செய்துவிட்டு பிழைப்பு காரணமாக வேறு வேறு பகுதிகளுக்கு புலம் பெயர்கின்றனர்.

அந்த இடம்பெரம்பாசட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வருகிறது. தாசன் உள்ளிட்ட வாக்காளர்களுக்காக அந்தப் பகுதியில் வழக்கமாக ஒரு வாக்குச் சாவடி அமைக்கப் பட்டு வந்திருக்கிறது. இப்போது தாசனைத் தவிர அனைவரும் புலம் பெயர்ந்து இடத்தைக் காலி செய்துவிட்டு நகர்ந்து விட்ட காரணத்தினால் தாசன் மட்டுமே அந்தப் பகுதியில் எஞ்சி நின்ற ஒரே ஒரு வாக்காளராகிறார்.

எஞ்சியுள்ள ஒரே ஒரு வாக்காளருக்காக ஒரு வாக்குச் சாவடியை அமைப்பது தேவையற்ற நிறைய பொருட்செலவை, தேவையற்ற பணிச்செலவை ஏற்படுத்தும் என்பதை உணர்கிறது தேர்தல் ஆணையம். எனவே தாசனது பெயரினை பக்கத்திலுள்ள வாக்குச் சாவடிக்கு நகர்த்துகிறது. அடுத்த வாக்குச் சாவடி தாசன் குடியிருப்பிலிருந்து 15 கிலோமீட்டர் தாண்டி இருக்கிறது.

இதை அறிந்ததும் கொதித்துப் போகிறார் தாசன். விலை மதிப்பு மிக்க ஒரு வாக்கினை தேர்தல் ஆணையம் அலட்சியப் படுத்திவிட்டதாகவே அவர் அதை உணர்கிறார். எனவே தான் வசிக்கும் பகுதியிலேயே ஒரு வாக்குச் சாவடி ஏற்படுத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் தேர்தல் ஆணையத்திடம் வைக்கிறார்.

அவரது கோரிக்கையை அவரது ஏழ்மையைக் கருதி அலட்சியப் படுத்தவே தேர்தல் ஆணையம் முயன்றிருக்கும். ஆனால் அவர் விடுவதாக இல்லை. தனது கோரிக்கையில் வலுவாக இருக்கிறார்.

ஒரே ஒரு வாக்காளருக்காக ஒரு வாக்குச் சாவடியா?” தேர்தல் ஆணையம் கேட்டது.

எத்தனை பேர் என்பது பற்றியெல்லாம் தனக்கு சொல்வதற்கு கருத்து எதுவும் இல்லை என்றும் தான் வாக்களிக்க வேண்டியது தனது ஜனநாயகக் கடமை என்றும் கூறுகிறார். தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற ஏற்பாடுகளை செய்து தரவேண்டிய கடமை சட்டப்படி ஆணையத்திற்கு உள்ளது என்பதையும் தெளிவு படுத்தினார். ஆகவே வழக்கமாக தான் வாக்களித்துவரும் வாக்குச் சாவடியை இந்த மூறையும் ஆணையம் அமைத்துத் தர வேண்டும் என்றும் கோருகிறார்.

மிரட்டிப் பார்த்திருக்கும்தான் ஆணையம். ஆனால் அவர் அதற்கெல்லாம் மசிபவராகத் தெரியவில்லை. அடுத்ததாக என்ன நிகழ்ந்திருக்கும் என்பதையும் நம்மால் பெருமளவு யூகிக்க முடியும். மிரட்டல் எடுபடாது என்று தெரிந்துவிட்டால் பணிந்து வளைக்கப் பார்க்கும். ஆணையம் அதை செய்திருக்கவும் கூடும்.

வாகன வசதியை ஏற்பாடு செய்து தருவதாகவும், வந்தவுடன் காத்திருக்க வைக்காமல் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் கெஞ்சியிருக்கவும் கூடும்.

