Tuesday, October 2, 2018

குருடர்களைப் பார்க்க வைத்த மருத்துவர் வெங்கிடசாமி




"instead the school should go to the students" என்று ஜோசப் மார்த்தி அடிக்கடி சொல்வாரென்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதை இப்போது சொன்னாலே,
இது என்ன ஞாயம்?
படிப்புக்கென்று ஒரு மரியாதை இல்லையா?
டில்லிக்கு ராஜான்னாலும் பள்ளிக்கு பிள்ளைதானே.
பள்ளிக்குதானே பிள்ளைகள் போக வேண்டும். பள்ளி மாணவர்களைத் தேடிப் போக வேண்டும் என்பது எப்படி சரியாகும். இது கல்வியை சீரழிக்கிற காரியம் என்பதுமாதிரி பொதுப்புத்தி வெளிப்பாடுகள் சகல திசைகளில் இருந்தும் சீறிப் பாயும்.
இந்தப் பொதுப்புத்தி சரியென்றுகூடத் தோன்றும்.
பிள்ளையைத் தேடி ஆசிரியர் அலைந்தால் அவன் எப்படி ஆசிரியரை மதிப்பான்? ஆசிரியரை மதிக்காதபோது எப்படி அவனுக்கு கல்வி ஏறும்?
மார்த்தியின் கருத்தை சரியாய்ப் புரிந்து கொள்வதற்கு இதயம் மட்டும் போதாது. அது ஈரமாகவும் இருக்க வேண்டும்.
நாம் முதல்தலைமுறைக் குழந்தைகள் என்று வகைப்படுத்தி வைத்திருப்பவர்களில் கணிசமானவர்கள் முதல்தலைமுறைக்கும் முந்தைய தலைமுறைக் குழந்தைகள்.
அவர்களது பெற்றோருக்கு கல்வி அறிவு இருக்காது. கல்வியின் அருமை அறியாதவர்களாக அவர்களில் பெரும்பான்மையோர் இருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை பிள்ளை பள்ளிக்குப் போவது தமக்கு கொஞ்சமும் பயனளிக்காத காரியம். மாறாக தனது தொழிலில் கூடமாட அவன் உதவி செய்தால் தனக்கும் வேலை மிச்சமாகும், பிள்ளையும் தொழில் கற்றுக் கொண்டதுமாதிரி இருக்கும்.
போக, ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் ஒரு தொழிலாளி வேலை முடிந்த்தும் உடல்வலி மறக்க மது அருந்திவிட்டு போய் சாய்வதும். காலை எழுந்ததும் வேலைக்குப் பாய்வதுமாகத்தான் அவனது வாழ்க்கை சுழன்றது. பிள்ளை பள்ளிக்குப் போகிறானா இல்லையா என்பது குறித்தெல்லாம் அவன் யோசிக்கவே இயலாதவனாய் இருப்பான்.
பிள்ளைக்கும் படிப்பு என்பது புதிதாகவும் சுமையானதாகவும் இருக்கும். எனவே அவன் விளையாடவோ அல்லது தந்தையின் தொழிலுக்கு உதவுவதோ அல்லது சிறுசிறு வேலைகளை செய்து சம்பாதிக்கவோ தலைப்படுவான்.
இவர்களை அணுகுவது என்பது ஈர இதயங்களால் மட்டுமே முடியும்.
பள்ளிக்கு அவர்கள் வராதது குற்றமாகக்கூட இருக்கலாம். ஆனால் அதற்கு அவர்கள் காரணம் அல்ல. அவர்கள் சந்ததியினர் பள்ளிப் பக்கம் திரும்பிவிடக் கூடாது என்கிற மாதிரியான ஒரு சமூகக் கட்டமைப்பை ஆதிக்கச் சமூகம் எல்லா மண்ணிலும் மிக்க் கவனமாக வடிவமைத்து வைத்திருந்தது. அது முற்றாய் இன்னமும் உடைக்கப் படவும் இல்லை.
அதனால்தான் மார்த்தி அவனை நோக்கி கல்வியைக் கொண்டுபோக வேண்டும். வந்தவனுக்கு பள்ளியில் சொல்லிக்கொடு. வராதவனைத் தேடிப்போய் அவனது சூழலோடு கறைந்து அவனுக்கு கல்வி கொடு என்றார்.
அவரது இந்தக் கோட்பாட்டில் நெக்குருகிக் கிடந்திருக்கிறார் காஸ்ட்ரோ.
