“பதினோராம் வகுப்பு மதிப்பெண் எதற்காகவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்
படாது” என்று கல்வி அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் கூறியிருக்கிறார்.
அது குறித்து உரையாடவேண்டிய அவசியம் இருக்கிறது.
அது
எந்தக் கோடை என்று சரியாய் நினைவில்லை. அநேகமாக 2015 கோடையாக இருக்க வேண்டும். பள்ளிக்கல்விக் கட்டமைப்பில், பாடத்திட்டத்தில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதைக் கண்டடைய கருத்துக் கேட்புக் கூட்டங்களை பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்தது.
அந்தக்
கோடையின் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முற்பகல் ஒரு அமர்வு பிற்பகல்
ஒரு அமர்வு என ஒவ்வொரு வாரமும் நான்கு அமர்வுகளாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தது. அப்போதைய
தமிழ்நாடு தொடக்கப்பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் திரு கார்மேகம் இதற்காக அழைக்க வேண்டியவர்களின்
முகவரிகளைக் கேட்டார். நான் கொடுத்த பட்டியலில் இருந்தும் ஏறத்தாழ
பதினைந்து தோழர்களை அழைத்திருந்தார்கள்.
தமிழ்நாடு இணையக் கழகத்தில்தான் அமர்வுகள் நடந்தன.
ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள்,
எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், கலைஞர்கள், திரைத் துறையினர், அரசியல்வாதிகள்
என்று சகல தரப்பிலிருந்தும் தகுதி வாய்ந்தவர்களை அழைத்து அவர்களாது கருத்துக்களை அறிந்து
அவற்றிற்கேற்ப மாற்றங்களைக் கொண்டு வருமாறு கல்வித்துறை உயரதிகாரிகளுக்கு தமிழ்நாடு
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்கள் உத்திரவிட்டிருந்ததாகவும்
அறிய முடிந்தது.
நிறைய திட்டுவார்கள். கோவப்படாமல் காது கொடுத்து கேளுங்கள்.
எவ்வளவு வேண்டுமானாலும் திட்டிக் கொள்ளட்டும். ஆனால் எதற்காகத் திட்டுகிறார்களோ அதற்கான மாற்றத்தையும் அவர்கள் சொல்லவேண்டும்.
அத்தகையோரை மட்டுமே அழைத்து உரையாடுங்கள் என்று மாண்பமை அமைச்சர் கூறினார்
என்பதைக் கேள்விபட்டபோது அப்படி ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது.
அந்த அமர்வுகளை பள்ளிக் கல்வித்துறையின் அன்றைய முதன்மைச் செயலாளரான
திரு உதயச்சந்திரன் சார் அவர்கள் வழிகாட்டுதலில் பள்ளிக்கல்வித் துறையின் இயக்குநர்கள்
திரு கார்மேகம் மற்றும் திரு இளங்கோவன் ஆகியோர் சிறப்புறச் செய்திருந்தனர்.
முதல் சனி பிற்பகல் அமர்வில் நான் கலந்துகொண்டேன். என்னோடு
எழுத்தாளர்கள் பிரபஞ்சன், இமையம், முன்னாள்
சட்டமன்ற உறுப்பினர் திரு ரவிக்குமார், மற்றும் பேராசிரியர் கல்யாணி
அய்யா ஆகியோர் கலந்து கொண்டோம்.
அன்றைய முற்பகல் அமர்வில் தோழர் கஜேந்திரபாபு கலந்து கொண்டார்.
பன்னிரண்டிலிருந்து பதினைந்து அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதிகாரிகள்
அனைவரும் நாங்கள் பேசியதை கூர்ந்து கவனித்த்தோடு நாங்கள் பேசியவற்றை குறிப்பும் எடுத்துக்
கொண்டனர். வழக்கமாக அதிகாரிகள் பேசுவதை கர்ம சிரத்தையோடு குறிப்பெடுப்பது
எங்கள் வழக்கம். வழக்கம் என்பதைவிட அப்படி குறிப்பெடுக்க வேண்டும்
என்பது எங்களுக்கான உத்தரவு. அப்படி எழுதுகிறோமா என்று சோதிக்கிற
அதிகாரிகளும் உள்ளனர். அப்படிப்பட்ட எங்களுக்கு எங்களது கருத்துக்களை
கவனமாக குறிப்பெடுக்கும் அதிகாரிகளைப் பார்க்க மகிழ்ச்சியாயிருந்தது.
