மோடி வென்றிருக்கிறார்.
அதனை மனப்பூர்வமாக ஏற்போம். நாம் தோற்றிருக்கிறோம். அதையும் மனப்பூர்வமாக ஏற்போம்.
இதில் ”நாம்” என்பதில் யாருக்கேனும் கருத்துக்கள் இருப்பின் அவர்களையும் வென்றவர்களாகக்
கருதி வாழ்த்திவிடுவோம். ஆனால் அவர் வந்துவிடக் கூடாது என்று நாம் ஒன்றும் பொழுது போகாததால்
உழைக்கவில்லை. அதற்கு சில வலுவான காரணங்கள் இருந்தன. தேர்தல் முடிந்து விட்டதால் அந்தக்
காரணங்கள் ஒன்றும் காணாமல் போய்விடவில்லை. கொஞ்சம் அசுர பலத்தோடான அவர்களது வெற்றி
என்பது நம்மிடமிருந்த காரணங்களை இன்னும் கொஞ்சம் கூடுதாலாக பலப்படுத்தியுள்ளது என்றே
கொள்ள வேண்டும்.
அதுதான் நமது கவலைக்கு
காரணமே அல்லாமல் வேறு விகிதாச்சார கணக்குகள் எல்லாம் இல்லை. மூன்று சதவிகிதத்தை ஒட்டி
வாக்குகள் பெற்ற மார்க்சிஸ்ட் கட்சி ஒன்பது
இடங்கள் பெற்றிருக்கும் போது 32 சதம் பெற்ற அவர்கள் 90 தானே பெற்றிருக்க வேண்டும் என்றோ
அல்லது 3 சதவிகித்தத்தை ஒட்டிய வாக்குகள் பெற்ற அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் 37 இடங்களைப் பெற்றிருக்கும் போது அவர்கள் 370 இடங்களை அல்லவா வென்றிருக்க வேண்டும்
என்றோ விகிதாச்சார கணக்குகளை எல்லாம் விவாதிக்க விரும்பவில்லை. இந்த ஜனநாயக நடை முறையில்
நீங்கள் வென்றிருக்கிறீர்கள். அதைவிட முக்கியம் உங்களை மக்கள் வெற்றிபெற செய்திருக்கிறார்கள்.
அதை தலை வணங்கி ஏற்கிறோம்.
மோடி அவர்கள் கூறியுள்ளபடி
வரலாற்றில் சுதந்திரத்திற்குப் பிறகுப் பிறந்த ஒருவர் முதன்முறையாக பிரதமர் பதவிக்கு
வந்திருக்கிறார். இதற்காக மட்டும் நாம் இவரை வாழ்த்தவில்லை. ஒருக்கால் காங்கிரஸ் வென்றிருந்தால்
இவரைவிடவும் இளைய மனிதர் இந்த இடத்திற்கு வந்திருப்பார்
என்பது நமக்குத் தெரியும். ஆனால் அவரே பல இடங்களில் குறிப்பிட்டபடி தேநீர் விற்றுக்
கொண்டிருந்த திரு மோடி பிரதமராகியிருக்கிறார். இதில் இந்த உலகிற்கு உரத்துக் கூற ஒரு
விஷயம் நமக்கிருக்கிறது. மக்கள் விரும்பினால் மிகச் சாமானியரான தேநீர் விற்றுக் கொண்டிருந்தவராலும்
எங்கள் மண்ணில் பிரதமராகலாம் என்பதே அது. இது எங்கள் மண்ணின் மாண்பு. ஆனால் இவை யாவும்
கடந்து நாம் கவலைப் படுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.
அனால் அவை பற்றி
பார்க்கும் முன் தவறாகக் கட்டமைக்கப் பட்டுள்ள ஒரு பிம்பத்தை நாம் உடைத்தாக வேண்டும்.
இது திடீரென்று மிக வலுவாக உருவான மோடி பேரலை என்று ஒரு பொய்யை சொல்லி சொல்லியே உண்மையாக்கப்
பார்க்கிறார்கள். இது திரு மோடி மற்றும் RSS அமைப்பின் பத்தாண்டுக் கால உழைப்பின் பலன்
என்பது பெரும்பான்மை பாரதிய ஜனதாக் கட்சி ஊழியர்களே அறிந்திராத உண்மை.
