தந்தை பெரியாரை சிந்தனையாளர் வரிசையில் வைத்து உலகம் கொண்டாடவில்லை. ஆனால்
உலகத்தில் எந்த தலைசிறந்த சிந்தனையாளர் அளவிற்கும் கடுகளவு குறைவாகவும் சிந்தித்தவர்
இல்லை அவர். பிறகு ஏன் அவரை உலகம் சிந்தனையாளர்கள் அடுக்கு வரிசையில்
வைக்கவில்லை.
அவரை அப்படி சிந்தனையாளர் அடுக்கில் ஏதேனும் ஒரு இடத்தில் சொறுகிவிடுவது
எளிதல்ல. காரணம் அவர் களத்தில் தனது சிந்தனைகளை காலம் முழுவதும் செயல்படுத்திய
செயற்பாட்டாளர்.
தந்தை பெரியார் எழுத்தாளர் என்று அறியப்பட்டவரும் இல்லை. ஆனால்
எழுதிக் குவித்திருக்கிறார். சரியாக சொல்வதெனில் சிறந்த எழுத்தாளர்
என்று அறியப்படுபவர் எவரைக் காட்டிலும் அதிகப் பக்கங்களை எழுதிக் குவித்திருக்கிறார்.
ஐந்து தொகுதிகளைக் கொண்ட “நான் பேசினால் உனக்கு
ஏன் கோவம் வரவேண்டும்”, இரண்டு தொகுதிகளைக் கொண்ட ”ஈ.வெ.ராமசாமியாகிய நான்”
என்று அவரது எழுத்துகளை தொகுத்திருக்கிறார் தோழர் பசு.கவுதமன். இந்த ஏழு நூல்களும் A4 அளவில் 3648 பக்கங்கள் அளவிற்கு நீள்கின்றன. இவற்றை, சாதாரண, ஒன்றுக்கு எட்டு அளவு புத்தகங்களாக்கினால் குறைந்தது
ஏழாயிரம் பக்கங்கள் வரும்.
இதுபோக ஆணைமுத்து அய்யா சில ஆயிரம் பக்கங்களை தொகுத்திருக்கிறார். இரண்டு
தொகுதிகளை உள்ளடக்கிய “குலக்கல்வி ஒழிந்த கதை” ஒன்றுக்கு எட்டு அளவில் மாற்றினால் 2500 பக்கங்கள் வரும்.
1957 சட்ட எரிப்பு போராட்டத்தை ஒட்டிய அவரது எழுத்து இன்னும் சில ஆயிரம்
பக்கங்களை எட்டும்.
மக்களுக்கான அனைத்தையும் சிந்தித்து இருக்கிறார். அவற்றை
எழுதி இருக்கிறார், பேசியிருக்கிறார், களமாடி
இருக்கிறார். இவை அனைத்திலும் பல இடங்களில் நமக்கு முரண்பாடுகள்
இருக்கவே செய்கின்றன. உயிரோடு இருந்த காலத்தில் நமது முரண்பாடுகளை
அவர் அங்கீகரிக்கவும் மதிக்கவும் செய்திருக்கிறார்.
தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, குலக்கல்வி
ஒழிப்பு, இந்தி எதிர்ப்பு, பல பிரிவுகளில்
அவர் இயங்கி இருந்தாலும் பெண்கள் குறித்த அவரது சிந்தனையும் செயல்பாடும் மிக முக்கியமானவை.
யாரை விடவும் பெண்களைக் குறித்து குறைவாக சிந்தித்தவரில்லை
பெரியார் என்று உறுதியாக சொல்லலாம்.
வேறு எந்த விஷயத்தை விடவும் பெண்களைக் குறித்து குறைவாக பெரியார் சிந்தித்தது
இல்லை என்றும் உறுதியாகக் கொள்ளலாம்.
