Thursday, September 10, 2015

18 வளரும் கவிதை


எனக்கும் முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அருள்முருகன் அவர்களுக்குமான அன்றைய உரையாடல் ஏதோ ஒரு புள்ளியில் அண்ணன் முத்துநிலவன் அவர்களை மையம் கொண்டது. அப்போது சொன்னேன்,

இன்னும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கவிதை எழுதலாம் என்று நினைப்பவனை இன்றைக்கே கவிஞர்’ என்றழைக்கும் பெருந்தன்மை நிலவன் அண்ணனிடம் மட்டுமே உண்டு

தனக்கே தெரியாமல் சன்னமாக சிரிக்கும் வித்தை தெரிந்தவர் அருள்முருகன். அதைக் கேட்டதும் மனிதர் சத்தமாக சிரித்தார். அதுதான் அய்யாவோட பலமும் பலவீனமும்” என்றார். “ அதுமாதிரி மட்டும் அவர் செய்திருக்கா விட்டால் இன்றைக்கு இந்த அளவிற்கான எட்வினும் இல்லை” என்றபோது இடைமறித்து நிறைய எட்வின்கள் இல்லை” என்று சரியாய் திருத்தினார்.

நல்ல எழுத்துக்களையே அங்கீகரிப்பதற்கு சங்கடப் படும் இந்தக் காலத்தில் ஒருக்கால் இவன் நன்றாக எழுதக் கூடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டாலே அவனை எழுத்தாளன் என்று அங்கீகரித்துக் கொண்டாடும் பெருந்தன்மை அண்ணன் முத்துநிலவனிடம் காணக் கிடைக்கும் அபூர்வமான குணம்.

விஞ்ஞானம் கொடையளிக்கும் எந்த ஒரு நவீன ஊடகத்தையும் வசப்படுத்திக் கொள்ளும் அவரது ஆற்றலுக்கு மிகச் சரியான சமீபத்திய உதாரணம் அவரது வலையான வளரும் கவிதை

அறுபது வயது மனிதனின் ஞானமும் பக்குவமும்இருபது வயது இளைஞனின் துள்ளலுமாய் சீறிப் பாய்கிறது வளரும் கவிதை

அவர் ஒரு ஓய்வு பெற்ற துணைத் தலைமை ஆசிரியர். பொதுவாக இப்போதெல்லாம்  இரண்டாம் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களையே ஆசிரியர்களால் கொண்டாட முடிவதில்லை. முதல் மதிப்பெண் மட்டுமே இலக்காகிப் போன இந்த இறுக்கமான சூழலில் ஒரு பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியரான இவர் “ முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே” என்றொரு கட்டுரையை இந்த வலையில் வைத்திருக்கிறார். இதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்எவ்வளவு விமர்சனங்களைவசவுகளைமிரட்டல்களை அதிகாரிகளிடத்திலிருந்து இவர் எதிர் கொண்டிருக்க வேண்டும் என்பதை கல்வித்துறையின் ஊழியனான என்னால் உணர முடிகிறது.

அதே தலைப்பில் இந்தக் கட்டுரையையும் உள்ளடக்கி வெளிவந்த இவரது நூல் தமிழ் வாசகத் தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

யானையை மரமேறச் சொல்வது சரியா?” என்கிற கட்டுரை கல்வி குறித்த ஒரு ஆரோக்கியமான அலசலைத் தருகிறது.

இன்றையத் தமிழகக் கல்வித் துறையின் பாடத் திட்டம்பயிற்சிமுறைதேர்வுமுறை ஆகியவை குறித்து மிக அழகாக நகர்கிறது இந்தக் கட்டுரை.

பொதுவாகவேபாடத் திட்டம் குறித்தும் பயிற்சிமுறை குறித்துமதிகமாக கவலைப் படுவதும் அவைகுறித்து ஏராளமான பணியிடைப் பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்குவதுமாக இருக்கிறது பள்ளிக் கல்வித்துறை. அவை முறையாக நடக்கின்றனவாநல்ல விளைவுகளைத் தருகின்றனவா ? என்பதெல்லாம் வேறு விஷயம். ஆனால் அவை குறித்த துறையின் அக்கறையினை செயல்பாட்டினை நாம் கேள்வி கேட்க முடியாது.