இது முழுக்க முழுக்க
மோடி அவர்களுக்கு கிடைத்த வெற்றி என்றுகூட கொள்ள முடியாது. தேசம் முழுக்கப் பார்த்தால்
காங்கிரசையும் அதனை ஆதரித்த கட்சிகளையும் மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள். காங்கிரசைஆதரிக்காத
கட்சிகளை மக்கள் ஆர்வத்தோடு தேர்ந்தெடுத்திருப்பதை நாமிங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
காங்கிரசை ஆதரிக்காத கட்சிகள் வேறு இல்லாத இடங்களில்தான் பி.ஜே.பி எளிதாக வென்றிருக்கிறது.
போக இடதுசாரிகள்
தேர்தலுக்கு முன்பே மூன்றாவது அணியினை உருவாக்காமல் போனதும்கூட இவர்களது பெரு வெற்றிக்கான
வலுவான காரணம்தான்.
எது எப்படியோ ஒரு
மாபெரும் வெற்றியை மக்கள் அவர்களுக்கு தந்திருக்கிறார்கள். ஐந்தாண்டுக் காலம் இந்த
மண்ணை ஆளுகிற உரிமை அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. இதில் அச்சப் படுவதற்கு நமக்கென்ன
இருக்கிறது?. நிறைய இருக்கிறது.
பொருளாதாரத் தளத்தில்,
அசுர ஊழலில், கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் உறவில் இவர்களுக்கும் காங்கிரசிற்கும் எந்தப்
புள்ளியிலும் விலகல் இருக்காது என்பதால் அது குறித்தும் நாம் குறிப்பாக கவலைப்படத்
தேவையில்லை. அவர்கள் வந்திருந்தால் எதை செய்திருப்பார்களோ அதையேதான் இவர்களும் செய்வார்கள்
என்கிற அளவில் பெரிய வேறுபாடு ஏதுமிருக்கப் போவதில்லை. எனவே பொருளாதாரத் தளத்தில் நமது
நேற்றையப் போராட்டத்தை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கும் தொடரவேண்டிய கட்டாயம் உள்ளது.
அது ஒன்றும் புதிதல்ல.
ஆனால் இவர்கள்
ஆட்சிக்கு வருகிறார்கள் என்ற ஒரு நினைவே சிறுபான்மையினரது மத்தியில் ஒரும் பெரும் பதட்டத்தை
கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருந்த பொழுது ஒருநாள்
நான் பெரிதும் மதிக்கிற ஆசிரியை ஒருவர் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் தினமும் தினமும்
இஸ்லாமியர்களைக் கொன்றுகொண்டா இருக்கப் போகிறார்கள்?. ஏனிப்படி மிகையாக பதறுகிறீர்கள்?
என்று கேட்டார். நாம் ஏதோ கூடுதலாகத்தான் அச்சப் படுகிறோமோ என்றுகூட எண்ணத் தோன்றியது.
அதற்கு அடுத்த நாள் தேர்தல் முடிந்ததும் மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிவிட
வேண்டும் என்று கிரிதரன் சொன்னார்.
இந்துக்களைத் தவிர
ஏனையோர் என்பதிலிருந்து மோடியை எதிர்ப்பவர்கள் என்ற நிலைக்கு பந்து வந்து நிற்கிறது.
எனில், மோடியை ஆதரிப்பதே இந்துவின் அடையாளம் என்றாகிறது. மோடியையை ஆதரிக்காதவன் இந்துவாக
இருப்பினும் அவன் இந்து அல்ல என்பதே இதன் பொருளாகிறது. இதுதான் பாசிசத்தின் கொடூர உச்சம்.