எதற்கும் மசியாத தாசன் தான் ஒரு வாக்காளன் என்ற வகையில் வாக்களிப்பது தனது ஜனநாயகக் கடமை என்கிறார். ஒரு வாக்காளன் தனது ஜனநாயக்க் கடமையை ஆற்றுவதற்கு வசதியாக அவன் வசிப்பிடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்திற்குள் வாக்குச் சாவடியை அமைத்துத் தர வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்பதைத் தெளிவு படுத்துகிறார். ஒருக்கால் அதைச் செய்யாமல் தன்னை ஆணையம் அலைகழிக்குமானால் தன்னை வாக்களிக்க விடாமல் தடுத்துவிட்டதாக தான் வழக்குத் தொடுக்க இருப்பதாகவும் தன் நிலையை எந்த வித சமரசமுமின்றி தெளிவு படுத்திவிட்டார் தாசன்.        

வேறு வழியே இன்றி அந்த மாடு மேய்க்கும் ஏழை மனிதனின் கோரிக்கையை ஏற்றது தேர்தல் ஆணையம்.

ஒரே ஒரு வாக்காளருக்காக அமைக்கப் பட்ட வாக்குச் சாவடியோடு 29.04.2006 விடிகிறது.

மூன்று மணிவரைக்கும் தாசன் வாக்களிக்க வராததால் அவரை அணுகி அழைத்திருக்கிறார்கள். தான் ஒன்றும் வேலை வெட்டி இல்லாமல் சும்மா இல்லை என்றும் மாடு மேய்த்துவிட்டு வாக்களிக்க வருவதாகவும் சொல்லியனுப்பி இருக்கிறார்.

காத்திருந்த அதிகாரிகள் காத்துக் கொண்டேதான் இருந்தனர்என்பதாக தீக்கதிர் எழுதுவதிலிருந்து அவர் வாக்களிக்கவே இல்லை என்றும் தோன்றுகிறது. ஆக நம் யூகம் உண்மை எனில் வாக்களிக்கவே வராத ஒரே ஒரு வாக்காளருக்காக ஒரு வாக்குச் சாவடி அமைக்கப் பட்டிருக்கிறது.

இது மெத்தவும் சரி.

நமது கவலை எல்லாம் ஒரே ஒரு வாக்காளருக்காக வாக்குச் சாவடி அமைத்த நாட்டில் போதிய அளவு மாணவர்கள் இல்லை என்ற காரணத்திற்காக பள்ளிகளை இழுத்து மூடும் அவலம் குறித்துதான்.

ஒன்றுஎட்டு அறிக்கை (ONE EIGHT PARTICULARS) என்ற வார்த்தையைக் கேட்டாலே ஆசிரியர்களில் பலருக்கு அடி வயிறு கலங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதியன்று ஒவ்வொரு பள்ளியும் தமது பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரத்தை
உரிய கல்வி அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும். இந்த விவர அறிக்கைக்குதான் ONE EIGHT PARTICULARS என்று பெயர்.

மாணவர் குறைந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் படும் வேதனை இருக்கிறதேஅப்பப்பா .. அதை சொல்லி மாளாது. அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது, வீட்டில் பெரியவர்கள் இருப்பார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கல்வித்துறை கவலைப் படுவதில்லை.ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வார வாக்கில் அவர்களுக்கு நிரவல் என்ற முறையில் பணி மாறுதல் வழங்கப் படும். இதுவும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் எனில் இது நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் இந்த மாறுதல் ஆணை வழங்கப்படும்.

வருடத்தின் மத்தியில் அல்லது வருடத்தின் இறுதியில் இப்படி மாறுதல்கள் வருமானால் அந்த ஆசிரியர்கள் என்ன பாடு பட வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்களில் நோயாளிகளாக உள்ளவர்களை திடுமென புலம்பெயர்த்துவது என்பது எவ்வளவு கடினம். போக, ஆசிரியர்களும் பெற்றோர்கள் என்பதை இவர்கள் எப்போது உணர்வார்கள்?

