Sunday, January 14, 2018

65/66, காக்கைச் சிறகினிலே மே 2017

எதைச் சொன்னாலும் நம்புமளவு நல்லவர்கள்தான் நாம். ஆனால், தெர்மாகோல் ஷீட்டால் வைகையை மூடினால் வைகை நீர் ஆவியாவதிலிருந்து தடுக்கலாம் என்று சொன்னாலும் அதை நம்ம்புமளவு நல்லவர்கள் இல்லை என்பது கூட்டுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு செல்லூர் ராஜு அவர்களுக்கு தெரியாமல் போனதுதான் சோகம்.

வைகை அணையில் தண்ணீரின் அளவு  இருபது அடி அளவிற்கு குறைந்து போயிருக்கிறது. இது மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை கொண்டுவரும். இந்த நிலையில் கொட்டித் தீர்க்கிற கடுமையான வெப்பமானது இருக்கிற தண்ணீரிலும் ஒரு பகுதியை ஆவியாக்கிவிடுகிறது. அதை எப்படித் தடுப்பது என்று யோசித்த சில விஞ்ஞானிகள் தண்ணீரின் மீது தெர்மாகோல் அட்டைகளை மிதக்கவிட்டால் தண்ணீர் ஆவியாவதைத் தடுத்துவிடலாம் என்று அமைச்சருக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். அதை அதிகாரிகளும் ஆமோதித்திருக்கிறார்கள்.

அமைச்சரும் தெர்மாகோல் அட்டைகளோடு புறப்பட்டு இரண்டு மூன்று அட்டைகளை நீரில் பயபக்தியோடு மிதக்க விட்டு அந்தப் பணியினைத் துவக்கி வைத்திருக்கிறார். அமைச்சரும் ஊழியர்களும் கரையில் நின்று வேடிக்கைப் பார்க்க ஊழியர்கள் படகிலே சென்று அட்டைகளை வீசியிருக்கிறார்கள். இரண்டு மூன்று நிமிடங்களுக்குள்ளாக வீசிய அட்டைகள் எல்லாம் கரையிலே ஒதுங்கிவிட்டன. பெரும்பகுதி அட்டைகள் பொடிப் பொடி துகள்களாய் மாறி மிதக்க ஆரம்பித்துவிட்டன.

நதியில் தெர்மாகோல் அட்டைகளைப் போட்டால் சிறிய காற்றிற்கே அவை பறந்துபோய்விடும் என்ற உண்மையோ அல்லது தெர்மாகோல் துகள்கள் மீன்களை அழித்துப் போடும் என்பதோ இந்த அறிவாளிகளுக்கோ, அதிகாரிகளுக்கோ அமைச்சருக்கோ எப்படித் தெரியாமல் போனது என்பதுதான் தெரியவில்லை.

இது ஒருபுறமிருக்க இந்த தெர்மாகோல் அட்டைகளுக்கான செலவு பத்து லட்சம் ரூபாய் என்று சொல்கிறார்கள்.

இவர்கள் அட்டைகளை மிதக்கவிட்ட ஏரியாவின் நீளம் சுமாராக எழுபது அடி அகலம் கிட்டத்தட்ட எழுபது அடி என்று அறிய முடிகிறது. எனில், இவர்கள் தெர்மாகோல் அட்டைகளை மிதக்கவிட்ட நீரின் பரப்பளவு 4,900 சதுர அடி. எனில், இவர்கள் பயன்படுத்திய தெர்மாகோளின் அளவு 4,900 சதுர அடி. ஒரு கணக்கிற்காக 5,000 சதுர அடி என்று வைத்துக் கொள்வோம்.

50,000 சதுர அடி என்கிற அளவிற்குதெர்மாகோள் அட்டைகளை மொத்தமாக வாங்கும் போது மொத்த விலைக்கே கிடைக்கும். ஒரு சதுர அடி பத்து ரூபாய்க்கு கிடைக்கும் என்கிறார்கள்.எனில் வாங்கப்பட்ட 5,000 சதுர அடி தெர்மாகோல் அட்டையின் விலை 50,000 ரூபாய் என்றாகிறது. மிச்ச செலவு என்கிற வகையில் மிகத் தாராளமாகக் கணக்கிட்டாலும் இன்னுமொரு 25,000 ரூபாய் அளவிற்கு வரும். ஆக எப்படித்தான் தாராளமாய் கணக்குப் பார்த்தாலும் மொத்த செலவு 75,000 ரூபாயய்த் தாண்டாது.

