இப்படி ஒன்றை எழுத வாய்ப்புத் தராத மாதம் ஒன்று வாய்க்காதா என்றுதான் தவம் இருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு அயோக்கியத்தனத்தை அசிங்கத்தை தினமும் தினமும் நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது ஆதிக்க வர்க்கம்.
கீழத்தஞ்சை மாவட்டம் ஏராளமான போராட்டங்களின் விளைநிலம். ஆண்டைகளின் ஜாதித் திமிறை போதும் போதும் என்னும் அளவிற்கு அசைத்துப் பார்த்த பூமி. அந்தப் பூமியில் பொதுப் பாதையில் சேரிப் பிணத்தைக் கொண்டு செல்வதில் சிக்கல் என்பது ஆச்சரியமாயிருக்கிறது. அந்த மண்ணிலேயே நிலைமை இப்படி இருக்கிறது என்றால் வட மாவட்டங்களின் நிலை எந்த அளவிற்கு மோசமாயிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கிறது ‘திருநாள்கொண்ட சேரி’. அந்த ஊரில் இருக்கும் சேரி மக்களுக்கான சுடுகாடு மதிமலை ஆற்றங்கரையில் இருக்கிறது.அந்த சுடுகாட்டிற்கு சேரியிலிருந்து பொதுப் பாதை வழியாக எடுத்துச் சென்றால் பிணத்தை அரை மணி நேரத்திற்குள்ளாக கொண்டுபோய் விடலாம். ஆனால் ஆதிக்க சமூகத்தினர் பொதுப்பாதை வழியே சேரி மக்களை இதற்கு அனுமதிப்பதில்லை. மாறாக தனிப்பாதை வழியாக கொண்டு செல்ல நிர்ப்பந்திக்கிறார்கள்.தனிப் பாதை என்றால் ஏதோ தார்சாலை என்றோ அல்லது மனிதர்கள் போவதற்காகப் போடப்பட்ட பாதை என்றோ யாரும் நினைத்துக் கொள்ளக் கூடாது.
தனிப்பாதை என்பது வயல்வெளிகளின் வரப்புகள்தான். யோசித்துப் பாருங்கள், ஒரு மனிதன் வரப்பு வழி நடப்பதே மிகவும் சிரமமானது. அதில் பிணத்தைத் தூக்கிக் கொண்டு நடப்பது எவ்வளவு சிரம்மானது. வயலில் விழுந்து எழுந்து உடலெல்லாம் சேரப்பிய நிலையில்தான் இது சாத்தியம். இப்படிப் போவதற்கு மூன்று மணிநேரம் ஆகும். அனைவருக்கும் சொந்தமான பொதுப் பாதையையே சேரி மக்களுக்கு அனுமதிக்க மறுக்கும் ஆதிக்க மக்கள் தங்களது சொந்த வயல்வழியே சேரிப் பிணத்தை கொண்டு செல்ல அனுமதிப்பார்களா? வழி மறித்து ஆயுதங்களால் தாக்குவார்கள். அதையும் கடந்துதான் திருநாள்கொண்ட சேரியின் தலித் மக்கள் ஈமக் கிரியைகளை செய்து வருகிறார்கள்.
26.11.2015 அன்று திருநாள்கொண்ட சேரியில் 85 வயது மதிக்கத் தக்க குஞ்சம்மாள் இறந்திருக்கிறார். நல்ல மழைக் காலம் அது. எனவே வயல் வரப்புகள் வழியே பிணத்தை எடுத்துச் செல்வதில் ஏகத்திற்கும் சிரமம் இருந்திருக்கிறது. எனவே அவரது பேரன் கார்த்திக் மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் காவல்துறை உயர் அதிகாரியிடமும்பொதுப் பாதை வழியே இறந்துபோன தனது பாட்டியின் உடலை எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்துதர வேண்டி முறையிடுகிறார்.
அதிகாரிகளுக்கு அதற்கான உத்தரவுகள் வருகின்றன. சேரி மக்களுக்கு பொதுப் பாதையில் பாதுகாப்புத் தரவேண்டிய காவல்துறையும் அதிகாரிகளும் ஆதிக்க சாதிக் காரர்களிடம் கையில் காலில் விழுந்து மன்றாடிப் பார்க்கின்றனர். முயற்சி பலிக்காது போகவே உடலைப் பிடுங்கி தனி வழியே எடுத்துக் கொண்டுபோய் அடக்கம் செய்கின்றனர் உள்ளாட்சி ஊழியர்கள்.
