- பொதுவாக புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் குறித்த படைப்புகள் இலங்கையிலிருந்து தமிழ் நாட்டிற்கோ அல்லது வேறு ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கோ புலம் பெயர்ந்த மக்களின் வாழ்க்கையைக் குறித்து பேசும். இந்த நாவலோ தமிழகத்திலிருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கையைப் பேசுகிறது
- இந்து மதத்தில் இருப்பது போலவே கிறிஸ்தவ மதத்திலும் அப்பட்டமாய் காணக் கிடைக்கும் ஜாதிய படிநிலைகளை அந்த நாவல் அம்பலப் படுத்துகிறது.
இந்த நாவல் குறித்த தம்பி அம்மணியோடான உரையாடல் கிறிஸ்தவக் கல்லறைகளில் அவை தோன்றிய காலம் முதல் மறிக்காமல் ஜீவித்திருக்கக் கூடிய ஜாதி பற்றி நகர்ந்தது. அப்போது பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறை என்னும் கிராமத்தில் அருந்ததிய கிறிஸ்தவர்களுக்கும் ஆதிக்க சாதிக் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதலை அது சார்ந்து நடந்த வழக்கினைப் பற்றி நகர்ந்தது. அம்மணியின் தந்தை வழக்கறிஞர் வரதராஜன் அவர்கள்தான் அந்த வழக்கில் தலித் கிறிஸ்தவர்களுக்காக வாதாடியவர். அவரிடம் அது குறித்து பேசினோம்.
தொண்டமாந்துரையில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். அவர்களில் பெரும் பகுதியினர் முத்துராஜாக்கள் மீதிப்பேர் சக்கிளிய இனத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள். அந்த ஊரில் பங்கு எனப்படும் தேவாலயம் இருக்கிறது. ஆனால் அந்த பங்கிற்குள் அருந்த்திய இனத்தைச் சேர்ந்த தலித் கிறிஸ்தவர்கள் நுழைய இயலாது. தேர்த் திருவிழாவிலும் உரிமையோடு பங்கேற்க முடியாது.
அவர்கள் செபஸ்தியார் தெரு, சவேரியார் தெரு ஆகிய இரண்டு சேரிகளில் வசித்து வருகிறார்கள். இரண்டு தெருக்களிலும் அவர்களது சக்திக்கேற்ப குட்டிக் குட்டியாய் தேவாலயங்களை கட்டியுள்ளார்கள். ஆனால் அந்த தேவாலயங்களுக்குள் பாதிரிமார்களே வர மாட்டார்கள்.
இந்த அருந்ததியர்களுக்கும் தங்களது தெய்வத்தை தேரில் வைத்திழுத்து அழகு பார்க்க வேண்டும் என்று ஆசை வருகிறது. தங்களுக்கான ஒரு தேரினை செய்கிறார்கள். அதன் பிறகுதான் பிரச்சினை வருகிறது. ஆதிக்க சாதிக் கிறிஸ்தவர்கள் அந்தத் தேர் தங்களது தெரு வழியாக வரக் கூடாது என்கிறார்கள்.
பிரச்சினை வெடிக்கிறது. உங்கள் தேரினை எங்கள் தெருவிற்குள் கொண்டு வராத்தால்தானே நாங்கள் இந்த்த் தேரினை செய்தோம் என்கிறார்கள்.
“எங்கள் சாமி உங்கள் தெருவிற்கு வராது.”
”ஏன்?”
”உங்கள் தெருவிற்குள் வந்தால் எங்கள் சாமி தீட்டுப் பட்டுவிடும்?”
”சரி, எங்கள் தேரையாவது அனுமதியுங்கள்.”
“முடியாது. உங்கள் சாமி எங்கள் தெருவிற்குள் வந்தால் தெரு தீட்டுப் பட்டுவிடும்.”
இப்போது சேஷசமுத்திரத்தில் நடப்பதைப் பார்ப்போம்.
2012 ஆம் ஆண்டு செய்யப்பட்ட தேரினை இழுப்பதற்கான சமாதான பேச்சு வார்த்தை 2015 ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடக்கிறது. இரு தரப்பும் ஒத்துக் கொள்கிறார்கள். ஆகஸ்ட் 16 ஆம் தேதி தேர் என்று முடிவெடுக்கப் படுகிறது.
ஆகஸ்ட் 14 ஆம் தேதி காப்பு கட்டுகிறார்கள்.
ஆகஸ்ட் 16 ஆம் தேதி தேரிழுப்பு என்கிற நிலையில் 15 ஆம் தேதி இரவு தேர் உள்ளிட்டு அனைத்தையும் எரிக்கிறார்கள்.
