Wednesday, May 11, 2022

அனைவருக்காகவும் அனைவரும் களமேகும்போதுதான் எதுவும் வசப்படும்

 அன்புமிக்க தோழர் சுகிர்தராணிக்கு,

வணக்கம்
பழைய ஓய்வூதியத்திட்டம் வருவதற்கு சாத்தியமில்லை என்று நமது நிதி அமைச்சர் கூறியது ஒட்டிய எனது பதிவிற்கு நீங்கள் பின்னூட்டம் வைத்திருந்தீர்கள்
மகிழ்ச்சியாக இருந்தது
அதில் இரண்டு விஷயங்களை நீங்கள் சொல்லி இருந்தீர்கள்
பழைய ஓய்வூதியத்தில் இருப்பவர்கள், அனைவருக்கும் அது வேண்டும் என்று போராடுவதாகவும்
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருப்பவர்களுக்கு அந்த அளவிற்கு அக்கறை இருப்பதாகப் படவில்லை என்றும்
தேர்வுத் தாள் திருத்தும் பணியைப் புறக்கணிப்பதன் மூலம் அரசின் கவனத்தை இதன் பக்கம் திருப்ப முடியுமா என்றும்
கூறி இருந்தீர்கள்
இதை முன்வைத்து உங்களோடும் நண்பர்களோடும் கொஞ்சம் உரையாட விருப்பம்
மயிலாப்பூரில் ஏழை மக்களின் வசிப்பிடங்களை தரைமட்டமாக்கியபோது தீக்குளித்த மனிதன்
“ஊமை ஜனங்களைக் காப்பாற்றுங்கள்” என்று கத்தியதாக கேள்விப் படுகிறேன்
அதுதான் தோழர் நமக்கான வழிகாட்டும் குரல்
அவர்களது மௌனத்தின் பின்னால் பயம் உள்ளிட்ட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்
இருக்கட்டும்
அவர்களது வலி நமக்குப் புரியும்
அவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்
தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கும் போராட்டத்தை எமது மாவட்டத்தில் பலமுறை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவன் என்ற வகையில்
சரியான நேரத்தில் சரியான திட்டம் உங்களிடமிருந்து வருவதாகவே பார்க்கிறேன்
மகிழ்ச்சியாக இருக்கிறது
அதுவும் வெற்றிகரமாக முடியுமா என்பது சந்தேகம்தான் தோழர்
2003 வாக்கில் அனைத்து சங்கங்களும் சேர்ந்து ஒருநாள் தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு செய்தோம்
ஜெயலலிதா கோவமடைந்தார்
அன்று நாகை முகாம் முற்றாகப் பணியைப் புறக்கணித்தது
மற்றபடி தமிழகம் முழுக்க 13 பேரோ அதற்கு கொஞ்சம் கூடுதலான எண்ணிக்கையிலோதான் புறக்கணித்தோம்
எனவே இதில் எனக்கு இந்த நிமிடத்தில் நம்பிக்கை இல்லை
நாம் ஒருவருக்கொருவர் அந்நியப்பட்டிருக்கிறோம் தோழர்
எழுபதுகளில் பட்டதாரி ஆசிரியர்கள் போராடியபோது அன்றைய முதல்வர் MGR அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவே இல்லை என்றும்
தஞ்சை மாவட்டத்து விவசாயக் கூலித் தொழிலாளிகள் ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கவே
அடுத்தநாளே பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் என்றும்
போராட்ட காலத்திற்கான ஊதியத்தை ஆசிரியர்கள் பெற்றுவிட்டார்கள்
ஆனால் அந்த ஒருநாள் கூலி விவசாயத் தொழிலாளிக்களுக்கு இழப்புதான் என்றும்
TNPGTA வின் முன்னாள் மாநிலத் தலைவர் தோழர் கே.ராஜேந்திரன் அடிக்கடி சொல்வார்
அந்த விவசாயிகள் போராடியபோது இயக்கமாக ஆசிரியர்கள் அவர்கள் பின்னே போகவில்லை தோழர்
தூத்துக்குடி போராட்டத்தின்போது உங்களது பங்கெடுப்பு பெருமிதத்தைத் தந்தது
ஆனால் ஆசிரியப் பேரினம் அந்த விஷயத்தில் இயக்கப்படவில்லை
போக்குவரத்து ஊழியர்களின் பிஎஃப் உள்ளிட்ட பணம் அவர்களுக்குப் போகாதபோதும் நாம் அங்கே எட்டிப் பார்க்கவில்லை
சாதிய ஆணவக் கொலைகள் நடந்தபோது ஆசிரியர்கள் எட்டிப்பார்க்கவில்லை
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது
“ஊருக்கு ஒரு ஜல்லிக்கட்டு
சேரிக்கொரு ஜல்லிக்கட்டு”
என்பது மாதிரி நீங்கள் வலியோடு எழுதியதாக நினைவு
அதைக்கூட நாம் ஒன்றாய் சிந்திக்கவில்லை
அனைத்து பிரிவினரும் ஒருவருக்கொருவர் அந்நியப்பட்டு கிடக்கும்வரை விடியாது தோழர் சுகிர்தராணி
அனைவருக்காகவும் அனைவரும் களமேகும்போதுதான் எதுவும் வசப்படும்
உங்களைப்போன்ற இளைஞர்கள் முன்கை எடுங்கள்
தொடர்ந்து வருகிறோம்
அன்புடன்,
இரா.எட்வின்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...