Monday, February 13, 2012

ஞாயிற்றுக் கிழமையும் மாணவர்க்கில்லை

” நெடு நாள் திரு முருகா
 நித்தம் நித்தம்
இந்தெழவா?
இந்த வாத்தியாரு சாவாரா?
என் வயித்தெரிச்சல் தீராதா?”

என்ற ஒரு பழைய பாடலை எங்கள் தமிழாசிரியர் திருஞானம் அய்யா அவர்கள் அடிக்கடி கூறக் கேட்டிருக்கிறோம்.

அவர் மாணவராயிருந்த காலத்தில் அதிக நெருக்கடி கொடுக்கும் ஆசிரியர்களைப் பார்த்து மாணவர்கள் இப்படித்தான் பாடுவார்கள் என்றும், மிக நீண்ட செய்யுளை மனப்பாடம் செய்து வரச் சொல்லும் தன்னைப் பார்த்தும் அநேகமாக நாங்களும் இப்படித்தான் பாடுவோம் என்றும் சிரித்துக் கொண்டே சொல்வார்.

“எனக்கு சாவைத் தரச் சொல்லி முருகனிடம் இறைஞ்சினாலும் சரி, பாடலை மட்டும் அவசியம் மனப்பாடம் செய்துவிட்டு வாருங்கள்” என்று எங்களிடம் கறப்பதில் கறாராக இருப்பார்.

ஆக, படிக்கச் சொல்லியோ, அல்லது ஒழுக்க நெறி முறைகளில் அதிக நெருக்கடி கொடுக்கிறவராகவோ இருக்கும் ஆசிரியரை ஏதாவது செய் என்று இறைவனிடம் இறைஞ்சுகிற மாதிரி அமைந்துள்ள இந்தப் பாடலுக்கு வயது எப்படியும் ஓரிரு நூற்றாண்டுகள் இருக்கும்.

எந்தத் தன்னடக்கமும் இல்லாமல் எந்த இடத்திலும் என்னால் ஆகச் சிறந்த ஆசிரியர்களுள் என் தந்தையும் ஒருவர் என்பதை உரத்தக் குரலில் சொல்ல முடியும்.எங்கள் கிராமமான கடவூரில் இன்று இத்தனை பேர் நன்கு படித்து வளமாக இருக்கிறோம் எனில் அதில் அவரது பங்களிப்பும் நிச்சயம் இருக்கிறது. சினிமாவில் பார்ப்பது போல் எங்களூரைச் சுற்றிஎட்டுப் பட்டிகள் உள்ளன. இந்த எட்டுப் பட்டிகளிலும் பணி ஓய்வு பெற்ற இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் அவர் எட்டாம் வகுப்பு ஆசிரியர் என்றே அறியப் பட்டும் அழைக்கப் பட்டும் வருகிறார்.

இன்னமும் எங்கள் வீட்டுக்கு “எட்டாம் வகுப்பு சார் வீடு” என்பதுதான் அடையாளம்.

இப்படி இன்றளவும் நாங்களே கூச்சப் படுகிற அளவுக்குக் கொண்டாடப் படுகிற என் அப்பா சாக வேண்டும் என்று அவரது மாணவர் ஒருவர் எங்கள் ஊரில் உள்ள கருணைகிரிப் பெருமாள் கோவிலில் தேங்காய் உடைத்து மனமுருகி வேண்டியிருக்கிறார். அப்படி வேண்டிக் கொண்ட கருப்பசாமி அண்ணன் இன்றைக்கும் எங்கள் ஊரில் மளிகைக் கடை வைத்திருக்கிறார்.

இது நடந்த போது நான் பிறந்திருக்கவே இல்லை என்று அப்பா அடிக்கடி சொல்வார். எனில் இது நடந்து குறைந்த பட்சம் ஐம்பது ஆண்டுகளாவது கடந்திருக்கும்.

ஆசிரியர் மாணவர் உறவு என்பது எப்போதுமே இப்படித்தான் இருந்திருக்கிறது. கடுமையாக நெருக்கடி கொடுக்கும் ஆசிரியர் செத்துத் தொலைத்தால்தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் எனில் அப்படியே ஆகட்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் மனப்பான்மை புதிதல்லதான்.

என்ன, அப்போதெல்லாம் வாதியாரு சாக வேண்டும் என்று வேண்டி விட்டோமே என்று அந்த மாணாவர் வருத்தப் படும் போது “விடுப்பா நான் என்ன அதனால செத்தா போயிட்டேன் “ என்று ஆற்றுப் படுத்த அந்த ஆசிரியரும் இருந்திருப்பார்.

