Monday, March 2, 2015

63/64 காக்கைச் சிறகினிலே, மார்ச் 2015

கணையாழியில் சுஜாதா அவர்கள் “ கணையாழியின் கடைசி பக்கம்” எழுதியபோது அதற்கென்று திரண்ட வாசகர் திரளுள் நானும் ஒருவன். கணையாழி நின்று பிறகு அது கைகள் மாறிக்கொண்டிருந்த வேளையில் ”யுகமாயினி” இதழில் அதைத் தொடருமாறு அதன் ஆசிரியர் சித்தன் சுஜாதா அவர்களை அணுக “ கணையாழியின் கடைசிப் பக்கங்கள்” யுகமாயினியில் வந்தது. அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோதும் அவர் எழுதிக் கொடுத்தார். இதற்கென்று இங்கும் ஒரு திரள் உருவானது.

கொஞ்சம் அதிகம்தான் என்பது தெரிந்தே இருந்தாலும் கக்கையில் அப்படி ஒரு முயற்சியை செய்து பார்க்கும்  ஆசை எனக்கு வந்தது. தயக்கத்தோடுதான் ஆசிரியர் முத்தையாவிடம் கேட்டேன். ”எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். ஆனால் எழுதுங்கள்” என்றார். அவருக்கும் சந்திரசேகருக்கும் இப்படி ஏதாவது ஒன்றில் நான் சிக்கிக் கொண்டால் தொடர்ந்து எழுதிவிடுவேன் என்பதில் அவ்வளவு நம்பிக்கை. என்னிடம் கட்டுரை எழுதி வாங்க அவர்கள் படும் சிரமம் அவ்வளவு. என்னைத் தவிர வேறு யாராக இருந்திருந்தாலும் தூக்கிப் போட்டுவிட்டு வேறு யாரிடமேனும் கட்டுரை வாங்கிப் போட்டிருப்பார்கள். அவர்களைத் தவிர வேறு யாராக இருந்திருந்தாலும் என்னைத் தூக்கிப் போட்டிருபார்கள்.

என் மீதான அன்பு அவர்களை என்னை தூக்கிச் சுமக்க வைத்திருக்கிறது. எனது வலது தோளும் இடது தோளுமாய் மாறி காக்கையின் என் பங்குச் சுமையையும் தூக்கிச் சுமக்கிறார்கள். அவர்களுக்கென் நன்றியை சொல்லியே ஆக வேண்டும்.

இப்படியாக நடந்த ஏற்பாட்டின்படி “63/64, காக்கச் சிறகினிலே” வருகிறது. இது ஒரு முயற்சிதான். நீங்கள் ஏற்கிற மாதிரியும் வாசிக்கிற மாதிரியும் எழுதி தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றே நம்புகிறேன்.

*******     ******     *******        ****** 

விஜய் தொலைக்காட்சியின்  “ சூப்பர் சிங்கர் ஜூனியர் 4” இன் இறுதிப் போட்டியை பார்த்தேன். அவ்வப்போது இந்த போட்டியை பார்ப்பதும் உண்டுதான். அன்றைய தினம் பாடிய ஆறு குழந்தைகளும் மிக அற்புதமாகப் பாடினார்கள். போட்டி என்றால் அப்படி ஒரு போட்டி. வழக்கமாக ஒரு ஒப்புக்காக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று குழம்பிப் போனோம் என்போம் இல்லையா. நெசத்துக்குமே அப்படி ஒரு குழப்பம் எல்லோருக்கும். எனது வாக்கென்னவோ ஸ்ரீஷா என்ற குழந்தைக்கு என்றாலும் வெற்றி பெற்ற குட்டியும் அதற்கு தகுதியானவளே.

அந்தக் குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்த திரு ஆனந்த் அவர்களை எப்படிப் பாராட்டினாலும் தகும். தனக்குத் தெரிந்த வித்தையை மிகுந்த அர்ப்பணிப்போடு குழந்தைகளுக்கு கொண்டு செல்வதில் நூறு விழுக்காஸ்ட்டுக்கும் மேல் வெநி பெற்றிருந்தார்.

ஆனால் அவரிடம் மடங்கி முறையிட ஒன்றுண்டு.

மழலை மாறாத நான்கு வயது குழந்தைகளை ஐம்பது வயதில் ஜானகி அம்மா பாடிய பாடல்களை அட்சரம் பிசகாமல், சுதி சுத்தமாய், நீளாமல் குறையாமல் சங்கதிகளை கொண்டுவர நீங்கள் கொடுத்த பயிற்சியும் பட்ட சிரமங்களும் மிக அதிகம் என்பதை நான் அறிவேன். அதற்காக உங்களை தலைதாழ்த்தி வணங்குகிறேன்.