ஆக, எஞ்சிய 9,25,000 ரூபாய் எங்கு போனது என்ற அய்யம் பாமர ஜனங்களுக்கு வருகிறது.

9,25,000 ரூபாய் செலவான வகையில் 75,000 ரூபாய் ஊழல் என்றால்கூட ஒரு அர்த்தம் இருக்கிறது. 75,000 ரூபாஇ செலவு செய்த ஒரு வேலையில் 9,25,000 லஞ்சம் என்பதை எப்படி ஏற்பது?

இதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது தோழர் முத்தையாவோடு பேசிக்கொண்டிருந்தபோது பண்ணை பசுமைக் கடைகள்மூலம் கூட்டுறவு சொசைட்டிகளையே ஏறத்தாழ திவால் நிலைக்கு இதே அமைச்சர் கொண்டு வந்திருக்கும் சோகத்தை விவரித்தார்.

பண்ணை பசுமை கடைகள் 50 ரூபாய் லிலையுள்ள காய்களை விவசாயிகளிடமிருந்து 25 ரூபாய்க்கு வாங்கும். மிச்சமுள்ள 25 ரூபாயை அரசு கூட்டுறவு சொசைட்டிகள் மூலம் நடத்தப்படும் பண்ணை பசுமை கடைகளுக்குத் தரும் என்பது ஏற்பாடு,. ஆனால் அந்தப் பணத்தை இதுவரை அரசு தராததாலும் இதில் நடந்த மற்ற சில ஊழல்களாலும் சொசைட்டிகள் ஆட்டம் கண்டிருப்பதாக உடைந்த குரலில் கூறினார்.

ஒன்றை மீண்டும் சொல்வோம் அமைச்சருக்கு,


எதை செய்தாலும் ஏற்கிற அளவிற்கு அவ்வளவு நல்லவர்கள் இல்லை நாங்கள்.’
****************************************************************************************  

ஸ்ரீவில்லிப்புதூர் அருகேயுள்ள தொட்டியபட்டி கிராமத்தில் உள்ள அருந்ததியர்களின் குடிசைகள் கொளுத்தப்பட்டு தரைமட்டமான கொடுந்துயரம் நிகழ்ந்துள்ளது. ரெய்டு குறித்தும் கிழிந்து கிடக்கும் அதிமுக அணிகளின் இணைப்பு குறித்தும் அக்கறைப்படுமளவிற்கு ஊடகங்கள் இது விஷயத்தில் ஏன் அக்கறை கொள்ளவில்லை என்பது தெரியவில்லை.

பொதுக் குழாயில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு கூடுதலாக தண்ணீர் பிடித்ததற்காக அருந்ததிய மக்களின் குடிசைகள் கொளுத்தப்பட்டு தரைமட்டமாக்கப் பட்டிருக்கின்றன.

இதைப் பற்றியும் பேசுவதாகக் காட்டிக்கொள்ளும் ஊடகங்களும் தலைவர்கள் சிலரும்கூடதொட்டியப்பட்டியில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட கலவரத்தில்என்றுதான் குறிப்பிடுகிறார்கள். இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட தகறாறு எனில் ஒரு பிரிவினருக்கு மட்டும் எப்படி பொருட்சேதமும் காயங்களும் ஏற்படும்?

இருசாராரும் தெலுங்கு பேசுபவர்கள் என்பது மனிதர்களை இணைக்க மொழி மட்டும் போதாது என்பதை உணர்த்துகிறது.  
*************************************************************************************  

இப்போது நடந்து கொண்டிருக்கும் அஇஅதிமுக வின் இரண்டு அணிகளுகளுக்கு இடையேயான சகலத்தையும் பிஜேபி தான் இயக்கிக் கொண்டிருக்கிறது என்ற கூற்றில் பொய் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த ஆட்சியை கலலைத்துவிட்டு தேர்தலை நடத்தினால் என்ன நடக்கும் என்பது பிஜேபிக்கு நன்கு தெரியும். போக ரெய்டு, நடவடிக்கை போன்ற பம்மாத்துகளால் வர இருக்கிற குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழகத்தில் இருந்து வாக்குகளை அறுவடை செய்வத்ஜற்காக அது முயன்றுகொண்டு இருக்கிறது.