இன்று ஆயிரம்தான் இர்ஃபான் வருத்தப் பட்டாலும், அழுது புரண்டு அரற்றினாலும் அவனை அள்ளி அணைத்து ஆற்றுப் படுத்த அவனது ஆசிரியை உமா உயிரோடு இல்லை என்பதுதான் வித்தியாசம்.

என்ன நடந்தது? எப்படி நடந்தது? என்பது குறித்து கூட தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. அவர் ஒரு அறிவியல் ஆசிரியரா? இல்லை இந்தி ஆசிரியரா? என்பதற்கும் நம்மிடம் தெளிவான பதில் எதுவும் நம்மிடம் இல்லை. அவர் அறிவியலில் Phd முடித்தவர் என்று சொல்கிறார்கள். அது உண்மை எனில் அவர் ஏன் இந்தி வகுப்பெடுக்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே துருத்துகிறது.

உணர்ச்சி வசப்படுவதோ, அவசரப் படுவதோ அறவே தவிர்க்கப் பட வேண்டும். ஏற்கனவே நார் நாராய்க் கிழிந்து கிடக்கும் ஆசிரியர் மாணவர் உறவு நிலையை இது மேலும் மோசமாக்கி விடும் என்பதை உணர வேண்டும்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தையை தனது ஆசிரியைக்கு எதிராகவே கொலை வாளை சுழற்ற வைத்தது எது?

சத்தியமாய் நம்பலாம், ஒழுங்காகப் படித்து வாழ்க்கையில் உயரச் சொன்ன ஆசிரியையே குத்திக் குத்திக் கொன்று தொலைத்திருக்கிறோமே என்று எஞ்சிய வாழ் நாளெல்லாம் அந்தப் பிள்ளை நிம்மதியற்று அழுவானே. அவனது ஆயுட்கால அழுகைக்கு எது காரணம்?

தகாத சேர்க்கை, சினிமா, ஊடகங்கள் என்று பல்வேறு காரணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கப் படுகின்றன. இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனாலும் கல்விக் கூடங்களிலிருந்த கல்வி சந்தைக்கு கடத்தப் பட்டு, மாணவனை சான்றோனாக்குவது, மனிதப் படுத்துவது என்கிற கல்வியின் உயரிய செயல் திட்டத்திலிருந்து அவனை மதிப்பெண்களை அறுவடை செய்யும் அறுவை எந்திரமாக மாற்றுவது என்கிற நிலைக்கு கல்வியை தனியார் மயம் உந்தித் தள்ளிய நொடியில் இதற்கான விதை விதைக்கப் பட்டதாகக் கொள்ள வேண்டும்.

கொஞ்சம் மனசாட்சியோடு யோசித்துப் பார்ப்போம்,

தான் கொலை செய்யப் படுமளவிற்கு உமா அப்படி என்ன தவறு செய்தார்? அல்லது பத்துப் பதினைந்து முறை கத்தியால் குத்துமளவிற்கு உமா மேல் இர்ஃபானுக்கு என்ன தனிப்பட்ட கோவம்?

நன்கு படிக்கச் சொன்னார். அதில் கொஞ்சம் கடுமை காட்டியிருக்கிறார்.  அவன் ஒத்துழைக்காத போது அவனது பெற்றோரின் கவனத்திற்கு இதைக் கொண்டு போயிருக்கிறார். இத்தகைய நெருக்கடிகள் ஒரு கொலைக்கான நியாயமான காரணங்கள் தானா?

பிள்ளைகளது படிப்பில் அக்கறை காட்டிக் கொள்வதாக கருதிக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் நிரலைஎப்படி அமைக்கிறார்கள்?

அதிகாலை நான்கு மணிக்கு அலாரம் வைத்து எழுப்பி “படி” என்கிறார்கள். ஆறு மணிக்கு தனிப் பயிற்சி. அப்புறம் வீட்டிற்குப் போய் அவசர அவசரமாய் புட்டுப் போட்டுக் கொண்டு பள்ளிக்கு பாய்ச்சல். சிறப்பு வகுப்பு, பிறகு வகுப்புகள். மாலை சிறப்பு வகுப்பு, பிறகு மீண்டும் தனிப் பயிற்சி, பிறகு வீட்டிற்கு வந்தும் படிப்பு.

