ஸ்ரீதேவி இறந்த அன்று எழுதியது
எனவே ஸ்ரீதேவி....
**********************
ஆமாம்தான்
திருடினான்தான்
மூன்றுபிடி அரிசியை
கொஞ்சம் புளியை
ஆமாம் ஆமாம்
திருடினான்தான்
அந்தப் பழங்குடிப் பையனின்
கொள்ளுத் தாத்தனிடமிருந்து
வனத்தைத் திருடி
வயலாக்கி
அதில் விளைந்த நெல்லை
அவனது பாட்டனின் வனத்தில்
ஒரு துண்டு திருடி
ஆலையாக்கி
அவித்து
உலர வைத்து
அரைத்து
அரிசியாக்கி
அவனது அப்பனின் வனத்தில்
சாலை போட்டு
மாமனின் காட்டு மரத்தில்
வண்டி செய்து
பங்காளியின்
காடு திருடி கட்டப்பட்ட
கடையிலிருந்து
ஆமாம்
திருடினான்தான்
மூன்றுபிடி அரிசியையும்
துளியூண்டு
புளித்துண்டையும் திருடினான்தான்
காடு திருடியவர்கள்
துளியூண்டு புளி திருடியவனை
கொன்று போட்டிருக்கிறார்கள்
கொலையைச்
சுடச்சுட
படமெடுத்து
மானுட நெருடலேதுமின்றி
வலை ஏற்றி இருக்கிறார்கள்
படங்களில்
சாவதாய் நடிப்பீர்கள் ஸ்ரீதேவி
அந்தப் படத்தில்
இயல்பாய் செத்திருக்கிறான்
அதாவது
சாவதாய் வாழ்ந்திருக்கிறான்
ஸ்ரீதேவி
இத்தனை எழுதியும்
எவ்வளவு அழுதும் ஆறவில்லை
ஆறும்போது
உங்களுக்கொரு இரங்கலை சொல்வேன்
போய் வாருங்கள் ஸ்ரீதேவி
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்