Friday, April 8, 2016

24 பொருள்நனிக் கொடுப்போனுக்கல்ல…

கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின்அமைப்பாளர் சு.மூர்த்தி அவர்கள் இன்று மாலை அலைபேசியில் வந்தார். எல்லோரையும் கல்வி வந்தடையாமல் இருப்பதற்கான தடைகளைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். இந்தக் காலத்திலும் கல்வியை எல்லோருக்கும் சாத்தியமாக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் கொஞ்சம் விட்டால் அழுதேவிடுவார் மனிதர் என்று தோன்றியது. தேர்தல் நேரமாக இருப்பதால் கல்வி குறித்த தங்களது கோரிக்கைகளின்மீது அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக படாதபாடு படுகிறார்.

1950 ஆம் ஆண்டு அரசியல் சாசனம் வகுக்கப்பட்டபோது பத்து ஆண்டுகளுக்குள் அனைவருக்கும் கல்வி வழங்கப்படும் என்று கூறினார்கள். அவர்களது கூற்றுப்படி1960 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் கல்வி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 2016 ஆம் ஆண்டிலும்அனைவருக்கும் கல்விஎன்ற கோஷத்தை இயக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

நாம் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில் அனைவருக்கும் கல்வி கூடாது என்று யாராலும் பேசமுடியாத குறைந்தபட்சம் வெளிப்படையாக பேசமுடியாத ஒரு நிலை இப்போது வந்திருக்கிறது. ‘அனைவருக்கும் கல்விஎன்பதை யாராலும் வெளிப்படையாக எதிர்க்க முடியாது என்பதே இன்றையத் தேதிக்கான சாதனை என்றால் இதற்கு முன்னால் அப்படி யாராலுமேனும் அதை எதிர்க்க முடிந்ததா? எதிர்த்திருக்கிறார்களா? என்ற கேள்வி எழுவது இயல்பே.

ஆம், கல்வி அனைவருக்குமானது அல்ல. அனைவருக்கும் கல்வியை வழங்கக் கூடாது என்று வெளிப்படையாகவே மதப் பழமைவாதிகள் தடுத்திருக்கிறார்கள். இவ்வளவு ஏன், நன்னூல் யார் யாருக்கெல்லாம் கல்வியைத் தரக்கூடாது என்று ஒரு நீண்ட பட்டியலையே தருகிறது.

களிமடி
மானி
காமி
கள்வன்
பிணியன்
ஏழை
பிணக்கன்
சினத்தன்
துயில்வோன்
தொன்னூற்கு அஞ்சி தடுமாறுளத்தோன்
தறுகணன்
பாவி
படிநன்

ஆகியோருக்கு கல்வியைத் தரக்கூடாது என்று நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவர் கூறுகிறார்.

கள்போதையில் இருப்போன், தன்னைப் பற்றியே பெருமை பேசிக்கொண்டிருப்போன், காமுகன், நோயாளி, ஏழை, கோவக்காரன், பாவச் செயல்களுக்கு அஞ்சாதவன் ஆகியோருக்கு கல்வியைத் தரக்கூடாது என்கிறார். இதுபோன்றஅறம்என்று அவர் கொள்வதற்கு மாறாக நடந்துகொள்வோருக்கு கல்வியை வழங்கக் கூடாது என்று அவர் கூறுவதைப் பார்க்கும்போது இரண்டு வகையான அய்யப்பாடுகள் நமக்குள் இயல்பாகவே எழுகின்றன.

பொதுவாகவே போதை, தற்பெருமை பேசுதல், களவு, காமம், நோய், பாவம் போன்றன இளவயதில் ஒட்டிக்கொள்வன. எனில் நன்னூல் காலத்தில் இளவயதில்தான் கல்வி தரப்பட்டதா? சிறுவர்களுக்கு அந்தக் காலத்தில் கல்வி வழங்கப்படவில்லையா?
சிறுவர்களுக்கும் நன்னூல் காலத்தில் கல்வி வழங்கப்பட்டது எனில் மேற்சொன்ன குணங்கள் சிறுவர்களுக்கும் இருந்ததா?

யாருக்கெல்லாம் கல்வி தரக்கூடாது என்று பட்டியலைத் தந்தவருக்கு ஒரு அய்யம் வந்திருக்க வேண்டும். ஒருக்கால் அந்தப் பட்டியலில் இல்லாத அனைவருக்கும் கல்வியைத் தரலாம் என்று யாரும் கருதி விடுவார்களோ என்ற அச்சத்தில் யார் யாருக்கெல்லாம் கல்வியை வழங்க வேண்டும் என்றும் ஒரு பட்டியலைத் தருகிறார்.