இதைப் படிக்கும் போதே நமக்கு தலை சுற்றி ஒரு எரிச்சல் வருகிறதே, அந்தப் பிள்ளைகளுக்கு எப்படி இருக்கும்?

பழைய கட்டமைப்பில் மதிப்பெண் தேர்ச்சி விழுக்காடு எல்லாம் பிரதானமில்லை. இதெல்லாம் பிரதானமில்லாமல் இருந்த போது வகுப்பறைகளில் கற்றல் கற்பித்தல் நடை பெற்றது. மதிப்பெண் பிரதானமான பிறகு கற்றலும், கற்பித்தலும் ஏறத்தாழ வழக்கொழிந்து போய் மனப்பாடம் செய்ய வைப்பதும் எழுதி வாங்குவதுமே பிரதானமாகிப் போனது.

கற்றல் ஒரு மாணவனுக்கு சிறகைத் தரும். மனப்பாடம் ஒரு வித தளர்ச்சியைத் தரும். கற்றலும் கற்பித்தலும் நடக்கும் போது மாணவனுக்குப் புரிய வேண்டும் என்றத் தேவை இருந்தது. கற்றல் கற்பித்தலில் மாணவன் ஒரு பொருட்டான இடத்தைப் பெற்றான். மனப்பாடம் என்று வரும் போது இயந்திரமாகிப் போனான்.

இது இயல்பாகவே மாணவர்களிடம் ஒரு ஒவ்வாமையை, கோவத்தை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. நூறு டிகிரிக்கு வரும் வரை எப்படி நீரின் கொதி செயல் வெளியே தெரியாதோ அப்படித்தான் இதுவும். பெற்றோர் மீது, ஆசிரியர்கள் மீது, கல்விக் கட்டமைப்பின் மீது ஒரு வித கோவத்தை விதைத்து வைத்திருக்கிறது.

அதன் முதல் பலி உமா. ஆனால் கொஞ்சம் பொருப்போடு அணுகினால் இந்த மோசமான கல்விக் கட்டமைப்பின்பால் உள்ள மாணவக் கோவத்தின் முதல் பலி உமாவும் இர்ஃபானும்.

இதை இர்ஃபான் என்ற மாணவனின் கோவமாகப் பார்த்தால் நாம் தோற்போம். இது ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் இருக்கும் கோவத்தின் பிரதிபலிப்பு.

அன்றைய இந்தி வகுப்பிற்கு இர்ஃபான்தான் முதல் ஆளாக வந்திருக்கிறான்.  அவனை ஒரு புன்னகையோடு உமா வரவேற்றிருந்தால் ஒருக்கால் உமா இன்று உயிரோடு இருந்திருப்பதற்கும் ஒரு பெரு வாய்ப்புண்டு என்று மாதவராஜ் சொல்வதை மிகுந்த கவனத்தோடு பரிசீலிக்க வேண்டும்.

எதிர் பார்க்குமளவிற்கு தேர்ச்சி விழுக்காட்டையோ, மதிப்பெண்களையோ, அறுவடை செய்து தராவிட்டால் சுயநிதிப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பில்லை.

இப்படிச் சொல்வதால் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் நிலைமை ஆரோக்கியமானது என்று இல்லை. இப்பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் முன்பெல்லாம் தனது பதவி காலத்திற்குள் ஒரு பத்து அல்லது பன்னிரண்டு தலைமை ஆசிரியர் கூட்டங்களை சந்தித்திருப்பார்கள். ஆனால் இப்போதோ ஒரு மாதத்திற்கு மூன்று வருகிறது.

தலைமை ஆசிரியர் கூட்டமென்றால் தொடங்கியது முதல் முடிக்கும் வரை தேர்ச்சி விழுக்காடு தேர்ச்சி விழுக்காடு தேர்ச்சி விழுக்காடுதான்.

