Friday, February 5, 2016

16 வயிற்றில் நெருப்பை கட்டிக் கொள்ள விரும்பாத கடவுள்கள்



’பெண் குழந்தை
பிறந்ததற்காக
இனிப்பு வழங்குபவன்
மனசெல்லாம் கசப்பு’

உலகில் 6.2 கோடி பெண் குழந்தைகள் பள்ளிகளுக்குப் போகாமல், எழுத்தறிவே இல்லாமல் இருப்பதாகதோழர் ஜீவசுந்தரி பாலன் அவர்கள் தனது தி இந்துகட்டுரை ஒன்றில் மிகுந்த வேதனையோடு எழுதியிருப்பதை வேதனைப் படாமல் யாராலும் கடந்துபோக இயலாது. அப்படி யாரேனும் கடந்து போக முடிந்தால் நிச்சயமாக அவன் மனிதனாகவே இருக்க முடியாது.

பள்ளிக்குப் போகாத, எழுத்தறிவே இல்லாத ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை இந்த எண்ணிக்கையை விடவும் கூடுதலாகக்கூட இருக்கக் கூடும். பிரச்சினை என்னவெனில்ஆண்என்ற காரணத்திற்காக எந்த ஒரு ஆண் குழந்தைக்கும் கல்வி மறுக்கப் பட்டிருக்காது. ஆனால் பெண் குழந்தைகள் விஷயத்தில்பெண்என்ற ஒற்றைக் காரணத்திற்காக மட்டுமே கல்வி மறுக்கப் படுகிறது.

ஒரு பக்கம் ஆண் பெண் விகிதாச்சாரம் என்பது கவலைப் படுமளவிற்கு சேதப் பட்டு வருகிறது. இதுவே சமூகச் சமநிலையை பெரிதும் ஊனப் படுத்துவதாக அமைகிறது. ஆண்களைவிட பெண்கள் எண்ணிக்கையில் குறைவதென்பது ஆபத்தானது. அதிலும் ஆண் குழந்தைகளை விடவும் குறைந்த எண்ணிக்கையிலான பெண்குழந்தைகள் என்ற உண்மையோடு 6.2 கோடி பெண் குழந்தைகள் தாங்கள் பெண் குழந்தைகள் என்பதற்காகவே கல்வி பெறாமல் போகிறார்கள் என்கிற உண்மை அசிங்கத்தின் உச்சம்.

இது ஏதோ இந்தியா, ஆப்பிரிக்கா, சோமாலியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மட்டும் காணப்படும் உண்மை அல்ல. எந்த உன்னதமென்றாலும் அதற்கான முழு உரிமைக்கு காப்புரிமை கோரக் கூடிய அமெரிக்காவிலும் இதுதான் நடைமுறை உண்மை என்பதை ஒபாமாவின் சமீபத்திய கூற்று ஒன்று அம்பலப் படுத்துகிறது. ஏதோ ஒரு நேர்காணலிலோ அல்லது உரையிலோ அதை அவர் சொல்லியிருக்கிறார். அதை அவர் எங்கு கூறினார் என்பது முக்கியம் இல்லை என்பதால் அதை விட்டு விடலாம்.

பெண் குழந்தைகளின் கல்வி என்பது அமெரிக்கா உள்ளிட்ட எந்த ஒரு நாட்டிலும் நல்லபடியாக இல்லை. பெண் குழந்தைகளின் கல்வி குறித்து திறந்த மனதோடு கூடிய ஒரு உரையாடலை உலக நாடுகள் தொடங்க வேண்டும்என்ற அவரது கூற்றை கூறியது ஒபாமா என்பதற்காக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

