Friday, September 18, 2015

வலைகளில் விழுவோம்


எனது வலையிலிருந்து ஒரு பக்கத்தை “புதிய தரிசனம்” இதழில் வைத்துள்ள செய்தியை சொல்வதற்காக அதன் ஆசிரியர் தோழர் ஜெபக்குமார் அன்று அதிகாலையே அழைத்தார். என்னமோ தெரியவில்லை அன்றைய எங்களது உரையாடல் வலைகளைச் சுற்றியே சுழன்று கொண்டிருந்தது.

2010 கு பிறகான எழுத்துக்களை பரிசீலிக்கும் யாராலும் வலைகளைத் தவிர்த்துவிட்டு அந்தக் காரியத்தை செய்ய இயலாது என்ற எனது கருத்தோடு பெருமளவு ஒத்துப் போனது ஜெபக்குமார் கருத்து.  

நல்ல நூல்களை அறிமுகம் செய்வது போலவே நல்ல வலைகளையும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்று இருவருமே யோசித்தோம். ஆனால் அதை என்னையே செய்ய சொல்வார் என்று அந்தப் புள்ளியில் நான் நினைக்கவில்லை. யோசித்து சொல்வதாக சொல்லிவிட்டு தம்பி விஷ்ணுபுரம் சரவணனிடம் யோசனை கேட்டேன். உடனே தொடங்குமாறு ஆலோசனை சொன்னவன் அத்தோடு சுறுக்கிக் கொள்ளாமல் சில வலைகளையும் பட்டியலிட்டான்.

அப்படித்தான் “வலைக்காடு” ஆரம்பமானது. இருபது வலைகளை அறிமுகம் செய்வது என்று முடிவெடுத்தோம். உடல்நிலை என்னை பதினேழிற்கு மேல் அனுமதிக்கவில்லை.

அதற்குப் பிறகு எனது வலையில் அண்ணன் முத்துநிலவன் அவர்களின் ‘வளரும் கவிதை’ என்ற வலை குறித்து நான் எழுதியதையும் சேர்த்து பதிணெட்டு வலைகளைப் பற்றிய அறிமுக நூலாக “வலைக்காடு” வருகிறது.

சொல்ல முடியாது, இந்த நூல் வலைகளைப் பற்றிய இந்தவகையான நூல்களுள் முதலாவதாகவும் இருக்கக் கூடும். ஒருக்கால் அப்படியிருப்பின் அதற்காக பெருமைப்படா விட்டாலும் மகிழவே செய்வேன்.

தொடர் எப்படி தற்செயலாகத் தொடங்கியதோ அதேபோலத்தான் இந்த நூலும் தற்செயலாக வருகிறது.

ஒரு அதிகாலை என்னைத் தொடர்புகொண்ட தம்பி பரிதி எனது பழைய கட்டுரை ஒன்றை தனது இதழான ‘வகுப்பறை’ யில் வைத்திருப்பதாகச் சொன்னான். ஏன் பழசு? என்று கேட்டேன். “நீ கட்டுரையும் தர மாட்டேங்கற… புத்தகமும் தர மாட்டேங்கற..” அப்புறம் நான் என்ன செய்யட்டும் என்றான்.

அதற்கு முதல்நாள்தான் கவிஞர் ஜெயதேவனிடம் இந்த நூலைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தேன். அவரும் ஒரு பதிப்பகத்திடம் பேசிக் கொண்டிருந்தார்.

இந்த உண்மையை பரிதியிடம் சொன்னபோது “இப்பவும் என் நினைவு வரலதானே” என்று வைதான். மன்னிப்பைக் கோருவதைத் தவிர வேறு வழியில்லை எனக்கு.

இப்படியாக எனது ஏழாவது நூலை தம்பி பரிதி கொண்டு வருகிறான்.

வர்தினி பர்வதா, கிருத்திகா, ஜெபக்குமார், ‘புதிய தரிசனம்’ என நன்றி சொல்லவேண்டிய பட்டியல் நீளும்.

என் வாழ்வின் இக்கட்டான நேரங்களில் தங்களது அன்பாலும், வார்த்தைகளாலும், சகலவிதமான உதவிகளாலும் என்னை உயிரோடு வைத்திருக்கும் தோழர்கள் மோகனா, கவிஞர் ஜெயதேவன், தோழர் ஹரிஹரன் சோமசுந்தரம் மூவரையும் என் கடைசி மூச்சு நிற்கும் வரை நன்றியோடு நினைத்திருப்பேன்.

வாசித்துவிட்டு பேசுங்கள்.



No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...