Monday, August 8, 2016

அசுத்தமாய் பெண் உடல் எனில்

கட்டாயத் தற்கொலையும்
கொலைதான்

என்று திரைப்பட நடிகை சோபா அவர்கள் தற்கொலை செய்துகொண்ட பொழுது கவிஞர் வைரமுத்து எழுதினார். அப்போது மிகுந்த பரபரப்பாக பேசப்பட்ட வழக்கு இது. ஆனால் இன்றுவரை அந்த வழக்கு எந்த உண்மையையும் கண்டடைந்ததாகத் தெரியவில்லை. அந்த வழக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதேனும் ஒரு விதத்தில் பரபரப்பாக பேசப்படும் எந்த ஒரு வழக்கும் எதையும் உருப்படியாக கண்டடைந்ததாக வரலாறில்லை. அதுவும் ஒடுக்கப்பட்ட மக்கள்  மற்றும் பெண்கள் சம்பந்தப்பட்ட பெரும்பான்மை வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டதாய் சத்தியமாய் இல்லை. இந்த இடத்தில்எல்லா வழக்குகளிலும்என்று குறிப்பிடாமல்பெரும்பான்மை வழக்குகளில்என்று குறிப்பிடுவதைக்கூட எனது பெருந்தன்மையாக கொள்ளலாம்.

ஏதேனும் ஒரு நிர்ப்பந்தத்திற்காக ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அது கொலை வழக்காகவே பதியப்பட வேண்டும். அந்த நிர்ப்பந்தத்தை, அழுத்தத்தை யார்கொடுத்தது என்று கண்டறிந்து அவர்மீது கொலை வழக்கு பதிய வேண்டும்.

அந்த வகையில் பார்த்தால் சேலம் வினுப்பிரியாவின் தற்கொலை வழக்கும் கொலை வழக்காகவே கொள்ளப்பட வேண்டும்.

சேலம் வினுப்பிரியா தற்கொலை செய்துகொள்வதற்கான காரணமென்ன?

யாரோ ஒரு இளைஞன் வினுப்பிரியாவை காதலித்திருக்கிறான். அதை அவளிடமும் தெரியப்படுத்தி அவளது சம்மதத்தைக் கேட்டிருக்கிறான். இவளுக்கோ அவன்மீது எந்தவிதமான காதல் உணர்வுநிலையும் ஏற்படவில்லை. இதை அந்த இளைஞனிடம் வினுப்பிரியா தெரிவித்திருக்கிறாள்.

இந்தப் புள்ளி வரைக்கும் அனைத்தும் இயல்பாகவே நடந்திருக்கிறது. யாரையும் இதில்குறை சொல்வதற்கில்லை. இந்தச் சமூகத்தில் காதலை ஒரு பருவமெய்திய ஒரு யுவதிமீது ஒரு இளைஞனுக்கோ அல்லது ஒரு இளைஞன் மீது ஒரு யுவதிக்கோ காதல் ஏற்படுவதென்பது வெகு இயல்பானது. உரியவரிடம் அதை தெரியப்படுத்துவது என்பது மிக மிக நேர்மையானது. சில இடங்களில் உடனே பற்றிக் கொள்ளலாம். சில இடங்களில் கொஞ்சம் தாமதமாகலாம். சில இடங்களில் ஒருதலையாக மாறுவதற்கும் இடமிருக்கிறது.

தங்களது காதல் ஒருதலையாக மாறும்போது அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதில்தான் பிரச்சினையே ஆரம்பமாகிறது.

ஒரு சிலர் அதை வெகு இயல்பாக எடுத்துக் கொண்டு நாகரீகமாகப் பிரிவதும் உண்டு. சிலர் அதை விளையாட்டாய் எடுத்துக் கொள்வதும் உண்டு. அடுத்ததொரு பேருந்தும் இல்லாமல் இல்லை, அடுத்ததொரு ஆளும் இல்லாமல் இல்லை என்று கொள்பவர்களும் உண்டு.

காதலில் தோற்ற சிலர் கவிதை நூல்களைக் கொண்டு வந்ததும் உண்டு. சிலர் தேவதாஸ் மாதிரி தாடி வளர்த்துக் கொண்டு மதுவில் கறைவதும் உண்டு.