ஆனால் தேர்வுமுறை குறித்த இவர்களது பார்வையை நாம் கேள்வி கேட்டே ஆகவேண்டும். தேர்வு குறித்த கூட்டங்களில் பெரும்பாலும்,

1)   எல்லா மையங்களிலும் தேர்வினை உயிரைக் கொடுத்தேனும் உரிய நேரத்தில் தொடங்கி விட வேண்டும்.
2)   எந்தக் காரணத்திற்காகவும் ஆசிரியர்கள் தேர்வுப் பணியைத் தவிர்த்து விடக் கூடாது.
3)   ஆசிரியர்கள் அறைக்கு அலைபேசிகளை எடுத்துப் போக்க் கூடாது.
4)   மாணவர்களை அப்படி இப்படித் திரும்ப விடாமல் கண்காணிக்க வேண்டும்
5)   பறக்கும் படைகள் விழிப்போடு செயல் பட வேண்டும்

என்பதாகத்தான் அமையும். இதை கேள்வி கேட்கிறது இவரது பதிவு. இவரது பதிவின் வெப்பம் நியாயமானது. தேர்வினை எப்படிக் கறாராக நடத்துவது என்பதில் இவ்வளவு அக்கறை காட்டும் கல்வித் துறை வினாத்தாளை எப்படித் தயாரிப்பது என்பதில் தனது கவனத்தை செலுத்துவதே இல்லை என்கிற உண்மை இவரது கோவத்தின் நியாயத்தை உணர்த்தும்.

இன்றைய பெரும் ஊழல்களுள் ஒன்றாக இடம் பிடித்துள்ள வியாபம் பற்றி மிக விரிவாக “வியாபம் – இந்தியாவின் ஆபத்தான ஊழல்” என்ற கட்டுரை அப்படி ஒரு நயம் மிக்க கட்டுரை.

மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்தவரெல்லாம் மாவட்ட காவல்துறை அதிகாரிகளாக பணிபுரியும் அசிங்கத்தை இவர் எழுவதை பார்க்கும்போது எப்படி இவரால் சிரித்துக் கொண்டே கோவப் பட முடிகிறது என்ற அய்யம் எழுகிறது.

நாட்டில் அவ்வப்போது நிகழக்கூடிய அரசியல், சமூக, சாதிய, நீதிய பேரலைகளைக் கொண்டும் மறந்துபோன வரலாறுகளை வாசகனின் மனதிற்குள் கொண்டு சேர்க்கும் இவரது எழுத்தாளுமை மிக மிக அரிதானது.

நீதிபதி குமாரசாமி அவர்கள் நமது முதல்வரை சாட்டப் பட்ட குற்றங்களிலிருந்து விடுவித்த தீர்ப்பளித்த பேரழகினை நாடறியும். இதற்காக அவர் எப்படியெல்லாம் கிழிபட்டார் என்பதையும் நாம் அறிவோம்.

ஆனால் இதைப் பயன் படுத்திக் கொண்டு “நான்கு குமாரசாமிகள்” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை தந்திருக்கிறார். நாம் அறியாத அல்லது மறந்துபோன சில குமாரசாமிகளை நமது கவனத்திற்கு கொண்டு வருகிறார்.

ரௌலட் சட்டம் 1918 இல் வந்தபோது அதை நியாயப் படுத்திய ஒரு குமாரசாமியை இவரது வலை அறியக் கொடுக்கிறது.

திருப்பூர் குமரனின் முழுப் பெயர் குமாரசாமி என்கிறது.

முருகன் என்று வணங்கப் படும் குமாரசாமியை நமக்கு அறிமுகம் செய்கிறது.

பெரும்பான்மை தமிழ்த் திரள் நையாண்டி மட்டுமே செய்து கொண்டிருந்த ஒரு விஷயத்தை சரியாக கையாண்டு அதன் மூலமும் சில வரலாற்று, ஆன்மீக ஆளுமைகளை நமக்கு பந்தி வைக்கிறது இவரது வலை.

அவசியம் வாசிக்க வேண்டிய அறிய பொக்கிஷங்களை தனது வலையான “வளரும் கவிதை” யில் வைத்திருக்கிறார் நிலவன் அண்ணன்.
இதில் என்ன சிறப்பு என்றால் வாசிக்க வேண்டியவற்றை வாசிக்கிறமாதிரி இந்த வலையில் வைத்திருக்கிறார்.

அவசியம் வாசியுங்கள்…
 http://valarumkavithai.blogspot.com/




No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...