Thursday, February 4, 2016

15 பாம்பு பிடிப்பவன் பிள்ளை படிக்கக் கூடாதா?

பாம்பு பிடிக்கிற காட்டுப்பயலுக எதுக்குடா பள்ளிக்கூடம் வந்து எங்க உசுர எடுக்கறீங்கன்னு கேட்ட வாத்தியாரின் குரலுக்கு பயந்து ஓடி வந்து செங்கல் சூளையில் செங்கல் அறுக்கும் இருளர் குழந்தையின் குரல் என்னை அறுக்கிறது.என்று தோழர் பர்வதா அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் அழுதுகொண்டே எழுதியிருந்ததைப் படித்ததும் ஏகத்துக்கும் ஏற்கனவே ரணமாகிப் போயிருந்த மனது இன்னும் பேரதிகமாய் கிழிந்து வலித்தது.

இதைப் படிப்பதற்கு ஒரு வாரத்திற்கும் முன்னர் காரைக்குடியில் நடைபெற்றபோதிஇலக்கிய நிகழ்வில் உரையாற்றப் போயிருந்தபோது போகிற போக்கில் ஒரு தோழர் பேசிய ஒரு விஷயம் என்னை ஏகத்துக்கும் ரணமாக்கியிருந்தது. அவர் இன்னமும் பணியில் இருக்கிறாரா அல்லது பணி ஓய்வு பெற்றுவிட்டாரா என்பது தெரியவில்லை. அவர் ஒரு தலித் ஆசிரியர். அவர் தனது உரையில் தனது பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக ஆசிரியர்களைப் பணியமர்த்தத் தேவை ஏற்படும் போதெல்லாம் உயர் சாதி ஆசிரியர்களைத் தொடர்பு கொள்ளும் தலைமை ஆசிரியர் பள்ளிக் கழிவறைகளில் அடைப்போ அல்லது வேறு ஏதோ பிரச்சினை ஏற்படும் போது அதை சரி செய்வதற்கான ஆட்களை அழைத்து வருமாறு தன்னை அழைத்து வேண்டுகோள் வைப்பார் என்றார். அவர் இதை போகிற போக்கிலும் ஒருவிதமான புன்னகையோடும்தான் கூறினார். ஆனால் அவரது ஆழ் மனதின் காயமும் வேதனையும் என்னை அரை பிளேடால் அங்கங்கே கீறி அதில் மிளகாய்த் தூளையும் பூசிச் சென்றது.

சரி, இவை இரண்டையும் இந்தப் பக்கத்தில் அழுதுப் புலம்பி கொஞ்சம் ஆற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தால் தோழர் ஜீவசுந்தரி பாலன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்த செய்தி ஒன்று என்னை நிலை குலையச் செய்தது. அது வட மாநிலமொன்றில் நடந்த சம்பவம். ஜோத்பூர் என்ற ஊரில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் ஏழு வயது மாணவன் ஒருவன் பள்ளியில் மதிய உணவினை  தனக்கான சிவப்பு வண்ணத் தட்டில் வாங்கிச் சாப்பிடாமல் பச்சை வண்ணத் தட்டில் வாங்கிச் சாப்பிட்டதற்காக அவனது ஆசிரியர் அவனை முரட்டுத் தனமாகத் தாக்கியதில் அவன் வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததாகவும் அவனை மருத்துவமனைக்கு அழைத்துப் போவதற்காக பள்ளிக்கு வந்த அவனது தந்தையையும் அந்த ஆசிரியர் தாறுமாறாகத் தாக்கியதாகவும் அந்த செய்தி சொன்னது.  

பச்சை வண்ணத்திற்கும் சிவப்பு வண்ணத்திற்கும் ஏழு வயது குழந்தையை இப்படி நையப் புடைக்குமளவிற்கு அப்படி என்ன வேறுபாடு இருக்க முடியும்? நம்மைப் பொறுத்தவரைக்கும் பச்சை என்றால் வளமையையும் சிவப்பு என்றால் புரட்சியையும் குறிக்கும் என்றும்தான் அறிந்து வைத்திருக்கிறோம். அந்தச் செய்திக்குள் உள்ளே நுழைந்து பார்த்தால்தான் அந்த இரு வண்ணங்களுக்குள்ளும் இரண்டு வர்ணங்கள் ஒளிந்து கொண்டிருப்பது தெரிகிறது.