சமீபத்தில் நடந்த ஒரு தலைமை ஆசிரியர் கூட்டத்தில் ஒரு முதன்மைக் கல்வி அலுவலர் பேசியதைக் கேட்டால் இது விளங்கும். தேர்வெழுதி நேரடியாக அதிகாரியாக வந்தவர் அவர். எவ்வளவுதான் இரக்கமற்று கூட்டிச் சொன்னாலும் முப்பத்தி ஐந்துக்குமேல் இருக்காது. அந்தக் கூட்டத்தில் இருந்த தலமை ஆசிரியர்களின் சராசரி வயதை எவ்வளவுதான் பெருந்தன்மையோடு சொன்னாலும் ஐம்பத்தி நான்கிற்கு குறையாது. அவர் பேசினார்,

”தேர்ச்சி விழுக்காடு மட்டும் குறைந்தது பந்தாடிடுவேன் ஆமாம்.” தேர்ச்சி விழுக்காடே இலக்கு என்றானபின் எந்த வயதுக்காரரை எந்த வயதுக்காரர் எப்படி பேசுகிறார் பாருங்கள்.

அவரை எதிர்த்து எதுவும் செய்ய இயலாத தலைமை ஆசிரியர்கள் அடுத்த நாள் ஆசிரியர் கூட்டத்தை கூட்டி கொந்தளித்து தங்களது காயத்துக்கு களிம்பு தடவிக் கொள்கிறார்கள்.

இப்போது ஆசிரியர்களுக்கு அதை வகுப்பறையில் இறக்கி வைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. இந்த இறுக்கம்தான் அவர் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் ஒரு மாணவன் சிரித்து விட்டால் “என்னடா இளிப்பு” என்று எரிந்து விழ வைக்கிறது. பிள்ளைகளின் சிரிப்பைக் கூட ரசிக்க விடாமல் நோகச் செய்கிறது இந்தக் கல்விக் கட்டமைப்பு.

பையனுக்குப் புரிகிறதோ இல்லையோ எதையாவது செய்து பெரும்பகுதி மாணவர்கள் ஆயிரத்தி நூறுக்கு குறையாமல் மதிப்பெண்களை எடுத்துவிட வைக்க வேண்டும் என்ற நெருக்கடியிலோ, அல்லது எல்லோரையும் தேர்ச்சி பெற வைத்து விட வேண்டும் என்ற நெருக்கடியிலோதான் தாயாய் தகப்பனாய் நடக்க இயலாமல் சர்க்கஸ் ரிங் மாஸ்டர்களாய் மாற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆசிரியர்கள் ஆளாகிறார்கள்.

இந்தப் புள்ளியில்தான் ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையே இருந்த ஒரு பெயர் தெரியாத பந்தம் அறுந்து போனது.

 நாட்டில் உள்ள எல்லா மாணவர்களும் நிறைய மதிப் பெண்கள் பெற்றுவிட வேண்டும் என்கிற அக்கறையிலா சுய நிதிப் பள்ளி தாளாளர்கள் இது விசயத்தில் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள்? சத்தியமாய் இல்லை.  அப்போதுதான் அவருக்கு சேர்க்கையும் கல்லாவும் வழியும்.

கல்லாவும் கல்வியும் கை கோர்த்த இந்த நொடிதான் சபிக்கப் பட்ட நொடி எனலாம்.

மனிதப் படுத்தவும் சான்றோனாக்கவும் ஆசிரியர் காட்டிய கடுமைக்கும், தனது பணியை தக்க வைத்துக் கொள்ளவும் முதலாளியின் கல்லாவை வழியச் செய்யவும் ஆசிரியர் காட்டும் கடுமைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

இந்த இரண்டாவது வகைக் கடுமைதான் இன்றைய ஆசிரியர் மாணவர் உறவின் விரிசலுக்கானக் காரணம்.

மட்டுமல்ல, அப்போதெல்லாம் எதையும் கடந்து தங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்ள மாணவனுக்கு வாய்ப்பு இருந்தது. விளையாட நேரமிருந்தது. இப்போதோ அப்படியல்ல கந்தர்வன் பெண்களின் அவஸ்தைக் குறித்து இப்படிச் சொல்வார்,

“ நாளும் கிழமையும்
நலிந்தோர்க்கில்லை
ஞாயிற்றுக் கிழமையும்
பெண்களுக்கில்லை” என்று.

இதை கொஞ்சம் மாற்றி மாணவர்களின் அவஸ்தையோடு பொருத்தி இப்படிச் சொல்லலாம்

” நாளும் கிழமையும்
நலிந்தோர்க்கில்லை
ஞாயிற்றுக் கிழமையும்
மாணவர்க்கில்லை “ என்று.

கம்பியில் நடக்க வேண்டிய தருணமிது. ஒரு நூல் சலனப் பட்டு சாய்ந்தாலும் அது மாணவர்களுக்கும் ஆசிரியகளுக்கும் இடையே பகைமையை உண்டாக்கும்.

