Saturday, February 6, 2016

இவரது மௌனமும் அழுத்தமானது
//கவிதை நூல் போட்டாகிவிட்டது. இனி கடனை அடைத்தாக வேண்டும்// என்று தோழர் ப. செல்வகுமார் அவர்கள் எழுதியிருந்ததை வாசித்ததும் அப்படியே நொறுங்கிப் போனேன்.
”பாரதியாரிடம் மூன்று லட்சம் ரூபாய் கொடுத்து ஓர் அழகான வீட்டில் உட்கார வைத்து, ஐந்து ஆட்களை அமர்த்தி’ நீ நினைத்ததை எல்லாம் நூலாக எழுதித் தள்ளு’என்றல்லவா தமிழகம் சொல்லியிருக்க வேண்டும்.அவ்வாறு எவரும் சொல்லவில்லை. அவர் தெருத் தெருவாக அலைந்தார்.விரிந்த உள்ளம் இல்லாமையால் அவரது குலத்தவரே அவரை எதிர்த்தார்கள். இன்று பாரதி செத்து மறைந்த பிறகு ‘பாரதி நாமம் வாழ்க’ என்கிறார்கள்”
என்று பாரதிதாசன் அழுது புலம்பியதுதான் என் நினைவுக்கு வருகிறது.
இனி சாதி தாண்டிய காதலையும் தண்டவாளத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது. தோழர் செல்வகுமார் எழுதுகிறார்,
”என் மகனுக்கு
எப்படியாவது சொல்லித்தர வேண்டும்
காதல் பற்றியும்
சாதி பற்றியும்
குறைந்த பட்சம் தண்டவாளங்களைப் பற்றியாவது”
குழந்தைகளின் உலகம் அலாதியானது. அதுவும் பட்டப் பெயர் வைப்பதில் அவர்களுக்கிருக்கும் ஆர்வமும் நேர்த்தியும் சுகமானவை. ஒருமுறை கிஷோர் சின்னப் பிள்ளையாக இருந்தபோது நரசிம்மன் என்ற ஹோமியோ டாக்டரிடம் அழைத்துப் போனோம். வழி நெடுக குரங்களைப் பார்த்தபடியே வந்தான். வழியெங்கும் குரங்குகளைப் பற்றியே பேசிக் கொண்டும் வந்தான்.
மருத்துவருக்கு கிஷோர் செல்லம். அவனைப் பார்த்ததும் ஒரு ஃபைவ் ஸ்டார் சாக்லேட் எடுத்து நீட்டினார். வாங்கப் போனான். சாக்லேட்டை இழுத்த வாறே ‘ மாமா பேர சொன்னினாதான் சாக்லேட் ‘ என்றார். எனக்கும் விட்டுவிற்கும் உதற ஆரம்பித்து விட்டது. காரணம் ஒருமுறை லவ் பேர்ட்ஸோடு விளையாடிவிட்டு உள்ளே நுழைந்தவனிடம் செல்வரஜ் டாக்டர் தனது பெயரை சொல்லுமாறு கேட்டவுடன் ‘குருவி மாமா’ என்றான்.
இப்போதோகுரங்குகளைப் பார்த்துவிட்டு வந்திருந்தான். பயந்தமாதிரியே ‘ கொரங்கு மாமா’ என்றான். அவர் விழுந்து
விழுந்து சிரித்தபடியே இரண்டு சாக்லேட் கொடுத்தார்.
குழந்தைகளை உணர்ந்து ரசிப்பதற்கே ஒரு பக்குவம் வேண்டும்.அவர்களைப் பற்றி அந்நியப் படாமல் எழுதுவதற்கு அவர்களோடு ஒன்றியிருக்கத் தெரிந்திருக்க வேண்டும். செல்வகுமார் இந்தப் பக்குவத்தில் முனைவராகவே இருக்கிறார். இந்தக் கவிதையைப் பாருங்களேன்.
”குழந்தைக்குப் பெயர் வைக்க
கோயிலுக்கு சென்று
திரும்புகையில்
கடவுளுக்கு பெயர் வைத்தது குழந்தை