அந்தப் பள்ளியில் மதிய உணவிற்காக பச்சை மற்றும் சிவப்பு வண்ணங்களில் தட்டுகள் அடுக்கப் பட்டிருக்கும். பச்சைத் தட்டுகள் உயர்சாதி மாணவர்களுக்காகவும் சிவப்பு தட்டுகள் தலித் மாணவர்களுக்காகவும் ஒதுக்கப் பட்டிருக்கின்றன. கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி தலித் சமூகத்தைச் சேர்ந்த ரமேஷ் எனும் ஏழு வயதுக் குழந்தை தவறுதலாக பச்சை வண்ணத் தட்டை எடுத்து உணவு வாங்கியமைக்காகத்தான் இந்த கொடூரத் தாக்குதல் நடை பெற்றிருக்கிறது..

தோழர் பர்வதா குறிப்பிட்டுள்ள சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடை பெற்றுள்ளது. அரசுப் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்திருக்கிறான் அந்தக் குழந்தை. அவனுக்கு கணக்கு வரவேயில்லை. அவன் இருளர் சமூகத்தைச் சார்ந்த மாணவன். அந்த ஆசிரியர் அவனை பாம்பு பிடிக்கிற பயலுக எல்லாம் எதுக்குடா பள்ளிக்கு வந்து எங்க கழுத்த அறுக்குறீங்க என்று என்று வைதிருக்கிறார். தொடர்ந்து அந்த ஆசிரியர் அனைத்துக் குழந்தைகளுக்கும் எதிரிலேயே அந்தக் குழந்தையை இதே மாதிரி வைது கொண்டே இருக்கவே அது அந்தக் குழந்தையின் தன்மானத்தைக் காயப் படுத்தியிருக்கிறது. அந்தக் குழந்தை பள்ளியிலிருந்து இடை நின்று செங்கல் சூளையில் வேலைக்கு சேர்ந்திருக்கிறான்.

படிக்கலைனா கொஞ்சம் அடிப்பாங்கதான். அதுக்காகப் பள்ளிக்கூடத்திற்கே போகாமல் இப்படி ஓடி வந்துவிடுவதா என்று அந்தக் குழந்தையை பர்வதா கேட்ட பொழுது, அடி உதையெல்லாம் தனக்கு வலிக்காது என்றும் அந்த ஆசிரியர் தொடர்ந்து தன் சாதி சொல்லித் திட்டியதுதான் மிகவும் வலித்ததாகவும் அந்தக் குழந்தை சொல்லியிருக்கிறான்.

சாதி சொல்லி ஒருவனை இழிவு படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் சொல்கிறது. அதுவும் இதே இழிவினை பள்ளிக் கூடத்தில் ஒருவர் செய்தால் அது மிகப் பெரிய குற்றம். அதுவும் சாதி பார்க்கக் கூடாது என்பதை எந்தப் பாடத்தை போதிக்கும் ஆசிரியராக இருந்தாலும் தனது பாடத்தினூடே சொல்லிக் கொடுக்கக் கடமைப் பட்டிருக்கிற ஒருவர் இந்தக் குற்றத்தை செய்தால் எந்த விதமான மன்னிப்பிற்கும் அருகதையற்றவராகிறார்.

ஏண்டா எங்க கழுத்த அறுக்குறீங்க?’ என்று அந்த ஆசிரியர் சொல்லியிருப்பதில்எங்கஎன்ற சொல் ஆசிரியர்களைச் சுட்டுகிறது. எனில் ஆசிரியனான என்னையும் அந்த வார்த்தை சேர்த்தே பொருள் கொள்கிரது. என்னையும் சேர்த்து அந்தக் குழந்தையை இழிவுபடுத்தும் உரிமையை அந்த ஆசிரியருக்கு யார் கொடுத்தது?

பொதுவாகவே குழந்தைகளைநீயெல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்குஎன்றோநீயெல்லாம் சிரைக்கத்தான் லாயக்குஎன்றோ யார் திட்டினாலும் குற்றமே. இது அந்தக் குழந்தையை மட்டுமல்ல மாடு மேய்த்தலையும் சிரைத்தலையும் சேர்த்தே கேவலப் படுத்தும் விஷயங்கள். இப்படிச் சொல்பவர்கள் யாராக இருப்பினும், அவர் எந்த உயர் படிப்பு படித்தவரே ஆயினும், அவர் எந்த உயர் பதவியில் இருக்கும் அதிகாரியாக இருப்பினும் அவரால் மாடு மேய்க்க முடியாது என்பதுதான் உண்மை. மாடு மேய்ப்பது என்பது அப்படி ஒன்றும் எளிதான செயல் அல்ல. மாடுகளை சாலைகளில் ஓட்டிச் செல்வது என்பதும், எங்கு புல் இருக்கும் என்பதை அறிந்து அவற்றை மேய்ச்சலுக்கு கொண்டு போவதும், மேய்ச்சலுக்கு புல்லும் நீரும் அருகருகே எங்கு இருக்கும் என்பதயும் அறிந்து செயல்பட வேண்டிய நுட்பமான வித்தை அது. பெத்த பிள்ளைகளுக்கே எப்போது பசிக்கும் எப்போது தகிக்கும் என்பதை சரியாக உணரமுடியாத நமக்கு மாடுகளுக்கு எப்போது தகிக்கும் என்பதை உணர்வது பிடி படுகிற விஷயமே இல்லை.