குஞ்சம்மாளின் கணவர் 100 வயது மதிக்கத் தக்க செல்லமுத்து 03.01.2016 அன்று மரணமடைகிறார். இந்தமுறை ராத்திரியோடு ராத்திரியாக சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகுகிறார் கார்த்திக். 04.01.2016 அன்று பொதுப் பாதை வழியாக அவரது உடலை எடுத்துக் கொண்டு போய் நல்லடக்கம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் எஸ்பி அவர்களுக்கும் உத்தரவிடுகிறது சென்னை உயர்நீதி மன்றம்.
இப்போது மன்றாடலைத்தான் தொடர்கிறார்கள். சேரிமக்கள் பிணத்தை எடுத்துக் கொண்டுபோய் ஒரு குடிசையின் உள்ளே அமர்ந்து கொண்டு பூட்டிக் கொள்கிறார்கள். பொதுப்பாதைக்கு அனுமதித்தால்தான் கதவினைத் திறப்போம் என்றும் இல்லாதுபோனால் அங்கேயே அந்த அழுகும் பிணத்தோடே தாங்களும் செத்து அழிவோமென்று கூறிவிட்டார்கள்.
06.01.2016 அன்று பொதுப்பாதை வழியே போகலாம் என்று அதிகாரிகள் சொல்லவே மக்கள் கதவைத் திறந்திருக்கிறார்கள். உடனே பிணைத்தை கைப் பற்றிக் கொண்டு காவலர்கள் தனி வழியே சென்று அடக்கம் செய்திருக்கிறார்கள். மறியல் செய்த சேரி மக்களை தடியடித்து கலைத்திருக்கின்றனர்.
சேரி மக்கள்மீது விழுந்த ஒவ்வொரு அடியும் நீதியரசர்கள் மீது விழுந்த அடியாகவே நீதித் துறை கருத வேண்டும். ஆனால் இதை தனக்கேற்பட்ட அவமானமாக நீதித் துறை இதுவரை கருதவில்லை என்பதுதான் சோகமே.
சேரியியில் குடிகொண்டிருக்கும் சாமி பொதுப் பாதையில் வந்தால் ஊர் தீட்டுப் பட்டுவிடும் என்று கூறுகிற சமூகத்தில் சேரிப் பிணம் பொதுப் பாதை வழியே சுடுகாடு போவது சின்னச் சின்ன வழக்குகளாலோ சிறிய பெரிய ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களாலோ மட்டும் சாத்தியப் படாது. ஆனால் இவர்களிடம் இப்போது இருக்கும் ஆயுதங்கள் இவைகள்தான். தீண்டாமை ஒழிப்பு என்பதில் இருந்து சாதி ஒழிப்பு என்கிற நிலைக்கு நம் போராட்டங்கள் நகர்ந்தே ஆக வேண்டும்.
எல்லாம் பொதுப்பட்டால் ஒழிய பாதை பொதுப் படுவது தானாய் நடக்கும்.
****************************** ****************************** ****************************** ****************************** ********************
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பன்னிரண்டு தலித் மாணவர்கள் ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ரோஹித் தற்கொலையின் பொருட்டு போராடிக் கொண்டிருக்கக் கூடிய மாணவர்கள் மத்தியில் உரையாற்றும்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் யெச்சூரி கூறியுள்ளார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த சேலத்தை சேர்ந்த ஒரு தலித் மாணவனும் தற்கொலை செய்து கொண்டிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஆக மொத்தத்தில் தற்போது நம் கணக்கில் இந்தப் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த தற்கொலைகளின் எண்ணிக்கை ஒன்பதாகிறது.
தற்கொலை செய்து கொண்டுள்ளவர்கள் யாரையும் நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. எல்லோரும் குறந்த பட்சம் ஒன்று அல்லது இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்று தங்களது முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்து கொண்டிருக்கக் கூடிய ஆய்வு மாணவர்கள்.
இரண்டு பிரிவு மாணவர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினையினால் இதுமாதிரி நிகழ்வுகள் ஏற்படுவதாக நாம் கொள்ள இயலாது. இரண்டு தத்துவங்களுக்கு இடையேயான போராட்டம் இது. ஆனால் தொடர்ச்சியாக நிகழும் இந்தப் போராட்டங்களின் விளைவாக தற்கொலை செய்து கொள்வது தலித் மாணவர்களாகவே இருப்பதுதான் நாம் கவலை கொள்ள வேண்டியதும் கவனம் செலுத்த வேண்டியதும் ஆகும்.
