Sunday, August 5, 2012

வீரியமுள்ள ஊர்ப் புறக் கவிதைகள்

“வெயில் நதி” வெளியீட்டு விழா மே மாதம் இருபதாம் தேதியன்று செஞ்சியில் நடந்தது.

இதழ் குறித்துப் பேச வருமாறு இதழின் ஆசிரியர் தோழர் இயற்கை சிவம் அழைத்திருந்தார்.

போயிருந்தேன்.

எண்பதுகளில் காணக் கிடைத்த ஆழமும் அடர்த்தியும் மிக்கதொரு இலக்கியக் கூட்டமாகவே அதைக் கொள்ள முடிந்தது.

சில தோழர்கள் பேசினார்கள்.

தோழர் செஞ்சி தமிழினியன் பேசுவதற்கு முன்னால் சட்டைப் பைக்குள்ளிருந்து எடுத்த ஒரு துண்டுத் தாளை விரித்தார்.

தெரிந்துவிட்டது,

கவிதை.

இப்படி கவிதை வாசிக்கும் ஆர்வமும்கூட எண்பதுகளுக்கான ஆர்வம் என்றும் கொள்வதில்கூட நியாயமுண்டு.

அவர் வாசித்த கவிதை மிகவும் பிடித்துப் போகவே அந்தத் தாளைக் கேட்டேன். பெருந்தன்மையோடு கொடுத்தார். கூடவே தனது “ராக்காச்சி பொம்மை” என்ற நூலையும் கொடுத்தவர் வாசித்து சொல்லுங்கள் சார் என்றார்.

அந்தத் தாளில் இருந்த கவிதையையும் , அந்த நூலிலிருந்த கவிதைகளைப் பற்றியும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

முதலில் அந்ததாளில் இருந்த கவிதை,

விளையாட்டின் மீதமறும் சண்டை

மூலை மடியாத
வெள்ளைத் தாளில்
கருப்புப் பூனை வரைந்தாள்
சின்ன மகள்

நேர்த்தியான கண்களில்
மின்னல் ஒழுகியது

உயரமும்
வாலின் அளவும்
அவ்வளவு
கச்சிதமாய் இருந்தது

மடங்கி இருந்ததால்
பின்னங்கால்கள்
சரிவரத் தெரியவில்லை

வீட்டில் இருந்த எல்லோரோடும்
பூனையை
விளையாட விட்டாள்

அவளோடு
விளையாட வந்த லிசாவும்
அதேபோல்
அதே வண்ணத்தில்
பூனை வரைந்தாள்

ஆனால்
கால்களில் இருந்த
நகங்கள்

இவளின் பூனையினும்
கூர்மையாக இருந்தது

இருவரும்
மாறி மாறி
கீறிக் கொண்டு

தனித் தனியே
பிரிந்தார்கள்

இரண்டு பூனைகளும்
அழகாய்
விளையாடிக் கொண்டிருந்தார்கள்

இதை அழகானக் குறியீட்டுக் கவிதையாகவும் கொள்ளலாம். அந்தக் குழந்தைகள் படைத்த பூனைகளோடு மனிதர்கள் படைத்த எவற்றையும் பொருத்திப் பார்க்கலாம்.

குழந்தைகள் பூனைகளைப் படைத்தார்கள். பூனைகள் அன்போடும் இணக்கத்தோடும் மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருக்க பூனைகளைப் படைத்தக் குழந்தைகள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மனிதர்கள் படைத்த பலவற்றை இதோடு பொருத்திப் பார்க்கலாம் என்றாலும் அவர்கள் படைத்த மதங்களும்ம் கடவுள்களும் மிகவும் பொருந்திப் போவதைப் பார்க்கலாம்.

மனிதர்கள் படைத்த மதங்களும் கடவுள்களும் எவ்விதப் பிணக்குகளுமின்றி இணக்கமாய் இருக்க அவற்றைப் படைத்த மனிதர்களோ அவர்களின் படைப்பின் பொருட்டே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டும், கொன்று அழிந்தும்...

எவ்வளவு சரியாகப் பொருந்துகிறது கவிதை.

“வீட்டைப் பூட்டிவிட்டு
ஊருக்குப் போய்
மீண்டும் வந்தோம்
சில கடிதங்கள் தவிர
வேறு எதுவும்
வந்ததாகத் தெரியவில்லை
உற்றுப் பார்த்தேன்

உள்ளேயிருந்து வெளியேயும்
வெளியேயிருந்து உள்ளுமாய்
வரிசையாய் எறும்புகள்
பூட்டுகளைப் பொருட்படுத்தாமல்”

நிறையப் பேசுகிறது இந்தக் கவிதை.