பணி மாறுதல் பெற்றுள்ள ஆசிரியர்களின் குழந்தைகளின் கல்வி என்னாவது?
இடையில் அவர்களை எப்படி இடம் மாற்றுவது? ஒருக்கால் அப்படி பணி மாறுதல் பெறும் ஆசிரியரின் குழந்தை பத்தாம் வகுப்பிலோ அல்லது பன்னிரெண்டாம் வகுப்பிலோ படிப்பதாக வைத்துக் கொள்வோம். அவனது கல்வி என்னாகும். பாதி வருடத்தில் வேறு பள்ளிக்கு புலம் பெயரும் போது படித்த பள்ளி நண்பர்களை ஆசிரியர்களை  சூழலை பிரிந்து போகிற சோகம் ஒரு குழந்தையை என்ன பாடு படுத்தும்? அது போக புதிய இட்த்தில் அவன் வேறூன்றி இயல்பாக எவ்வளவு காலம் பிடிக்கும்? இது அவன் எழுதப் போகும் அரசுத் தேர்வை பாதிக்காதா? அல்லது ஆசிரியர் பிள்ளைகள் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்ற எண்ணமா?

மட்டுமல்ல ஒரு ஆசிரியர் இடையில் இப்படி மாறுதலில் இடம் பெயர்ந்தால் அது அவர் விட்டுப் போகும் பள்ளிக் குழந்தைகளையும் அவர் பணியேற்கச் செல்லும் பள்ளியின் குழந்தைகளையும் ஒருசேர பாதிக்காதா?

யார் வந்து விசைப் பொத்தானை அழுத்தினாலும் இயங்க இது ஒன்றும் மின் இயந்திரங்கள் அல்ல. இவை ரத்தமும் சதையுமாய் உயிர்த்தியங்கும் குழந்தைகள் ஜீவிக்கும் வகுப்பறைகள். தங்கள் ஆசிரியர் பிரிந்தால் அடுத்த நாளே அடுத்த ஆசிரியருக்காக காத்திருக்கும் இயந்திரங்கள் அல்ல. ஈரம் சுரக்கும் பிஞ்சுக் குழந்தைகள் அவர்கள். பிரிவுச் சோகம் ஒரு புறம், புதிதாய் வரும் ஆசிரியரோடு மனம் ஒத்துப் போகத் தேவைப்படும் கால அவகாசம் எல்லாமுமாக சேர்த்து அரசுத் தேர்வெழுதக் காத்திருக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்காதா?

ஏதேது பற்றியோ யோசிக்கும் கல்வித்துறை இது குறித்து யோசிக்காதா? அல்லது அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஒடுக்கப் பட்ட ஏழைத் திரளின் குழந்தைகள்தானே, எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்ற அலட்சியமா?

அரசு பள்ளிகளுக்கு குழந்தைகள் வருவதில்லை என்பது ஒரு அரசை வேதனைப்பட வைக்க வேண்டும். எப்படிக் குழந்தைகளை கொண்டு வருவது என்று யோசிக்க வைக்க வேண்டும். சலுகைகளை வாரி இறைத்தேனும் பிள்ளைகளை தனது பள்ளிகளில் கொண்டுவந்து குவிக்க வேண்டும் அரசு. ஆயிரம் இடையூறுகளைக் கொண்டு வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வைக்க வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும்.
என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் எது காரணம் கொண்டும் பள்ளிகளை மூடக் கூடாது. ஒரே ஒரு மாணவன் இருப்பினும் அவனுக்காக பள்ளி இயங்க வேண்டும். மாணவனே இல்லை என்றாலும் பள்ளி திறந்திருக்க வேண்டும். அந்தப் பள்ளிகளுக்கு குழந்தைகளைக் கொண்டுவர வேண்டிய பொறுப்பை அரசு தன் தோள்களின்மீது மகிழ்ந்து சுமக்க வேணும்.

மீண்டும் ஒன்றைச் சொல்வோம்,

ஒரே ஒரு வாக்காளருக்காக ஒரு வாக்குச் சாவடி சாத்தியமெனில் ஒரே ஒரு மாணவனுக்காக ஒரு பள்ளியும் சாத்தியமே.


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...