Showing posts with label நூல்கள். Show all posts
Showing posts with label நூல்கள். Show all posts

Tuesday, March 19, 2024

புத்தகத்திற்கு எதற்கு GST ?

 பொதுவாகவே புத்தகச் சந்தைகளை மாவட்டம் மாவட்டமாக சிறப்பாக நடத்துவதற்கு அரசு எடுக்கும் மெனக்கெடல்களைப் பார்க்கவும் மெச்சவுமே செய்கிறோம்

சர்வதேசப் புத்தகக் கண்காட்சியைத் தொடர்ந்து சிறப்பாக நடத்துவதன் மூலம்
நமது ஞானத் திரட்சியை உலகத்திற்குக் கொடுக்கவும்
உலக ஞானத்தை நாம் தரிசித்து பயன்பெறவும்
அரசசின் மெனக்கெடல்களும் நாம் அறியாதது அல்ல
இந்தச் சூழலில், பொது நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலுக்கான நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது
பதிப்பகத் தோழர்கள் சிலரோடு தொடர்பு கொண்டபோது
பதிப்புத் தொழிலையே இது தாறுமாறாகக் கிழித்துப்போடும் என்பது மாதிரி மிகுந்த வருத்தத்தோடும் கவலையோடும் கொஞ்சம் பதறவே செய்தார்கள்
தோழர்கள் பரிசல் சிவ. செந்தில்நாதன் அவர்களையும் Mohammed Sirajudeen அவர்களையும் தொடர்பு கொண்டபோது முன்னர் பேசிய தோழர்களின் கவலை உண்மையானது என்பது தெரிய வந்தது
மூன்று விஷயங்கள் தங்களை வெகுவாகப் பாதிப்பதாக அனைவரும் கூறுகிறார்கள்
1) அரசு கேட்கும் ஜி.எஸ்.டி எண்
2) சிறுதொழில் உரிம எண்
3) ஐ.எஸ்.பி.என் எண்
இதில் மூன்றாவதாக உள்ள சிக்கல் மேலே கொடுக்கப்பட்டுள்ள சிக்கல்களில் கொஞ்சம் பாதகம் குறைந்தது
எனவே அதை இப்போதைக்கு சன்னமாக ஒதுக்கி வைக்கலாம்
GST எண் இணைக்க வேண்டும் என அரசு கூறுகிறது.
புத்தகத்திற்கு எதற்கு GST என்று கேட்டுவிட்டு
தாள்தான் முதல் ப்ராடக்ட். அதற்கு GST கட்டுகிறோம். புத்தகம் புதிது என்று நாம் கொண்டாடினாலும் புத்தகம் என்பது செகண்ட் ப்ராடக்ட்தான். இரண்டாவது ப்ராடக்ட்டிற்கு GST இல்லை என்று முடிக்கிறார் தோழர் சிராஜ்
இந்தச் செயல் என்பது கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டுமே ஊக்குவிக்கும் ஒரு ஏற்பாடாகப் படுகிறது
Print on demand வசதி வந்தபிறகு பதிப்புத் தொழில் வெகுவாக ஜனநாயகப் பட்டிருக்கிறது
கிராமங்களில் இருக்கும் எழுதுபவர்கள்கூட இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி 50 அல்லது நூறு பிரதிகளை வெளியிட்டு ஒரு விழா நடத்தி விடுகிறார்கள்
இவர்களில் பலர் மிகத் தேர்ந்த எழுத்தினையும் தரவும் செய்கிறார்கள்
இவர்கள் வாங்கும் தாளிற்கு GST கட்ட வேண்டும்
அட்டை போர்டிற்கு GST கட்ட வேண்டும்
அச்சகம் மை உள்ளிட்டவற்கு GST கட்டுகின்றன
இப்போது செகண்ட் ப்ராடக்ட்டான புத்தகத்திற்கு GST எனில் புத்தகத்தின் விலை ஏகத்திற்கும் எகிரும்
இது புத்தக விற்பனையை மிகவும் பாதிக்கும்
புதிய எழுத்தாளர்களுக்கு தங்கள் நூலை நூலகத்திற்கு கொண்டுபோக வேண்டுமெனில்
கார்பரேட் பதிப்பகங்களிடம் அவர்கள் கேட்கும் காசைக் கொட்டிக் கொடுத்து காத்திருக்க வேண்டியதுதான்
இல்லை எனில் அவர்களால் தங்களது நூல்களை நூலகத்திற்குள் கொண்டுபோக முடியாது
நல்ல புத்தகங்கள் நூலகங்களுக்குள் வரமுடியாத சூழலை இது உருவாக்கும்
பதிப்புத் தொழில் குடிசைத் தொழிலைவிட ஒருபடி கீழ் நிலையில்தான் இருக்கிறது
இன்னொன்றையும் இங்கு சொல்ல வேண்டும்
புத்தகச் சந்தை முடிந்து மூட்டை கட்டும்போது திரும்பும் செலவிற்கு பல சிறிய பதிப்பகங்கள் கடன்படும் நிலை உள்ளது
பதிப்புத் தொழில் உயிர்ப்புத் தொழில்
நூலகங்களைக் கட்டுகிறீர்கள்
மெச்சுகிறோம்
ஆனால் நூலகங்களைக் கட்டுவது மட்டும் போதாது
நல்ல நூல்களை அங்கு கொண்டு சேர்த்து குவிக்க வேண்டும்
அதற்கு இந்த நெறிமுறை ஒத்து வராது
காசிருக்கிறவர்களின் குப்பைகள் உள்ளே நுழைந்து விடும்
அரசு இந்த நெறிமுறைகளைத் திருத்த வேண்டும்
எல்லாவற்றிற்கும் முதலாவதாக
இந்த நெறிமுறைகளை வகுப்பதற்கு முன் அரசு அனைத்துவகை பதிப்பகங்களையும் அழைத்து ஆலோசித்துவிட வேண்டாமா