அதற்கும் சில நாள்
கழித்து தொகாடியா ஒரு காரியத்தை செய்தார். ஒரு இஸ்லாமியர் ஒரு வீட்டை ஒரு இந்துவிடமிருந்து
விலைக்கு வாங்குகிறார். குடியும் வந்துவிட்டார். ஒரு பெரிய கும்பலை அந்த வீட்டின் முன்
திரட்டி அசிங்கமானதொரு போராட்டத்தை நடத்தினார் தொகாடியா. அந்த இஸ்லாமியர், வீட்டை விட்டு
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியேறிவிட வேண்டும் என்கிறார். இஸ்லாமியர்கள் இடம்
வாங்கும் உரிமை அற்றவர்கள் என்றும், அதுவும் இந்துக்களிடமிருந்து வாங்கும் உரிமை இல்லை
என்றும் கூறுகிறார். ஒருக்கால் குறிப்பிட்ட காலத்திற்குள் அவர் வீட்டைக் காலி செய்யா
விட்டால் என்ன செய்தேனும் அவரைக் காலி செய்ய வைக்க வேண்டும் என்று கூட்டத்தினரிடம்
கூறுகிறார். மட்டுமல்ல அராஜகத்தின் எந்த உசரத்திற்கும் போகலாமென்றும் வழக்கு என்று
வருமானால் பார்த்துக் கொள்வதாகவும் கூறுகிறார். வழக்கென வந்தால் குறைந்த பட்சம் 25
ஆண்டுகளாவது ஆகும். நமது ஆட்சி வரப் போகிறது. தைரியமாக நடத்துங்கள் என்று கூடியிருந்த
திரளை உசுப்பேற்றிவிடுகிறார்.
தொகாடியாவும் கிரிதரனும்
சாதாரண ஆட்கள் இல்லை. ஒருவர் பி.ஜே.பி யின் ஒரு மாநிலத் தலைவர், இன்னொருவர் RSSஅமைப்பின்
மாபெரும் தலைவர். ஒன்றும் நடந்துவிடாது ஏன்
பதறுகிறீர்கள் என்று கேட்பவர்கள் நம்மைப் போல சாமானியர்களாக உள்ளனர். அச்சமூட்டுபவர்களோ
சர்வ பலம் பெற்றவர்களாக உள்ளனர்.
தேர்தலுக்காக பறந்து
பறந்து தேநீர் குடிப்பதும் பிரச்சாரம் செய்வதுமாக மோடி இருந்த காலத்தில்தான் மேற்சொன்ன
இரு சம்பவங்களும் நிகழ்ந்தன. அவர்களது செய்கை தேர்தலில் பாதகத்தை உண்டுபன்னிவிடுமோ
என்ற கால கட்டத்திலேயே அவர்கள் இப்படி என்றால் பதவியேற்றபிறகு என்னவெல்லாம் செய்வார்கள்
என்பதே சிறுபான்மையினரிடையே அதிலுங் குறிப்பாக இஸ்லாமியரிடையே உள்ள பதட்டத்திற்கு காரணம்.
ஒரு குறிப்பிட்ட
மக்கள் திரள் பதட்டத்தோடு இருப்பது எந்த ஒரு மண்ணுக்கும் சமூகத்திற்கும் நல்லதல்ல என்பதோடு
இந்தப் பிரச்சினையை முடிப்போம்.
முதலில் அனைத்து
இந்துக்களையும் இந்துக்களாகவே இவர்கள் பார்க்கவேண்டும் என்பதே நமது கோரிக்கை. அன்புமணியை
மட்டும் இந்துவாகப் பார்ப்பதும் இளவரசனை அப்படிப் பார்க்காமல் தவிர்ப்பதும் தொடர்ந்துவிடக்
கூடாது என்பதற்காகவே நாம் கவலைப் படுகிறோம். வரலாறு நெடுக எல்லா இந்துக்களும் இந்துக்களாகப்
பார்க்கப் படவில்லை.சாதி இந்துக்களே இந்துக்களாக பார்க்கப் பட்டனர். அவர்கள் எப்படி
இந்துக்களாக பார்க்கப் படவில்லை என்பதை நாம் சுட்டிக் காட்டுவதென்பதுகூட அது தொடராமல்
ஆட்சியாளர்கள் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான்.