இதைப் படித்ததில் இருந்து மார்த்தியிடம் இந்த ஒரு கருத்திற்காக சொக்கிப்போய் கிடக்கிறேன்.
தேடி வந்தவனுக்கு சேவை செய்வது இரக்கம். தேடிப்போய் ஒருவனுக்கு சேவை செய்வது என்பது இரக்கத்தின் உச்சம்.
இதுமாதிரியான மனிதர்கள் நம் மண்ணில் கிடைப்பார்களா என்று ஏங்கித் தேடியது உண்டு.
வெங்கடசாமி என்கிற கண்மருத்துவர் மக்கள் போதிய வைத்தியம் இன்றி குருடாவது கண்டு குமைந்து போயிருக்கிறார். அழுதிருக்கிறார். சக நண்பர்களோடு இதுகுறித்து உரையாடியிருக்கிறார்.
வந்தால் சிகிச்சை செய்ய மாட்டோமா? மருத்துவமனைக்கு வராதவர்களை என்ன செய்வது அவர்களில் பெரும்பான்மையோரின் பொதுக்குரலாக இருந்திருக்கிறது.
யோசித்திருக்கிறார்
தாங்கள் ஏன் குருடானோம் என்பது குறித்தோ அதை எப்படி சரி செய்வது என்பது குறித்தோ அந்த எளிய மக்கள் ஒன்றும் அறியாதவர்களாக இருந்திருக்கிறார்கள்.
இன்னும் இன்னுமாய் யோசித்திருக்கிறார் திரு வெங்கிடசாமி. இறுதியாய் ஒரு முடிவுக்கு வருகிறார்.
இந்த அப்பாவி மக்கள் ஒருபோதும் நம்மைத் தேடி வரப்போவதில்லை. போக அறுவைசிகிச்சைக்கு அவர்களுக்கு போதிய பணம் இல்லை. அறுவை குறித்த பயம் வேறு.
ஒரு முடிவுக்கு வருகிறார்
“instead the eye doctors should go to the blinds”
Great people think alike என்று சொல்வார்கள். மார்த்தி கல்வியில் நினைத்ததை மருத்துவர் வெங்கிடசாமி மருத்துவத்தில் செயல்படுத்துகிறார்.
மதுரைக்கு அருகில் உள்ள கல்லுப்பட்டியில் தனது முதல் இலவச கண் மருத்துவ முகாமை நடத்துகிறார்.
குறைந்த செலவு, அதுவும் முடியாதென்றால் இலவச கண் அறுவை சிகிச்சை என்பதை அவர் 1962 இல் ஆரம்பித்திருக்கா விட்டால் இந்த தமிழ் மண்ணில் குருடர்களின் எண்ணிக்கை ஏராளமாக இருந்திருக்கும்.
இன்றைய இலவச கண் அறுவை சிகிச்சை முகாம்களுக்கு முன்னத்தி ஏர் மருத்துவர் வெங்கிடசாமிதான்.
அரவிந்தரோடு நெருங்கிப் பழகியவர் என்பதால் மதுரையில் அவரது நினைவாக ”அரவிந் கண் மருத்துவமனை” யினை கட்டமைக்கிறார்.
குறைந்த செலவில் பார்வை. அதற்கும் இயலாதோருக்கு இலவசமாய் பார்வை என்பதே அவர் அந்த மருத்துவமனையினைத் துவங்குவதற்கு காரணம்.
குருடு என்பதை இரண்டாவது இடத்தில் வைத்தாள் அவ்வை. அய்யோ, அனுபவத்தில் சொல்கிறேன் அது கொடுமையின் உச்சம்.
ஏறத்தாழ குருடனாய் மாறிப்போயிருந்த எனக்கு பார்வையை மீட்டெடுத்து தந்தவர் அந்த அரவிந் கண் மருத்துவமனையில் பயிற்சி பெற்று திருச்சியில் “மகாத்மா கண் மருத்துவமனை” யினை நடத்திக் கொண்டிருக்கும் மருத்துவர் ரமேஷ்
குருடர்களைப் பார்க்க வைத்த மருத்துவர் வெங்கிடசாமிக்கு இன்று 100 வது பிறந்தநாள்.
குருடர்களைப் பார்க்க வைத்த அந்த மாமனிதனை குருடனாய் இருந்து மீண்ட நான் வணங்கிக் கொள்கிறேன்
#சாமங்கவிய ஒருமணி நான்கு நிமிடங்கள்
01.10.2018

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...