எனக்கு
வலப்புறம் பிரபஞ்சனும் இடப்புறம் கல்யாணி அய்யாவும் அமர்ந்திருந்தனர். எனக்கு நேரெதிரே உதயசந்திரன் சார் அமர்ந்திருக்கிறார்.
அமெரிக்கா,
ஜப்பான்,ஜெர்மன் உள்ளிட்ட 34 நாடுகள் இணைந்து
”ORGANAISATION FOR ECONOMIC COOPERATION AND DEVELOPMENT” என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த 34 நாடுகளும் தங்களை ”OCED நாடுகள்” என்றும் அழைத்துக் கொள்கின்றன.
இந்த
நாடுகள் தங்களது குழந்தைகளின் கல்வித் தரம் வலுவாகவும் எதிர்காலத்தை சிறந்த முறையில் கட்டமைக்க உதவுவதாகவும் இருக்க வேண்டும் என்றும் கருதின. இதற்கு தங்களது குழந்தைகளின் கல்வியை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கருதின. இந்த வேலையை செய்வதற்காக “PROGRAMME FOR INTERNATIONAL
STUDENT’S ASSESMENT” என்றொரு
அமைப்பை ஏற்படுத்தின. இந்த அமைப்பு சுருக்கமாக PISA என்று அழைக்கப் படுகிறது.
எந்தக்
காரணத்தைக் கொண்டும் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது இல்லை என்று அந்த அமைப்பு முடிவு செய்தது. அதே நேரம் எந்த நாடு கேட்டுக் கொண்டாலும் அந்த நாட்டு மாணவர்களின் கல்வித் தரத்தை சோதித்து அறிக்கைத் தர முன்வந்தது.
அந்த
வகையில் 2009 ஆம் ஆண்டு இந்தியா தனது குழந்தைகளின் கல்வித் தரத்தை ஆய்ந்து சொல்லுமாறு அந்த அமைப்பைக் கேட்டுக் கொண்டது. அந்த ஆண்டு அந்த அமைப்பைத் தவிர 40 நாடுகள் தங்கள் பிள்ளைகளின் கல்வித் தரத்தை ஆய்ந்து சொல்லுமாறு கோரின.
ஆய்வு
நடத்தப்பட்ட 74 நாடுகளுள் இந்தியா 73 வது நாடாக வந்தது. இது குறித்து விரிவாக பேசிக் கொண்டே வந்த நான் இதற்கு காரணம் ”புரிந்துகொண்டு கற்றலில்” நம் குழந்தைகளுக்கு உள்ள போதாமைதான் என்றேன். தற்போது உள்ள தேர்வு முறையே இதற்கு காரணம் என்று கூறினேன்.
”சரி என்ன செய்யலாம்?” என்றார் உதயசந்திரன் சார்.
“பத்தாம் வகுப்பு வரைக்கும் தேர்வே வேண்டாம். பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு செமஸ்டர் முறையில் தேர்வு வைக்கலாம்” என்றேன்.
”இதை செய்தால் உங்களுக்கு கோயில் கட்டி கும்பிடுவோம் சார்” என்றபோது சார் சிரித்து வைத்தார்.
இதே
விஷயத்தை இன்னும் விரிவாகவும் இன்னும் ஆழமாகவும் கல்யாணி அய்யா எடுத்து வைத்தார். என்ன அவர் நீட் வேண்டும் என்றார். நான் கூடாது என்றேன்.
”நாங்கள் முடித்தபோது எட்வினும் சாரும் பாதி கோவில் கட்டலாம்“ என்றபோது தன்னையும் அறியாமல் கல்யாணி அய்யா என் கையைப் பிடித்து அழுத்தினார்.
ஆக,
பதினோராம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு என்பதற்கான குரல்களுள் என்னுடைய குரலும் ஒன்று.
இதன்
விளைவுகளை நாம் புரிந்து கொள்வதற்கு நாம் இன்னும் ஐந்து ஆண்டுகளேனும் காத்திருக்க வேண்டும். ஒரு தேர்வு மட்டுமே நடந்திருக்கக் கூடிய சூழலில் அதன் விளைவுகளை ஆராய்தல் என்பது ஏறத்தாழ சிறுபிள்ளைத் தனமே ஆகும்.
பதினோராம்
வகுப்பிற்கு பொதுத் தேர்வு என்று வந்ததுமே மெட்ரிக் பள்ளிகள் அதைக் கடுமையாக எதிர்க்கத் தொடங்கின. அவர்களது எதிர்ப்பிற்கு வலுவான காரணம் உண்டு.