தன் மகன்
ஆசான் மகன்
மன்மகன்
பொருள்நனி கொடுப்போன்
வழிபடுவோன்

ஆகியோருக்கு மட்டுமே கல்வியை வழங்க வேண்டும் என்று கூறுகிறார். அதாவது தன்னுடைய வாரிசு, தனது ஆசானுடைய வாரிசு, தன் மண்ணை ஆளக்கூடிய மன்னனுடைய வாரிசு ஆகியோரைத் தவிர பணம் அள்ளி இறைத்து கல்வியை கேட்பவனுக்கும் தன்னை வழிபடுவோனுக்கும் மட்டுமே கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நன்னூல் கூறுகிறது. வழிபடுவோன் என்பதற்கு இந்த நேரத்து சரியான வார்த்தை என்றால்ஜால்ராஎன்று கொள்ளலாம். அல்லது எதையும் கேள்வி கேட்காது அண்டிப் பிழைக்கும் பிழைக்கத் தெரிந்தவன் என்றும் கொள்ளலாம். இன்னும் சரியாய் சொல்வதெனில்நாயும் பிழைக்கும் பிழைக்குமிந்தப் பிழைப்புஎன்பானே பாரதி அந்த நாயொத்த பிழைப்புவாதிகள் என்றும் கொள்வதற்கு நமக்கு உரிமை உண்டு.

நன்னூல் இலக்கணம் வழிகாட்டுவது போல் என்பது இன்றைய புரிதல். இன்றைய புரிதல் ஒரு காலத்தில் உத்தரவாக இந்த சமூகத்தால் ஏற்கப்பட்டிருக்கிறது. நன்னூல் உத்தரவிற்கு கட்டுப்படுகிற அல்லது ஏற்றுக்கொள்கிற அளவிலிருந்த சமூகம் பவணந்தி முனிவர் யார் யாருக்கெல்லாம் கல்வியைத் வழங்குமாறு சொன்னாரோ அவர்களுக்கு கல்வியை வழங்கியிருக்கும். அவர் யாருக்கெல்லாம் கல்வியை வழங்க்க் கூடாது என்று கூறினாரோ அவர்களுக்கெல்லாம் கல்வியை வழங்கியிருக்காது. நூறு விழுக்காடு இப்படித்தான் இருந்திருக்கும் என்று உறுதியாய் கூற இயலாது என்றாலும் தொண்ணூற்றி ஐந்து சதத்திற்கும் மேல் இப்படித்தான் இருந்திருக்கும்.

பவணந்தி சாமிகளை மற்ற மதவாதிகளைப் பார்ப்பதுபோல பார்த்திட முடியவில்லை. இவர் நீயெல்லாம் படிக்கக் கூடாது, நீயெல்லாம் படிக்கலாம் என்பதாக எந்த உத்திரவையும் நீட்டவில்லை. மிகவும் சாதுரியமாக ஆசிரியர்களுக்கு அதாவது அந்தக் காலத்து குருமார்களுக்கு யாருக்கெல்லாம் கற்றுத் தரக் கூடாது என்றும் யாருக்கெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறார்.

தன் மகன், அதாவது தன் வாரிசு. அடுத்ததாக தன் ஆசான் மகன். தனக்கு கற்றுக் கொடுத்த குருவின் வாரிசு கற்றுக் கொள்கிற வயதடைகிறபோது அவனுக்கு கற்றுக் கொடுக்கிற திடமற்றவனாகவோ அல்லது நோய்வாய்பட்டோ தனது குரு இருக்கலாம். அல்லது இறந்துபோயோ இருக்கலாம். அந்த நேரத்தில் தனது குருவின் மகனுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அதன்பிறகு மன்னனின் மகன் கல்வியைப் பெறுகிற தகுதியைப் பெறுகிறான். மன்மகன் என்பதைக்கூட நாட்டாமை போன்ற அந்தஸ்தில் இருப்பவர்கள் வீட்டு வாரிசுகள் என்பதுவரைக்கும்கூட சற்று நீட்டிக் கொள்ள இயலும். மேற்சொன்ன மூன்றில் ஒன்று தன் வாரிசு, இரண்டாவது தனக்கு சொல்லிக் கொடுத்தவன் வாரிசு, தன்னை ஆள்கிறவன் வாரிசு  என்கிற வகையில் தவிர்க்க முடியாதவர்கள் என்பதால் இதுவரைக்கும்கூட போகட்டும் என்று விட்டுவிடலாம்.