ஆனால் அதை குழந்தைகளின் முதிர்ச்சி (maturity) என்று சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை.

ஐம்பது வயதில் ஜானகி அம்மாவை ஐந்து வயது குழந்தையின் குரலில் பாடச் சொல்கிறீர்கள். ஐந்து வயது குழந்தையை ஐம்பது வயதில் ஜானகி அம்மா பாடிய பாடலை அப்படியே பாடச் சொல்கிறீர்கள். மாறாக அம்மாவை அவர்களது குரலிலும் குழந்தைகளை குழந்தைகளின் குரலிலும் பாடச் சொல்லலாமே?

உங்களது இவ்வளவு உழைப்பும், அர்ப்பணிப்பும் நீங்கள் கொடுத்த பயிற்சியும் அந்தக் குழந்தைகளின் முயற்சியும் உழைப்பும் அவர்களது மழலை வழி கசிந்திருக்குமானால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பதோடு மிகச் சரியாகவும் இருந்திருக்குமே.

அந்தக் குழந்தைகள் பாடியது பேரழகாக இருந்தது என்பது உண்மைதான். ஆனல் அவர்கள் மழலையில் திக்கித் திக்கிப் பேசியது அவர்கள் பாடியதைவிடவும் இனிமையாக இருந்ததே ஆனந்த் சார்.

அவர்களின் திறமையை வெளிக் கொண்டுவரும் சாக்கில் அவர்களது மழலையையும் குழந்தைமையையும் கொன்றுபோட்டோம் என்றே தோன்றுகிறது.

மழலை இசைக்கு உகந்தது என்று சொன்னால் அது குறையுடையது என்று உங்களுக்குத் தெரியும். மழலை இசைக்கு இணையானது. குழந்தையை நேசிப்பவர்களுக்கு மழலை இசையைவிடவும் இனிமையானது.

உங்கள் மீது எனக்கு அளப்பரிய மரியாதையும் நம்பிக்கையும் உண்டு ஆனந்த் சார். அவர்களது மழலையைக் கொண்டே இதைவிடவும் எதைவிடவும் காத்திரமான இசையை உங்களால் கொண்டுவர முடியும் என்று நம்புகிறேன்.

மிகுந்த நம்பிக்கையோடு உங்களிடம் கை ஏந்துகிறேன் சார்.
******************         ***************       ****************

நமது மற்றும் நமது குடும்பத்தினரின் பிறந்த நாட்கள் மற்றும் திருமண நாட்களின்போது அருகில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு இனிப்பு வழங்கி அவர்களோடு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறோம்.

ஒரு சிலர் ஒரு வேளை உணவினை அவர்களுக்கு வழங்கி மகிழ்கிறோம். அந்தக் குழந்தைகளும் முதியோர்களும் நமக்காக வாழ்த்துப் பாடி நாமக்காகப் பிரார்த்திக்கிறார்கள்.

பல ஆதரவற்றோர்  இல்லங்கள் இதுபோன்ற நாட்களில் வந்து தங்களோடு கொண்டாடுமாறு ஊடகங்களின் வழியே அழைப்பு விடுக்கிறார்கள்.

அங்கு சென்று நமது பிறந்த நாளைக் கொண்டாடுவதைவிட அங்குள்ள குழந்தைகளின் பிறந்த நாட்களின் போது அங்கு சென்று கொண்டாடினால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று தோன்றியது.

ஐம்பது பேர் கொண்ட ஒரு இல்லம் தேர்வு செய்திருக்கிறேன். நான்கு அல்லது ஐந்து குழந்தைகளின் பிறந்த நாளை நானே கொண்டாடிவிட முடியும். மற்றவர்களை என்ன செய்யலாம்? எந்தக் கவலையும் இல்லை.

நண்பர்கள் இருக்கிறார்கள்.