இந்திய பாக்கிஸ்தான்
பிரிவினையை ஒட்டி இந்தியாவிற்கு வந்துவிட விரும்பிய இந்துக்கள் இந்தியாவிற்கும் இங்கிருந்து
பாக்கிஸ்தான் செல்ல விரும்பிய இஸ்லாமியர்கள் பாகிஸ்தானிற்கும் புலம் பெயர்ந்தனர். இந்திய
எல்லையில் இரண்டு விதமான முகாம்கள் இருந்தன. ஒன்று இங்கிருந்து பாகிஸ்தான் போக விரும்பிய
இஸ்லாமியர்களுக்கானது. மற்றொன்று பாக்கிஸ்தானிலிருந்து இந்தியா வந்த இந்துக்களுக்கானது.
இதில் இஸ்லாமியர்களுக்கான
முகாம்களில் இஸ்லாமியர்கள் தங்கினார்கள். இந்துக்களுக்கான முகாம்களில் அங்கிருந்து
வந்த சாதி இந்துக்கள் மட்டுமே தங்கவைக்கப் பட்டனர். இரண்டு முகாம்களிலும் தங்க இயலாத
தலித்துகள் தவித்தார்கள் என்பது பிரச்சார மேடைகள் தோறும் வரலாற்று நிகழ்வுகளாக சொல்லி
நம்மை மெய் சிலிர்க்கவைத்த மோடி அவர்களுக்கு நினைவு படுத்த வேண்டியது நமது கடமையே ஆகும்.
இந்துக்களாகவும்
இல்லாமல் இஸ்லாமியராகவும் இல்லாமல் தவித்த தலித்துகள் தங்களுக்காக ஒரு தனிநாடு கேட்டு
இயக்கம் தொடங்கினார்கள் என்பதுதான் வரலாறு. சாதி இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும்
அப்போதிருந்த சகலவிதமான பலத்தில் ஒரு சிறு துளியும் தலித்துகளிடம் அப்போது இருக்கவில்லை.
அதனால்தான் அந்த இயக்கம் வலுப்பெற்று வெற்ரி பெறாமல் போனது மட்டுமல்ல வரலாற்றிலும்
வஞ்சகமாக மறைக்கப் பட்டுவிட்டது. 1946 வாக்கில்
தலித்துகள் தாங்கள் இந்துக்களும் இல்லை என்றும் இஸ்லாமியர்களும் இல்லை என்றும் மேல்
சாதியினர் பார்வையில் தாங்கள் தீண்டத் தகாதவர்கள், அசுத்தமானவர்கள் என்றும் கூறினர்.
எனவே தங்களுக்கு அசுத்தஸ்தான் என்ற ஒரு நாட்டைத் தந்துவிடுங்கள் என்றும் தலித்துகள்
கோரியிருக்கிறார்கள். இயக்கம்கூட கண்டிருக்கிறார்கள் என்பதை மோடி அவர்களின் கவனத்திற்குகொண்டு
வருகிறோம்.
1946 இல் திரு
பியாலால் “அகில இந்திய அசுத்தஸ்தான் இயக்கத்தை” நிறுவியதாக 1947 என்ற தனது அழுத்தமான
குறுநூலில் தமிழ்செல்வன் கூறுகிறார்.
இதெல்லாம் முன்பு
எப்போதோ நடந்தது. சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகு நிலைமை வெகுவாக மாறியிருக்கும்
என்று யாரேனும் நம்பினால் ஏமாந்து போவோம். எல்லாம் வளர்ந்துபோன நிலையைப் போலவே தலித்துகளது
துயரங்களும் வளர்ந்துகொண்டுதான் போகின்றன.
பொதுத் தொகுதி
ஒன்றில் தலித் ஒருவர் நிற்க முடியாத சூழல் இந்த நாட்டில் இன்றைக்கும் இருக்கிறது. நிற்கலாமே?