வார்த்தைக்கு வார்த்தை இந்தக் கவிதையை பொழிப்புரைத்தால்,

கதவை பூட்டி மூன்று நான்குமுறை பூட்டை இழுத்துப் பார்த்து மனது திருப்தியானபின் உறவினர்கள் வீட்டிற்கு சென்று ஒரு வாரம் தங்கியிருந்துவிட்டு வீடு வந்து கிரில் கதவிற்குள் எட்டிப் பார்த்தால் கடிதங்கள் கிடக்கின்றன என்பதைத் தவிர நல்ல வேலையாக வேறு யாரும் வந்ததற்கான சுவடுகள் இல்லை என்கிற நிம்மதி ஒருபுறம் எனில், கதவின் கீழ் இருக்கும் சன்னமான சந்தில் எந்தப் பூட்டைப் பற்றியும் துளியும் சட்டை செய்யாமல் “ போங்கப்பா , நீங்களும் உங்கள் பூட்டும்...” என்று ஏளனித்துக் கொண்டே சாரை சாரையாய் உள்ளேயும் வெளியேயும் போகிற அழகு.

சாரை சாரையாய் ஊறும் எறும்புகளே கவிதைதான்.

இதையே குறியீடாகக் கொண்டால்,

 உள்ளே இருப்பதை சாகும் வரைக்கும் வெளியேற விடாமல் பொத்திப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், வெளியே இருந்து தேவை இல்லாத எதுவும் உள்ளே போய்விடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்ர்வோடும் மனசை இழுத்து எப்படித்தான் இருக்கிப் பூட்டி வைத்தாலும் எதையும் மீறி மந்திலிருந்து ஏராளம் வெளியேறிக்கொண்டும் ஏராளம் உள் புகுந்துகொண்டும்தான் இருக்கின்றன என்று ஆகும்.

முதல் பகுதியை நீக்கிவிட்டு,

“உள்ளேயிருந்து வெளியேயும்

வெளியேயிருந்து உள்ளுமாய்
வரிசையாய் எறும்புகள்
பூட்டுகளைப் பொருட்படுத்தாமல்”


என்பதை மட்டும் கொண்டால் கவிதையின் உசரம் இன்னமும் கூடும் என்று தோன்றுகிறது.

“என் இரண்டு குழந்தைகளும்
மனைவியும்
உட்கார்ந்திருந்தார்கள்
செல்லமே எனக் கூப்பிட்டேன்

மூவருமேதிரும்பினார்கள்
யாரைக் கூப்பிட்டேன்
கடைசிவரை சொல்லவில்லை”

பொதுவாகவே குழந்தைகளைக் கொஞ்சுவதே அருகி வருகிற காலம் இது. கொஞ்சுவது போகட்டும், சனியனே, பிசாசே, மூதேவி என்றெல்லாம் குழந்தைகளை கூப்பிடாமல் இருந்தாலே தேவலாம் என்றுகூட தோன்றுவது உண்டு.

ஆனால் கவிஞரோ குழந்தைகளை “செல்லம்” என்று விளிக்கிறார். குழந்தைகள் மட்டுமல்ல குழந்தைகளோடு அமர்ந்திருந்த கவிஞரின் மனைவியும் திரும்பிப் பார்க்கிறார்.

ஒன்று,

இரண்டு குழந்தைகளுக்குப் பிறகும் மனைவியை “செல்லம்” என்று அழைக்கிற காதலும் அன்பும் இன்னமும் இவரிடம் மிச்சமிருக்க வேண்டும்.

அல்லது,

தனது குழந்தைகளில் ஒருவராகவே தனது மனைவியை பாவிக்கிறவராக இருக்க வேண்டும்.

எதுவாயிருப்பினும் அதற்காகவே இவரை கொண்டாட வேண்டும்

சந்தை, திருவிழா போன்ற நம் மண்ணின் தொன்மம் சார்ந்த விழுமியங்கள் இவரது கவிதைகளில் ஆழமாய் விரவிக் கிடக்கின்றன.

பௌடர் பூசாத புழுதிக் கிராமங்களில் திருவிழாவும் கூத்தும் இரண்டறக் கலந்தவை. பௌடர் பூசாத புழுதிக் கிராமங்களிலும் திருவிழ்ழ்க் கூத்துப் பார்க்க பௌடர் பூசிக் கொண்டு போகும் கிழவன் கிழவியைப் பற்றி ஒரு கவிதை பேசுகிறது.