தொந்தி சாமியென்று”
அப்படியே காட்சிப் படுத்துகிறது. இந்தக் கவிதையை வாசிக்கும்போது குழந்தைக்கு பெயர் வைக்கப் போய்த் திரும்பும் ஒரு கூட்டம் கண்ணுக்குத் தெரிகிறது. ஒருவர் தோளில் ஒரு குழந்தை இருக்கிறது. நம் கற்பனையில் ஒரு உரையாடல் விரிகிறது,
“ இப்ப எங்க போயிட்டு வாரோம்?”
“ கோயிலுக்கு”
கோயில்ல யாரு இருக்கா”
“ சாமி”
“ இந்த சாமி பேரு என்ன?”
“தொந்தி சாமி”
ஒரு நாலு வரிக்கவிதை இவ்வளவு பெரிய காட்சியை நமக்குள் விரிக்கிறது.
“அப்பாவின் சைக்கிள்” என்றொரு கவிதை. அப்பாவின் சைக்கிளோடு கூடிய உறவை அங்குலம் அங்குலமாக நமக்கு காட்சிப் படுத்தும்.
“ஏம்பேரு லெட்சுமிங்க” என்றொரு நீள் கவிதை. அப்பப்பா அப்படியொரு கவிதை அது. அதை மட்டும் தோழர் இன்னும் கொஞ்சம் செழுமைப் படுத்தியிருந்தால் இந்த நூலின் உசரம் எஙேயோ போயிருக்கும். இப்போதும் ஒன்றும் குடி முழுகிப் போகவில்லை. அடுத்த பதிப்பிற்கு முன் இதை அவர் செய்வார். அப்போது பாருங்கள் அவர் எத்தனை அங்குலம் உசரப் போகிறார் என்பதை.
“எல்லாவற்றிற்கும்
ஏதாவது சொல்வேனென்று எதிர்பார்க்காதே
எதுவும் சொல்லாமலிருப்பதும்
எனது சொல்தான்”
என்கிறார். எதைப் பற்றியும் அது பற்றிய ஞானம் தனக்கு இருக்கிறதோ இல்லையோ அது பற்றி நாலுவரி எழுதிவிட வேண்டும் என்ற பொதுப் புத்தியின் முகத்தில் ஓங்கி அறைகிறார். ஆமாம் இவரது மௌனமும் அழுத்தமானது என்பதை நானும் தோழர் Dhahir Batcha போன்ற தோழர்களும் அறிவோம்தான்.
“கடன் கொடுத்தவனின்
தெருவில் நடக்க முடியவில்லை
வழியெங்கும் அவன் நாக்குகள்”
என்கிறார். கடன்பட்டோன் நெஞ்ச்ம்போல் என்பார்கள். வழியெங்கும் கடன்காரனின் நாக்குகள் என்கிறார். இது ரொம்பப் புதுமையாக இருக்கிறது.
அவசியம் வாசியுங்கள். அல்லது பாரதி பற்றி பாரதிதாசன் புலம்பியது மாதிரி இவருக்காக நான் புலம்ப வேண்டி வரும்.
அவரது தொடர்பெண் 9943844040

6 comments:

 1. உண்மைதான். இருக்கும்போது ஒருவரைப் பற்றி நாம் அறிவதில்லை. பின்னர்தான் பாராட்ட ஆரம்பிக்கிறோம். அனைத்துமே காலங்கடந்து. நூலை வாசிப்பேன். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 2. அவசியம் வாங்கி வாசிக்கிறேன் தோழர்
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க தோழர்

   Delete
 3. அருமையான பகிர்வு. சிறந்த ரசனை. பகிரப்பட்ட வரிகளை மனம் விட்டு ரசிக்க முடிந்தது.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க தோழர்

   Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...