வெங்காயத்தின் கைங்கரியத்தால் மத்திய நிதி அமைச்சர் மாண்பமை நிர்மலா சமூக வலைதளங்களின் பகடிக்கும் மீம்சிற்கும் ஆட்பட்டிருக்கிறார்
இன்றைக்கு அவையில் வெங்காயமும் பூண்டும் அவ்வளவாக எடுத்துக்கொள்ளாத குடும்பத்தில் இருந்து வந்திருப்பதாக அவர் கூறியதில் இருந்து வலைதளம் அவரை எடுத்து கொண்டது
தோழர் ஜெயதேவன் இதுகுறித்து வைத்திருந்த ஒரு பதிவில் பின்னூட்டம் இட்டிருந்த ரவி (Ravi S) ,
வெங்காயப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக துருக்கி மற்றும் எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதாகவும், பிரச்சினை விரைவில் தீர்ந்துவிடும் என்றும் திருமதி நிர்மலா குறிப்பிட்டார் என்றும்
அப்போது ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர் அந்த நாடுகளின் வெங்காயத்தை அமைச்சர் ருசித்துப் பார்த்திருக்கிறாரா என்று கேட்டபோது வெங்காயம் சாப்பிடும் பழக்கம் தமக்கில்லை என்று அமைச்சர் கூறியதைத்தான் சிலர் இப்படி திரித்துவிட்டார்கள் என்றும் கூறுகிறார்
அது உண்மையாகவே இருக்கட்டும்
துருக்கியில் இருந்தும் எகிப்தில் இருந்தும் வெங்காயத்தை இறக்குமதி செய்யவேண்டியத் தேவை ஏன் வந்தது?
இந்தியாவில் வெங்காய சாகுபடி குறைந்து போனதா?
இந்தியாவின் வெங்காயத்தேவை 1,60,00,000 டன் என்றும் ஆனால் இந்தியாவின் சராசரி வெங்காய உற்பத்தி ஆண்டொன்றிற்கு 2,30,00,000 டன் என்றும் இன்றைய (05.12.2019) தீக்கதிர் தலையங்கம் கூறுகிறது
பிறகு ஏன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டியத் தேவை வந்தது?
இந்த ஆண்டு 12,40,000 டன் வெங்காயத்தை இந்தியா ஏற்றுமதி செய்ததும்,
செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு அரசாங்கத்திடம் இருந்த வெங்காயத்தில் 30,400 டன் அழுகிப்போனதும்
இன்றைய வெங்காயத் தட்டுப்பாட்டிற்கான முக்கியமான காரணங்கள் என்றும் இன்றைய தீக்கதிர் சொல்கிறது
ஆக இந்த அரசாங்கம் பதில் சொல்ல வேண்டியது இந்தக் காரணங்களுக்குத்தான்
தேவை உணராமல் வெங்காயத்தை குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்ததும்
அழுகாமல் பாதுகாக்கத் தவறியதும்
இன்றைய வெங்காயத் தட்டுப்பாட்டிற்கும் விலை உயர்விற்கும் காரணங்கள் என்பதைத் தவிர்க்க இயலாது
போக,
இவ்வளவு விலைக்கு வெங்காயம் மார்க்கெட்டில் விற்கப்படும் சூழலில் விளைவித்தவன் இந்த ஆண்டு ஒரு கிலோ வெங்காயத்தை ஒரு ரூபாய் ஐம்பது பைசாவிற்கு விற்றான் என்ற கொடுமையையும் மறந்துவிடக் கூடாது
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்