Sunday, January 14, 2018

65/66, காக்கைச் சிறகினிலே, ஏப்ரல் 2017


ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் இந்நேரம் சிறைக்கு சென்றிருப்பார். அதன் காரணமாக RK நகரில் இடைத்தேர்தல் வந்திருக்கும். ஆனால் இறுதித் தீர்ப்பு வருவதற்கு முன்னமே அவர் இறந்துவிட்ட காரணத்தால் அதன் பொருட்டாக வந்திருக்கிறது. அவர் உயிரோடு இருந்திருந்தாலும் RKநகருக்கு இடைத்தேர்தல் வந்திருக்கவே செய்யும் என்பதைத் தவிர அது குறித்து நாம் பேசுவதற்கு பெரிதாய் ஏதுமில்லை.

இந்த இடைத்தேர்தலில் அஇஅதிமுகவின் இரண்டு அணிகளும் கட்சியின் பெயரையோ அல்லது இரட்டை இலை சின்னத்தையோ இந்த இடைத்தேர்தலுக்கு பயன்படுத்த முடியாது என்று இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இனி இந்த  முடக்கத்தை அவர்கள் நீதிமன்றத்தை அணுகி சரி செய்துகொள்ள வேண்டும்

அவர்களது சின்னத்தை முடக்கியதில் பிஜேபியின் பங்கு ஓபிஎஸ் அவர்களது கருவியாய் செயல்பட்ட விதம் போன்ற எது குறித்தும்கூட நாம் பேசுவதற்கோ கவலைப் படுவதற்கோ ஏதும் இல்லை.

அவரது ஆதரவை பிஜேபி தவிர வேறு யாரும் கோராத நிலையில் தனது ஆதரவு யாருக்கும் இல்லை என்று திரு ரஜினி அவர்கள் கூறுவதை ஒரு சன்னமான புன்னகையோடு கடப்பதைத் தவிர நமக்கு அதிலும் எந்த வேலையும் இல்லை.

ஆனால் இந்தத் தேர்தலை முன்னிட்டு மக்கள் நலக்கூட்டணி பிரிந்திருக்கிறது. அதை அவ்வளவு எளிதாக நம்மால் கடந்துவிட முடியவில்லை. நம்மைப் பொறுத்தவரை மிகவும் கவலை கொள்ளவேண்டிய விஷயமாகவே இது படுகிறது.

ஆகச் சமீபத்து மக்கள் அரசியலில் நமக்கு அதிகம் நம்பிக்கை ஊட்டிய நிகழ்வு மக்கள் நலக் கூட்டணியின் உதயம்தான். மக்கள் அந்தக் கூட்டணியை மகிழ்ந்து வரவேற்கவே செய்தார்கள். திரண்டுக் கொண்டாடவே செய்தார்கள். திரு விஜயகாந்த், திருமதி பிரேமலதா மற்றும் திரு வைகோ ஆகியோரின் உரைகளும் செயல்பாடுகளும் மக்கள்நலக் கூட்டணியின்மீது ஒருவிதமான அதிருப்தியையை மக்களிடம் ஏற்படுத்தின.

சென்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு திரு வைகோ அவர்களும் திரு விஜயகாந்த் அவர்களும் வெளியேறினார்கள். இதுகூட மக்கள்நலக் கூட்டணியைப் பொறுத்தவரை ஆரோக்கியமான விஷயமே. இரண்டு பொதுவுடைமைக் கட்சிகளும் விடுதலைச் சிறுத்தைக் கட்சியும் இணைந்த மக்கள்நலக் கூட்டணியை மக்கள் பெரிதாக நம்பினார்கள். ஓட்டுப் போடாமல் நம்பிக்கை வைப்பதில் என்ன பயன் என்று இவர்கள் கேட்கக்கூடும். அது நியாயமானதும்கூட. அனால் ஓட்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் கடந்த அக்கறையும் பற்றும் உங்களுக்கு இருக்கவேண்டும் என்ற என் போன்றோரின் ஆசையும் நியாம்தானே?

எது செய்தால் வாக்கு கிடைக்கும் யாரோடு இணைந்தால் அதிகாரம் கிட்டும் என்று கணக்குப் போடுகிற இயக்கங்களாக உங்களை நாங்கள் கணித்து வைத்திருக்கவில்லை.

அதுவும் கடந்த தேர்தலில் திருமாவளவன் அவர்கள் தான் ஒரு அழுத்தமான வெகுஜன தலைவர் என்பதை ஒவ்வொரு நகர்விலும் நிரூபித்துக் கொண்டே இருந்தார்.