அவர் பெண்களைக் குறித்து எளிய மொழியில் கூறிய மூன்று மிக
முக்கியமானவை
1)
பெண்களின் கையிலிருந்து கரண்டியைப் பிடுங்கிவிட்டு
புத்தகத்தைக் கொடுக்க வேண்டும்
2)
துரதிருஷ்டவசமாக நான் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றால்
ஐந்து ஆண்டுகளுக்கு பெண்களுக்கு மட்டுமே பள்ளிக்கல்வி என்று ஒரு சட்டத்தை
இயற்றுவேன்
3)
உங்களுக்கு பெண்குழந்தை இருந்து உங்கள் ஊரில் பள்ளி இல்லை என்றால்
பள்ளி இருக்கும் ஊருக்கு அவள் படிப்பு முடியும் வரைக்குமாகிலும் குடும்பத்தை மாற்றுங்கள்
அந்தக் காலத்தில் கல்வி, அறிவு, சொத்து என எதுவும் பெண்களுக்கு இல்லை என்று இருந்தது. இன்னும் உடைத்து சொல்வதெனில் இவற்றை பெண்கள் பெண்கள் கைகளுக்கு போகாமல் பார்த்துக்
கொள்வது ஆண்களின் கடமை என்று சொல்லப்பட்டிருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக கலகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெடித்துச்
சிதற ஆரம்பித்தது. அதன் விளைவாக பிரிட்டிஷ் அரசு பெண்களுக்கு கல்வி
அளிப்பது குறித்து ஒரு கருத்துக் கேட்பு நடத்துகிறது.
பெண் கல்வியை இனி தடுக்கவே முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தபின்பும்கூட
அதற்கு தன்னாலான அளாவு முட்டுக்கட்டையைப் போடுவதற்கு அன்றைய சமூகம் முயற்சி செய்தது.
பெண்களுக்கு கல்வி தரலாம் என்பதில் தாங்கள் உடன்படுவதாக அவர்கள்
இறங்கினார்கள். ஆனால் அதற்காக பெண் பிள்ளைகள் பள்ளிகளுக்குப் போகத் தேவை இல்லை
என்று வாதிட்டார்கள். பெண்கள் வெளியே போவது என்பது தங்களது சாஸ்திரத்திற்கு
எதிரானது என்றும், அது பெண்களது பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும்
என்றும் அவர்கள் சொன்னார்கள்.
ஆகவே ஆண்கள் பள்ளியில் படித்து வந்ததை வீட்டில் பெண்களுக்கு
சொல்லித்தர ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்கள்.
ஆண்கள் பள்ளிகளில் பயின்று வந்ததை வீட்டில் தங்கள் பெண்களுக்கு
சொல்லித் தருவதாக அவர்கள் ஒத்துக் கொண்டதையே ஏதோ பெரிய புரட்சி என்கிற அளவிற்கு அவர்கள் ஊதிப் பெரிதாக்க
முயன்றார்கள்.
பெண்கள் பாதுகாப்பும் ஊனப்படாது, அவர்களுக்கு
கல்வியும் கிடைக்கும் என்று அவர்கள் ஒரு தற்காப்பு ஆட்டத்திற்கு வந்தார்கள்.
இவர்கள் எதை தம் பெண்களுக்கு சொல்லித் தருகிறார்கள் என்பதை யாராலும்
சோதிக்க முடியாது. இவர்கள் தங்கள் பெண்களுக்கு சொல்லித் தருகிறார்களா
என்பதையேகூட யாராலும் ஆய்வு செய்ய முடியாது.
இதை நன்கு அறிந்தவராகவே தந்தை பெரியார் இருந்தார். எனவேதான் அவர்களது சகலவிதமான சனாதன தற்காப்பு தடுப்பு வித்தைகளையும் உடைத்துக்
கொண்டு உள்புந்து நடு ஸ்டம்ப்பை வீழ்த்தும் யார்க்கரை வீசினார்.
“உன் ஊரில் உன் பெண்குழந்தை படிப்பதற்கு பள்ளிக்கூடம் இல்லை என்றால்
பள்ளிக்கூடம் உள்ள ஊருக்கு அவள் படிப்பு முடியும் வரைக்குமாகிலும் புலம் பெயர்ந்து
போ” என்றார்.