அமெரிக்காவிலும் பெண் குழந்தைகளுக்கு அவர்கள் பெண் குழந்தைகள் என்பதற்காகவே கல்வி மறுக்கப் படுகிறது என்பது நமக்கொன்றும் ஆச்சரியப் படக் கூடிய செய்தி அல்ல. ஆனால் அதை ஒபாமாவே இப்படி பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் படியான ஒரு நிர்ப்பந்தத்திலும் நெருக்கடியிலும் அவரை எதார்த்தம் கொண்டு போய் நிறுத்தியிருப்பது கொஞ்சம் விஷேஷமாய் கவனிக்க வைக்கிறது. எந்த ஒரு அமெரிக்க அதிபரும் இது போன்ற சுய மதிப்பீட்டை இப்படி வெளிப்படையாக கூறிவிட மாட்டார்கள். அதே நேரம் இந்த உண்மையை இவ்வளவு வெளிப்படையாக கூறிவிட்டார் என்பதற்காக மற்ற அமெரிக்க அதிபர்களிடமிருந்து ஒபாமா உன்னதப் பட்டு நிற்கிறார் என்று கொள்ள முடியாது. இந்த நேரத்தில் யார் அவர் இடத்தில் இருந்திருந்தாலும் இந்த உண்மையை ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

எல்லா நாடுகளைப் போலவே அமெரிக்காவிலும் பள்ளிக் குழந்தைகளின் இடை நிற்றல் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. மக்கள் இதனால் கொதி நிலைக்குப் போயிருக்கிறார்கள்.

ராணுவத்திற்காக அதிகமாக செலவு செய்யும் முதல் பத்து நாடுகளின் மொத்த ராணுவ செலவைக் காட்டிலும் அமெரிக்காவின் ராணுவச் செலவு என்பது பேரதிகம். இதை மிகுந்த கௌரவத்தோடு சொல்வது அமெரிக்க அமெரிக்க அதிபர்களின் அடையாளமாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் நான் அவரை விடவும் அதிகமாக ராணுவத்திற்கு செலவு செய்தவன் என்று சொல்வது மரியாதைக்குரிய விஷயமாகவே அமெரிக்காவில் பார்க்கப் பட்டது. மாற்ருக் கட்சியைவிடவும் தாங்கள் அதிகமாக ராணுவத்திற்கு செலவு செய்ய இருப்பதாகவும், ஆகவே தங்களுக்கு ஆட்சி செய்யும் அதிகாரத்தை வழங்க வேண்டுமென்றும்கூட சென்ற தேர்தலுக்கு முன்பு வரை பேச முடிந்தது. அதை ரசிக்கா விட்டாலும் அதற்கு எதிர்ப்பினைக் காட்டாதவர்களாகவே அமெரிக்க மக்கள் இருந்தனர்.

ஆனால் சென்ற தேர்தலில் அமெரிக்க மக்கள் இதற்கு பகிரங்கமாக எதிர்வினையாற்றினார்கள். உலக அமைதி, ராணுவப் பேராண்மை போன்ற எதை விடவும் தங்களது குழந்தைகளின் கல்வி மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்தவர்களாக மட்டும் அல்ல சென்ற தேர்தல் களத்திலே இரண்டு வேட்பாளர்களையும் சட்டையைப் பிடித்து உலுக்கி கேள்வி கேட்டார்கள். ‘கல்விக்கான உங்கள் திட்டம் என்ன என்பதை தெளிவாக சொல்லுங்கள்என்று இரண்டு வேட்பாளர்களையும் மக்கள் சினந்து கேட்டார்கள்.

அன்றைய தேதியில் அமெரிக்காவில் மணிக்கு 857 பள்ளிக் குழந்தைகள் பள்ளிகளிலிருந்து இடை நிறுகொண்டிருந்த அவலத்தை மக்கள் அம்பலப் படுத்தினார்கள்.

அதுவரை அரசியலில் ஈடுபட்டே இருக்காத அமெரிக்க கல்லூரி வாரியமும் நேஷனல் மால் என்ற அமைப்பும் தெருவிரங்கி கல்வியை தேர்தலின் பேசு பொருளாக்கினார்கள். வருடத்திற்கு 12 லட்சம் குழந்தைகள் பள்ளிகளில் இருந்து இடை நிற்கிறார்கள் என்ற 2007 ஆம் ஆண்டின் புள்ளி விவரம் அவர்கள் கைகளில் இருந்தது. தெருவின் ஏதோ ஒரு மூலையில் மணிக்கு 857 மாணவர்கள் இடைநிற்கும் அவலத்தின் அடையாளமாக 857 மேசைகளை அடுக்குவார்கள். அவற்றின் மேலே ஏறிநின்று கல்வி குறித்த உங்கள் திட்டமென்ன?’ என்று இரண்டு வேட்பாளர்களையும் கேட்டார்கள்.