அழகான, ஒன்றுமறியாத, இரண்டு குழந்தைகள் அன்பான அம்மாவை இழந்து அநாதைகளாய் தவிக்கும் சோகம் ஒரு புறமெனில், ஒரு குழந்தையை உயிரோடு பறி கொடுத்து தவிக்கும் குடும்பம் இன்னொரு புறம்.

போதும்,

இனி ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

தேர்வுகளை மையப் படுத்தாத, மனித மாண்புகளை மையப் படுத்தக் கூடிய , மாணவர்களின் குறும்பை குதூகலத்தை அங்கீகரிக்கிற கல்விக் கட்டமைப்பும், லாப நோக்கில் குழந்தைகளை இயந்திரங்களாக மாற்றக் கூடிய சந்தையிலிருந்து கல்வியைப் பொதுப் படுத்தவும் வேண்டும்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், மாணவர் மற்றும் சமூக அமைப்புகள் அடிக்கடிக் கூடி அக்கறையோடு விவாதிக்க முன்வர வேண்டும்.

பெரும்பான்மை வகுப்பறைகளில் ஆசிரியர் இறுக்கத்தோடு நுழைகிறார். மாணவர்கள் இறுக்கத்தோடு எழுந்து நின்று வணங்குகிறார்கள். இறுக்கத்தோடே நகர்கிறது வகுப்பு. முடிந்ததும் மாணவர்கள் இறுக்கத்தோடே வெளியேறும் ஆசிரியரை அதை விட இறுக்கத்தோடு வழி அனுப்பி வைக்கிறார்கள். இனி அடுத்ததாய் இறுக்கத்தோடு வரப்போகும் ஆசிரியரை எழுந்து நின்று வரவேற்க இறுக்கத்தோடு தவம் இருக்கிறார்கள்.

ஆசிரியர்களும் மாணவர்களும் ஒரு புன்னகையோடு வகுப்பினைத் தொடங்கி ஒரு புன்னகையோடு அதை நிறைவு செய்யும் வகையில் கல்வி கட்டமைக்கப் பட வேண்டும்.


 நன்றி ; “ காக்கைச் சிறகினிலே”


20 comments:

  1. இந்த சமுகத்தில் கல்வி முறை மாற்றி கட்டமைக்கப்பட வேண்டும் . கட்டாயம் வேண்டும். அப்போது தான் இப்படியான நிலைமைகள் தவிர்க்க முடியும் . மாதவராஜ் மற்றும் தங்களுடைய கட்டுரையும் தெளிவாக கூறும் விடையங்களுடன் நானும் ஒத்துப் போகிறேன்.

    ReplyDelete
  2. nalla karuththukkalai mun vaiththulleerkal.. arumaiyaana aasriiyarukku pirantha makan enbathaal ennai pola perumai pattuk kollungkal.. vaalththukkal

    ReplyDelete
  3. மனிதப் படுத்தவும் சான்றோனாக்கவும் ஆசிரியர் காட்டிய கடுமைக்கும், தனது பணியை தக்க வைத்துக் கொள்ளவும் முதலாளியின் கல்லாவை வழியச் செய்யவும் ஆசிரியர் காட்டும் கடுமைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
    உண்மைதான்.

    ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், மாணவர் மற்றும் சமூக அமைப்புகள் அடிக்கடிக் கூடி அக்கறையோடு விவாதிக்க முன்வர வேண்டும்.
    அடுத்தவர் மீது பழிபோடாமல் அனைவரும் சேர்ந்து சிந்தித்து செயல்பட வேண்டும். நன்றி.

    ReplyDelete
  4. ஆசிரியர்களும் மாணவர்களும் ஒரு புன்னகையோடு வகுப்பினைத் தொடங்கி ஒரு புன்னகையோடு அதை நிறைவு செய்யும் வகையில் கல்வி கட்டமைக்கப் பட வேண்டும்.//

    உண்மைதான்.