15.03.2024
All reactio

Sunday, August 5, 2012

வீரியமுள்ள ஊர்ப் புறக் கவிதைகள்

“வெயில் நதி” வெளியீட்டு விழா மே மாதம் இருபதாம் தேதியன்று செஞ்சியில் நடந்தது.

இதழ் குறித்துப் பேச வருமாறு இதழின் ஆசிரியர் தோழர் இயற்கை சிவம் அழைத்திருந்தார்.

போயிருந்தேன்.

எண்பதுகளில் காணக் கிடைத்த ஆழமும் அடர்த்தியும் மிக்கதொரு இலக்கியக் கூட்டமாகவே அதைக் கொள்ள முடிந்தது.

சில தோழர்கள் பேசினார்கள்.

தோழர் செஞ்சி தமிழினியன் பேசுவதற்கு முன்னால் சட்டைப் பைக்குள்ளிருந்து எடுத்த ஒரு துண்டுத் தாளை விரித்தார்.

தெரிந்துவிட்டது,

கவிதை.

இப்படி கவிதை வாசிக்கும் ஆர்வமும்கூட எண்பதுகளுக்கான ஆர்வம் என்றும் கொள்வதில்கூட நியாயமுண்டு.

அவர் வாசித்த கவிதை மிகவும் பிடித்துப் போகவே அந்தத் தாளைக் கேட்டேன். பெருந்தன்மையோடு கொடுத்தார். கூடவே தனது “ராக்காச்சி பொம்மை” என்ற நூலையும் கொடுத்தவர் வாசித்து சொல்லுங்கள் சார் என்றார்.

அந்தத் தாளில் இருந்த கவிதையையும் , அந்த நூலிலிருந்த கவிதைகளைப் பற்றியும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

முதலில் அந்ததாளில் இருந்த கவிதை,

விளையாட்டின் மீதமறும் சண்டை

மூலை மடியாத
வெள்ளைத் தாளில்
கருப்புப் பூனை வரைந்தாள்
சின்ன மகள்

நேர்த்தியான கண்களில்
மின்னல் ஒழுகியது

உயரமும்
வாலின் அளவும்
அவ்வளவு
கச்சிதமாய் இருந்தது

மடங்கி இருந்ததால்
பின்னங்கால்கள்
சரிவரத் தெரியவில்லை

வீட்டில் இருந்த எல்லோரோடும்
பூனையை
விளையாட விட்டாள்

அவளோடு
விளையாட வந்த லிசாவும்
அதேபோல்
அதே வண்ணத்தில்
பூனை வரைந்தாள்

ஆனால்
கால்களில் இருந்த
நகங்கள்

இவளின் பூனையினும்
கூர்மையாக இருந்தது

இருவரும்
மாறி மாறி
கீறிக் கொண்டு

தனித் தனியே
பிரிந்தார்கள்

இரண்டு பூனைகளும்
அழகாய்
விளையாடிக் கொண்டிருந்தார்கள்

இதை அழகானக் குறியீட்டுக் கவிதையாகவும் கொள்ளலாம். அந்தக் குழந்தைகள் படைத்த பூனைகளோடு மனிதர்கள் படைத்த எவற்றையும் பொருத்திப் பார்க்கலாம்.

