Friday, October 12, 2018

நெறியோடும், வீரியத்தோடும் நடத்திக் காட்டிய ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்து....

தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும் மாணவர்களை சந்திக்க வந்த அமைச்சர் கூறுகிறார்,
“பாருங்கள், நேற்று முந்தினம்கூட இந்தியாவில் நடந்த சாலை விபத்துகளில் 32 பேர் இறந்து போனார்கள். இந்திய மாணவர்களைப் பாருங்கள். உங்களை மாதிரி போராடிக்கொண்டா இருக்கிறர்கள். நல்லப் பிள்ளைகளா கல்லூரிக்கு போய்க்கொண்டு இருக்கிறார்கள்.”
இப்படிக் கூறியவர் பெயர் தெரியவில்லை. ஆனால் அவர் வங்க தேசத்தின் அமைச்சர் என்று 07.08.2018 நாளிட்ட தமிழ் இந்து கூறுகிறது.
மாணவர்கள் போராடிக்கொண்டிருந்த இடம் வங்க தேசத்தின் தலைநகர் டாக்கா.
போராட்டத்திற்கான காரணம் தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கிக் கொண்டிருக்கும் சாலை விபத்துக்களை கட்டுப்படுத்தக் கோரி
29.07.2018 அன்று டாக்கா பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த மாணவர்கள்மீது தாறுமாறாக வந்த பேருந்து ஒன்று மோதியதில் ஒரு மாணவனும் ஒரு மாணவியும் உயிரிழக்கிறார்கள்.
பொதுவாகவே வங்கத்தில் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் சாலைவிபத்துகளின் வழியாக ஏற்படுவதாகவும் அதிலும் குறிப்பாக டாக்காவில் சாலை விபத்துகள் ஏற்படுத்தும் உயிரிழப்புகள் பேரதிகம் என்று உணர்ந்த மாணவர்கள் உணர்கிறார்கள். உடனே அவர்கள் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பதாகைகளுடன் தொடர் போராட்டத்தில் குதித்துவிட்டனர்.
மாணவர்கள் போராட்டத்தில் குதித்ததும் டாக்கா மாநகர காவல்துறை ஆணையர் மாணவர்களை சந்திக்கிறார். வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் வங்கநாட்டு மக்கள் அங்கு விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களை ஓட்டுவதாகவும் ஆனால் உள்ளூரில் விதிகளை மதிக்காமல் தாறுமாறாக வாகனங்களை ஓட்டுவதாகவும் கூறுகிறார். இதனால்தான் விபத்துகளும் அதன்மூலமாக பேரதிக அளவில் உயிர்ப்பலிகள் ஏற்படுவதாகவும் கூறுகிறார்.
அதாவது சுற்றி வளைத்து விபத்துகளுக்கும் உயிர்ப்பலிகளுக்கும் வாகன ஓட்டிகள்தான் காரணம், அரசு எந்த விதத்திலும் இதற்கு காரணம் அல்ல, எனவே மாணவர்கள் இதற்காக அரசுக்கு எதிராகப் போராடுவதை விடுத்து கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மாணவர்கள அவரது சமாதானத்தை ஏற்கவில்லை.
மாணவர்களது போராட்டத்தில் சமூகவிரோதிகள் கலந்து அந்தப் போராட்டத்தைப் பயன்படுத்தி சமூகவிரோத செயல்களில் ஈடுபட இருப்பதாகவும் அப்படி நிகழ்ந்தால் மாணவர்களையும் சமூகவிரோதிகளையும் பிரித்துப் பார்க்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அதனால் சமூகவிரோதிகளுக்கான இலக்கில் மாணவர்களும் பலியாகக்கூடும் என்றும் வதந்திகளைக் கட்டவிழ்த்து விட்டார்கள்.
இதற்கும் மாணவர்கள் அசரவில்லை. தங்களது கோரிக்கையையும் போராட்டத்தையும் கூர்படுத்தினார்கள்.
இப்போது மாணவர்கள் வாகனச் சோதனையில் இறங்கினார்கள். வாகனங்களை மறித்து ஆவணங்களை சரிபார்த்தார்கள்.
வாகன சோதனையில் வாகனங்கள் போகவேண்டிய திசைக்கு எதிர்த் திசையில் ஒரு மகிழுந்து வந்து கொண்டிருந்தது. அதை மறித்து சோதனையிட்டபோது அது ஒரு அமைச்சரின் மகிழுந்து என்பது தெரிய வந்தது.
இன்னொரு இடத்தில் நடந்த வாகன சோதனையில் ஒரு அமைச்சரின் ஓட்டுநருக்கு ஓட்டுநர் உரிமமே இல்லாத உண்மை தெரிய வந்த்து.
மாணவர்கள் அரசுக்கும் மக்களுக்கும் அம்பலப் படுத்தினார்கள்.