“முற்றத்தில்
சேறு பூசிய கலப்பை

ஆடும் மாடும் அருகில்
மூத்திர நாற்றம்

காதுக்கு அருகில்
கொசுவின் அதட்டல்கள்

கோணிப்பை மார்புவரைப்
போர்வையாக
வீரியமில்லாத
விதை நெல் உரலில்

பக்கத்து ஊரில் திருவிழா

பாட்டியும் தாத்தாவும்
பவுடர் பூசிக்கொண்டு
கூத்துப் பார்க்கப் போனார்கள்”

திருவிழாவில் சாமி வந்த பாடில்லை. மக்கள் கூத்தில் லயித்து விடுகிறார்கள்.  அப்போது பார்த்து சாமி வருவதாய் யாரோ சொல்ல ஒருவர் சொல்கிறார்,

“கூத்து ஆரமிச்சு
பொம்பள வேசமே வந்திடுச்சி
இப்ப போயி
சாமி வந்து என்ன செய்ய?”

அதானே கூத்து ஆரம்பித்து பொம்பள வேசமே வந்த பின்பு சாமி எதுக்கு வரணும்?

“ஒவ்வொரு முறையும்
பசுமலைத் தேரில்
புதுசு புதுசாய்
உண்டியல் வாங்கி வருவோம்
இன்று வரை யாரும்
நிறைக்கவில்லை”

கிராமத்து சம்சாரிகளின் பொருளாதார வாழ்நிலையை எவ்வளவு எதார்த்தமாய் சொல்ல முடிகிறது இவரால்.

குழந்தைகள் பரிசுத்தமானவர்கள். அவர்கள் எதையும் அதுவாகவே பார்க்கிற உன்னதம் உள்ளவர்கள். இருப்பதன் மேல் சேறு பூசியோ அல்லது சந்தனம் பூசியோ பரிசீலிக்கிற பச்சோந்தித் தனம் அவர்களிடம் இல்லை.

அவர்களைப் பொருத்தவரை ஒரு மனிதன் என்றால் அவன் மாமாதான். ஒரு மனுஷி என்றால் அத்தைதான். அதற்குமேல் இந்துவாகவோ இஸ்லாமியனாகவோ,செட்டியாராகவோ, பிள்ளையாகவோ பார்க்கத் தெரியாது அவர்களுக்கு.

அவர்களுக்கு ஐந்து ரூபாய் பொம்மையும் பொம்மைதான், ஐயாயிரம் ரூபாய் பொம்மையும் பொம்மைதான். சின்னது பெரிது தவிர வேறு எதுவும் புலப்பப்பட்டு குழப்பாத அற்புத உலகம் அவர்களுடையது. கவிஞர் அவரது குடும்பத்தோடு பொம்மையை வாங்கப் போகிறார். யார் யார் பொம்மையை எப்படி எப்படிப் பார்க்கிறார்கள் பாருங்கள்,

“என்னங்க
என்ன வெல இருக்கும்”

இது மனைவி. அவருக்கு எந்த பொம்மை வாங்குவது என்பதை அதன் விலைத் தீர்மானிக்கிறது.

“”எதுக்குடா
இவ்வளவு விலையில

பாத்து
செலவு செய்ப்பா”

இது அப்பா அல்லது அம்மா. அவர்களுக்கும் மகன் அதிகமாய் செலவு செய்து கடனாளியாகக் கூடாது.

“எனக்கு சின்னது
பாப்பாவுக்கு மட்டும்
பெரிசா?”

குழந்தைகள் உலகம் கபடமற்றது.அது அப்படியே நீடித்து விடக் கூடாதா?

இந்தக் கவிதையையும் இந்த இடத்தில் நிறுத்தி விட்டாலே எல்லாம் புரிவதாகவேப் படுகிறது.

பன்னாட்டு முதலைகளுக்கு மடை மாற்றம் செய்யபடாமல் சுயமாக மூச்சு விட்டுக் கொண்டிருப்பவை இன்னமும் எஞ்சியிருக்கிற சில கிராமத்து சந்தைகளே.

எங்கள் கிராமத்து சந்தைகள்தான் இன்றைய பன்னாட்டு ஷாப்பிங் மால்களுக்கு முன்னோடி. உடைந்த தக்காளி முதல் அன்றையப் பெரு வாகனமான மாட்டு வண்டி வரை ஒரே இடத்தில் சந்தைப் படுத்தியவன் தமிழன்தான். இதைப் பார்த்துதான் மேட்டுக் குடி வர்க்கமும், படித்த வர்க்கமும் ஒரே கூரையிகீழ் எல்லாம் என்று அலங்காரம் செய்தன. ஆனால் கூரையே இல்லாது வானத்தின் கீழ் அனைத்தையும் சந்தைப் படுத்தியவன் ஆதித் தமிழன்.

