நேற்றொரு நல்ல செய்தி
அக்டோபர் இரண்டாம் தேதியன்று நிகழ்ந்த ஒரு மதிப்புமிக்க செய்தியை 08.10.2018 அன்றைய தமிழ் இந்து வெளியிட்டிருந்தது
அரசு மருத்துவமனைகள் குறித்த தவறான பொதுப்புத்திகள் ஏராளம் உள்ளன. அவற்றில் குறிப்பிட்டு சொல்லும்படியான இரண்டு
1) அரசு மருத்துவமனையில் எந்த வசதியும் இருக்காது. போதுமான அளவில் மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். அப்படியே இருந்தாலும் அவர்கள் ஒழுங்காக பணிக்கு வரமாட்டார்கள். வந்தாலும் ஒழுங்காக சிகிச்சை தரமாட்டார்கள். தேவையான மருந்துகள் இருக்காது
2) பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது கௌரவக் குறைச்சலானது
2) பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது கௌரவக் குறைச்சலானது
முதலில் எனக்கும் அரசு மருத்துவமனைகளுக்குமான உறவைப் பொதுவில் பந்தி வைக்க விரும்புகிறேன்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை நள்ளிரவு நெருங்கும் நேரத்தில் திடீரென்று கீர்த்தனா தீராத வயிற்றுவலியில் துடிக்கிறாள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்குத் தெரிந்த இரண்டு மூன்று தனியார் மருத்துவமனைகளுக்குப் போகிறோம். மருத்துவர்களைப் பிடிக்க முடியவில்லை. ”பேசாம GH போகலாம்பா” என்கிறான் கிஷோர். பிள்ளைத் துடிக்கிறாள். தனியார் மருத்துவர்களைப் பிடிக்க முடியவில்லை. பையன் GH போகலாம் என்கிறான். வேறு வழியில்லாமல் சம்மதிக்கிறேன. அழுத்தி அடிக்கோடிட்டு சொல்கிறேன்,
வேறு வழியில்லாமல்தான் அரசு மருத்துவமனைக்கு பிள்ளையை அழைத்துப்போக சம்மதிக்கிறேன்.
விபத்துப் பிரிவை ஒட்டியுள்ள பகுதிக்குப் போகிறோம். பர்த்தவுடன் இரண்டு செவிலியர்கள் கீர்த்தனாவை அழைத்துக்கொண்டு போகிறார்கள்.
“பாப்பா பேரு என்னங்க சார்?”
”கீர்த்தனா”
“ஒன்னும் இல்ல கீர்த்தனா , பயப்படாத” என்றவாறே அவளை அழைத்துப் போகிறார்.
இந்த நேரத்தில் அந்த வார்த்தைகள் எனக்கு ஆறுதாலாய் இருந்தது என்பது மட்டும் அல்ல, தேவையாகவும் இருந்தது.
ஒரு செவிலியர் பக்கத்து அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மருத்துவரை அழைத்து வருகிறார். 30 வயது மதிக்கத்தக்க ஒரு மருத்துவர் முகத்தைக் கழுவியபடி வருகிறார். கால்மணிநேரம் முகம் சுளிக்காமல், புன்னகை மாறாமல் சிகிச்சை அளிக்கிறார்கள்.
“ஊசி போட்டிருக்கோம் சார். தூங்கிடுவா, ஒன்னும் பயம் இல்ல. யாராச்சும் போய் பாலும் பன்னும் வாங்கி வாங்க. கொடுத்ததும் கூட்டிட்டுப் போங்க. திரும்ப வலி வந்ததுன்னா கூட்டிட்டு வாங்க” என்றவாறே “என்ன படிக்கிற?” என்கிறார்.
“நல்லா படி” என்றவாறே அவளது கன்னத்தைத் தட்டிக் கொடுத்துவிட்டு அவரது அறைக்குப் போய்விட்டார்.
ஒருநாள் இரவு தோனி என் கையில் இருந்த கேக்கை கவ்வ முயற்சித்தபோது அவனது பல் என் சுண்டு விரலில் பட்டு ரத்தம் கொட்ட ஆரம்பித்துவிட்டது. மருத்துவமனைக்குப் போகவேண்டாம் என்று மறுத்துவிட்டேன். பதினோறு மணிக்கு வீடுதிரும்பிய கிஷோர் இதைக் கேள்வி பட்டதும் தூக்கி வண்டியில் போட்டுக் கொண்டு GH ஓடுகிறான்.
