அப்பாவின் மரணத்தின் போது எந்தச் சடங்கிற்கும் ஊர்க்காரர்கள் என்னை உட்படுத்தவில்லை. அப்பாவைக் குளிப்பாட்ட நீர் எடுக்கக்கூட என்னை அழைக்கவில்லை.
ஆனால் அடுத்த நாள் பால் தெளிக்கும் நிகழ்வின்போது என்னை அழைக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு வந்தது.
பால் தெளிப்பு முடிந்ததும் காகங்களுக்கு படையல் வைத்து கும்பிட்டார்கள்.
கிஷோரும், அண்ணாராபியும் நீர் தெளித்து வணங்கி காகத்தை அழைத்தார்கள். பத்து நிமிடக் காத்திருத்தலுக்குப் பிறகும் எந்தக் காகமும் படையலைத் தொடவில்லை.
பிறகு அண்ணாராபி மட்டும் போனான், கும்பிட்டான், அழைத்தான்.
பலனில்லை.
பிறகு கிஷோர். பிறகு அவர்கள் இருவரும் கூட்டாய்.
காகங்கள் அசையவில்லை.
ஒருவர் இப்போது என்னிடம் வந்தார்,
“ கொஞ்சம் கோபித்துக் கொள்ளாமல் ஒரு முறை நீங்கள் முயற்சி செய்யுங்களேன். உங்களுக்காகக் கூட அப்பா காத்திருக்கக் கூடும்.”
ஒன்றும் புரியவில்லைதான். ஆனாலும் ஏதோ மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவன்போல போனேன்.
தண்ணீரை வார்க்கச் சொன்னார்கள். செய்தேன். குனிந்து கும்பிடச் சொன்னார்கள். செய்தேன்.
“ வந்துடுங்க”
வந்தேன்.
என்ன ஆச்சரியம் காகங்கள் படையலை எடுக்கத் துவங்கின.
எல்லோரும் சொன்னார்கள்,
” வாத்தியாருக்கு பெரிய பையன் மேலதான் பிரியம்.”
காகங்களுக்கு தெரியும் நான் அய்யோ பாவமென்று.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்