யார் தடுத்தது? என்றெல்லாம்கூட கேட்கலாம். நிற்க முடியவில்லை என்பதுதான் இன்றைக்கு
நாம் காணும் எதார்த்தம். ஏறத்தாழ பத்தாண்டுக்காலம் மத்திய அமைச்சராக பணியாற்றிய ஆ.ராசா
அவர்களே தனது சொந்தத் தொகுதி பொதுத் தொகுதியானதும் வேறு ஒரு தொகுதிக்கு பயணப்பட வேண்டி
வந்தது. உலகமே அவரை ஒரு ஊழலோடு சம்பந்தப் படுத்திப் பார்த்தாலும் பெரம்பலூர் மக்கள்
அவரை பெரிய ஊழல் வாதியாக பார்க்கவில்லை. இந்த மண்ணின் மைந்தனாகவே அவர் இன்றும் கொண்டாடப்
படுகிறார். அப்படிப் பட்டவருக்கே இன்று இதுதான் நிலைமை.
இந்த வகையில் எல்லாத்
தொகுதிகளுமே பொதுத் தொகுதியாகிவிட்டால் தலித்துகளின் பிரதிநிதித்துவம் இல்லவே இல்லாமல்
போய்விடாதா? இதைவிட இன்னுமொருபடி மேலே போயும் நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. பி.ஜே.பி
ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் நடைமுறைப் படுத்தப் படும் என்றும், ரிசர்வேஷன்
முறை எடுக்கப் பட்டுவிடும் என்றும் ஒரு அச்சம் நம்மிடம் இருக்கிறது. ஒருக்கால் இதை
இவர்கள் செய்தால் படிப்பில், வேலை வாய்ப்பில் கொஞ்ச நஞ்சம் தலித்துகளுக்கு இருக்கிற
வாய்ப்பும் இல்லாமல் போய்விடுமே என்கிற அச்சம் பி.ஜே.பி யைப் பற்றி அறிந்த சமூக அக்கறையுள்ள
மக்களிடம் இயல்பாகவே எழுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
பாப்பாபட்டியும்
கீறிப்பட்டியும் தலித்துகளுக்காக ஒதுக்கப் பட்ட பிறகு அங்கு என்ன நடந்தது என்பது எல்லோருக்கும்
தெரியும். ஒரு கட்டம் வரைக்கும் யாரையும் நிற்கவிடாமல் தடுத்தனர். பிறகு தங்கள் சொல்பேச்சைக்
கேட்கக் கூடிய, பச்சையாக சொல்லப் போனால் தங்களது பண்ணையாட்களை போட்டியிட வைத்து வெற்றி
பெறச் செய்து உடனேயே ராஜினாமா செய்துவிட செய்தனர்.
அடிமைகளாக இறுக்கப்
பொறுக்காமல் பௌத்தம் தழுவிய பிறகும் கயர்லாஞ்சியில் பய்யலால் குடும்பத்தினரை ஆதிக்க
சாதியினர் செய்த கொடுமையையும் இந்த நேரத்தில் கவனத்திற்கு கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது.
பய்யலால் மனைவி சுரேகாவையும் அவரது மகள் பிரியங்காவையும் மகன்களையும் நடுச் சந்திக்கு
இழுத்தே வந்தனர். அம்மாவையும் சகோதரியையும் எல்லோர் முன்னாலும் புணரச் சொல்லினர். மறுத்த
இரு சகோதரர்கச்ளின் ஆணுறுப்பையும் வெட்டுகின்றனர். ஊரில் உள்ள ஆண்களெல்லாம் சுரேகாவையும்
பிரியங்காவையும் வன்புணறுகின்றனர். கொன்று இருவரையும் வாய்க்காலில் வீசுகின்றனர். இவ்வளவு
நடந்த இடத்திற்கு காவலர்கள் அடுத்த நாள் வருகிறார்கள். பரிசோதனை செய்த மருத்துவர் அவர்கள்
புணரப் படவில்லை என்று சான்றளிக்கிறார். இதையே நீதி மன்றர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்
கீழ் பதிய முடியாது என்கிறது. இதையே முடியாது என்று சொன்னால் வேறு எதை இந்தச் சட்டத்தின்
கீழ் பதிவது.