தேர்தலுக்குப் பிறகும் இவர்களது ஆட்சியை நீட்டிக்கவே அது விரும்பும். இவர்கள் அரங்கேற்றும் அசிங்கங்களைதிராவிடத்தின்கூறுகளாக அம்பலப் படுத்த முயற்சிக்கும்.

புதிது புதிதாக திட்டங்களை தமிழகத்திற்கும் அவர்கள் வழங்கக் கூடும். அதைப் பயன் படுத்திக் கொண்டு பிரதமரை, மத்திய அமைச்சர்களை, பிஜேபி தலைவர்களை தமிழகத்திற்கு அடிக்கடி கொண்டு வந்து காலூன்ற முயற்சிக்கும்.

அனைத்து கட்சியினரும் உஷாராக இருக்க வேண்டிய நேரம் .

******************************************************************************************* 

பன்முகத் தன்மைதான் இந்தியாவின் சிறப்பு. இன்னும் சொல்லப்போனால் மற்ற நாடுகள் ஒருவிதமான பொறாமையோடு இந்தியாவை மதிப்பதற்கே இந்தப் பன்முகத் தன்மைதான் காரணம்.

பிஜேபி ஆட்சிக்கு வந்தது முதல் இந்தப் பன்முகத் தன்மையை உடைத்து நொறுக்குவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

இந்தி தெரிந்த மந்திரிகள் இந்தியில்தான் பாராளுமன்றத்தில் இந்தியில்தான் உரையாட வேண்டும்என்று முடிவெடுத்திருப்பதும் அப்படியான ஒரு நடவடிக்கைதான்.

ஒற்றைக் கலாச்சாரமும், ஒற்றை மொழியும் இந்தியாவைக் கூறுபோடவே செய்யும் . எனவே பன்முகத் தன்மையை பாதுகாத்திடுமாறு ஒரு வேண்டுகோளை தமிழ் மக்கள் சார்பில் வைப்போம்.

*************************************************************** 

கடந்த காலத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகம் நல்ல பல நூல்களையும் மொழி பெயர்ப்புகளையும் வெளியிட்டிருக்கிறது. அவற்றில் பெரும்பான்மை தொட்டால் ஒடிந்துவிடும் நிலையில் இருக்கின்றன.


தமிழ், உளவியல், வரலாறு, பூகோளம், கணிதம், விஞ்ஞானம் என்று சகல தளங்களிலுமான நூல்கள் விரவிக் கிடக்கின்றன.

ஏறத்தாழ அழிந்துபோகும் நிலையில் இருக்கக் கூடிய இந்த நூல்களை மறுபதிப்பு செய்யும் முயற்சி நடப்பதாக அறிய முடிகிறது.

மிக நல்ல விஷயம்.
*********************************************************************************** 

நினைத்துப் பார்க்கவே முடியாத வீச்சோடு நிறைய இளைஞர்கள் முகநூலில் இயங்குகிறார்கள். அவர்களது கற்பனையை என்னமோ எதோவென்று ஒதுக்கிவிட முடியவில்லை.

சி.சு.முருகேசன் அப்படியொரு கவிதையை எழுதிருந்தார்.

தடுமாறும் நிலா.
முகம் திருத்திக் கொள்ள
ஒரு தடாகம் காணாமல்.
மாலை நெருக்க

நிலவின் கைகளில் பௌடரும் பொட்டும். அது தனது முகத்தை அழகுபடுத்திக் கொள்ள விரும்புகிறது. நீர்தழும்பும் தடாகம்தான் நிலவு முகம் பார்க்கும் கண்ணாடி. அதன் பொருட்டு தடாகம் தடாகமாக நிலவு அலைகிறதாம். எல்லாத் தடாகங்களும் வறண்ட பள்ளங்களாகவே இருப்பதால் தடுமாறுகிறதாம் நிலா.

தடாகம் தேடும் நிலா
முகம் திருத்திக்கொள்ளஎன்பது மதிரி செதுக்கினால் தேவலாம் என்று பட்டது.

வறட்சியை இவ்வளவு அழகாக சொல்ல முடியும் என்பதை எழிதி நிறுவியிருக்கிறார் முருகேசன். வாழ்த்துக்கள்.

*************************************************888

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...