இதுவரைக்கும் பிரச்சினை இல்லை. இன்னும் சிலர் காதலில் தோல்வியுற்றதும் ஏதோ வாழ்க்கையே இனி இல்லை என்பதாக முடிவெடுத்து தற்கொலை செய்துகொள்வதுண்டு. இதைக்கூட இது அவரையும் அவரது குடும்பத்தையும் மட்டுமே பாதிக்கும் என்பதால் இந்தப் புள்ளியில் கவனத்தில் கொள்ளத் தேவை இல்லை.

காதலை சொல்வதற்கு தனக்கிருக்கும் அதே அளவு உரிமை அதை நிராகரிப்பதற்கும் மற்றவர்க்கு உண்டு என்பதை உணராமல் ஏதோ ஒரு வகையில் மற்றவரை நிர்ப்பந்திப்பது, அழுத்தத்தை தருவது என்று இறங்குவதுதான் அறுவறுப்பின் உச்சமாக அமைகிறது. அதுவும் நிராகரிக்கப் படுபவர் ஆணாக இருக்கும் பட்சத்தில் அந்தப் பெண்ணை பழிவாங்குவது என்ற அளவிற்கு வந்து நிற்கிறது. சிலர் கொலையே செய்கிறார்கள். சிலர் மற்றவர் தற்கொலை செய்துகொள்ளும் சூழலை உருவாக்குகிறார்கள்.

வினுப்பிரியா விஷயத்தில் இதுதான் நடந்திருக்கிறது.

சுரேஷ் என்ற இளைஞன் வினுப்பிரியாவை காதலித்திருக்கிறான். வினுப்பிரியா மறுத்திருக்கிறார். ஆனாலும் சுரேஷ் வினுப்பிரியாவின் பெற்றோரிடம் நேரடியாக சென்று பெண் கேட்டிருக்கிறார். அவர்களும் மறுத்திருக்கின்றனர்.

இந்தப் புள்ளியில் அந்த இளைஞன் கோவமடைவது சரியா தவறா என்றெல்லாம் விவாதிப்பது எதற்கும் உதவாது என்றே தோன்றுகிறது. அது தவறாகக்கூட இருக்கலாம். ஆனால் அது இயற்கையானது. அதற்குப் பிறகு நடக்கும் விஷயங்களே அதிக கவலை அளிப்பதாக உள்ளன.

தன் காதல் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவனுக்கு நல்ல நண்பர்கள் வாய்த்திருப்பின் அவனை ஆற்றுப்படுத்தி இருப்பார்கள். அவன் ஏதும் செய்துகொள்ளக் கூடாது என்கிற அக்கறையோடு அவனை விட்டுப் பிரியாமல் நிழல்போல் தொடர்ந்திருப்பார்கள்.

இவனுக்கு வாய்த்த நண்பன் வேறுமாதிரியாய் இருந்திருக்கிறான். அவன் வினுப்பிரியாவின் முகத்தை வேறு ஒரு நிர்வாணப் படத்தோடு இணைத்து மார்பிங் செய்து கொடுத்திருக்கிறான். அதை சுரேஷ் இணையத்தில் விட்டிருக்கிறான். இதைப் பார்த்ததும் வினுப்பிரியாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்கள். அங்கு ஒருவர் இதன்மீது நடவடிக்கை எடுக்க ஒரு அலைபேசியை கையூட்டாகப் பெறுகிறார். இவ்வளவிற்குப் பிறகும் புகார்மீதான நடவடிக்கை தொடங்காமலே இருக்கிறது. ஒரு புள்ளியில் அந்தக் குழந்தை தற்கொலை செய்து கொள்கிறாள்.

காவல்துறை உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தத் தற்கொலையை தவிர்த்திருக்கலாம் என்கிறார்கள். வினுவின் பெற்றோர்கள் அவள்மீது இன்னும் கொஞ்சம் கவனமாய் இருந்திருந்தாலோ அல்லது சுரேஷினுடைய பெற்றோரிடம் இது குறித்து பேசி ஒரு வகையான இணக்கத்தை ஏற்படுத்தியிருந்தால் இந்தத் தற்கொலையை தவிர்த்திருக்கலாம் என்கிறார்கள்.
பெற்றோர்கள் தடுத்திருக்கலாம், நண்பர்கள் தடுத்திருக்கலாம், காவல்துறை தடுத்திருக்கலாம் என்கிற எல்லா திக்குகளும் நீளும் குற்றச்சாட்டுகளை நான் நிராகரிப்பதற்கு இல்லை. முடியவும் முடியாது. ஆனால் இவர்களில் யாருக்கும் உள்ள பொறுப்பைவிடவும் இவர்கள் பெற்ற கல்விக்கு இந்த தற்கொலையைத் தடுத்திருக்க வேண்டிய பொறுப்பு அதிகம் என்பதே என் கருத்து.