    ReplyDelete
  5. தங்களின் விரிவான தகவல் அனைவருக்கும் சென்றடையவேண்டும். மாணவர்களிடத்தில் கல்வியை திணிக்கும் செயலை வேறருக்க வேண்டும். சமீபத்தில் சீனாவில் நடந்த கருத்துக்கணிப்புகூட மாணவர்கள் பெற்றோர்- ஆசிரியர்களை வெறுப்பதாகவே கூறுகின்றது. அது நம்நாட்டுக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  6. காரண காரியங்களை நன்றாக அலசி அணுகி இருக்கிறீர்கள். The pressure to perform and the pressure to deliver gets multiplied with the parents dreams about their wards. என்னைப் பொறுத்தவரை universal free and equal education is the solution. Through this many more attendant problems stemming from our past culture can also be solved. Who will bell the cat.?ஜனவரி மாதம் நான் எழுதிய “தீர்வுதான் என்ன “ படித்துப் பாருங்களேன்.

    ReplyDelete
  7. எதிர் பார்க்குமளவிற்கு தேர்ச்சி விழுக்காட்டையோ, மதிப்பெண்களையோ, அறுவடை செய்து தராவிட்டால் ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பில்லை.
    உணமையே..
    ஒரு ஆசிரியர் என்ற நிலையில் மட்டுமல்லாது,, மிக தெளிவாக இப்பிரச்சினையை அணுகி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
    நானும் ஆசிரிய பெற்றோருக்கு பிறந்து, ஆசிரியைஆகி ஆசிரிய குடும்பத்திலே புகுந்தவள்தான்.
    தனியார் பள்ளிகளின் மதிப்பெண் மைய கற்றலே அரசு பள்ளிகளையும் இன்று ஆட்டுவிக்கிறது.

    அதட்டி,அடிப்பதால் அவர்கள் ஆசிரியர்களை வெறுப்பதில்லை. அரவணைத்து அன்பு காட்ட தவறுவதால்தான் வன்மம் தலைதூக்குகிறது.

    நான் விழுப்புரத்தில் ஒரு தனியார் பள்ளியில் 2 வருடங்கள் வேலை பார்த்திருக்கிறேன்.படிக்கவில்லை, மதிப்பெண் குறைவு என்பது காரணங்களுக்காக ஒருமுறைகூட மாணவர்களை கண்டித்ததில்லை. ஒரு குழந்தையை கண்டிக்க நேர்ந்தால் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் ஒரு சின்ன புன்னகை, முத்தம், sorridaa,, செல்லம்,, உன் சேட்டையைபார்த்து எனக்கு ரொம்ப கோவம் வந்துட்டு.. இனி அடிக்க மாட்டேன் o,,k,, என்பது போன்ற வார்த்தைகளால் வீடு திரும்புமுன் அவர்களை குதூகலப்படுத்தியிருக்கிறேன், எல்லாமே என் ஆசிரியர்களிடமிருந்து நான் கற்றுக் கொண்டதே.. பள்ளித்தலைமை, மாணவர்கள்,, பெற்றோர் அனைவரிடமும் சிறந்த ஆசிரியை என்றே பேரெடுத்தேன்.

    7-ம்வகுப்பு படிக்கும் என் மகள் இதுவரை 7 பள்ளிகளில் படித்திருக்கிறாள். அவளுக்கும் எனக்கும் மிகவும் பிடித்தது கோபிசெட்டிபாளையத்தின் பாரதிவித்யாலயாதான். காரணம் அந்தபள்ளியில் விடுமுறைநாட்களில் வீட்டுப்பாடம் கிடையாது.படிப்பு என்பது பள்ளியில் மட்டும்தான் என்றே அப்பள்ளியின் தலைமைஆசிரியர் கூறுவார் . அங்குதான் என் மகள் நிறைய கற்றுக்கொண்டாள்.

    ReplyDelete
  8. வணக்கம்,

    நான் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளன். நீங்கள் அலசியுள்ள சிக்கல் எந்தக் கூட்டல் குறைத்தலும் இன்றிக் கல்லூரிகளுக்கும் பொருந்துவதே!

    ஆனால், ‘மாற்ற வேண்டும்’ என்று சொல்லிவிட்டால் ஆயிற்றா? எப்படி மாற்ற வேண்டும்? எதன் அடிப்படையில் மாற்ற வேண்டும்? என்பதற்க்கெல்லாம் யார் விடை காண்பது? எப்படிப்பட்ட கல்வி முறையானாலும் மாணவனின் பங்கேற்பையும், வெளிப்பாட்டையும் அறியவும், அளக்கவும், அலசவும் ஒரு தேர்வு(போன்ற) முறை தேவைதானே? அதற்கு என்ன வழி? மாணவனை இயந்திரமாக்காத ஒரு தேர்வு முறையை வடிவமைக்க வேண்டும், அதனை முன்மொழிந்த் குரல் எழுப்புவதே சரியான தீர்வாய் இருக்கும் என்பது என் கருத்து!