இதன் பொருள் ஏன் உயர்சாதி மாணவர்கள் யாரும் இதுபோன்ற விஷயங்களில் தற்கொலை செய்துகொள்ள வில்லை என்பது அல்ல. அவர்கள் ஏன் தலித்துகளாக மட்டு இருக்கிறார்கள் என்பதே.
விவாதம் என்பது ஆய்வு மாணவர்களிடையே வளர்வது அவசியம். ஆனால் ஆளுகிற கட்டமைப்பு தான் சார்ந்த சித்தாந்தங்களை கேள்வியே கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான காய் நகர்த்துதலைத் தொடங்கியுள்ளதன் விளைவே இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணமாகிறது.
மும்பை தொடர் குண்டு வெடிப்பில் மரண தண்டனை வழங்கப் பட்ட யாஹூப்பிற்கு தண்டனை நிறைவேற்றப் பட்ட போது அதற்கெதிராக எதிர்ப்பு கிளம்பியது. வாய்ப்பு கிடைத்த இடங்களில் அவரவர் சக்திக்கேற்ற வகையில் எதிர்ப்பியக்கங்களும் நடை பெற்றது.
இரண்டு வகைகளில் இதற்கு எதிர்ப்பு எழுந்தது.
1) யாஹூப் உண்மையான குற்றவாளி அல்ல
2) தூக்கு தண்டனையே கூடாது
இதில் முதலாவது காரணம் பற்றி நமக்கெந்த கருத்தும் இந்த இடத்தில் இல்லை. ஆனால் மரண தண்டனை கூடாது என்பதில் நமக்கு எப்போதும் மாற்றுக் கருத்து இல்லை. இந்தப் பிரச்சினையில் யாஹூப்பை தூக்கில் போட்டதற்கு எதிரான கருத்தியக்கத்தை அந்தப் பல்கலைக் கழகத்தில் உள்ள அம்பேத்கர் மாணவர் இயக்கம் கையெடுத்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவாக கருதப் படுகிற ஏவிபிவி அமைப்பு இதை கடுமையாக எதிர்கொள்கிறது. இரண்டு தத்துவங்களைச் சார்ந்த இரண்டு மாணவர்களிடையே அதுவும் ஆய்வு மாணவர்களிடையே இத்தகைய முரண்பாடுகளும் விவாதங்களும் வருவது ஆரோக்கியமானது. நிர்வாகமும் அரசும் இந்த விவாதத்தை அந்தப் பிள்ளைகள் ஆரோக்கியமான முறையில் கொண்டு போகுமாறு நெறியாண்டிருக்க வேண்டும். ஆனால் மத்திய இணை அமைச்சரான மாண்பமை பண்டாரு அவர்கள் அம்பேத்கர் மாணவர் அமைப்பினை தேசவிரோதிகளென்றும் ஆகவே அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் மாண்பமை மனிதவள மேம்பாட்டு அமைச்சருக்கு கடிதம் எழுதுகிறார்.
அதன்பிறகு ரோஹித் உள்ளிட்ட அம்பேத்கர் மாணவர் அமைப்பை சார்ந்தவர்கள் சிலரை இடைநீக்கம் செய்கிறது நிர்வாகம்.
ஒருகட்டத்தில் ரோஹித் தற்கொலை செய்து கொள்கிறான்.
இது தனக்கே தெரியாமல் நடந்துவிட்டது என்று துணைவேந்தர் கூறுவதுதான் ஆச்சரியத்தையும் அய்யங்களையும் தருகிறது.
‘எனது நண்பர்களையும் எதிரிகளையும் இதன்பொருட்டு என் மரணத்தின் பின் தொல்லை தராதீர்கள்’ என்று அந்தக் குழந்தை எழுதி வைத்திருக்கிறான்.
அவனது எதிரிகளைக் கூட விட்டு விடலாம். ஆனால் தனக்கே தெரியாமல் இது நடந்ததாக கூறும் துணை வேந்தரை ’ எனில் யார் இதை செய்தது, அதன் பின்னணியில் யாரெல்லாம் இருந்தது?’ என்று அவர் சொல்லும்வரை சும்மா விடக் கூடாது.
****************************** **********
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்