வினுப்பிரியா ஏன் தற்கொலை செய்து கொண்டாள்?

தனது ஆபாசப்படம் வெளியாகி எல்லோரும் பார்த்து விட்டார்கள். இதன் மூலம் தான் களங்கப் பட்டு விட்டதாகவும், தனது மானமும் தனது குடும்ப மானமும் கேவலப்பட்டு விட்டதாகவும் கருதுகிறாள். இனி தான் உயிர்வாழத் தகுதியற்றவள் என்று குமைகிறாள். இறுதியாய் தன்னைத் தானே மாய்த்துக் கொள்கிறாள்.

தனது நிர்வாணத்தை ஆபாசமென்று அந்தக் குழந்தை கருதியிருக்கிறாளே, அந்தச் சிந்தனையை அவள் பதினாறு வருடங்களாகப் பெற்றக் கல்வி உடைத்துப் போட்டிருக்க வேண்டும்.

பெண் உடலுக்காக அலைகிற சமுகமாகவே ஒருபுறம் இந்தச் சமூகம் கொள்ளப் படுகிறது. இன்னொருபுறம் பெண்ணுடல் புனிதமாகப் போற்றப் படுகிறது. பெண்ணின் நிர்வாணத்தை ஆபாசம் என்று ஒருபுறம் கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் இந்தச் சமூகம் கட்டமைக்க எத்தனிக்கிறது.

”பெண்களுக்கு தொடைகள் ஒரு பிரச்சனை
மார்பகங்கள் பெரிய பிரச்சனை
யோனிகளைப் பற்றி சொல்லவேண்டியதில்லை
அதிலிருந்து ஒழுகும் இரத்தம் கேவலம்
இவற்றைப்பார்ப்பது பாவம்
இவற்றைப்பற்றி பேசுவது பெரும்பாவம்
ஒளித்து மறைத்து 
பொத்திப்பொத்தி பேசக்கூடாத விடயமாய்
அசுத்தமாய் பெண் உடல் எனில்
ஆண்டவனவின் அதி அற்புதப்படைப்பு
தூய்மையின் உறைவிடங்கள் 
ஆண்கள் 
அதற்குளிலிருந்து வராதிருக்கட்டும்”

என்று கோவங்கோவமாக சாடுகிறார் கலாவாசுகி. இந்தக் கவிதையின் கோவச்சாரத்தை கல்வி முறையாக பிள்ளைகளுக்கு பாடத்திட்டத்தின்வழி பந்தி வைத்திருக்குமானால் வினுப்பிரியா தனது நிர்வாணத்தையே ஆபாசமென்று கருதியிருப்பாளா?

இந்த்ப் புரிதலை கல்வி கொடுத்திருக்குமானால் வினு இந்தச் சூழ்நிலையை வேறு மாதிரியாக எதிர்கொண்டிருக்கக் கூடும். “ஆமாண்டா, அது என் உடல்தாண்டா, அதற்கென்ன இப்ப” என்று செம்மாந்து தைரியத்தோடு கேட்டிருப்பாளே. அப்படிக் கேட்டிருந்தால் இன்னொருமுறை இன்னொருவன் இதே காரியத்தை செய்துவிட முடியுமா?

ஆபாசம்தான் பெண்ணுடல் என்பது ஒருபக்க கட்டமைப்பு என்றால் அசுத்தம் என்று மறுபக்கம் அது கட்டமைக்கப் பட்டிருக்கிறது. அரசமுருகுபாண்டியன் எழுதிய அந்தக் கவிதை நினைவிற்கு வரவில்லை. ஆனால் அதன் சாரம் இம்மி பிசகாமல் நினைவில் உள்ளது.

அவனும் அவது இணையரும் போகிற வழியில் ஒரு பெண் தெய்வ ஆலயம் வருகிறது. சரி ஒரு எட்டு உள்ளே போய் வழிபட்டு வந்துவிடலாம் என்று தனது மனைவியை அழைக்கிறான். அவரோ தான் தீட்டாயிருப்பதால் ஆலயத்திற்குள் வரக்கூடாது என்கிறார். உடனே அவன் உள்ளே இருப்பதும் பெண் தெய்வம்தானே அதற்கு தீட்டு எனில் ஆலயத்தை விட்டு எங்கே போகும் என்பதாக அந்தக் கவிதையை நிறைவு செய்திருப்பான்.