குழந்தைகள் பூனைகளைப் படைத்தார்கள். பூனைகள் அன்போடும் இணக்கத்தோடும் மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருக்க பூனைகளைப் படைத்தக் குழந்தைகள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மனிதர்கள் படைத்த பலவற்றை இதோடு பொருத்திப் பார்க்கலாம் என்றாலும் அவர்கள் படைத்த மதங்களும்ம் கடவுள்களும் மிகவும் பொருந்திப் போவதைப் பார்க்கலாம்.

மனிதர்கள் படைத்த மதங்களும் கடவுள்களும் எவ்விதப் பிணக்குகளுமின்றி இணக்கமாய் இருக்க அவற்றைப் படைத்த மனிதர்களோ அவர்களின் படைப்பின் பொருட்டே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டும், கொன்று அழிந்தும்...

எவ்வளவு சரியாகப் பொருந்துகிறது கவிதை.

“வீட்டைப் பூட்டிவிட்டு
ஊருக்குப் போய்
மீண்டும் வந்தோம்
சில கடிதங்கள் தவிர
வேறு எதுவும்
வந்ததாகத் தெரியவில்லை
உற்றுப் பார்த்தேன்

உள்ளேயிருந்து வெளியேயும்
வெளியேயிருந்து உள்ளுமாய்
வரிசையாய் எறும்புகள்
பூட்டுகளைப் பொருட்படுத்தாமல்”

நிறையப் பேசுகிறது இந்தக் கவிதை.

வார்த்தைக்கு வார்த்தை இந்தக் கவிதையை பொழிப்புரைத்தால்,

கதவை பூட்டி மூன்று நான்குமுறை பூட்டை இழுத்துப் பார்த்து மனது திருப்தியானபின் உறவினர்கள் வீட்டிற்கு சென்று ஒரு வாரம் தங்கியிருந்துவிட்டு வீடு வந்து கிரில் கதவிற்குள் எட்டிப் பார்த்தால் கடிதங்கள் கிடக்கின்றன என்பதைத் தவிர நல்ல வேலையாக வேறு யாரும் வந்ததற்கான சுவடுகள் இல்லை என்கிற நிம்மதி ஒருபுறம் எனில், கதவின் கீழ் இருக்கும் சன்னமான சந்தில் எந்தப் பூட்டைப் பற்றியும் துளியும் சட்டை செய்யாமல் “ போங்கப்பா , நீங்களும் உங்கள் பூட்டும்...” என்று ஏளனித்துக் கொண்டே சாரை சாரையாய் உள்ளேயும் வெளியேயும் போகிற அழகு.

சாரை சாரையாய் ஊறும் எறும்புகளே கவிதைதான்.

இதையே குறியீடாகக் கொண்டால்,

 உள்ளே இருப்பதை சாகும் வரைக்கும் வெளியேற விடாமல் பொத்திப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், வெளியே இருந்து தேவை இல்லாத எதுவும் உள்ளே போய்விடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்ர்வோடும் மனசை இழுத்து எப்படித்தான் இருக்கிப் பூட்டி வைத்தாலும் எதையும் மீறி மந்திலிருந்து ஏராளம் வெளியேறிக்கொண்டும் ஏராளம் உள் புகுந்துகொண்டும்தான் இருக்கின்றன என்று ஆகும்.

முதல் பகுதியை நீக்கிவிட்டு,

“உள்ளேயிருந்து வெளியேயும்

வெளியேயிருந்து உள்ளுமாய்
வரிசையாய் எறும்புகள்
பூட்டுகளைப் பொருட்படுத்தாமல்”


என்பதை மட்டும் கொண்டால் கவிதையின் உசரம் இன்னமும் கூடும் என்று தோன்றுகிறது.

