இந்தவார ‘நீயா நானா’ நமக்கு சில படிப்பினைகளைத் தந்தது என்றே கருதுகிறேன். ஊடகங்களின் வலிமை என்ன என்பதை, ஊடகங்கள் மக்களுக்காக மக்களோடு நின்றால் மக்கள் எதையும் வெல்லக்கூடிய ஆற்றலை பலத்தினைப் பெறுவார்கள் என்பதை எல்லோரது தலைகளையும் அடித்து சத்தியம் செய்தது.
ஒரு பதினைந்து அடி தூரத்தில் நேருக்கு நேராக தங்களைச் சுரண்டும் சாப்பாட்டுக்கடை முதலாளிகளை வாடிக்கையாளர்கள் மிக மிகச் சரியானதொரு நேர்கோட்டில் எதிர்கொள்ள வைத்த விதம் மிக அற்புதம்.
ஆரம்பத்தில் ‘காசுக்குத் தகுந்த கடை’ இருப்பதாகவும் அவரவர் அவரவர் வசதிக்கேற்ற கடைக்குப் போக வேண்டியதுதானே என்றும் நாங்கள் என்ன வெற்றிலை வைத்தா எல்லோரையும் அழைத்தோம் என்பதுமாதிரியான ஆதிக்க குரலெடுத்துதான் முதலாளிகள் பேசத் தொடங்கினர்.
வாடிக்கையாளர்கள் தரப்பிலிருந்தும் ஏறத்தாழ இதே அளவிலான உரத்த எதிர் குரல்தான் ஒலிக்க ஆரம்பித்தது.
ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் ,” நாங்க என்ன சார் செய்வது, இட வாடகை, ஆடம்பரமான இன்ஃப்ரா என்பதாக நாங்கள் செலவு செய்ய வேண்டியிருக்கிறதே” என்று அவர்களது தரப்பு நியாயத்தை கேட்கிற குரலில் முதலாளிகளைப் பேசவைத்தது அந்த நிகழ்ச்சி.
“நாங்களும் என்ன சார் கேட்கிறோம், நியாயமான விலையில் கிடைத்தால் நல்ல தூய்மையான உணவை எங்களைமாதிரி மத்தியதர மற்றும் ஏழை மக்களும் சாப்பிடுவேமே” என்று இளகிய தோழமைக் குரலெடுத்து வாடிக்கையாளர்களை பேச வைத்தது.
உழைப்பாளிகள் குறித்து அலசியது.
சமீபத்தில் ஒரு பெரிய ஹோட்டலின் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்யும் பொழுது இறந்துபோன ஊழியர்கள் குறித்து விவாதம் திரும்பியபோது இருக்கையின் விளிம்பிற்கே வந்தேன். ‘அதற்கென்ன செய்ய முடியும், அது அப்படித்தான்’ என்பதாக பேசத் தொடங்கிய முதலாளிகளை அந்தச் சிறுபிள்ளை சிந்தன் கையேந்தியபடி தனது உருகிய குரலால் ,’தவறுதான், இனி இப்படி நடக்கக்கூடாதுதான், நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்’ என்று பேச வைத்தது, என்று ஏராளம் சொல்லலாம்.
ஹோட்டல்களில் விலை மட்டுப்பட்டால் ஏறத்தாழ அத்தனை குடும்பங்களும் அவ்வப்போது ஹோட்டல்களுக்கு செல்லக் கூடும். இதன்மூலம் பெண்களின் அவஸ்தை கொஞ்சம் குறையும் என்ற கோணம் கவனிக்கப் பட்டிருக்கலாம்.
நிச்சயமாக அன்று வந்த வாடிக்கையாளர்களை முதலாளிகளின் பக்கம் இருக்கக்கூடிய கஷ்டங்களையும், முதலாளிகளை வாடிக்கையாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலிக்க வைத்திருக்கும்.
இதுமாதிரி விவாதங்கள் அடிக்கடி நிகழ்வது நல்ல விளைவுகளைத் தரும்.
இதன் வெற்றியில் கோபியின் பங்கு அளப்பரியது. அப்படி ஒரு நெறியாள்கை. தோழர் அந்தோணியின் பங்கு அசாத்தியமானது.
நாங்கள் பார்க்க வளர்ந்த பிள்ளை சிந்தனது விவாதம் அப்படியொரு வகையானது. 25 வயதின் வேகமும் 70 வயதின் அனுபவமும் ஒருசேர்ந்த கலவை.
இவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் அணைப்பும் முத்தங்களும்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்