இரண்டு வேட்பாளர்களும் கதி கலங்கித்தான் போனார்கள். ஒரு வழியாக ஒபாமா வெற்றி பெற்றார். அத்தோடு அவர் அதை மறந்தும் போனார். இப்போது அடுத்த தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற சூழலில் தான் தேர்தலில் போட்டியிட இயலாத சூழலில் இதைக் கூறுகிறார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, இன்னும் சரியாக சொன்னால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆண்குழந்தைகளை விடவும் பெண் குழந்தைகள் பேரதிக எண்ணிக்கையில் படிப்பது போன்ற ஒரு தோற்றம் கட்டமைக்கப் படுகிறது. ‘முன்ன மாதிரியெல்லாம் இல்லப்பா, இப்பல்லாம் எந்தப் பய படிக்கிறான். பொம்பளப் பசங்கதான் இப்பல்லாம் நல்லாப் படிக்குதுஎன்பது மாதிரியான பொதுத் தெறிப்புகள் எல்லாத் திக்குகளிலும் கேட்கவே செய்கிறது. இதை முழுக்க பொய் என்று தள்ளி விடும் கயவாளித் தனம் எல்லாம் நமக்கில்லை. இப்போதெல்லாம் ஆண்களை விடவும் பெண்கள் நன்கு படிக்கவும் நல்ல மதிப்பெண் பெறவும் செய்கிறார்கள்தான். பெண் குழந்தைகளின் தேர்ச்சி விழுக்காடும் மதிப்பெண்ணும் ஆண் பிள்ளைகளைக் காட்டிலும் ஆச்சரியம் கொள்ளத் தக்க வகையில் எகிரவே செய்கின்றன. ஆனால் இதை பெண் குழந்தைகள் எல்லோரும் படிக்கிறார்கள் என்பதாகக் கொண்டுவிட முடியாது.     

இதன் காரணமென்ன என்பதை கூர்ந்து அணுகினால் உலகத்தில் உள்ள எந்த ஒரு தந்தையும் தனக்கு பெண் குழந்தை பிறப்பதை ரசிப்பதில்லை. அல்லது ஆண் குழந்தை பிறக்கும்போது ஏற்படும் மகிழ்வும் கொண்டாட்டமும் ஒரு தந்தைக்கு பெண் குழந்தை பிறக்கும் போது ஏற்படுவதில்லை. இதைத்தான் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால்

பெண் குழந்தை பிறந்ததற்காய்
இனிப்பு வழங்குவோன்
மனசெல்லாம் கசப்பு’  

என்று எழுதினேன். ஒருக்கால் நான் முன்னூறு வருடங்களுக்கு முந்தைய நிலையை எழுதியிருந்தாலும் இப்படித்தான் எழுதியிருக்க முடியும். மூவாயிரம் வருடங்களுக்கு முந்தைய நிலையை எழுத நேர்ந்தாலும் இந்த வரிகள் பொருந்தவே செய்யும். மூவாயிரம் ஆண்டுகளுக்கோ அல்லது அதற்கும் முன்போ இந்த வரிகள் பொருந்தி நிற்பதில் பிழை இல்லை. ஆனால் 2016 இலும் இது பொருந்துவதுதான் சங்கடமாக இருக்கிறது. இன்னும் எத்தனை காலத்திற்கு இது பொருந்தும் என்பதும் விளங்கவில்லை.

பொதுவாகவே மதம் சார்ந்த சமூகங்களின் தொகுப்பாகவே பெரும்பான்மை உலகம் இருக்கிறது. ஏறத்தாழ எல்லா மதங்களுமே பெண்ணை ஆணுக்கான ஒரு உடைமையாகவே அடையாளப் படுத்துகின்றன. ஆணுக்காகவே படைக்கப் பட்டதாகவே பெண்களை மதங்கள் சொல்வதும் அந்தப் பெண்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆண்களுக்கிருப்பதாகவும் அவை தெளிவுபட வரையறுத்துத் தந்திருக்கின்றன.