“என் இரண்டு குழந்தைகளும்
மனைவியும்
உட்கார்ந்திருந்தார்கள்
செல்லமே எனக் கூப்பிட்டேன்

மூவருமேதிரும்பினார்கள்
யாரைக் கூப்பிட்டேன்
கடைசிவரை சொல்லவில்லை”

பொதுவாகவே குழந்தைகளைக் கொஞ்சுவதே அருகி வருகிற காலம் இது. கொஞ்சுவது போகட்டும், சனியனே, பிசாசே, மூதேவி என்றெல்லாம் குழந்தைகளை கூப்பிடாமல் இருந்தாலே தேவலாம் என்றுகூட தோன்றுவது உண்டு.

ஆனால் கவிஞரோ குழந்தைகளை “செல்லம்” என்று விளிக்கிறார். குழந்தைகள் மட்டுமல்ல குழந்தைகளோடு அமர்ந்திருந்த கவிஞரின் மனைவியும் திரும்பிப் பார்க்கிறார்.

ஒன்று,

இரண்டு குழந்தைகளுக்குப் பிறகும் மனைவியை “செல்லம்” என்று அழைக்கிற காதலும் அன்பும் இன்னமும் இவரிடம் மிச்சமிருக்க வேண்டும்.

அல்லது,

தனது குழந்தைகளில் ஒருவராகவே தனது மனைவியை பாவிக்கிறவராக இருக்க வேண்டும்.

எதுவாயிருப்பினும் அதற்காகவே இவரை கொண்டாட வேண்டும்

சந்தை, திருவிழா போன்ற நம் மண்ணின் தொன்மம் சார்ந்த விழுமியங்கள் இவரது கவிதைகளில் ஆழமாய் விரவிக் கிடக்கின்றன.

பௌடர் பூசாத புழுதிக் கிராமங்களில் திருவிழாவும் கூத்தும் இரண்டறக் கலந்தவை. பௌடர் பூசாத புழுதிக் கிராமங்களிலும் திருவிழ்ழ்க் கூத்துப் பார்க்க பௌடர் பூசிக் கொண்டு போகும் கிழவன் கிழவியைப் பற்றி ஒரு கவிதை பேசுகிறது.

“முற்றத்தில்
சேறு பூசிய கலப்பை

ஆடும் மாடும் அருகில்
மூத்திர நாற்றம்

காதுக்கு அருகில்
கொசுவின் அதட்டல்கள்

கோணிப்பை மார்புவரைப்
போர்வையாக
வீரியமில்லாத
விதை நெல் உரலில்

பக்கத்து ஊரில் திருவிழா

பாட்டியும் தாத்தாவும்
பவுடர் பூசிக்கொண்டு
கூத்துப் பார்க்கப் போனார்கள்”

திருவிழாவில் சாமி வந்த பாடில்லை. மக்கள் கூத்தில் லயித்து விடுகிறார்கள்.  அப்போது பார்த்து சாமி வருவதாய் யாரோ சொல்ல ஒருவர் சொல்கிறார்,

“கூத்து ஆரமிச்சு
பொம்பள வேசமே வந்திடுச்சி
இப்ப போயி
சாமி வந்து என்ன செய்ய?”

அதானே கூத்து ஆரம்பித்து பொம்பள வேசமே வந்த பின்பு சாமி எதுக்கு வரணும்?

“ஒவ்வொரு முறையும்
பசுமலைத் தேரில்
புதுசு புதுசாய்
உண்டியல் வாங்கி வருவோம்
இன்று வரை யாரும்
நிறைக்கவில்லை”

கிராமத்து சம்சாரிகளின் பொருளாதார வாழ்நிலையை எவ்வளவு எதார்த்தமாய் சொல்ல முடிகிறது இவரால்.

குழந்தைகள் பரிசுத்தமானவர்கள். அவர்கள் எதையும் அதுவாகவே பார்க்கிற உன்னதம் உள்ளவர்கள். இருப்பதன் மேல் சேறு பூசியோ அல்லது சந்தனம் பூசியோ பரிசீலிக்கிற பச்சோந்தித் தனம் அவர்களிடம் இல்லை.

அவர்களைப் பொருத்தவரை ஒரு மனிதன் என்றால் அவன் மாமாதான். ஒரு மனுஷி என்றால் அத்தைதான். அதற்குமேல் இந்துவாகவோ இஸ்லாமியனாகவோ,செட்டியாராகவோ, பிள்ளையாகவோ பார்க்கத் தெரியாது அவர்களுக்கு.

