Monday, August 22, 2016

எங்கள் பாட்டன்களுக்கு நூற்றி ஐம்பது ஏக்கரில் சுடுகாடே இருந்தது

வாஷிங்டனுக்கு, டோக்கியோவிற்கு, மெல்போனுக்கு மற்றும் இன்ன பிற பெருநகரங்களுக்கு எந்தெந்த விமான நிறுவனங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை விமானங்களை இயக்குகின்றன என்பது அத்துப் படியான அளவிற்கு நம்மில்ல பலருக்கு நமது கிராமத்திற்கு ஒரு நாளைக்கு எத்தனை முறை நகரப் பேருந்துகள் வந்து போகின்றன என்பது தெரியாது.
பல மைல்களுக்கு அப்பால் கிடக்கிற பிரமிடுகளின் மேண்மை குறித்து, தொன்மம் குறித்து மணிக் கணக்காய் சிலாகிப்பதில், பாரம் பாரமாய் எழுதிக் குவிப்பதில் கொஞ்சமும் கஞ்சத் தனமே இருப்பதில்லை தமிழனுக்கு. அதில் நமக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படிக்கு வருத்தமும் இல்லை.
சாவதற்குள் ஒரு முறையேனும் பிரமிடுகளைப் பார்த்துவிட்டு வந்துதான் சாக வேண்டும் எனப் பிடிவாதமாய் ஆசைப்படும் நண்பர்கள் எனக்கும் உண்டு.
எரிச்சலே கொள்ளாமல், ஒரு புன்னகையோடு இவர்களைக் கடந்து போகும் பக்குவம்கூட நமக்கு
வந்துவிட்டது. ஆதிச்ச நல்லூர், மணல்மேடு மற்றும் காரைமேடு போன்ற நமது தமிழ்க் கிராமங்களில் நடக்கும் போதே கால்களில் மிதிபட்டு உடைந்து அழிந்து
வரும், நமது தொன்மையும் மேன்மையும் மிக்க நாகரீகத்தின் சின்னங்களான முதுமக்கள் தாழிகள் குறித்து எந்த அக்கறையும் இவர்களுக்கு இருப்பதில்லை
என்பதுதான் நமது கவலையே.
பெருந்தன்மையினால் தாராளமாய் பிசைந்து செய்யப்பட்ட மனிதனால்கூட மேற்சொன்ன எந்த ஒரு ஊரிலும் இன்றைய தேதியில்கூட ஐயாயிரம் பேருக்கு மேல் வாழ்வதாய்ச் சொல்லிவிட முடியாது. அப்படிப்பட்ட குக்கிராமங்கள் ஒவ்வொன்றிலும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றி ஐம்பது ஏக்கரை ஒட்டிய நிலப் பரப்பில்
அமைந்துள்ள சுடுகாடுகளின் முக்கியத்துவம் குறித்து, சர்வதேச ஆய்வாளர்கள்அக்கறை கொள்ளாததில் நியாயம் இருக்கலாம். தமிழாய்ந்த தமிழர்களின் கவனம்கூட இவற்றின் பக்கம் திரும்பாததுதான் உலகம் ருசித்த சோகங்களிலேயே தலையாய சோகம்.
குருஷேத்திரப் போர் நடந்ததாகக் கூறப்படும் இடமருகில்கூட இவ்வளவு பரந்த நிலப் பரப்பில் சுடுகாடு இருக்கிறதா? அல்லது இருந்து அழிந்து போனதற்கான சுவடுகலாவது அல்லது புராணவழி சான்றுகளாவது இருப்பதற்கான ஆதாரங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்றால் அதுவுமில்லை.
