Tuesday, October 22, 2024

ஏன் இன்னும் எங்களை வெட்டாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்?

 

 
அன்புத் தோழர் ஒருவரின் தாயார் சமீபத்தில் இயற்கையோடு கலந்து விட்டார். அந்தத் தோழருக்கு ஆறுதல் கூறுவதற்காக நண்பர்கள் சிலர் அவரது வீட்டிற்கு சென்றிருந்தோம்.
 
அம்மாவின் இறுதி நாட்கள் குறித்து, துக்கம் விசாரிப்பதற்காக வந்து போனவர்கள் குறித்து என்று சுழன்றுகொண்டிருந்த எங்களது உரையாடல் மெல்ல அரசியல் நோக்கித் திரும்பியதும் அந்தத் தோழர் இன்றைய அரசியலை இப்படியாக நச்சென்று வரையறுத்தார்,
 
இன்றைய அரசியல் என்பது வேறொன்றும் இல்லை. என்னையும் எட்வினையும் வெட்டிக் கொல்வதற்கு எங்கள் கிராமத்து காலனியில் என் வீடு இருப்பதும், எட்வின் என்று இவனது பெயர் இருப்பதுமே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது
 
ஒரு கணம் அதிர்ந்து போனேன். விரித்தால் சில நூறு பக்கங்களுக்கு போகக்கூடிய செய்தியை இருபத்தி மூன்றே வார்த்தைகளில் இந்த மனிதனால் சொல்ல முடிகிறதே என்று வியப்பின் உச்சிக்கே போகிறேன்.
 
கோல்வால்கர் விரும்பிய அரசியல் இது. இன்றைக்கு இவர்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கும் அரசியலும் இதுதான்.
 
நானும் அந்தத் தோழரும் எங்களால் இயன்ற அளவிற்கு அவர்களுக்கு எதிராகக் களமாடிக் கொண்டிருப்பவர்கள். அவர் காலனியில் பிறந்ததற்காகவும் என் பெயர் எட்வின் என்றிருப்பதற்காகவுமே எங்களை வெட்டியிருக்க வேண்டும் அவர்கள். கூடுதலாக அவர்களுக்கெதிராகக் களமாடிக் கொண்டும் இருக்கிறோம். ஏன் இன்னும் எங்களை வெட்டாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்?
 
எங்களை இன்னும் அவர்கள் வெட்டாமல் விட்டு வைத்திருப்பதற்குக் ஒரே காரணம்தான். இது தமிழ்நாடு. இங்கு அவர்களுக்கு அது அவ்வளவு சுலபமல்ல.
 
இந்துத்துவம் குறித்து அதிகம் பேசப்பட வேண்டியதும் ஆனால் இன்னும் போதுமான அளவு கண்டுணரப்படாததுமான ஒன்று இருக்கிறது. இந்து மதத்தில் பல தெய்வங்கள் உள்ளதென்ற பொதுப் புத்தியிலிருந்துதான் நாம் இந்துத்துவத்தின் அடையாளத்தை உணரத் தலைப்பட்டவர்களாக இருக்கிறோம். இது போதாமை மிக்கது.
 
கோல்வால்கர் இந்து சமூகத்தையே தமது கடவுள் என்கிறார். இந்த சமூகக் கட்டமைப்பின் வடிவம்தான் இந்துக் கடவுளின் உயிர். ஆகவே இந்தக் கட்டமைப்பின் வடிவம் சிதைந்து போனால் தமது கடவுளின் உயிர் போய்விடும் என்று அச்சம் கொள்கிறார். ஆகவேதான் இந்த இந்தக் கட்டுமானத்தின் வடிவமான நால் வர்ணம் சிதைந்து போகாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்று துடிக்கிறார்.
 
பிரம்மனின் தலையில் இருந்து பிறந்தவர்கள் பிராமணர்கள், அவனுடைய தோளில் இருந்து பிறந்தவர்கள் சத்திரியர்கள், அவனுடைய தொடையில் இருந்து பிறந்தவர்கள் வைசியர்கள், அவனுடைய காலில் இருந்து பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றுதான் இந்துத்துவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
 
கோல்வால்கரோ பிராமணர்கள் கடவுளின் தலை என்றும், சத்திரியர்கள் கடவுளுடைய தோள் என்றும், வைசியர்கள் அவனுடைய தொடை என்றும் சூத்திரர்கள் கடவுளுடைய கால் என்றும் கூறுகிறார்.
 
தலை இருக்க வேண்டிய இடத்தில் தலையும், தோள் இருக்க வேண்டிய இடத்தில் தோளும் தொடை இருக்க வேண்டிய இடத்தில் தொடையும் கால் இருக்க வேண்டிய இடத்தில் காலும் அந்த உருவம் அழகோடும் உயிர்ப்போடும் இருக்கும் என்றும் கோல்வால்கர் கூறுகிறார்.
 
சுற்றி வளைத்து கோல்வால்கர் சொல்ல வருவது இதுதான்,
 
தலை இருக்க வேண்டிய இடத்திற்கு செல்வதற்கு தோளோ, தொடையோ காலோ ஆசைப்படக் கூடாது. அவையவை அவையவை இடத்தில் இருப்பதோடு அதனதன் பணிகளை செய்துவர வேண்டும்.
 