வங்கத்தில் குறிப்பாக டாக்கா மாநகரில் பேரதிக அளவில் விபத்துகளும் உயிர்ப்பலிகளும் ஏற்படுவதாகவும் அதை அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரினர். விபத்துக்கான காரணங்களையும் அவர்கள் தெளிவாக வரிசைப் படுத்தினார்கள்.
எனக்கென்னவோ வங்கக் கல்வியை வணங்கிவிட வேண்டும் என்று படுகிறது.
அறிவைத் தருவது என்பது கல்வியின் ஒரு கூறுதான். சக மனிதனுக்கு ஆதரவாக, அநீதிக்கு எதிராகப் அச்சமும் சமரசமும் இன்றி போராடுவது என்பது அறிவின் ஒரு கூறு. அத்தகைய அறிவினை வங்கத்துக் கல்வி கொடுத்திருப்பதையே இந்தப் போராட்டம் எடுத்துரைக்கிறது.
அறிஞர்களை, மருத்துவர்களை, தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவது மட்டுமல்ல கல்வியின் வேலை. மக்களை நெறிப்படுத்தவும் மக்கள் போராட்டங்களில் களமேகும் பக்குவத்தையும் கல்வி தர வேண்டும். வங்க்க் கல்வி அதை சரியாய் செய்திருக்கிறது,
யாருடைய அலட்சியத்தாலோ மக்கள் பலியாவதற்கு எதிராக வங்க மாணவர்கள் போராட்ட களத்தில் நிற்கிறார்கள்.
அவர்களை பார்த்துதான்,
“பாருங்கள், நேற்று முந்தினம்கூட இந்தியாவில் நடந்த சாலை விபத்துகளில் 32 பேர் இறந்து போனார்கள். இந்திய மாணவர்களைப் பாருங்கள். உங்களை மாதிரி போராடிக்கொண்டா இருக்கிறர்கள். நல்லப் பிள்ளைகளா கல்லூரிக்கு போய்க்கொண்டு இருக்கிறார்கள். நீங்களும் அவர்களைப் போல நீங்கள்ளும் நல்ல பிள்ளைகளாக கல்லூரிகளுக்கு செல்லுங்கள்” என்று கூறுகிறார்.
அவர் என்ன வேண்டுமானாலும் அவரது பிள்ளைகளிடம் சொல்லட்டும். அதற்கு ஏன் தேவை இல்லாமல் இந்திய மாணவர்களை வம்புக்கிழுக்கிறார் என்று தெரியவில்லை. அதற்காக அந்த அமைச்சருக்கு என் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எம் இளைஞர்களும் மாணவர்களும் ஒன்றிணைந்து நெறியோடும், வீரியத்தோடும் நடத்திக் காட்டிய ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்து அந்த அமைச்சருக்கு யாரேனும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 3507 பாதசாரிகள் பலியானார்கள் என்ற தகவலை 08.10.2018 ஆம் நாளிட்ட தமிழ் இந்து தருகிறது என்ற போசெய்தியை எம் பிள்ளைகளுக்கு எடுத்துக்கூறவும் கடமைபட்டிருக்கிறேன்.
சென்ற ஆண்டு நடந்த சாலை விபத்துகளின் மொத்த பலி எண்ணிக்கை அல்ல இது என்பதையும் பலியான பாதசாரிகளின் எண்ணிக்கை மட்டுமே இது என்பதையும் நம் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லவும் நான் கடமை பட்டிருக்கிறேன்.
இந்த பலி எண்ணிக்கை அச்சமூட்டுவதாகவும் உறைய வைப்பதாகவும் உள்ளது
இவை நிகழ்வதற்கான சில காரணங்கள்,
1) விதிகளை மதிக்காத ஓட்டுநர்கள்
2) குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவது
3) வாகனக்கள் போகவேண்டிய திசைக்கு எதிர்த் திசையில் வாகனங்களை ஓட்டுவது
4) அலை பேசிக்கொண்டே வாகனக்களை ஓட்டுவது
5) தேவையான அளவு தூங்காமல் தூக்கக் கலக்கத்தோடு வாகனங்களை ஓட்டுவது
6) வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சாலையைக் கடப்பது
7) அலை பேசிக்கொண்டே சாலையைக் கடப்பது
   போதுமான அளவில் போக்குவரத்து காவலர்கள் இல்லாதிருப்பது
9) போதுமான அளவு பாதசாரிகளுக்கான நடைபாதை இல்லாதிருப்பது
இதற்கு மாணவர்கள் என்ன செய்ய முடியும்?
1) ஓட்டுநர்களிடமும் பாதசாரிகளிடமும் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்துவது
2) போதுமான போக்குவரத்து காவலர்களையும் நடைபாதைகளையும் கேட்டு அரசைக் கோருவது
இதற்கெல்லாம் போராடக்கூடத் தேவை இல்லை. கைவசமுள்ள அத்தனை கலைவடிவங்களோடும் களமேகினாலே போதும்.
#சாமங்கவிந்து ஒரு மணி 22 நிமிடங்கள்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...