ஆனால் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவதா வேண்டாமா என்ற விவாதத்தில் இவர்களிடையே பிளவு வந்திருக்கிறதுஅது மக்கள்நலக் கூட்டணியை உடைத்துப்போடுமளவு நகர்ந்திருக்கிறது.

இப்போதும்கூட இதுகுறித்து விசிக வோடு நமக்கு இருக்கும் உரையாடலுக்கான உரிமையைவிடவும் சிபிஐயோடு உள்ள உரிமையும் தேவையும் அதிகமாக உள்ளது.

இந்த இடைத்தேர்தலை சந்திப்பது என்பது நியாயமானது. 500 வாக்குகள் கிடைக்கட்டும் அல்லது அது 5000 என்றோ 15000 என்றோ போகட்டும். தேர்தல் களத்தில் மக்களை சந்தித்து முதலாளித்துவக் கட்சிகளை அம்பலப் படுத்துவதற்கு கிடைத்த ஒரு சரியான வாய்ப்பல்லவா இது?

இந்த இடைத்தேர்தலில் பங்கு கொள்வதால் எந்த விளைவும் ஏற்பட்டு விடாது என்பதாகவும் எனவே இதில் போட்டியிடும் சிபிஎம்மின் முடிவோடு முரண்படுவதாகவும் எனவே வெளியேறுவதாகவும் கூறும் சிபிஐ 2015 இடைத்தேர்தலில் ஜெயலலிதாவே போட்டியிட்ட நிலையில் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் களம் கண்டது?

யாருக்கும் ஆதரவில்லை என்று ரஜினி சொல்வதற்கும் நீங்கள் சொல்வதற்கும் என்ன வேறுபாடு?

யோசித்துப் பாருங்கள், இந்தத் தேர்தலில் தங்கள் கட்சியின் பெயரையும் சின்னத்தையுமே பயன்படுத்தமுடியாமல் செய்துபோட்ட பிஜேபி கட்சியையோ தங்களது எதிரி என்று கூறும் திமுகவையோ விமர்சிப்பதைவிட இவர்கள் உங்களைத்தான் காய்கிறார்கள்.

திமுகவும் உங்களைத்தான் பிரதானமாக தாக்குகிறது. நீங்கள் தனித்து நிற்கும் சக்தியை பெறுகிறீர்கள் அது அவர்களக்கு ஆபத்தானது என்று அவர்கள் கருதுகிறார்கள். வெளிப்படையாகப் பேசுவதெனில் நீங்கள் பலம் பெற்று வருவதாக அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

புரிந்து கொள்ளுங்கள்,

இடதுசாரி ஒற்றுமை இந்த நிமிடத்தின் தேவை. அதை அலட்சியப்படுத்தும் யாரையும் மக்கள் கேள்வி கேட்கவே செய்வார்கள்.

*********************************************************************************8  

  இளையராஜா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு தனது வழக்கறிஞர் மூலமாக அனுப்பியுள்ள நோட்டீஸ் தற்போதைய முகநூல் மற்றும் ட்விட்டரின் எரியும் பிரச்சினைகளுள் ஒன்றாகியிருக்கிறது. ஆளாளுக்கு இளையராவை சகட்டுமேனிக்கு வாரிக்கொண்டிருக்கிறார்கள்.

இளையராஜா அவர்களின் கைவிரல் எண்ணிக்கையிலான நண்பர்கள் பட்டியலில் பாலு அவர்களது பெயர் நிச்சயம் இருக்கும். பாலு அவர்களின் முதல் ஐந்து நண்பர்களைக் கொண்ட பட்டியலில் இளையராஜாவின் பெயர் நிச்சயமாய் இருக்கும்.

அவர்கள் இருவரும் மேடைகளில் பேசிக்கொள்ளும் அழகே ரசனைக்குரியது. ஒருமையில் அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதே பாடலைப்போல இனிதானது என்று முகநூலில் யாரோ எழுதி இருந்தார்கள். அது அவ்வளவு உண்மையானது.   

இப்படிப்பட்ட இருவருக்கிடையில் அப்படி என்னதான் நடந்தது? எது இளையராஜா அவர்களை தனது நெருங்கிய தோழனுக்கு எதிராக வக்கீல் நோட்டிஸ் அனுப்ப வைத்தது?