அந்த நேரத்திலும் மருத்துவர் இருக்கிறார். ஊசி போடுகிறார். நான்கு நாட்களைக் குறித்து தந்து ஊசிகளைப் போட்டுக்கொள்ள அறிவுறுத்துகிறார்.
அந்த நான்கு நாட்களும் காலை ஏழு மணிக்கு மருத்துவமனை போகிறேன். மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
அரசு மருத்துவமனைகள் குறித்த பொதுப்புத்திகள் அனைத்தும் உடைந்து போகின்றன. இதற்காக அரசு மருத்துவமனைகள் 100 விழுக்காடு சரி என்றெல்லாம் சொல்லவில்லை. எல்லாத் துறைகளிலும் இருக்கிறமாதிரியே நல்லதும் கெட்ட்தும் அரசு மருத்துவமனைகளிலும் உண்டு.
அரசு மருத்துமனைகள் 100 விழுக்காடு சரி என்று சொல்லமுடியாது, ஆனால் அரசு மருத்துவமனைகளை 100 விழுக்காடு சரியாக வைத்திருக்க வேண்டும். அதற்கு விவரம் அறிந்தவர்களும் அரசு உயர் அதிகாரிகளும் அரசு மருத்துவமனைக்குப் போக வேண்டும். அப்போதுதான் உரிமைகளைக் கோர முடியும். அப்போதுதான் ஏழை மற்றும் உழைக்கும் திரளுக்கு உரிய மருத்துவம் கிடைக்கும். எனக்கு கிடைத்த அனுபவம் பொதுப்புத்திக்கு எதிராக இருந்தது. நேற்று விராலிமலை அரசு மருத்துவமனையில் நடந்தது பொதுப் புத்தியின் கன்னத்தில் மலேர் மலேரென்று ஓங்கி ஓங்கி அறைகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் காரையூரைச் சேர்ந்த முப்பத்தியெட்டு வயதான பிரபுவிற்கு இடுப்பு மூட்டுகள் இரண்டும் சிதிலமடைந்துவிடவே அவரால் கூலி வேலைக்குப் போக முடியவில்லை. குடும்பம் வறுமையில் தத்தளிக்கிறது. வருமானம் சுத்தமாக நின்றுவிட்டது.
அவரும் தனியார் மருத்துவமனைக்குப் போகிறார். அறுவை சிகிச்சைக்கு 8 லட்சம் என்கிறார்கள். மனுஷன் 50000 ரூபாயை ஒரு நேரத்தில் சேர்ந்தார்ப்போல் பார்த்திராதவர்.
வேறு வழியில்லை, போகிற வரை வலிமறக்க மருந்து வாங்கித் தின்று விதி முடியும்போது போய்விடலாம் என்ற முடிவோடு விராலிமலை அரசு மருத்துவமனைக்குப் போகிறார்.
அங்கிருந்த மருத்துவர்கள் ஜோசப் விஸ்வநாத் மற்றும் ஹேமா அலமேலு அவருக்கு நம்பிக்கை தருகின்றனர். சின்ன அறுவை போதும், மீண்டும் முன்புபோலவே இயங்கலாம் என்கின்றனர். எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை வேறு வழியும் இல்லை என்கிற நிலையில் சம்மதிக்கிறார். அக்டோபர் இரண்டாம் தேதி அறுவை நடக்கிறது. ஐந்தாம் தேதி வீட்டிற்கு அனுப்பப் படுகிறார்.
இயல்பான நிலைக்கு அவர் வந்துவிட்டதாக செய்தி கூறுகிறது.
நாம் செய்யவேண்டியது
அரசு மருத்துவமனைகளை நம்புவதும் நம்பச் செய்வதும் அரசு மருத்துவமனைகளைக் காப்பாற்ற போராடுவதுமேயாகும்
#சாமங்கவிந்து 55 நிமிடங்கள்
10.10.2018//
10.10.2018//
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்