அதேபோல்தான் சிரைப்பதும். அது ஒன்றும் எளிதான விஷயமே அல்ல.எவ்வளவு பெரிய படிப்பு படித்திருந்தாலும் அந்த படிப்பை நம்பி சிரைப்பதற்கு யாரும் அவரிடம் தலையை நீட்டிவிட மாட்டார்கள்.
மாடு மேய்க்க லாயக்கு இல்லாதவன்தான் வாத்தியார் வேலைக்கு போவான் என்று யாரேனும் சொன்னால் கேட்கிற ஆசிரியருக்கு கோவம் வராதா? நிச்சயம் வரும். அது நியாயமும் கூட. அது நியாயம் எனில் படிப்பதற்காக பள்ளிக்கூடம் வந்திருக்கும் இருளர் சமூகத்தை சார்ந்த குழந்தையைநீயெல்லாம் பாம்பு பிடிக்கத்தான் லாயக்குஎன்று சொல்வது எப்படி நியாயம். பாம்பு பிடிப்பது என்பது அவ்வளவு எளிதானதா? இல்லை கேவலமானதா?

பாம்பு பிடிக்கிற ஒருவரிடம் நாம் என்ன எதிர்பார்ப்போம்? அது எவ்வளவு பெரிய பாம்பாக இருப்பினும், எத்தகைய கொடிய விஷம் கொண்டதாயினும் அதைப் பிடிக்கிற நுட்பமும் திறமையும் பெற்றவராக இருக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்போம். இது நியாயமான எதிர்பார்ப்பும்கூட. பாம்பைப் பிடிப்பதற்காகத்தான் காசு தருகிறோம். எனவே அவர் அது எந்தப் பாம்பாக இருப்பினும் பிடிக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். அவரால் அதைப் பிடிக்க இயலவில்லை எனில் அவர் அதற்கு லாயக்கற்றவர் என்று ஏசுவோம். பிடிக்காத பாம்பிற்காக அவருக்கு கூலி தர மாட்டோம். வேறு ஒரு திறமையான பாம்பு பிடிப்பவரை தேடுவோம். இங்கு ஒரு விஷயத்தை சொல்லிவிடுவது நலம். ஒரு பாம்பை தன்னால் பிடிக்க முடியாதபோது அந்த பாம்பு பிடிப்பவர் இது தன்னால் முடியாது என்பதை மட்டுமல்ல யாரால் முடியும் என்பதையும் சேர்த்தே சொல்லி விடுவார்.

தன்னால் முடியாது என்பதை ஒத்துக் கொண்டு யாரால் முடியும் என்பதையும் சொல்லக் கூடிய பாம்பு பிடிக்கும் ஒருவரைத்தான் நியாயமான பாம்பு பிடிப்பவர் என்று சொல்வோம்.

இதே அளவுகோளைத்தானே நாம் ஆசிரியர்கள் விஷயத்திலும் பயன்படுத்த வேண்டும். எந்த ஒரு மாணவனாக இருந்தாலும் அவனுக்கு புரிகிற பாடம் நடத்த வேண்டியது ஆசிரியரின் கடமை. ஏதோ ஒரு குழந்தைக்கு புரிய வில்லை என்றால் அவனுக்கு புரிகிற மாதிரி நுட்பம் அவரிடம் இல்லை என்றுதானே பொருள். ஒரு மாணவனுக்கு புரியவில்லை என்றால் அவனுக்கு புரிகிற மாதிரி சிரத்தை எடுக்க வேண்டும். அல்லது தன்னால் நட்த்த இயலவில்லை என்பதை ஒப்புக் கொண்டு அவர் வெளியேறிவிட வேண்டும்.

நியாயமாகப் பார்த்தால் அந்தக் குழந்தைதான்புரியற மாதிரி நடத்தத் தெரியாதவங்க எல்லாம் வேலைக்கு வந்து ஏன்யா எங்க கழுத்த அறுக்கறீங்கஎன்று சொல்லியிருக்க வேண்டும்.

இன்னொரு விஷயத்தையும் நாம் இங்கு பரிசீலிக்க வேண்டும். ஒரு முறைக்கு இருமுறை, இரண்டு முறைக்கு மூன்று முறை தனிக் கவனத்தோடு நடத்தினால் அந்தக் குழந்தைக்குப் புரியும் என்பது அந்த ஆசிரியருக்கும் தெரியும். குழந்தகளின் விகிதாச்சார முறையும் கார்ப்பரேட் மயமான கல்வி கட்டமைப்பில் தேர்ச்சி சதவிகிதமும் ஆசிரியர்களுக்கு அத்தகைய வாய்ப்புகளை தருவது இல்லை.