அடுப்படியே கோவில் என்றார்கள். சரி,
கோவிலுக்கு நீயும் போ என்றார். அவள் சமைக்க வேண்டாமா
என்றார்கள். நீயும் சமை என்றார். கரண்டி
என்பது பெண்களின் தன்மானத்தை அழித்தொழிக்கும் ஆயுதம் என்பதை தந்தை பெரியார் நன்கு உணர்ந்திருந்தார்.
பெண்களுக்கு எதிரான ஆயுதத்தை பெண்களின் கையிலேயே கொடுத்து வைத்திருந்த
சமூகத்தின் ஜாலத்தை அவர் உணர்ந்திருந்தார்.
ஆகவேதான் பெண்களின் கையில் புத்தகத்தை கொடுக்க வேண்டும்
என்பதோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. கரண்டியைப் பிடுங்கிவிட்டு புத்தகத்தைக்
கொடுக்க வேண்டும் என்கிறார்.
கரண்டி இருக்கிறவரை எத்தனை புத்தகங்களை அவள் கைகளில்
திணித்தாலும் அவளால் படிக்க இயலாது.
பெண்கள் கரண்டியைத் தொடக்கூடாது என்று பத்து கட்டை அளவிற்கு குரலெடுத்து உரத்துக்
கத்தினால்தான் ஆண்களும் பெண்களும் கரண்டியையும் புத்தகத்தையும் சமமாகப்
பகிர்ந்துகொள்ளும் ஒரு நிலை வரும் என்பதை பெரியார் நன்கு உணர்ந்தவராக இருந்தார்.
பெண்களைக் கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று அவரால்
ஏன் நிறுத்திக் கொள்ள முடியவில்லை?.
ஐந்து ஆண்டுகளுக்கு பெண்களுக்கு மட்டுமே பள்ளிக் கல்வி என்று சிந்திக்க
வேண்டிய அவசியம் ஏன் பெரியாருக்கு ஏற்பட்டது?
பெண்களுக்கு மட்டுமே கல்வி என்பதை ஒரு குறிப்பிட்ட காலம்
வரைக்குமேனும் நடைமுறைப்படுத்தினால்தான் ஆண் பெண் கல்வி சமத்துவத்தை வருங்காலத்தில்
நினைத்துப்பார்க்க முடியும் என்பது அவருக்கு தெளிவாகத் தெரிந்திருந்தது.
பெரியாரின்
கல்வி குறித்த, குறிப்பாக பெண் கல்வி குறித்த சிந்தனைகளை தமிநாடு கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களே சரியான அலைவரிசையில் உள் வாங்கின. ஆகவேதான் கல்வியும் ஆண் பெண் சமத்துவமும் வேறெந்த இந்தியப் பகுதியிலும் இல்லாத அளவிற்கு இந்தப் பகுதியில் செழித்திருக்கின்றன.
பெண்களுக்கு நல்ல கல்வியைக் கொடுத்துவிட்டால் தங்களது திருமணம்
உள்ளிட்ட சகலத்தையும் அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்பதுதான் பெரியாரின் சிந்தனை. இதனை
சரியாக உள்வாங்கிய தமிழ்நாடு அரசு அதுவரை பெண்களின் திருமணத்திற்காக கொடுத்து வந்த
உதவித் தொகையை நிறுத்துகிறது.
மாராக “மூவாலூர்
ராமாமிர்தம் உயர்கல்வி உதவித்தொகை”
யாக அதை மாற்றுகிறது. அதன்பிறகு தமிழ்நாட்டில் உயர்கல்வி
படிக்கும் பெண்களின் எண்ணிக்கை
34 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக
31.05.2024 தமிழ் இந்து கூறுகிறது.
நம்பிக்கை இருக்கிறது,
பட்டங்கள் ஆள்வதை, சட்டங்கள் செய்வதை நமது பெண்கள் நிகழ்த்துவார்கள்.
அதைப் பார்ப்பதற்கு கிழவன் இல்லை. பேரப் பிள்ளைகள்
நாம் பார்த்துவிட்டுப் போவோம்.
புதிய ஆசிரியன்
செப்டம்பர் 2024
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்