Sunday, February 21, 2016

மாத்தி செய்வோம்

நமது மற்றும் நமது குடும்பத்தினரின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களின்போது அருகில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள் இல்லங்களுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு இனிப்பு வழங்கி அவர்களோடு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறோம். சிலர் ஒரு வேளை உணவினை அவர்களுக்கு வழங்கி மகிழ்கிறோம்.  அந்தக் குழந்தைகளும் நமக்காக பிறந்த நாள் வாழ்த்தோ மணநாள் வாழ்த்தோ பாடி, நமக்காக பிராத்திக்கிறார்கள்.

பல ஆதரவற்றோர் இல்லங்கள் இது மாதிரியான நிகழ்வுகளை தங்களது இல்லங்களில் கொண்டாடி ஆதரவு தருமாறு செய்தித் தாள்களிலும் ஊடகங்களிலும் விளம்பரமே செய்கிறார்கள்.

பிறந்த நாள் மணநாள் தாண்டி சிலர் பண்டிகை நாட்களையும் இத்தகைய ஆதரவற்றவர்களோடு கொண்டாடி மகிழ்கின்றனர்.

தங்கையின் கணவர் சிவா தனது திருமணத்தையே இப்படி ஒரு இல்லத்தில்தான் கொண்டாட வேண்டும் என்று எவ்வளவோ போராடிப் பார்த்தார். எனக்கும் அதில் முழுக்க முழுக்க உடன்பாடு என்றாலும் இரண்டு குடும்பங்களிலும் எழுந்த நெருக்கடிகளை எங்களால் சமாளிக்க முடியாமல் போனது.

இப்படி ஒருமுறை எனது தங்கை மகள் நிவேதிதாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கருங்குளத்தில் உள்ள ஒரு ஆதரவற்ரோர் காப்பகத்திற்கு சென்றிருந்தோம்.

அப்போது, ஆறு வயது குழந்தைகள் சிலர்கூட பாப்பாவை கொஞ்சி வாழ்த்தினார்கள். இந்தக் குழந்தைகளே கொஞ்சப் படவேண்டியவர்கள் அல்லவா என்கிற எண்ணம் அப்போது வந்தது.

இவர்களுக்கும் பிறந்த நாள் இருக்குமே?

குடைச்சலுக்கு உள்ளானேன்.

நமது பிறந்த நாளை அத்தகைய இல்லங்களில் சென்று கொண்டாடுவதை விடவும் அந்தக் குழந்தைகளின் பிறந்த நாளை அங்கு சென்று கொண்டாடினால் அது இதைவிடவும் பொருளுள்ளதாக அமையுமே என்று தோன்றியது.

முடியுமா?

எத்தனை இல்லங்கள்? எத்தனை குழந்தைகள்?

சாத்தியமா?

முற்சிப்போம் என்று தோன்றுகிறது. முன் முயற்சியாக கருங்குள்ம் இல்லத்தில் உள்ள குழந்தைகளின் பிறந்த நாட்களை வாங்குவது என்று முடிவெடுத்திருக்கிறேன். அநேகமாக 50 குழந்தைகள் இருப்பார்கள்.

என்னால் 4 குழந்தைகளின் பிறந்த நாளை கொண்டாடிவிட முடியும், நிச்சயமாக தங்கையின் கணவர் சிவா ஒரு ஐந்து குழந்தைகளின் பிறந்த நாட்களை எடுத்துக் கொள்வார், தோழர் இஸ்மாயிலோடும் சுரேஷோடும் பேசினால் அவர்களும் சரி என்பார்கள்.

தோழர்கள் கை கொடுத்தால் இந்த ஒரு இல்லத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் ஜமாய்த்து விடலாம் என்று தோன்றுகிறது.

அவரவர் அவரவர் பகுதியில் விரித்துச் சென்றால் ...

தோழர்கள் இருக்கிறார்கள்...

தொடங்க இருக்கிறேன்.

பின் குறிப்பு: சென்ற ஆண்டில் இதை செயல்படுத்த முடியாமல் போனது. இந்தக் கோடையிலாவது முயற்சியைத் தொடங்க வேண்டும். 

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...