இந்தக் கட்டமைப்பிற்கு எதிராக அரசை எதிர்த்து போராடி மாற்ற வேண்டிய ஆசிரியர் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இதுமாதிரி வேலைகளில் இறங்கிவிடுவது மிகவும் சோகமானது.

தோழர் பர்வதா அவர்களின் பதிவைப் படித்ததும் அந்த ஆசிரியருக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தலாமா என் நான் முகநூலில் எழுதியபோது நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள் அதில் கலந்து கொள்வதாக முன்வந்தார்கள். ஆக, இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என்பதில் ஆசிரியர்களுக்கும் ஆர்வமிருக்கிறது. என்ன செய்வதென்று அறியாதவர்களாகவும், தெரிந்தாலும் முடிவெடுக்க இயலாதவர்களாகவும் இருக்கிறார்கள்.

ஆசிரியர்கள் தேவைப்படும் போது யாரேனும் இருக்கிறார்களா என்று உயர் சாதி ஆசிரியர்களையும் கழிவறை பிரச்சினையை சரி செய்ய யாரேனும் இருக்கிறார்களா என தலித் ஆசிரியகளையும் கேட்கிற மனப் போக்கு அசிங்கமான சாதியப் படிநிலையின் உச்சம்.

உயர்சாதி பிள்ளைகளுக்கும் தலித் குழந்தைகளுக்கும் தனித்தனித் தட்டுகளில் உணவு வழங்கப் படுமானால் அதுவே சிறைத் தண்டனைக்கு உரிய குற்றம். அதுவும் அரசுப் பள்ளிகளில் இப்படி நடக்குமெனில் அந்த அரசையே நாம் குற்றம் சுமத்த வேண்டும். இத்தகைய தனித் தட்டு கட்டமைப்பில் தவறிப்போய் ஏழு வயது தலித் குழந்தை உயர் சாதிக்கார்ர்களுக்கு உரிய தட்டில் உணவு பெற்றமைக்காக ஒரு அரசு ஆசிரியரால் தாக்கப் படுவான் என்றால் அந்த ஆசிரியருக்கு ஒரு ஆயுள் என்பதுகூட குறைவான தண்டனைதான்.  

1)    நியாயமாகப் பார்த்தால் அந்த இருளர் குழந்தையின் தந்தைதான் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகி அந்தக் குறிப்பிட்ட ஆசிரியருக்கு தன் மகனுக்கு புரிகிற மாதிரி பாடம் நடத்தத் தெரியவில்லை, எனவே அவரை மாற்றுங்கள் என்று கோரியிருக்க வேண்டும். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப் பட்டிருக்கும் பட்சத்தில் பெற்றோர்களைத் திறட்டி போராடியிருக்க வேண்டும்.
2)     பாட சம்பந்தப் பட்ட விஷயமெனில் அவர், கழிவறை சம்பந்தப்பட்ட விஷயமெனில் நானா? முடியாது என்று சொல்வதோடு அந்தத் தலைமை ஆசிரியருக்கு எதிராய் புகாரே செய்திருக்க வேண்டும் அந்த தலித் ஆசிரியர்.
3)    அந்தக் குழந்தைதாக்கப் பட்டதற்கு எதிராய் மிகப் பெரிய போராட்டத்தை கையிலெடுத்து அந்த ஆசிரியரை சிறைக்கு அனுப்பியிருக்க வேண்டும் பெற்றோர்கள்.

ஆனால் இவைகளை செய்வதற்கு போதிய அமைப்புகளும், பலமும் மேற்சொன்னத் திரளிடம் இல்லை. எனவே ஆசிரியர் அமைப்புகள் தமக்கான ஊதியம் மற்ரும் உரிமை சார்ந்த பிரச்சினைகளை கையிலெடுப்பதோடு மட்டும் அல்லாது இது மாதிரி பிரச்சினைகளையும் கையிலெடுத்து போராட வேண்டும்

இடதுசாரிசார்புடைய ஆசிரியர் அமைப்புகள் இது போன்ற விஷயங்களில் அக்கறையோடு இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் அது போதாது என்பதையே மேற்சொன்ன சம்பவங்கள் நமக்கு கற்றுத் தருகின்றன.

ஆசிரியர்களுக்கான வகுப்புகள் இவை விஷயங்களில் தேவைப் படுவதையும் ஆசிரியர் இயக்கங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.


     


  

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...