அப்பத்தா வீடு
சாமி தாத்தா வீடு
டாடி தாத்தா வீடு
அங்கிள் தாத்தா வீடு என்று
நான்கு வீடுகள் கிரிஷ் சாருக்கு
அவனை
சாமி என்றழைப்பதால்
நான் சாமி தாத்தா
அவன் அம்மா
டாடி என்றழைப்பதால்
அவர் டாடி தாத்தா
அவள்
அங்கிள் என அழைப்பதால்
அவர் அங்கிள் தாத்தா
அப்பத்தா வீட்டைக் காலி செய்துவிட்டு
குடி போன
புது வீட்டிற்குத்தான்
அங்கிள் தாத்தா வீடு என்று
பெயர் வைத்திருக்கிறான்
தாத்தாக்கள் வீடுகள் எல்லாம்
போர் என்றும்
அப்பத்தா வீடுதான் அழகென்றும்
அங்குதான் போக வேண்டுமென்றும்
அடம் பிடிக்கவே
காட்டி வரலாமென்று
தூக்கிப் போனால்
அது
தாத்தா வீட்டைக் காலி செய்து வந்திருந்த
ஒரு குழந்தையின்
அவ்வா வீடாகி இருந்தது
அவ்வா வீடென்றும்
அப்பத்தா வீடென்றும்
சண்டையிட்டுக் கொண்டிருந்த
குழந்தைகள்
கொஞ்ச நேரத்தில் ஒன்றாய்
விளையாட ஆரம்பித்தபோது
வெங்காயம் உரிப்பதில்
அவ்வாவிற்கு
அப்பத்தா உதவ ஆரம்பித்திருந்தார்
வீடும் அவ்வப்பத்தா வீடாகியிருந்தது
விட்டுவிடுவோம்
அப்படியே இருக்கட்டும்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்