அவர்களது ஷாபிங் மால்களில் ஏழைகள் வாங்க எதுவும் இல்லை. ஆனால் எங்கள் கிராமத்து சந்தையில் எங்களுக்கும் வாங்க பொருள்கள் உண்டு.

தமிழினியன் ஒரு கவிதையை இப்படி முடிக்கிரார்,

“அரிவாள் மண்வெட்டி களக்கட்டு
பழையத் துணி பூட்டு சாவி மளிகைசாமான்
கம்மங்கூழ் ஊறுகாய் முதல்
உடைந்த தக்காளி
சொத்தைக் கத்தரிக்காய் வரை

எங்களுக்கு வேண்டியவை
எல்லாமே கிடைக்கும்”

பாசுமதி சாப்பிடுபவர்களைப் பற்றியே பாடுபவர்கள் இருக்கும்போது குருணை வாங்கிக் கஞ்சிக் காய்ச்சுபவர்களைப் பற்றிய இவரது அக்கறை அவரிடம் நமக்குள்ள மரியாதையைக் கூட்டுகிறது.

இந்த நூலுக்கான மதிப்புரையில் அய்யா பழமலய் அவர்கள் இப்படி சொல்கிறார்,

“ஆழ உணர்வதும் உணர்த்துவதும்தான் கவிதை”

செஞ்சி தமிழினியன் ஆழ உணர்ந்து ஆழ உணர்த்துகிறார்.

இவற்றை வீரியமுள்ள ஊர்ப்புறக் கவிதைகள் என்று அறிவுமதி சொல்வதை நான் வழிமொழிகிறேன்.

”ராக்காச்சி பொம்மை”
கவிதை நூல்

நறுமுகை
29/35 தேசூர் பாட்டை,
செஞ்சி
விழுப்புரம் மாவட்டம்---604202

தமிழினியனின் அலைபேசி எண் 9578612544







22 comments:

  1. அழகான நூலறிமுகம். நன்றி நண்பரே.

    ராக்காச்சி பொம்மை - பெயரிலேயே ஒட்டிக்கொண்டு மணக்கிறது மண்வாசம். உள்ளிருக்கும் கவிதைகளின் அறிமுகங்கள் கவிதைக்குள் நம்மையும் ஈர்க்கும் அதிசயம். குறியீடுகள் பற்றிய அலசல்கள் அபாரம். பாராட்டுகள்.

    ReplyDelete
  2. அருமையான கவிதைகள். அருமையான திறனாய்வு. மனதை ஈர்க்கின்றன. எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி திரு இரா எட்வின்.

    ReplyDelete
  3. /// கீதமஞ்சரி said...
    அழகான நூலறிமுகம். நன்றி நண்பரே.

    ராக்காச்சி பொம்மை - பெயரிலேயே ஒட்டிக்கொண்டு மணக்கிறது மண்வாசம். உள்ளிருக்கும் கவிதைகளின் அறிமுகங்கள் கவிதைக்குள் நம்மையும் ஈர்க்கும் அதிசயம். குறியீடுகள் பற்றிய அலசல்கள் அபாரம். பாராட்டுகள். ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  4. /// Rathnavel Natarajan said...
    அருமையான கவிதைகள். அருமையான திறனாய்வு. மனதை ஈர்க்கின்றன. எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி திரு இரா எட்வின். ///

    மிக்க நன்றிங்க அய்யா

    ReplyDelete
  5. எட்வின் அவர்களே! மிகச் சிறந்த பாராட்டுகளை விமரிசனமாக எழுதியுள்ளீர்கள்!.தோழர் தமிழினியனை கை பேசி மூலம் அழைத்து பாராட்டினேன்! வாழ்த்துக்கள்!---காஸ்யபன்.

    ReplyDelete
  6. மண்வாசனை கவிதைகள் சார்
    கவிதை பற்றிய அறிமுகங்கள் யதார்த்தமாய் சொல்லபட்டு இருக்கிறது
    மிகவும் ரசிக்கத்தக்கதாகவும் இருந்தது சார்


    யதார்த்தமான சொல்லல் அலங்கரிக்கபட்ட
    குட்டிக் குட்டிக் கவிதைகள் ரசித்தேன்

    ReplyDelete
  7. கவிதைகள் அருமையாக இருக்கிறது.. நூல் அறிமுகத்துக்கு நன்றிகள்.