அடுத்து தவிர்க்க முடியாதவர்கள் பட்டியலைத் தாண்டி பொது ஜனங்களில் யாருக்கு கற்றுக் கொடுக்கலாம் என்று கூறுகிறார் பாருங்கள்.  

பொருள்நனி கொடுப்போனுக்கு கல்வியைத் தருமாறு உத்தரவிடுகிறார். அதாவது காசள்ளிக் கொடுப்பவனுக்கு கல்வியை வழங்குமாறு கூறுகிறார். அதாவது கல்வியை விற்கச் சொல்கிறார். அதுவும் பொருள்நனி கொடுப்போருக்கு என்கிறார். இதற்கு அநேகமாக காசள்ளிக் கொடுப்போர் என்று பொருள் கொள்ள இருக்கும் வாய்ப்பினை யாராலும் மறுக்க இயலாது. இன்னும் கொஞ்சம் ஜனரஞ்சகமான பொருள் கொள்வதெனில் கல்வியை அநியாய விலைக்கு விற்க சொல்லியிருக்கிறார். ஐந்து முதல் ஏழாம் நூற்றாண்டிற்குள் அநேகமாக இவரது காலம் வரக்கூடும். எனில் கல்வியை வணிகப் படுத்தும் வேலை என்பது ஏறக்குறைய ஏழாம் நூற்றாண்டிலேயே தொடங்கியிருக்க வேண்டும். எனில், கல்வி சந்தைக்கு வந்து ஏறத்தாழ ஆயிரத்து நானூறு ஆண்டுகள் கடந்திருக்க வேண்டும்.
இரண்டாவதாக வழிபடுவோனுக்கு கல்வியை வழங்கக் கூறுகிறார். வழிபடுவோன் எனில் யார் என்று கொஞ்சம் அலசவேண்டிய அவசியம் இருக்கிறது. வழிபடுவோன் எனில் குருவை தெய்வமென மதித்து தொழுதேற்பவன் என்று ஆகிறது. அதாவது குரு சொல்வதை ஒருபோதும் கேள்வி கேட்காது ஏற்பவன். பச்சையாக சொல்வதெனில் தானுண்டு தன் குடும்பம் உண்டு என்று பிழைக்கத் தெரிந்தவனுக்கு கல்வியை தரலாம் என்கிறார்.

போதையில் இருப்பவன், திருடுபவன், தற்பெருமை கொள்வோன், பாவி, சோம்பேறி போன்றோருக்கெல்லாம் கல்வியைத் தருவது கூடாது என்று கூறுகிறார். மேலோட்டமாக பார்த்தால் இவை எல்லாம் சரிதானே என்று தோன்றும். இவர்கள் எல்லாம் நல்லவர்கள் அல்லவே, நல்லவர்கள் அல்லாதவர்களுக்கு கல்வி தரக்கூடாது என்று சொல்வது நியாயம்தானே என்று தோன்றும்.

அலுவலக குமாஸ்தாக்களாக்குவதா கல்வியின் நோக்கம். அதுதான் நோக்கம் என்றால் அது அய்யோ என்று நாசமாய்த்தானே போகும். கல்வியின் பிரதான் நோக்கம் என்பது நெறியற்ற தனிமனிதனை நெறிப்படுத்தி யோக்கியமான சமூகத்தை கட்டமைப்பதுதானே. அதுவிடுத்து கெட்டவன் எக்கேடோ கெட்டு போகட்டும் நல்லவனை மட்டும் நல்வழி படுத்துவோம் என்று சொல்வது எப்படி சரியாகும். கெட்டதை நல்லதாக்க முயற்சிக்காவிட்டால் அது வளரும். அதற்கும் நல்லதுக்கும் முரண் வந்துகொண்டே இருக்கும். ஆளும் வர்க்கம் இரண்டு பிரிவினருக்கும் நாட்டாமை செய்கிற வேலையை மட்டும் கவனித்துக் கொண்டு இருக்கும். ஆளும் வர்க்கத்தின் அட்டூழியங்களை எதிர்த்து கேள்வி எழாது.

காசிருப்பவனும் பிழைப்பு வாதியும் தனக்கான வசதிகள் குறித்து மட்டுமே கவலை கொள்வான். எனவே அல்லதை எதிர்க்க ஒருபோதும் நேரத்தை செலவிட சம்மதிக்க மாட்டான்.