நிலைமை இப்படி
இருக்க வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப் படுவதால் அதை முற்றாக ஒழித்துவிட
வேண்டும் என்று ஆசைப் படுவதோடு பொதுக் கூட்டங்களிலும் பேசி வருகிறார் மருத்துவர் ராமதாசு
அவர்கள். அதை செய்துவிடக் கூடிய பலமும் அவருக்கு இப்போது கிட்டியிருப்பது நமது பதட்டத்தையும்
பொறுப்பையும் கூட்டியிருக்கிறது.
இப்போது ஒரு ஊரில்
தலித்துகள் ஊர்விலக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளது. எனில் அந்த ஊரில்
உள்ள ஆதிக்க சாதியினர் தலித்துகளோடு பேசுவது உள்ளிட்டு எந்த உறவையும் வைத்துக் கொள்ள
மாட்டார்கள். தண்ணீர் தர மாட்டார்கள். வேலை தர மாட்டார்கள். ஒருவருக்கு கடுமையான தலைவலி
என்றால் ஒரு ரூபாய்க்கு அனாசின் வாங்க போக பத்து ரூபாயும் வர பத்து ரூபாயும் ரெண்டுமணி
நேரமும் செலவு செய்தாக வேண்டும்.
இன்னும் நிறைய
ஊர்களில் தீண்டாமைச் சுவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
மேற்சொன்ன பாதிப்புகளுக்கு
ஆளான அனைவரும் இந்துக்களே. இவற்றை சொல்வதற்குக் காரணம் இவற்றை நாம் தெரிந்து கொள்ளாவிட்டால்
இவை தொடரும் என்பதாலேயே.
அவர்கள் பொறுப்பேற்க
இருக்கும் தருணத்தில் மேற்சொன்ன பாதிப்புகளுக்கு
ஆளானோர் அனைவரும் இந்துக்கள்தான் என்பதையும், மீண்டுமொருமுறை இதுபோன்ற பாதிப்புகள்
அவர்களுக்கு நிகழ்ந்து விடக் கூடாது என்பதையும் உலகில் எந்த மூலையில் இந்துக்கள் பாதிக்கப்
பட்டாலும் தங்களது அரசு தலையிட்டு சரி செய்யும் என்ற அவர்களது தேர்தல் அறிக்கையையும்
மீண்டுமொரு முறை நினைவூட்ட கடமை பட்டிருக்கிறோம்.
அத்தோடு சிறுபான்மையினரின்
பதட்டத்தையும் இவர்கள் தனிக்க முயல வேண்டும் என்று ஆசைப் படுகிறோம். பூமி பதட்டப் பட்டால்
முதலாளிகள் மகிழ்வார்கள். கொண்டாடுவார்கள், செலவு செய்வார்கள். ஆனால் வரலாறு தினம்
தினமும் சித்திரவதை செய்து சிறுமை படுத்தும் என்பதையும் சொல்லி வைப்போம்.
நன்றி : காக்கைச் சிறகினிலே
ஐ லவ் யூடா செல்லம் என்று சொல்ல வாய்த்த கட்டுரை.
ReplyDeleteஅசுஸ்த்ஸ்தான் தகவல்கள் அருமை. நீங்கள் இது குறித்து முகநூலில் தரவுகள் கேட்டிருந்தது நினைவில் இருக்கு . இப்படி ஒரு கட்டுரையில் திரட்டிய தரவுகளை தர உங்களால்தான் முடியும்.
அனைவரும் ஹிந்துக்கள் அல்ல அப்படி ஆகவே முடியாது என்பதுதான் இன்னும் ஒரு இரநூறு ஆண்டுகளுக்கான சாபம்...
இது என்னுடைய கருது.. அனுபவம் அவ்வளவே..
த.ம இரண்டு..
http://www.malartharu.org/2014/05/100results-sslc.html
மிக்க நன்றி தோழர்
Deleteஅச்சத்தோடுதான் நகர்கின்றன நாட்கள் சிறுபான்மையினருக்கும் ,தாழ்த்தப்பட்டவர்களுக்கும்..மக்களின் அச்சத்தை நீக்குவது அரசின் முக்கிய கடமைகளில் ஒன்றாகின்றது.புதிய செய்திகள் அறிந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி
ReplyDeleteமிக்க நன்றி கீதா
Delete