    ReplyDelete
  8. நல்லதொரு நூல் அறிமுகம்... அதை நீங்களும் ரசித்து, எங்களையும் ரசிக்க வைத்து விட்டீர்கள் ஐயா... பாராட்டுக்கள்... நன்றி… (T.M.3)


    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    ReplyDelete
  9. ராக்காச்சிபொம்மை வாங்கி வாசிக்கும் பட்டியலில் இடம்பிடித்துவிட்டது. அறிமுகப்படுத்தியிருக்கவில்லையெனில் தவறவிட்டிருப்பேன்

    ReplyDelete
  10. /// kashyapan said...
    எட்வின் அவர்களே! மிகச் சிறந்த பாராட்டுகளை விமரிசனமாக எழுதியுள்ளீர்கள்!.தோழர் தமிழினியனை கை பேசி மூலம் அழைத்து பாராட்டினேன்! வாழ்த்துக்கள்!---காஸ்யபன்.///

    மிக்க நன்றி தோழர்.தங்களது வாழ்த்து அவரை மிகவும் உற்சாகப் படுத்தியதாக சொன்னார்.

    ReplyDelete
  11. /// செய்தாலி said...
    மண்வாசனை கவிதைகள் சார்
    கவிதை பற்றிய அறிமுகங்கள் யதார்த்தமாய் சொல்லபட்டு இருக்கிறது
    மிகவும் ரசிக்கத்தக்கதாகவும் இருந்தது சார்


    யதார்த்தமான சொல்லல் அலங்கரிக்கபட்ட
    குட்டிக் குட்டிக் கவிதைகள் ரசித்தேன்///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  12. ///இளங்கோ said...
    கவிதைகள் அருமையாக இருக்கிறது.. நூல் அறிமுகத்துக்கு நன்றிகள். ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  13. /// திண்டுக்கல் தனபாலன் said...
    நல்லதொரு நூல் அறிமுகம்... அதை நீங்களும் ரசித்து, எங்களையும் ரசிக்க வைத்து விட்டீர்கள் ஐயா... பாராட்டுக்கள்... நன்றி… (T.M.3)
    ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  14. //// Kurusu Socrates said...
    ராக்காச்சிபொம்மை வாங்கி வாசிக்கும் பட்டியலில் இடம்பிடித்துவிட்டது. அறிமுகப்படுத்தியிருக்கவில்லையெனில் தவறவிட்டிருப்பேன் ///

    மிக்க நன்றி தோழர்.
    அவரோடும் பேசுங்கள்.

    ReplyDelete
  15. அருமையான விமர்சனம்.உண்டியல் கவிதை மனதை நிறைக்கிறது.’ராக்காச்சி பொம்மை’...ராக்காச்சி எனபது
    பெயரா ?

    ReplyDelete
  16. /// ஹேமா said...
    அருமையான விமர்சனம்.உண்டியல் கவிதை மனதை நிறைக்கிறது.’ராக்காச்சி பொம்மை’...ராக்காச்சி எனபது
    பெயரா ? ///

    \ஆமாம் ஹேமா.
    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  17. அருமையான வரிகள் அண்ணன்

    ReplyDelete
  18. அருமையான கவிதை ஐயா பாராட்டுக்கள்

    ReplyDelete
  19. /// Ramesh Silameganadu said...
    அருமையான வரிகள் அண்ணன் ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  20. //// Nv.Balan said...
    அருமையான கவிதை ஐயா பாராட்டுக்கள் ///

    வணக்கம் தோழர்.
    தமிழினியனின் எண் கொடுத்திருக்கிறேன். கவிதைகள் பிடித்திருப்பின் அவரை அழைத்து அவசியம் பாராட்டுங்கள்.
    மிக்க நன்றி

    ReplyDelete
  21. புத்தகத்தின் மறு வெளியீடு என தோழர் எட்வின் அவர்களின் நூல் விமர்சனம் அமைந்திருந்தது. தவிர தோழர் தமிழினியன் எனது ஊரை சேர்ந்தவர் என்பதில் பெருமிதமாயும் உள்ளது. அன்பு நன்றிகள். எட்வின் தோழருக்கு...
    iyarkaisivam

    ReplyDelete
  22. //// இயற்கைசிவம் said...
    புத்தகத்தின் மறு வெளியீடு என தோழர் எட்வின் அவர்களின் நூல் விமர்சனம் அமைந்திருந்தது. தவிர தோழர் தமிழினியன் எனது ஊரை சேர்ந்தவர் என்பதில் பெருமிதமாயும் உள்ளது. அன்பு நன்றிகள். எட்வின் தோழருக்கு... ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...