இவை எவற்றினும் ஏழைக்கு கல்வி தரக்கூடாது என்பதில்தான் நமக்கு பெருங்கோவமே.

பவணந்தி முனிவர் சமணர். சமணர் காலத்தில் கல்வியை பொதுப்படுத்தும் முயற்சி இருந்ததாகவே தெரிகிறது. அவரே இப்படி ஏன் கூறுகிறார், அல்லது அப்படி கூறவேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததா என்பது குறித்தும் என்று காய்தல் உவத்தல் இன்றி ஆய்வது அவசியம். அப்படி நிர்ப்பந்தம் இருந்திருப்பின் அது எங்கிருந்து வந்தது? அதற்கு பணிய வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பவைகுறித்தும்கூட ஆய்வுகள் அவசியம்.

இன்னொரு விஷயத்தையும் நாம் பரிசீலிக்க வேண்டிய தேவை இருக்கிறது. தன் மகன், ஆசான் மகன், மன்மகன், பொருள் அள்ளிக் கொடுக்க வசதியுள்ள பணக்காரன், வழிபடுவோன் ஆகிய யாவரும் ஆண்பாலாகவே இருப்பது சத்தியமாய் தற்செயலானது அல்ல. ஆக, கல்வியை பெண்களுக்கு வழங்கக் கூடாது என்பதும்கூட நன்னூலில் மறைமுகமாக இருப்பதாகவே படுகிறது.

ஆக, கல்வி என்பது எல்லோருக்குமான உரிமை என்பதை நிலைநிறுத்த ஒவ்வொரு காலகட்டத்திலும் எதிர்ப்பியக்கங்கள் தொடர்ந்து நடந்தபடியேதான் இருந்திருக்க வேண்டும். சன்னமான எதிர்ப்பியக்கங்கள் சலசலப்புகளாக கொச்சைப் படுத்தப்பட்டு பதியப்படாமல் போயிருக்க வாய்ப்புண்டு. அவற்றைத் துருவி எடுத்து பதிதல் வருங்கால எதிர்ப்பியங்களை கூர்மைபடுத்தும் என்ற வகையில் அதை முன்னுரிமை கொடுத்து செய்தல் வேண்டும்.

கல்வி உரிமைச் சட்டம் 2009’ கல்வியை அடிப்படை உரிமை என்று உரத்து சொல்கிறது. ‘கட்டாயக் கல்விஎன்கிற பதப் பிரயோகமே அரசிடம் இருந்து வந்துவிட்டது. கல்வி கட்டாயம் என்று பிரகடனப் படுத்தப்பட்ட பின்பும் கல்வியை ஒடுக்கப் பட்டவனிடம் இருந்தும் ஏழைகளிடம் இருந்தும் பறித்தெடுப்பதற்கான சதிகளை தேன்தடவி விநியோகம் செய்வதற்கு ஒரு கூட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

கல்வி உரிமச் சட்டம் 2009 கூட ஆறு முதல் பதினான்கு வயதுடைய குழந்தைகளுக்கு மட்டுமே கட்டாயக் கல்வி என்கிறது. ஆறு வயதிற்கு முன்னால் உள்ள குழந்தைகளின் கல்வி குறித்தும் பதினான்கு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் கல்வி குறித்தும்கூட அது கவலைப் படுவதாகத் தெரியவில்லை.

பதினெட்டு வயதுவரை குழந்தைகள்தான் என்று இருந்தது. அதை எப்படியேனும் குறைத்துவிட வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருந்த கூட்டத்திற்கு பெருகிய சிறார் குற்றங்கள் பெருவாய்ப்பாய் போகவே அதை சாதித்து முடித்துக் கொண்டார்கள்.

ஆக, ’எல்லோருக்கும் கல்விஎன்ற கோஷத்தையோ, அதற்கான இயக்கங்களையோ நாம் இன்னும் பேரதிக வெறியோடு கையெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. எழுதப் படிக்கத் தெரியாத நம் முன்னோர்கள் நமது கல்விக்காக அவர்கள் அளவிற்கு போராடியிருப்பார்கள். அந்த போராட்ட வரலாறுகளை திரட்டி பதிவோம். அவர்கள் தியாகத்திலிருந்து கனலெடுப்போம்.

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிப்போம்என்று கல்வி யாருக்கானது என்று தெளிவாய் சொன்ன பாரதி எனும் காட்டுத்தீ நமக்கு வெளிச்சங்காட்டும்


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...