 ******      **************         ****************

காக்கை இதழ் அச்சுக்குப் போய்விட்டது. அட்டையும் தயாராகிவிட்டது. அப்பாடா என்று ஆசுவாசப் படுத்திக் கொள்ள எத்தனித்தபோது இந்த மண்ணை நேசிக்கிற எந்த ஒரு மனிதனையும் உலுக்கிப் போடுகிற அந்த செய்தி வருகிறது. ”தோழர் மாயாண்டி பாரதி காலமானார்” இந்த மண்ணின் விடுதலைக்காக சற்றேரக் குறைய இருபது ஆண்டுகள் சிறையில் இருந்தவர்.
அப்படி ஒருமுறை சிறைப் படுத்தப் பட்டபோது அத்தோடு விதிக்கப் பட்ட அபராதத் தொகையான ஐம்பது ரூபாயைக் கட்ட சொத்து இருக்கிறதா என்று நீதிபதி கேட்டபோது மீனாட்சியம்மன் கோயிலும், மங்கம்மா சத்திரமும் தனது தகப்பன் சொத்தென்றும், பாரத நாடு தனது பாட்டனார் சொத்தென்றும் கூறியவர். அதற்காக சிறையில் சித்திரவதை பட்டவர்.
தோழர் மாயாண்டி பாரதி சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று கூறி இவர் அளித்த சான்றை ஏற்று ஒருவருக்கு தியாகிகள் பென்ஷன் வழங்கியுள்ளார் நீதியரசர் சந்துரு.
இருபது வருடங்களுக்கும் மேலாக ஜனசக்தியிலும் பிறகு தீக்கதிரிலும் பணியாற்றியவர்.
ஒரு பை நிறைய மிட்டாய்களோடுதான் வீட்டைவிட்டு வேலைக்கு கிளம்புவாராம். வீட்டு வாசலில் இவருக்காக காத்திருக்கும் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்துவிட்டுதான் நகர்வாராம். குழந்தைகளை அப்படி நேசித்தவர்.
மிச்சமிருந்த விரல்களின் எண்ணிக்கையளவு சுதந்திரப் போராட்ட வீரர்களில் இன்னுமொருவரை காலம் களவாண்டுவிட்டது. 
இவர் சார்ந்திருந்த இயக்கத்தை கடுமையாக விமர்சிப்பவர்களும் ஏற்றுக் கொண்ட ஆளுமை இவர்.
அவர்குறித்த எந்தத் தகவலும் பாடப் புத்தகங்களில் இல்லை.
அந்தத் தியாகப் பெருமகனுக்கு அஞ்சலியையும் வணக்கத்தையும் செலுத்தும் அதே வேலையில் அவரை எங்களால் இயன்ற அளவு கொண்டு சேர்க்க அவர் குறித்து தெரிந்தவர்கள் பங்களிப்பை அளித்துதவுமாறு வேண்டுகிறோம்

8 comments:

  1. தகவல் பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  2. தோழர் மாயண்டிபாரதி பற்றி நீங்களும் எழுதுங்கள் தோழர்
    அறிந்து கொள்ளக் காத்திருக்கிறேன்
    தம 2

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் முஜ்யற்சிக்கிறேன் தோழர்

      Delete
  3. வணக்கம் எட்வின்
    மீண்டுமொருமுறை என்னையும் யுகமாயினியையும் நினைவு கூர்ந்ததற்கு நன்றி
    மாயாண்டி பாரதி குறித்து மிக நல்ல பதிவாக “ வரலாற்றில் தடம் பதித்தத் தோழர்கள்” நூலில் உள்ளது. இரண்டு புத்தகங்கள். இரண்டும் கட்சி மறந்து போன அல்லது புறக்கணித்த, கட்சிக்காகவும் கொள்கைக்காகவும் பொருள் உடல் உயிர் கொடுத்த கட்சித் தோழர்களின் வாழ்க்கையைப் பேசுகின்றன. புத்தகம் ( தமிழ்நாடு முழுதும் அலைந்து தகவல் சேகரித்து) பிரசுரித்தவர் மோகனகிருஷ்ணன். எண்: 9884028376. இவர் சரஸ்வதி( சிற்றிதழ்களின் முன்னோடி ( 1959-63) ஜீவாவின் மறுபக்கமாக வல்லிக்கண்ணன் சுட்டியது போல சரஸ்வதியை கங்கணம்கட்டி நிறுத்தவைத்து தாமரையை தொடங்கியது வரலாறு) விஜயபாஸ்கரனின் சகோதரர்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழர்.
      எப்படி இருக்கீங்க?

      தோழர் மோகனகிருஷ்ணனை தொடர்பு கொள்கிறேன். பார்க்க வேண்டும்போல் இருக்கிறது. எப்போது சந்திக்கலாம்.

      Delete
    2. வணக்கம் எட்வின்
      அவசியம் பேசணும்... முக்கியமும்கூட! உங்கள் தொலைபெசி இலக்கம் இப்போது என்னிடம் இல்லை. எப்படி தொடர்புகள் விட்டுப்போகின்றன பாருங்கள்! என் எண் உங்கலிடம் இருக்கும்... இல்லையென்றாலும் 9382708030. அவசியம் அழைங்கள். பேசலாம்

      Delete
    3. அழைக்கிறேன் தோழர். உங்கள் எண் என்னிடம் இருக்கு.

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...