நான்
உட்பட பதினோராம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு என்றே தவறாகவே சொல்கிறோம். அது அப்படி அல்ல. பத்தாம் வகுப்பு வரைக்கும்தான் எண்களில் வகுப்புகளைச் சுட்ட வேண்டும். அதன்பிறகு ஒன்று +1, +2 என்று சுட்டலாம் அல்லது மேல்நிலை முதலாமாண்டு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு என்று சுட்டலாம்.
எனில்
+1 ற்கு 600 மதிப்பெண். +2 ற்கு 600 மதிப்பெண். இப்படியான கட்டமைப்பில் குழந்தைகள் +1 பாடங்களையும் +2 பாடங்களையும் கற்றுத் தேர்ந்தால்தான் தேர்ச்சிபெற முடியும். எனில், மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சிபெற்று வரும் குழந்தை இரண்டு ஆண்டு பாடங்களையும் கற்றிருப்பார்கள். அது அவர்களுடைய மேல்படிப்பிற்கு உதவும். இப்படி இருக்க தரமான கல்விக்கான பள்ளிகள் என்று தங்களைத் தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்ளும் மெட்ரிக் பள்ளிகள் இதை ஏன் எதிர்க்க வேண்டும்?
அரசுப்
பள்ளிகளிலும் அரசு உதவிபெறும் பள்ளிகளிளும் +1 இல் + பாடங்களையும் +2 இல் +2 பாடங்களையும் மட்டுமே நடத்த முடியும். ஆனால் மெட்ரிக் பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளிலும் இரண்டாமாண்டு பாடங்களை மட்டுமே நடத்துவார்கள்.
சில
பள்ளிகளில் காலாண்டிற்குப் பிறகு இந்த பாதகத்தை செய்வார்கள். பல பள்ளிகளில் ஜூன் முதலே +2 பாடங்களை ஆரம்பித்து விடுவார்கள். ஆக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் ஒரு ஆண்டில் படிக்கும்
+2 பாடப்
புத்தகங்களை மெட்ரிக் குழந்தைகள் இரண்டு ஆண்டுகள் படிப்பார்கள். நீட் வருவதற்குமுன் +2 பாடங்களை மூன்று ஆண்டுகள் படிக்க வைத்த பள்ளிகளும் உண்டு. சமயபுரம் SRV மாதிரி விதிவிலக்குகளும் உண்டு.
பெற்றோர்களும் தங்கள்
குழந்தைகள் +2 வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு மெட்ரிக் பள்ளிகள்தான் சரியான இடம் என்று கருதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை நிராகரித்து தங்கள் குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்க ஆரம்பித்தார்கள். இதன் விளைவாக மெட்ரிக் பள்ளிகள் செழித்துப் பெருத்தன அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் பல மூடப்படும் நிலைக்கு வந்துள்ளன.
இப்போது
+1 லும் பொதுத் தேர்வு உண்டென்பதால் அந்தந்த வருடத்திற்கு அந்தந்த பாடம் என்று வந்து விட்டதால் இதற்கு ஏன் மெட்ரிக் பள்ளிகளில் காசைக் கொட்டிக்கொண்டு என்று பெற்றோர்கள் பிள்ளைகளை மீண்டும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்க்க ஆரம்பித்தார்கள். மெட்ரிக் பள்ளிகள் பாதிப்பைச் சந்தித்தன.
மெட்ரிக்
பள்ளி கனவான்கள் அதிர்ந்து போனார்கள். தங்களது கல்லா இளைப்பதை சொல்லி இந்த முறையை மாற்ற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே அவர்கள் வேறு ஒரு காரணத்தைத் தேடினார்கள்.
இந்த
ஆண்டு குழந்தைகள் +1 பொதுத் தேர்வை எழுதினார்கள். முதல்முறையாக இருப்பதால் குழந்தைகளுக்கு சிரமம் இருந்தது என்பது உண்மைதான்.
இத்தனை
ஆண்டுகளாக இல்லாத வகையில் +1ல் பொதுத்தேர்வு என்பது சில குழந்தைகளுக்கு குழப்பத்தைத் தந்தது. அப்படித்தான் சொல்வார்கள் ஆனால் பொதுத் தேர்வு இருக்காது என்றுகூட சில குழந்தைகள் நம்பினார்கள். ஏன், சில ஆசிரிய நண்பர்களுக்கேகூட +1ல் பொதுத் தேர்வு நடக்காது என்று நம்பினார்கள்.
