அவன் சிறுவனாக இருந்தபோது
அந்தச் செடியை
சுமந்தபடியே அலைந்ததை
யாரும் எதுவும் சொல்லவில்லை என்பதோடு
கொண்டாடவுமே செய்தனர்
அந்தச் செடியும் வளர்ந்தது
அவன் இளைஞனானபோது
அதுவும்
கவாத்து செய்யப்படாத
ஒரு இளைய மரமாய் வளர்ந்திருந்தது
இப்போது
அவன் அந்த மரத்தை சுமந்தலைவது
ஏனோ
அவன் அம்மாவை கொஞ்சம் உறுத்தியது
வேண்டாமென்றாள்
அம்மாவை உதறினான்
அதையே சொன்ன அப்பாவையும்
உதறினான்
முகம் சுளித்த மனைவியை
விலகினான்
ஒருநாள்
அதைக் கொஞ்சம்
இறக்கி வைக்கலாமா என்று
அவனுக்கே யோசனை வந்தபோதுதான்
அவன்
தானந்த மரமாகவே மாறியிருந்ததை
உணரத் தலைபட்டான்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்