அவர்களுக்கு ஐந்து ரூபாய் பொம்மையும் பொம்மைதான், ஐயாயிரம் ரூபாய் பொம்மையும் பொம்மைதான். சின்னது பெரிது தவிர வேறு எதுவும் புலப்பப்பட்டு குழப்பாத அற்புத உலகம் அவர்களுடையது. கவிஞர் அவரது குடும்பத்தோடு பொம்மையை வாங்கப் போகிறார். யார் யார் பொம்மையை எப்படி எப்படிப் பார்க்கிறார்கள் பாருங்கள்,

“என்னங்க
என்ன வெல இருக்கும்”

இது மனைவி. அவருக்கு எந்த பொம்மை வாங்குவது என்பதை அதன் விலைத் தீர்மானிக்கிறது.

“”எதுக்குடா
இவ்வளவு விலையில

பாத்து
செலவு செய்ப்பா”

இது அப்பா அல்லது அம்மா. அவர்களுக்கும் மகன் அதிகமாய் செலவு செய்து கடனாளியாகக் கூடாது.

“எனக்கு சின்னது
பாப்பாவுக்கு மட்டும்
பெரிசா?”

குழந்தைகள் உலகம் கபடமற்றது.அது அப்படியே நீடித்து விடக் கூடாதா?

இந்தக் கவிதையையும் இந்த இடத்தில் நிறுத்தி விட்டாலே எல்லாம் புரிவதாகவேப் படுகிறது.

பன்னாட்டு முதலைகளுக்கு மடை மாற்றம் செய்யபடாமல் சுயமாக மூச்சு விட்டுக் கொண்டிருப்பவை இன்னமும் எஞ்சியிருக்கிற சில கிராமத்து சந்தைகளே.

எங்கள் கிராமத்து சந்தைகள்தான் இன்றைய பன்னாட்டு ஷாப்பிங் மால்களுக்கு முன்னோடி. உடைந்த தக்காளி முதல் அன்றையப் பெரு வாகனமான மாட்டு வண்டி வரை ஒரே இடத்தில் சந்தைப் படுத்தியவன் தமிழன்தான். இதைப் பார்த்துதான் மேட்டுக் குடி வர்க்கமும், படித்த வர்க்கமும் ஒரே கூரையிகீழ் எல்லாம் என்று அலங்காரம் செய்தன. ஆனால் கூரையே இல்லாது வானத்தின் கீழ் அனைத்தையும் சந்தைப் படுத்தியவன் ஆதித் தமிழன்.

அவர்களது ஷாபிங் மால்களில் ஏழைகள் வாங்க எதுவும் இல்லை. ஆனால் எங்கள் கிராமத்து சந்தையில் எங்களுக்கும் வாங்க பொருள்கள் உண்டு.

தமிழினியன் ஒரு கவிதையை இப்படி முடிக்கிரார்,

“அரிவாள் மண்வெட்டி களக்கட்டு
பழையத் துணி பூட்டு சாவி மளிகைசாமான்
கம்மங்கூழ் ஊறுகாய் முதல்
உடைந்த தக்காளி
சொத்தைக் கத்தரிக்காய் வரை

எங்களுக்கு வேண்டியவை
எல்லாமே கிடைக்கும்”

பாசுமதி சாப்பிடுபவர்களைப் பற்றியே பாடுபவர்கள் இருக்கும்போது குருணை வாங்கிக் கஞ்சிக் காய்ச்சுபவர்களைப் பற்றிய இவரது அக்கறை அவரிடம் நமக்குள்ள மரியாதையைக் கூட்டுகிறது.

இந்த நூலுக்கான மதிப்புரையில் அய்யா பழமலய் அவர்கள் இப்படி சொல்கிறார்,

“ஆழ உணர்வதும் உணர்த்துவதும்தான் கவிதை”

செஞ்சி தமிழினியன் ஆழ உணர்ந்து ஆழ உணர்த்துகிறார்.

இவற்றை வீரியமுள்ள ஊர்ப்புறக் கவிதைகள் என்று அறிவுமதி சொல்வதை நான் வழிமொழிகிறேன்.

”ராக்காச்சி பொம்மை”
கவிதை நூல்

நறுமுகை
29/35 தேசூர் பாட்டை,
செஞ்சி
விழுப்புரம் மாவட்டம்---604202

தமிழினியனின் அலைபேசி எண் 9578612544







இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...