    ReplyDelete
  9. நியாயமான பகிர்வு. அருமையான பகிர்வு.

    ReplyDelete
  10. மிகவும் ஆழமான அலசலுடன் ஆணித்தரமான பதிவு. மதிப்பெண் எந்திரங்களை உருவாக்குவதில்தான் பள்ளிகள் அக்கறை காட்டுகின்றனவே ஒழிய, நல்ல மாணாக்கரை உருவாக்குவதில் அல்ல. ஆசிரியர்களுக்குத் தரப்படும் அழுத்தம், மாணவர்களை அழுத்த, பெற்றோரின் அழுத்தம் மேலும் அழுத்த, பிஞ்சு நெஞ்சில் எவ்வளவுதான் பாரம் சுமக்க இயலும்? மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்கும் திறமை மட்டுமே தலையில் வைத்துக் கொண்டாடப்படும் இடத்தில் அறிதலுக்கும், புரிதலுக்கும் வேலையேது?

    இன்றைய சூழலில் மிகவும் தேவையான பதிவு. பாராட்டுகள்.

    ReplyDelete
  11. \\\ manichudar said...
    இந்த சமுகத்தில் கல்வி முறை மாற்றி கட்டமைக்கப்பட வேண்டும் . கட்டாயம் வேண்டும். அப்போது தான் இப்படியான நிலைமைகள் தவிர்க்க முடியும் . மாதவராஜ் மற்றும் தங்களுடைய கட்டுரையும் தெளிவாக கூறும் விடையங்களுடன் நானும் ஒத்துப் போகிறேன். ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  12. \\\ மதுரை சரவணன் said...
    nalla karuththukkalai mun vaiththulleerkal.. arumaiyaana aasriiyarukku pirantha makan enbathaal ennai pola perumai pattuk kollungkal.. vaalththukkal ///

    மிக்க நன்றி சரவணன். நான் விழுதுகளைப் பின் தொடர்பவன்

    ReplyDelete
  13. முக்கியமானக் கட்டுரை இது. அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

    ReplyDelete
  14. இன்று தூத்துக்குடியில் பொறியியல் கல்லூரி மாணவர் மூவர், அவர்கள் கலூரி முதல்வரையே கொலை செய்துள்ள படு பாதக செயல் பதை பதைக்க வைய்த்த சூழலில் உங்கள் பதிவை கண்டேன்..அருமையான பதிவு..கல்வியை கடை சரக்காய் மாற்றிய அவலம் இந்நிலை என்பதே நிதர்சனமான உண்மை..விழித்துக் கொள்ளுமா? அரசுகள்..

    ReplyDelete
  15. கல்வியை கடை சரக்காய் மாற்றிய அரசுகளின் அவலம்..இன்று மூன்று மாணவர்கள், அவர்தம் கல்லூரி முதல்வரையே கொலை செய்த படுபாதக செயல் வேதனை தருகிறது..எங்கே போய் கொண்டிருக்கிறோம்..உங்கள் பதிவு சரியான தருணத்தில்...விழித்துக் கொள்ளுமா? கல்வித் துறை..இல்லை இன்னமும் குறட்டை விடுமா?...அருமையான பதிவுக்கு நன்றி எட்வின் அவர்களே..

    ReplyDelete
  16. கல்விக் கூடங்களிலிருந்த கல்வி சந்தைக்கு கடத்தப் பட்டு, மாணவனை சான்றோனாக்குவது, மனிதப் படுத்துவது என்கிற கல்வியின் உயரிய செயல் திட்டத்திலிருந்து அவனை மதிப்பெண்களை அறுவடை செய்யும் அறுவை எந்திரமாக மாற்றுவது என்கிற நிலைக்கு கல்வியை தனியார் மயம் உந்தித் தள்ளிய நொடியில் இதற்கான விதை விதைக்கப் பட்டதாகக் கொள்ள வேண்டும்.
    அருமையான பதிவு. நன்றி. குழந்தைகளை எந்திரமாக்கி விட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா

      Delete
  17. இன்றைய கல்வி முறை எதைச் சொல்லிக் கொடுக்கிறது என்பதை விட சமூகத்திலிருந்து மாணவர்கள் உள் வாங்குவது அதிகம் என்பதாலேயே இவை போன்ற பாதகங்கள்....

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...