Thursday, August 25, 2016

நறுக்குகளாய் கவிதைகள் ....




(ஆன்மன் எழுதிய “லெமூரியாக் கண்டத்து மீன்கள்” நூலை முன்வைத்து)
"எனது சொற்கள்
ஏதேனும்
உங்கள் உள்ளத்தை
தொடுகிற நொடியில்
நான் யாரென
நீங்கள் நினைக்கிறீர்களோ
அதுவே
நான்"
என்கிற தன்னறிவித்தலோடு 'லெமூரியாக் கண்டத்து மீன்கள்' என்ற தனது கவிதை நூலைத் தொடங்குகிறார் ஆன்ம ன்
நூல் முழுக்க சின்னதாய் சின்னதாய் கவிதை நறுக்குகள். ஒரு செறிவான காட்சியை, யுகம் யுகமாய் கைமாற்றியளிக்கப் பட்ட வலியை, சோகத்தை சுமையை, காதலை,அன்பை, ஆதங்கத்தை நம்மிடம் கவிதையாய் கடத்துவதற்கு ஆன்ம னுக்கு ஏழெட்டு வார்த்தைகளே போதுமானதாக இருப்பதுதான் எனக்கிவரிடம் இருக்கும் பெருவியப்பு.
“கூண்டைத் திறந்துவிடு
தூர எறிகிறேன்
தூக்கிச் செல்
நீ அணிவித்த மகுடத்தை”
இதை எப்படி வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம். தாய்நாடு, தெய்வம் அது இது என்று எனக்கு நீ இட்ட மகுடங்களை எல்லாம் கழட்டி எறிகிறேன். என்னை கட்டவிழ்த்துவிடு என்ற பெண்ணின் குரலாக இதை கொள்வதற்கும் இடமுண்டு.
நூலில் இணைக்கப்பட்டு நாம் விரும்பும் உசரத்தில் பறக்கவிடப்படும் பட்டத்தை பறக்கிறது என்பதே பிழை அல்லவா. ஆன்மன் எழுதுகிறார்,
“காற்றை
நிர்ப்பந்திக்காதே
நூலைக் கைவிடு
பறக்கட்டும்
பட்டம்”
இப்போது யோசியுங்கள் பட்டத்தை நூலில் கட்டிக் கொண்டு ஒருமுனையில் பட்டத்தை கையில் பிடித்துக் கொண்டு பட்டம் பறக்கிறதுஎன்று சொல்லும் பைத்தியக்காரத்தனத்தை ஆறே வார்த்தைகளில் பகடி செய்கிறார்.
“செங்கற் சூளையில்
அடமானமிருக்கும்
மனைவிக்காக
இரண்டாவது குவளை
மதுவை அருந்துகிறான்
முதல் குவளை
பன்னிரண்டு வயது
மகளுக்காக:”
எப்பேர்பட்ட வலியை எவ்வளவு எளிமையாக இந்தப் பிள்ளையால் எப்படிச் சொல்ல முடிகிறது
“பருந்தின்
நிழலை
விரட்டிக் கொத்துகிறது
கோழிக் குஞ்சு” என்ற கவிதையை நான் இந்தத் தொகுப்பின் சிறந்தக் கவிதையாகப் பார்க்கிறேன்.
நறுக்குகளை கவிதையாகத் தருவது எளிதாகவும் வாடிக்கையாகவும் இருக்கிறது. ஆனால் ஆன்மன் கவிதகளை நறுக்காக்கித் தந்திருக்கிறார்.
அருள்கூர்ந்து இவனைக் கொண்டாடுவோம். சத்தியமாய் இவனுக்குள் ஒரு பிரமாண்டம் புதைந்து கிடக்கிறது
இதுமாதிரி நல்ல நூல்களைத் தொடர்ந்து கொண்டுவரும் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் பூபாலன், அம்சப்ரியா உள்ளிட்ட தோழர்களுக்கு என் முத்தம்
நூல் வெளியீடு
**********************
பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
பில்சின்னாப்பாளையம்
சமத்தூர் அஞ்சல்
பொள்ளாச்சி வட்டம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...