சென்ற அமெரிக்க தேர்தலின்போது காக்கையில் எழுதிய தலையங்கம்
************************************
முதல்வர் ஜெயலலிதா அவர்களும் கலைஞர் அவர்களும் இன்று ஒரே நாளில் நான்கு முறை சந்தித்து முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து அக்கறையோடு ஆலோசித்தார்கள். ஆலோசனை முடிந்து திரும்பிய கலைஞர் அவர்களை முதல்வர் அவர்கள் வாசல் வரை வந்து புன்னகையோடு கை அசைத்து வழியனுப்பி வைத்தார்கள் என்று ஒரு செய்தி வந்தால் அதைக் கூட நம்பி விடலாம்.
தேர்தல் பிரச்சாரத்தில் கல்வி பேசு பொருளாயிருக்கிறது என்று சொன்னால் அதை நம்ப முடியாதுதான். அதுவும் அது அமெரிக்காவில் என்றால் நான்கும் மூன்றும் எட்டு என்பதை நம்புபவனால்கூட நம்ப முடியாதுதான்.
ஆனாலும் அது உண்மைதான்.
சலனமோ, சந்தேகமோ இலாமல் நம்புங்கள்.
கூப்பிய கரங்களோடு வாக்கு கேட்டுப் போகும் ஒபாமாவை சட்டையை பிடித்து உலுக்காத நிலையில், (வருகிற செய்திகளைப் பார்த்தால் அவரது அவரது சட்டை உலுக்கப் பட்டிருந்தால்கூட அதில் ஆச்சரியப் படுவதற்கு எதுவுமில்லை) மக்கள் கேட்கிறார்கள்,
“உலகில், ராணுவத்திற்காக அதிகம் செலவு செய்யும் முதல் பத்து நாடுகளின் மொத்த செலவைக் காட்டிலும் அமெரிக்காவின் ராணுவ செலவு அதிகமாக்கும் என்று பெருமை பொங்க பேசினீர்கள். எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து ஏராளமாய் பேசினீர்கள்.
அதைப் பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை.
என்ன செய்தீர்கள் இதுவரை கல்விக்காய்? அதை சொல்லுங்கள் முதலில்.
எப்போதாவது எங்கள் குழந்தைகளின் கல்வி குறித்து பேசியிருக்கிறீர்களா?
கல்விக்காக ஒரு போதும் பேசாத நீங்கள்,
மத்திய தர வர்க்கத்து அமெரிக்க குழந்தைகளுக்கே கல்வி கனவாய்ப் போயிருக்கிற நிலையில்,
உழைக்கும், ஏழை அமெரிக்கக் குழந்தைகளின் கனவிலிருந்தும் கல்வி களவாடப் பட்டு விட்ட சூழலில்,
அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் அக்கறையோ கவலையோ கொள்ளாத நீங்கள்,
எந்த முகத்தோடு வாக்கு கேட்டு வருகிறீர்கள்?” என்று நியாயமாக கேட்கிறார்கள்.
கதி கலங்கித்தான் நிற்கிறார் ஒபாமா.
அமெரிக்க அதிபருக்கான இரு வேட்பாளர்களுக்குமே கல்வி பெரும் சவாலைத் தந்திருக்கிறது.
" நாங்கள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறோம். கல்வி குறித்த உங்களது தொலை நோக்குத் திட்டமென்ன?
ஈரான், எகிப்து, எத்தியோப்பியா பற்றிய உங்கள் அப்பிப்பிராயமெல்லாம் எங்களுக்கு வேண்டாம்.
கல்வியை ஏன் மறந்தீர்கள்?
அமெரிக்கப் பள்ளிகளில் இருந்து மணிக்கு 857 மாணவர்கள் வெளியேறுகிறார்கள் என்ற உண்மையோ, 2007 இல் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரப்படி வருடத்திற்கு 12 லட்சம் குழந்தைகள் இடை நின்று போகிறார்கள் என்ற உண்மையோ ஏன் உங்களுக்கு இதுவரை உறைக்காமலே போனது?
கல்வி குறித்த அக்கறை உள்ளவருக்கே எங்கள் வாக்கு” என்று உரத்து கூறுகிறார்கள்.
இதுவரை நேரடியாய் அரசியலில் ஈடுபட்டுப் பழக்கப் பட்டிராத கல்லூரி வாரியமும், நேஷனல் மால் என்ற அமைப்பும் தெருவுக்கு இறங்கி இடை நிற்றலுக்கு எதிராய் போராடத் தொடங்கியுள்ளன.
கல்வி குறித்த வாக்குறுதிகளே இந்த அமெரிக்க தேர்தலைத் தீர்மானிக்கப் போகிறது.
இதில் நாம் கொண்டாட என்ன இருக்கிறது?
இருக்கிறது.
இன்று அமெரிக்காவில் வீசும் புயல் நாளையோ நாளை மறு நாளோ இந்தியாவை வந்து சேரும்.
உலகத்தில் எந்த மண்ணில் தேர்தல் நடந்தாலும் இனி கல்வி அங்கு பேசு பொருளாய் மாறும் என்ற நம்பிக்கையே நமக்கு ஒரு புன்னகையைக் கொண்டு வந்து சேர்க்கிறது.
தீர்மானிக்கிற சக்தியாய் மாறியிருக்கிறது கல்வி.
புன்னகையோடு கொண்டாடுவோம்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்