இவர்கள் எரித்த தேரினை யார் செய்து கொடுத்தது? தேர் செய்ததில் பாதிக்காசு அந்த ஊரின் தலைவர் சுப்பிரமணி கொடுத்தது. அவர்கள் செய்து கொடுத்த தேரினை அவர்களே ஏன் எரிக்கிறார்கள்? காரணம் ரொம்பச் சுலுவானது.
சேரி மக்கள் இழுத்து மகிழ வேண்டும் என்பதல்ல சுப்பிரமணி அவர்கள் தேர் செய்வதற்கு ஒரு லட்சம் கொடுத்ததற்கான காரணம். தேர்தலில் தான் வெற்றிபெற வேண்டும் அதற்கு சேரி மக்களின் வாக்குகள் வேண்டும். சரி இப்போது ஏன் எரிக்க வேண்டும்? தலைவராய் தான் நிம்மதியாய் தொடர வேண்டும்.
ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். வன்முறையின் அளவு வேண்டுமானால் இரண்டு இடங்களிலும் கொஞ்சம் கூடுதல் குறைச்சலாய் இருக்கலாம். ஆனால் நோக்கமும் வீரியமும் ஒன்றுதான்.
அவர்கள் சொன்னதையேதான் இவர்களும் சொல்கிறார்கள். உங்க தெருவோட உங்க சாமி. எங்க தெருவோட எங்க சாமி.
”உங்கத் தெருவில் அல்லப்பா. பொதுப் பாதையிலதானே நாங்க சாமிய கொண்டு போகக் கேட்கிறோம்.”
“:புரிந்துகொள் பொதுத் தெரு என்றால் எங்கள் தெரு. பொதுப் பாதை என்றால் எங்கள் பாதை. இன்னும் இறங்கி வந்து சொல்கிறோம் சேரியைத் தவிர மற்றதெல்லாம் எங்களுடையதே.”
அவர்கள் தெளிவாய் இருக்கிறார்கள்.
இதை யார் தூண்டிவிட்டது? யார் கொளுத்தியது? யார் பெட்ரோல் குண்டுகளைத் தயாரித்தது? என்பது பற்ரியெல்லாம் நாம் பேசப் போவதில்லை. நாம் முடிக்க இரண்டு விஷயங்கள் இருக்கிறது.
- ஒரு தெருவிற்குள் நுழைந்தால் சாமி தீட்டுப் படும் என்றால் அந்தச் சாமி இருந்தென்ன? இல்லாமல் என்ன? ஒரு சாமி நுழைவதால் ஒரு தெரு தீட்டுப் படுமானால் அவ்வளவு கேவலமான தெருவிற்காக தேரை கொளுத்த வேண்டிய அவசியம் என்ன?
குடியானத் தெரு சாமி வந்தாலும் சேரி தீட்டாகாது. குடியானத் தெருவிற்குள் போவதால் சேரிச் சாமியும் தீட்டுப் படாது. எனில் பொதுத் தெருவைவிட சேரி வீரியமனது என்றும் குடியானத் தெரு சாமியை விட சேரிச் சாமி வீரியமானது என்றும்தானே பொருள்.
- இந்த வழக்கில் தேடப் பட்டு வந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சாமிக்கண்ணு அவர்களும், கூலித் தொழிலாளி சடையன் அவர்களும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக மாலைமலர் இணைய இதழ் சொல்கிறது.
மேற்சொன்ன இருவரும் ஒரே ஜாதியை சார்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் இருவரும் ஒன்றா? சடையன் வீட்டிலிருந்து சாமிக்கண்ணு பெண் எடுப்பாரா தன் பிள்ளைக்கு?
இதிலிருக்கும் நுட்பத்தை சடையன் மட்டுமல்ல தலித்துகளும் உணர்ந்து கொள்ள வேண்டும். சாமிக்கண்ணு எப்போதும் தன்னையும் ஏற்கப் போவதில்லை என்பதை சடையனும் சடையன அல்ல நமது எதிரி என்பதை தலித்துகள் புரிந்து கொள்வதும் இருவரும் கரமிணைப்பதும் அவசியம். இந்தப் பிரச்சினைகளுக்கான சரியான தீர்வு அப்போதுதான் சாத்தியப்படும்.
சாமியை முன்னிருத்தி ஆசாமிகள் ஆடும் நாடகம்! பலியாவது அப்பாவிகள்!
ReplyDeleteஆமாம் தோழர். மிக்க நன்றி
Delete