இரண்டாம் சந்திப்புஎன்ற எனது சிறுகதையில் ஏவாளும் சாத்தானும் இரண்டாவது முறையாக சந்தித்துக் கொள்வார்கள். நீண்டுப் பேசிவிட்டு திரும்பிப் போகும்போது சாத்தானிடம் கடவுளின் செல் நம்பர் இருந்தால் தருமாறு ஏவாள் கேட்பாள். ஏன் என்று கேட்கும் சாத்தானிடம் கடவுளிடம் தனக்கொரு கேள்வி இருப்பதாக சொல்வாள். என்ன கேட்கனும் கடவுளை என்று சாத்தான் கேட்பான்.

ஆதாமை களி மண்ணால் படைத்த கடவுள் தன்னையும் களிமண்ணால் படைக்காமல் ஆதாமின் விலா ஒடித்து ஏன் படைத்தான் என்று கேட்க வேண்டும் என்பாள்.

இரண்டு பெண்களின் சாட்சி ஒரு ஆணுக்கான சாட்சியாக கொள்ளும் மதங்கள் பெண்களை இரண்டாம் நிலையில்தான் வைத்திருக்கும்.

இன்றைய தேதியில் கடவுள்கள் வாழும் தெருவில் பள்ளிகள் இருப்பின் கடவுள்களே தங்களது பெண் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பத் தயங்குவார்கள்தான். ‘ஏன் பிள்ளையை பள்ளிக்கு அனுப்பவில்லை?’ என்று தன்னைக் கேட்கும் தனது தோழமைக் கடவுள் ஒருவரிடம்  ‘வயசுக்கு வந்த பொம்பளப் புள்ளைகள எப்படி வெளிய அனுப்புனா வயித்துல நெருப்பக் கட்டிக்கிட்டுள்ள உட்கார்ந்து இருக்கனும்என்றுகூட ஒரு கடவுள் சொல்லக் கூடும்.

சிறுபான்மை நாத்திக சமூகத்திலும் பெண்களுக்கான வெளி அப்படி ஒன்றும் பிரகாசமாய் இருப்பதாய் நடை முறையில் தெரியவில்லை.

கள்ளிப் பாலும், கருக்கலைப்புகளும் இருக்கிற சமூகத்தில் பெண் கல்வி என்பது மிகப் பெரிய சவால்தான்.

ஒரே அளவு உடல் உழைப்பத் தருக்கிற ஆணுக்கொரு கூலி பெண்ணுக்கொரு கூலி என்கிற உழைக்கும் மக்களின் கட்டமைப்பு இருக்கிறவரையும் பெண் கல்வி என்பது மிகப் பெரிய சவால்தான்.

உடைமை களவு போகக் கூடியது. களவு போகாமல் தன் உடைமையை பாதுகாத்துக் கொள்வது உரிமையாளரின் புத்திசாலித் தனம். பெண்ணே உடமையாகிப் போன ஒரு கட்டமைப்பில் தன் உடைமையாகிப் போன பெண்ணை களவு போகாமல் பாதுக்காக்கும் புத்திசாலிகளாக ஆண்கள் இருக்கும் வரை பெண்கல்வி சாத்தியம் இல்லாத்துதான்.

கற்பு என்ற ஒரு கருத்தியல் இருக்கும் வரை பெண்கல்வி சாத்தியம் இல்லை.

பெண்கல்வி என்பது பாலியல் புரிதலோடு தொடர்புடையது. ஆணும் பெண்ணும் சமம் என்பதுகூட பண் கல்விக்கான ஒரு இடைக்கால ஏற்பாடாகத்தான் அமையும். ஆண்மை ஆண்மைதான், பெண்மை பெண்மைதான். இரண்டும் ஒரு போதும் சமமாக இயலாத இரு கூறுகள்.

ஆணுக்காக பெண்ணோ, பெண்ணுக்காக ஆணோ இல்லை என்ற புரிதலும், ஒரு பெண்ணை முழுமைப் படுத்தும் காரணி ஆண் என்ற உண்மையும், ஆணை முழுமைப் படுத்துகிற காரணி பெண் என்ற உண்மையையும் உணராதவரை சமநிலையிலான கல்வி சாத்தியம் இல்லை.


ஆணும் பெண்ணும் எதிர் சமம் என்கிற புரிதல் வரும் பொழுதுதான் எல்லோருக்குமான கோரிக்கையை வைக்க இயலும். அதுவரை பெண் கல்விக்கான குரலை இன்னும் இன்னும் பேரதிகமாய் உயர்த்திப் பிடிக்க வேண்டும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...