கோல்வால்கருக்கும் அவரது சீடர்களுக்கும் இந்த அமைப்பை கீழ்க்காணும் விஷயங்கள் சிதைக்க முற்படும் அல்லது கீழ்க்காண்பவற்றால் நால்வர்ணம் சேதப்படுவதற்கு வாய்ப்புண்டு என்று கருதுகிறார்கள்,
 
1)   நால் வர்ணத்தில் இறுதியாக உள்ள சூத்திரர்களின் எழுச்சி
2)   வர்ண அமைப்பிற்கு நேர் எதிராக கொண்டுவரப்பட்டுள்ள இந்திய அரசமைப்பு சட்டம்
3)   வர்ண அமைப்பினுள் கட்டுப்படாத இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்
 
எண்ஜான் உடம்பில் சிரசே பிரதானம் என்பது வர்ணம் தரும் கௌரவம். எனவே, வர்ணக் கட்டமைப்பிற்கு எதிராக முதல் வர்ணத்தார் ஒருபோதும் கிளர்ச்சி செய்யப் போவதில்லை. இரண்டு மற்றும் மூன்றாவது வர்ணத்தாராலும் இந்தக் கட்டமைப்பிற்கு எதிராக கிளர்ச்சி வெடிக்காது.
 
வர்ணத்திற்குள் இருந்து வர்ணத்திற்கு எதிராக வெடிப்பு கிளம்ப வேண்டும் என்றால் அது சூத்திரர்களால் எழுந்தால்தான் உண்டு. அதிலும் சூத்திரர்களிலும் சூத்திரர்களாக இருக்கக் கூடிய அவர்ணர்களால்தான் இந்த வெடிப்பு ஏற்படும் என்ற சரியான கணிப்பும் கோல்வால்கரிடம் இருந்திருக்கிறது.
 
மனுநீதி மட்டுமே இந்த ஆபத்தில் இருந்து வர்ணத்தைக் காப்பாற்றும் என்ற தெளிவும் கோல்வால்கருக்கும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் இருந்திருக்கிறது. 
 
பிலிபைன்ஸ் நீதிமன்றத்தில் மனுவின் பளிங்கு சிலை இருப்பதாகவும், அதன் கீழேமனித குலத்தின் மிகச் சிறந்த, முதன்மையான மற்றும் உன்னத சட்ட அமைப்பாளர்என்றும் எழுதப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார் கோல்வால்கர்  *1
 
பிலிபைன்ஸ் போன்ற பிற நாடுகளே மனுவைக் கொண்டாடும் போது நாமும் மனுவைத்தானே ஏற்க வேண்டும் என்கிறார்.
 
மனுதான் இன்றைய இந்து சட்டம்  *2 “ என்று கூறுவதன் மூலம் சவார்கரும் மனுதான் இந்தியாவின் சட்டமாகவும் இருக்க வேண்டும் என்கிறார்.
 
இவர்களது ஆசையில் மண் அள்ளிப் போடுகிறது இந்திய அரசமைப்பு சட்டம். அனைவரும் சம்ம் என்கிறது அது. எனவேதான் இவர்கள் இந்திய அரசமைப்பு சட்டத்தை எதிர்க்கின்றனர்.
 
26.11.1949 அன்று இந்திய அரசமைப்புச் சட்டத்தை இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக்குழு ஏற்றது முதல் கோல்வால்கரும்ஆர்கனைசர்இதழும் கொதிக்கத் தொடங்கினர். இன்றும் அது தொடர்கிறது.
 
அவர்ணத்தார்ஒருபோதும் தலையாகிவிடக் கூடாது என்கிற இவர்களது கவனம் மிகத் தொன்மையானது.
 
வர்ணத்திற்குள் கட்டுப்படாத சிறுபாண்மையினரைக் கையாள்வதற்கு அவர்களுக்கு உந்துவிசையாக ஹிட்லரே இருக்கறான். அவனது ஜெர்மெனியை ஒட்டியே இந்தியாவையும் கட்டமைக்க வேண்டுமென்று இவர்கள் வெளிப்படையாக விரும்பினார்கள். இப்போதும் விரும்புகிறார்கள்.
 
அவனது சிந்தனை தொட்டு இந்திய சிறுபாண்மையினர் குறித்து கோல்வால்கர் கூறுகிறார்,
 
அவர்களுக்கு இருப்பது இரண்டே வழிகள். அவர்கள் தேசிய இனத்தோடு இணைவது. அல்லது தேசிய இனத்தவர் அனுமதிக்கும் வரையில் இங்கு தங்கி இருந்து தேசிய இனத்தவர் வெளியேறச் சொல்லும்போது இந்தியாவை விட்டு வெளியேறுவது” *3
 
இப்போது இரண்டு கேள்விகள் இயல்பாக எழலாம்,
 
1)   இப்படி இருக்கையில் நானும் அந்த நண்பரும் எப்படி இன்னும் வெட்டப்படாமல் இருக்கிறோம்
2)   இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்காகவே பதவிக்கு வந்தவர்கள் அரசமைப்பு சட்டப் புத்தகத்தை வணங்க வேண்டியத் தேவை எப்படி வந்தது
 
காரணம் மிக எளிதானது. கோல்வால்கரின் தோழர்களுக்கு எதிரான கடுமையான போராட்டத்தை இடது சாரிகள், காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், சமூக சக்திகள் யாவரும் ஒன்றிணைந்து களமாடியதுதான் அந்தக் காரணம்.
 
களம் இருக்கிறவரை தொடர்ந்து களமாடுதல் அவசியம் என்பது புரியும் நமக்கு.
 
பின் குறிப்பு :  *1, *2, *3 தேவனூர மகாதேவா அவர்களதுஆர் எஸ் எஸ் ஸின் ஆழமும் அகலமும் நூலில் இருந்து
 
- புதிய ஆசிரியன்
    அக்டோபர் 2024
 
 
  
 
 
    ,  
 


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...