+1ல் சரியாக தேர்வு எழுதாத பிள்ளைகளுக்கு போன வருடம்தான் தேர்வு, இந்த வருடமும் தேர்வு, அடுத்த வருடமும் தேர்வு என்றால் சோர்வாகக்கூட பட்டது. பெற்றோர்கள் முணுமுணுக்கத் தொடங்கினார்கள். ஆனால் காலப்போக்கில் இது சரியாகக்கூடியது என்பதை இவர்கள் உணர்ந்துவிடக் கூடாது என்பதில் சிலர் கவனமாக இருந்தார்கள். அவர்களுள் மெட்ரிக் பள்ளி முதலாளிகளும் அடங்குவர்.
இவர்கள்
குழந்தைகளுக்கு
தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத் தேர்வா? பிள்ளைகளது உடலையும் மனதையும் இது பாதிக்காதா? என்று குமுறத் தொடங்கி விட்டார்கள்.
இவர்களது
குரலைத்தான் மாண்புமிகு அமைச்சர் அவர்களும் ஒலிக்கத் துவங்கி இருக்கிறார்.
+1 குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு உண்டு. தேர்ச்சி பெற வேண்டும். ஆனால் +1 மதிப்பெண்ணை கணக்கில் கொள்ள மாட்டோம். +2 மதிப்பெண்ணைக் கொண்டுதான் அவனது மேல்படிப்பு தீர்மானிக்கப்படும் என்கிறார்.
இதைத்தான்
மெட்ரிக் பள்ளி கனவான்கள் எதிர்பார்த்தார்கள்.
இப்பொழுது
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் முதலாமாண்டு முதலாமாண்டு பாடங்களையும் இரண்டாமாண்டில் இரண்டாமாண்டு பாடங்களையும் நடத்த வேண்டும். ஆனால் மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சிக்குரிய அளவு மட்டும் முதலாமாண்டு பாடங்களை நடத்திவிட்டு முதலாமாண்டிலேயே இரண்டாமாண்டு பாடங்களை நடத்த ஆரம்பித்து விடுவார்கள். இனி, மீண்டும் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கைக்காக மைல் கணக்கில் வரிசை நிற்கும். அவர்களது கல்லா நிரம்பி வழியும்.
அரசு
மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்க்கை குறையும். பையப் பைய இந்தப் பள்ளிகள் மாணவர்கள் இன்மையால் பூட்டப்படும்.
+1 பொதுத் தேர்வு மெட்ரிக் பள்ளிகளைக் கொஞ்சம் பாதித்தது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சன்னமாக நிமிர்த்தியது. நடைமுறையில் பொதுப்பள்ளிகளின் நிர்வாகி மாண்பமை அமைச்சர். இன்னும் கொஞ்சம் சரியாய் சொன்னால் பொதுப்பள்ளிகளின் முதலாளி அவர். எனில் தனியார் பளிகளுக்கு நட்டம் பொதுப்பள்ளிகளுக்கு லாபம் என்று வரும் இந்தப் புள்ளியில் அவர்தான் லாபத்தை அனுபவிக்கப் போகிறவர்.
அவர்
எப்படி தனக்கு நட்டமும் தனியார் பள்ளி முதலாளிகளுக்கு லாபமும் வருகிறமாதிரி மட்டுமே சிந்திக்கிறார் என்று தெரியவில்லை.
மூன்றாண்டு
தொடர் பொதுத்தேர்வுகள் பிள்ளைகளை பாதிக்குமா? என்று கேட்டால் “பாதிக்கலாம்” என்பதே பதில்.
”எனில், மாற்ற வேண்டாமா?”
“மாற்ற வேண்டும்தான்”
“அதைத்தானே செய்திருக்கிறோம்” என்றால் இப்போதும் மூன்றாண்டுகளுக்கு தொடர்ந்து பொதுதேர்வு வருகிறதே.
என்னதான்
செய்யலாம்?
+1 ற்கும் +2 விற்கும் பொதுதேர்வு இருக்கட்டும். +1 இல் 600 +2 வில் 600 ஆக 1200 மதிப்பெண் இருக்கட்டும்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எடுத்துவிடலாம்.
நன்றி: காக்கைச் சிறகினிலே அக்டோபர் 2018
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்