எத்தனையோ லட்சாதி லட்சம் குதிரைகளும் யானைகளும் வீரர்களும் பங்கு பெற்றதாகக் கூறப்படும் போர்க்களமான குருச்கேத்திரத்திற்கு அருகே காணக்
கிடைக்காத ஒரு நிலப் பரப்பு நிலத்தில், தமிழ் மண்ணில் சுடுகாடுகள் பரந்து விரிந்து கிடக்கின்றன என்றால் என்ன பொருள்? இத்தனை பெரிய பரப்பளவில் சுடுகாடுகள் ஏதோ ஒரு புள்ளியில் தேவைப் பட்டிருக்கின்றன. எனில் பெரியதும் உக்கிரமமானடுமான போர்கள் அங்கே நடந்திருக்கக் கூடும் என்று கொள்வதற்கும் வாய்ப்புண்டு.
இது உண்மையெனில் பொறாமை கொள்ளுமளவிற்கு மேன்மையும் அளப்பரிய வளங்களைக் கொண்டதுமான சாம்ராஜ்யங்கள் அங்கே இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. எனில் இது குறித்த ஆய்வுகள் போதுமான வகையில் என்றுகூட அல்ல, இன்னும் தொடங்கப் படவே இல்லையே ஏன்?. உலக கவனம், இந்திய கவனம் என்பவற்றை எல்லாம் கூட ஆடித் தள்ளுபடி , பொங்கல் தள்ளுபடி அல்லது இது போன்ற ஏதாவது ஒரு தள்ளுபடி என்கிற வகையில் தள்ளுபடி செய்துவிடலாம். ஏனெனில் தமிழ்ச் சுடுகாடுகளின் தொன்மையேகூட அவர்களைக் கலக்கிப் புரட்டி வெட்டிச் சாய்த்திருக்கலாம்.அதையும் இதையுமென்றுஅலைந்தலைந்து ஆய்வு செய்யும் எங்கள் சான்றார்ந்த பெரியவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இது குறித்து கவனம் சாயாததன் காரணம்தான் என்ன முயன்றும் பிடிபட மறுக்கிறது.
மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா பற்றித் தமிழகத்தில் உள்ள பள்ளிப் பிள்ளைகள் அனைவருக்கும் சரியாகவோ தவறாகவோ கூடுதலாகவோ சற்றுக் குறைச்சலாகவோ இருக்கலாம், ஆனால் நிச்சயமாகத் தெரியும். மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா ஆகியவற்றின் தொன்மைச் சிறப்புகள் குறித்து கற்றுத் தெளியாமல் நமது பிள்ளைகள் பள்ளிகளைக் கடந்துவிடக் கூடாது என்கிற கவனத்தோடு நமது கல்வித் திட்டம் கட்டமைக்கப் பட்டுள்ளது. அதில் நமக்கெதுவும் பிரச்சினை இல்லை. இன்னுஞ்சொல்லப் போனால் இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் அதிலும் குறிப்பாக பண்டைய நகர நாகரீகம் ஆகியவற்றின் தொன்மச் சிறப்புகள் குறித்து நம் பிள்ளைகள் தெளிவுறக் கற்றுத் தேரவேண்டும் என்பதில் முரட்டுத் தனமான பிடிவாதமே நமக்குண்டு. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமெனில் உலகின் எந்த ஒரு நாகரீகத்தின் பழமை மற்றும் தொன்மச் சின்னங்கள் குறித்தும் நம் குழந்தைகளுக்குத் தெளிவுறச் சொல்லித் தரவேண்டும் நம் எல்லை தாண்டிய ஆசையை யாரும் சந்தேகப் பட முடியாது.
நமது ஆதங்கமெல்லாம், நமது தமிழ்மண்ணின் மையப் பகுதியான அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள உட்கோட்டையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் அந்தப் பூமிக்குக் கீழே புதையுண்ட நிலையில் கட்டடங்களும் சிலைகளும் காணப்பட்டு, போதிய பராமரிப்பும் ஆய்வுமின்றி அழிந்து வருவதைப் பற்றிய கவலை யாருக்கும் இல்லாதது குறித்துதான். ஆய்வாளர்களோ, கல்வியாளர்களோ, அரசுகளோ அது குறித்துப் போதிய அக்கறை காட்டாது மௌனிப்பதன் மர்மம் என்ன?. கங்கைகொண்ட சோழபுரம் ஆலயம் வரை செல்லும் கல்விச் சுற்றுலாக்கள்கூட அங்கிருந்து கிராம மக்களுக்கான நடை தூரத்திலிருக்கும் உட்கோட்டைவரை நீளாமல் போவதில் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது.
