தமிழ்நாட்டில் கழிவுநீர் சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி ஏறத்தாழ 200பேர் இறந்து போயிருப்பதாகவும் அவர்களது குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாய் நன்கொடை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மீது ‘மாற்றத்திற்கான இந்தியா’ என்ற அமைப்பைச் சார்ந்த நாராயணன் அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார்.
வழக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உயர்நீதிமன்றம் என்று வழக்கு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுகுறித்து எல்லாம் விவாதிக்க நமக்கெதுவும் இல்லை.
ஒருகட்டத்தில் உயர்நீதி மன்றம் பாதிக்கப் பட்ட குடும்ன்பங்களுக்கு பத்துலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தமிழக அரசிற்கு உத்தரவிடுகிறது.
இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதியன்று பாதிக்கபட்ட குடும்பங்களில் 41 குடும்பங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் எனவேதான் இழப்பீடு வழங்க இயலவில்லை என்றும் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருப்பதாக இன்றைய (27.08.2016) தீக்கதிர் சொல்கிறது.
சில அய்யங்களை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள தேவை இருப்பதாகப் படுகிறது.
நாராயணன் சொல்லியிருப்பது ஏறக்குறைய 200 குடும்பங்கள். இதுவே நிச்சயமாக குறைவான மதிப்பீடுதான். பாதிப்புகள் அனைத்தும் பதிவு செய்யப் படுவதில்லை. அதற்கான வாய்ப்புகளும் மிகக் குறைவு.
இதில் 41 குடும்பங்களைக் கண்டுபிடிக்க இயலவில்லை என்றால் மீதமுள்ள 159 குடும்பங்களும் கண்டுபிடிக்கப் பட்டுவிட்டதாகத்தானே பொருள். எனில், கண்டுபிடிக்கப்பட்ட 159 குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டதா?
இல்லை 41 குடும்பங்களையும் கண்டுபிடித்தால்தான் 200 குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படுமா? எனில் ஒருக்கால் இந்த 41 குடும்பங்களை கண்டுபிடிக்க இயலாது போனால் கண்டுபிடிக்கப்பட்டதாக நாம் கருத இடமுள்ள 151 குடும்பங்களுக்கும் இழப்பீடு கிடையாதா?
அடுத்ததாக நமக்கெழும் அய்யம் இந்த 41 குடும்பங்களை ஏன் கண்டுபிடிக்க முடியாது போனது?
அவர்களை தேடியதற்கான ஆதாரங்கள் என்ன?
அவர்கள் என்ன அநாதைகளா?
உயிருக்கு ஆபத்தான வேலைகளை செய்வதற்கு இயந்தரங்களைப் பயன்படுத்தாமல் இன்னும் எத்தனை காலம் மனிதர்களை பயன்படுத்துவீர்கள்?
சரி, அப்படி பயன்படுத்தும் வேலைகளில் மனிதர்களை ஈடுபடுத்தும்போது ஏன் அவர்களது முகவரியை வாங்க மறுக்கிறீர்கள்?
ஒருவரை கல்லாப்பெட்டியில் அமரவைக்கும் முன் இப்படி முகவரி கேட்காமல் அமரவைப்பார்களா?
எனில் கல்லாப் பணத்தைவிட கழிவுநீர் சுத்தம் செய்யும் தலித்தின் உயிர் மலிவானதா?
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்