என்பதாக எரிந்து நீண்டு கொண்டிருந்த குழப்பத்தை பாடலாசிரியர் தாமரையின் விளக்கம் குறைத்து வைத்துள்ளது.

ஒரு பாடலை ஒருவர் எழுதுகிறார், ஒருவர் இசை அமைக்கிறார், ஒருவர் தயாரிக்கிறார். இந்த வகையில் இந்தப் பாடல் இந்த மூவரின் சொத்தாகிறது. அப்படி எனில் அதைப் பாடியவர், இசைக்கருவி வாசித்தவர்கள் அவர்களுக்கெல்லாம் இந்தச் சொத்தில் உரிமை இல்லையா என்றால் இல்லை என்றுதான் சட்டம் சொல்கிறது. அவர்கள் சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர்களே சட்டப்படி.

இன்னும் புரியும்படி சொல்வதெனில் இளையராஜா இசை அமைத்து பாலு பாடிய பாடலை ஒரு கச்சேரியில் பாலு பாடுகிறார் அல்லது யாரோ ஒருவர் பாடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கு பாடியதற்காக பாலுவோ அல்லது அன்று அதைப் பாடியவரோ அதற்கான ஊதியத்தை வாங்கிக் கொள்வார்கள். அன்று இசைக்கருவி வாசித்தவர்களும் அதற்கான ஊதியத்தை வாங்கிக் கொள்வார்கள். ஆனால் அந்தப் பாடல் தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் இசை அமைப்பாளரின் பாடல்.

தொலைக்காட்சியிலோ அல்லது வானொலியிலோ அந்தப் பாடலை ஒலிபரப்பினால் அந்த மூவருக்கும் அதற்கான ராயல்டி போய்ச்சேரும். அது 33:33:33 என்ற விகிதத்தில் முன்பு இருந்ததாகவும் தற்போது அது 50:25:25 என்கிற அளவில் இருப்பதாகவும் தாமரை கூறுகிறார்.

அதாவது இளையராஜா இசை அமைத்து, வாலி எழுதி, ஒரு தயாரிப்பாளர் எழுதிய பாடலாகத்தான் அது சட்டப்படி கொள்ளப்படுகிறது.

இப்போது அமெரிக்காவில் மேடைகளில் பாலு பாடுகிறார் என்றால் அதற்கான ஊதியத்தை அவர் வாங்கிக் கொள்வார். இசைக் கருவி வாசிப்பவர்கள் அதற்கான ஊதியத்தை பெறுகிறார்கள்.

அது பாலு பாடிய பாடலாக இருக்கலாம், அனால் அது இளையராஜா உள்ளிட்ட மூவரின் பாடல்.

இங்கு இன்னொரு விஷயத்தையும் சொல்லவேண்டும். யுவன் இசையில் இளையராஜா பாடிய பாடலை யார் பாடினாலும் இளையராஜா அதில் குறுக்கிட முடியாது. காரணம், அது யுவன், அதை எழுதிய பாடலாசிரியர் மற்றும் அதன் தயாரிப்பாளர்களின் சொத்து.

A.R.ரஹ்மான் இதை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதாகவும் அவருக்கு சேர வேண்டிய பங்கு முறைப்படி சேர்வதாகவும் தனது முகநூல் பக்கத்தில் குங்கும் தோழியின் ஆசிரியர் கவின்மலர் எழுதுகிறார். எனில் மேற்சொன்ன நிகழ்ச்சியின் பொருட்டும் ரஹ்மானுக்கு உரிய பங்கு அவருக்கு போயிருக்க வேண்டும்.

ஆகவே அதற்கான அனுமதியையும் தனக்குரிய ராயல்டியையும் இளையராஜா கேட்கிறார். இந்த நிகழ்ச்சியை வைத்து கோடி கோடியாக வசூலித்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கு இதை செய்வது பெரிய விஷயமே இல்லை.

என்ன, இளையராஜா  அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களோடு தனது நோட்டீஸ்களை நிறுத்திக் கொண்டிருக்கலாம்.

மீண்டும் இரு இசை மேதைகளும் ஒன்றாய் மேடைகளில் தோன்றி நம்மை மகிழ்விக்க வேண்டும்

புத்திசார் காபுரிமை பற்றி விவாதிப்பதும், தெளிவு பெறுவதும், தேவைப்படின் உரிய மாற்றங்களைக் கொண்டு வருவதும் அவசியம்
***************************************************************************   




No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...