கிரஹாம் ஆன் கூக் என்ற அறிஞர் பூம்புகாருக்கும், நாகைக்கும் இடையே நடத்திய ஆழ்கடல் ஆராய்ச்சியில் பதினோராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட மிகுந்த நுணுக்கமான நகர கட்டமைப்புகளைக் கொண்ட ஒரு நிலப் பகுதி இப்பகுதியில் கடலுக்குள் மூழ்கியிருக்கிறது என்பதைத்தெளிவு படுத்தினார். அது குறித்து, அது சரியல்ல என்கிற அளவில்கூட வாய் திறக்காமல் உலகச் சமூகம் மௌனித்துக் மர்மம் புரிகிறது. அதை உண்மையென ஒத்துக் கொண்டால் மெசபடோமியாவைவிடப் பழமையும் தொன்மையும் வாய்ந்த நாகரீகத்திற்கு சொந்தப் பூமி தமிழ்ப் பூமி என்ற உண்மையை ஒத்துக் கொள்வதாய் ஆகும். அதை அவர்களால் ஜீரணிக்க இயலாது. ஆயிரம்தான் தமிழ்ப் பூமியின் நாகரீகம் என்றாலும் அது இந்திய நாகரீகம்தானே?. பிறகேன் இந்தியச் சமூகமும் மௌனிக்கிறது?. இதையெல்லாம் விடுங்கள், உலகின் எந்தப் பகுதியில் எது கிடைத்தாலும் ஓடியோடி ஆய்ந்து அவற்றின் சிறப்புகளை பெருந்தன்மையோடு ஏற்று பறை சாற்றும் தமிழ் மண்ணின் அறிவு ஜீவிகளே, இதை ஏற்கக் கூட வேண்டாம், சரிதானா என்கிற அளவிலேனும் இதை ஆய்ந்து பார்க்கவும் அஞ்சுவதன் பொருள்தான் என்ன?
கேட்கலாம், "தமிழ்ப் பூமியின் தொன்மத்தை, மேன்மையை ஒப்புக் கொள்வதால் மட்டும் உங்களுக்கென்ன லாபம் வந்துவிடப் போகிறது?." திருப்பிக் கேட்கிறேன்," அது உண்மையெனில் அதை ஒத்துக் கொள்வதால் உங்களுக்கென்ன நட்டம் வந்துவிடப் போகிறது?"
தன் மொழியின், கலாச்சாரத்தின் தொன்மம் அறிந்த சமூகம் அவற்றை மதித்துப் புழங்கும். அதன் மூலம் அந்த மொழியும் கலாச்சாரமும் வளர்ந்து செழிக்கும். தனது மொழி மற்றும் கலாச்சாரத்தின் மேன்மை புரியாத சமூகம் எதுவாயினும் அவற்றைப் புழங்கத் தயங்கி அவற்றின் அழிவுக்குக் காரணமாகும். எனவேதான் கவலைப் படுகிறோம்.
கி.பி.அரவிந்தன் "இருப்பும் விருப்பும்" என்ற தனது நூலில் தாங்கள் தோற்றதற்கான காரணங்களை அலசுகிறார். அவர் சொல்கிறார், " தவறுகளில் இருந்து படிப்பினைப் பெற்று முன்னேறுவதுதான் போராட்டம்." ஆமாம், தனது தவறுகளைத் திருமாத் திரும்பச் செய்யும் இனமோ, சமூகமோ, சொந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடும் குழுவோ, அல்லது எதுவோ ஆயினும் அது அழிந்து போகும்.
காமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்ற நமது சின்னக் குழந்தை சாய்நா சொல்கிறார், " I won the gold because I did not repeat my mistakes."

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...