பெண்ணுடலை ஆபாசம் என்கிறான், அசுத்தம் என்கிறான். அந்த உடலுக்காகத்தான் கொலையே செய்கிறான். இதைச் சீர் செய்யாமல் எத்தனை சந்திராயன்களை வெற்ரிகரமாக விண்ணுக்கு அனுப்பி என்ன பயன்.

ஒரு வாதத்திற்கு பெண்ணுடல் ஆபாசமானது என்றே ஒத்துக் கொள்வோம். அப்போதும்கூட தனது உடலே ஆபாசம் என்றானபின் அதனோடு வாழத்தானே வேண்டும் அந்தப் பெண். எனில் ஆபாசத்தை ரசித்தவந்தானே குற்ரவாளியாக வேண்டும். எனில் குற்ரத்தைச் செய்த அந்தப் பையந்தானே தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும்.

இப்படி எப்படிப் பார்த்தாலும் பெண்ணை ஆபாசமாக, அழுக்காக சொல்லித் தருகிற சமூகக் கற்பிதங்களுக்கு எதிராக கல்வி குழந்தைகளை தயார் செய்திருக்க வேண்டும்.

ஆணும் பெண்ணும் சமம்கூட அல்ல, எதிர்சமம் என்பதை இனியேனும் சொல்லித் தரத் தவறுமானால் இந்தக் கல்வி அய்யோ என்று போகட்டும். யாரும் உசத்தி அல்ல, யாரும் தாழ்த்தியும் அல்ல, இருவரும் சமௌம் அல்ல. ஆண் ஆண்தான், பெண் பெண்தான். இவனை அவனும் அவனை இவளும் முழுமையாக்குகிற நிறைவிகள் இருவரும் என்கிற எளிய எதார்த்தத்தை கல்வி குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.

மூக்கு மாதிரி, உதடு மாதிரி மொலைகளும் யோனியும் பெண்களின் உறுப்புகளே. உறுப்புகளைக் குறிக்கும் வார்த்தைகள் எப்படி கெட்ட வார்த்தைகளாய் திரிக்கப் பட்டன.

குழந்தைகளிடம் காதைக் காட்டி காது என்கிறோம். விரலைக் காட்டி விரல் என்கிறோம். யோனியைக் காட்டி ஒன்று கக்கா என்கிறோம் அல்லது ‘ஆய்’ என்று சொல்லித் தருகிறோம். ஏன் யோனியை யோனி என்று சொல்லித்தர மறுக்கிறோம். கேட்டால் அது கெட்ட வார்த்தை என்கிறோம்.

”அந்தக் கவிதைக்கு நான் பரிசு தந்தேன் கட்டிலின் மேலே” என்ற பாடல் வரிகளும், “பொம்பள சிரிச்சா போச்சு” என்பவையும்தான் கெட்ட வார்த்தைகளே அன்றி யோனி அல்ல என்பதை புரிந்து கொள்வதும் புரியத் தருவதும் அவசியம்.

”ஒன்றுமில்லை, பெண்கள் பிரசவ அறையில் அனெஸ்தீசியா கொடுப்பவரிலிருந்து ,உதவியாளர் வரை ஆண்கள் உண்டு. இந்தப் புரிதலோடுதான் முகநூல் ஆபாசப் பக்கங்களைப் பார்க்கிறீர்களா? பெண்கள் வெறும் முலையும் இல்லை,யோனியும் இல்லை .அது வெளியே தெரிவதால் உயிரை விட வேண்டியதும் இல்லை. இதையெல்லாம் தாண்டி வாருங்கள்.” என்று தனது முகநூல் நிலைத்தகவல் ஒன்றில் தெளிவு படுத்துகிறார் தோழர் கீதா நாராயணன்.

பெண் குழந்தைகளுக்கு கல்வி அவசியம் சொல்லித்தர வேண்டும் என்று நான் கருதுகிற அவரது வரிகளை மீண்டும் எடுத்து வைப்பது சரி என்று கருதுகிறேன்.

பெண்கள் வெறும் முலையும் இல்லை,யோனியும் இல்லை .அது வெளியே தெரிவதால் உயிரை விட வேண்டியதும் இல்லை. இதையெல்லாம் தாண்டி வாருங்கள்.”








No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...