Tuesday, March 3, 2015

கற்கை நன்றே



பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய பத்து லட்சத்தி சொச்சம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றார்கள் என்ற செய்தியை செய்தி ஊடகங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு வெளியிடும் காலம் விரைவில் வரலாம்.

ஆயிரத்து இருநூறு மதிப்பெண்களுக்கு ஆயிரத்து இருநூறு மதிப்பெண்களை ஆயிரத்து இருநூறு மாணவர்கள் பெற்றிருக்கிறர்கள் என்ற செய்தியும் அதனோடே வரலாம்.

இதுபோன்ற செய்திகளைக் கண்டு மகிழ்ச்சியின் உச்சத்தில் மாரடைப்பு வந்துவிடாமல் இருக்க நம்முடைய மனதை பக்குவப் படுத்தி வைத்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

எவ்வளவோ உழைத்தும் எண்பது சதவிகிதம் மதிப்பெண்களைத் தாண்ட முடியாத ஏழாயிரத்தி சொச்சம் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்றும்கூட அதே பக்கத்தின் ஒரு மூலையில் செய்தி வரக்கூடும். இந்தக் காலத்து தோல்வியை விட அப்போதைய எழுபத்தைந்து விழுக்காடு என்பது மோசமானதாக கொள்ளப்படும் காலமாக அது மாறியிருக்கவும் கூடும்.

இவை எல்லாம் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டுதான். ஆனால் இதற்கு நீண்ட காலம் ஆகும், உடனடியாக அச்சப் படுவதற்கு அவசியமில்லை என்று உறுதியாய் சொல்லுமளவிற்கு அடையாளங்களை நம்மால் கல்வி தளத்தில் கண்டெடுக்க இயலவில்லை. இந்த ஆண்டேகூட இது நடந்துவிடவும் கூடும்.

தேர்வு எழுதிய குழந்தைகள் அனைவரும் தேர்ச்சி பெறுவதும்  அதிலும் எழுதிய பத்து லட்சம் குழந்தைகளில் ஒரு ஏழாயிரம் எட்டாயிரம் பேரைத் தவிர அனைவரும் எழுபத்தைந்து சதவிகித மதிப்பெண்களுக்கு அதிகமாய் மதிப்பெண்களைப்  பெறுவதும் நல்லதுதானே. இதில் கவலைப் படுவதற்கு என்ன இருக்கிறது என்றும் எண்ணத் தோன்றும்.

கவலைப் படுவதற்கு ஏராளம் இருக்கிறது. குறைந்த பட்சம், கல்வி குறித்து அக்கறை கொண்டோர் கவலைப் படுவதற்கேனும் அவசியம் இருக்கிறது.

அறுபது விழுக்காடு மதிப்பெண்கள் என்பது முதல் வகுப்பு என்று கொள்ளப் படுகிறது. எழுபத்தைந்து விழுக்காடு மதிப்பெண்கள் என்பது டிஸ்டிங்க்‌ஷன் என்ற முதல் வகுப்பிற்கும் உயரிய நிலையில் வைக்கப்படும். ஆனால் எழுப்பத்தி ஐந்து விழுக்காடு பெற்றவனே தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் காலம் வரும் என்றால் அந்தக் கல்வி முறை அய்யோ என்று போக வேண்டாமா?

எழுபத்தி அய்ந்து மதிப்பெண்கள் பெற்றவர்களைக் கண்டால் நம் காலத்தில் ஒரு பயம் கலந்த மரியாதை வரும். ஆனால் இப்போது அவர்கள் தற்கொலைசெய்து கொள்கிற நிலை வந்துவிடும் அபாயம் இருக்கிறது என்றால் அது ஏன் என்று ஆராயவேண்டாமா?

எழுபத்தி அய்ந்து விழுக்காடு என்பது மதிப்பற்றது. அதை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய இயலாது என்கிற கையறு நிலைதானே இதற்கு காரணம். எனில் எழுபத்தி ஐந்து விழுக்காடு எடுத்தவன் எதற்கும் லாயக்கு அற்றவனா?

முன்பெல்லாம் அறுபது எடுத்தவரெல்லாம் மருத்துவராக, பொறியியல் வல்லுனராக, விஞ்ஞானிகளாக, பொருளாதார வல்லுனர்களாக, தணிக்கையாளர்களாக, தொழிலதிபர்களாக மிளிர்ந்தார்களே, இப்போது எழுபத்தி ஐந்து எடுப்பவனால் அபடியெல்லாம் சோபிக்க இயலாதா என்றால் இயலும். பிறகு ஏன் இந்த அவலம்?

ரொம்பச் சுலுவானது காரணம். எண்பது விழுக்காடு, தொன்னூறு விழுக்காடு நூறு விழுக்காடு என லட்சக் கணக்கான குழந்தைகள் மதிப்பெண்களைப் பெறுவதால் அதற்கு குறைவான மதிப்பெண்கள் பெறுபவர்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று கருதப் பட்டு வாய்ப்புகளை இழக்கிறார்கள்.  ஆக, நிறைய குழந்தைகள் அதிகமாய் மதிப்பெண்களை எடுப்பதால் மதிப்பெண்கள் அவ்வளவாக மதிப்பற்று போகின்றன என்றும் கொள்ளலாம்.

எனில், உற்பத்தி அதிகரித்தால் விலை குறையும் என்கிற வணிக யுத்தியை கல்வி சுவீகரித்துக் கொண்டிருக்கிறது என்பது புலனாகிறது. சமூகத்திற்கான மனிதர்களை உருவாக்குகித் தருகிற கடமையிலிருந்து நழுவி சந்தைக்கான விளைபொருட்களை கல்வி நிறுவனங்கள் உற்பத்தி செய்யத் துவங்கிவிட்டன என்பதே இது நமக்குத் தரும் செய்தி.

கல்வி வணிகப் பட்டால் என்ன விபரீதங்களெல்லாம் நடக்கும் என்று கத்திக் கொண்டிருக்கிறோமோ அவை எல்லாம் உண்மை என்று உறுதிப் பட்டுக் கொண்டே வருகின்றன.

மதிப்பெண்கள் என்பது கல்வியின் அடையாளமாக அறிவின் அடையாளமாக ஊடகங்களாலும் கல்வித் தொழிற்சாலைகளாலும் மிகையாக ஊதிப் பெருக்கப்படும் சூழலில் மதிப்பெண்களின் மரியாதையோ உண்மையில் அப்படி ஒரு உன்னதமான நிலையில் இல்லை என்பதையே சமீபத்தைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

கட் ஆஃப் 197 வாங்கினாலும் நல்ல கல்லூரிகள் கிடைப்பதில்லை என்பதாக புலம்புகிறவர்களை ஏராளமாக நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நல்ல கல்லூரிகள் என்றால் என்ன? என்பது பற்றி நாம் தனியாகத்தான் எழுத வேண்டும்.

சனி ஞாயிறுகளில் கூட வகுப்புகளை வைத்து மாணவர்களைப் பிழிந்து மதிப்பெண்கள் எடுக்க வைத்து வேலையோடு வெளியே அனுப்புவார்கள் என்கிற நம்பிக்கைக்கு பாத்திரமான கல்லூரிகளே நல்ல கல்லூரிகள் என்கிற வரையறைக்குள் வருகின்றன.

பொருள்மயப் பட்ட இந்தச் சூழலில் பெற்றோர்களும் பிள்ளைகளும் இதை எதிர்பார்ப்பது சரிதான். ஆனால் இந்தக் கல்லூரிகள் பெரும்பாலும் வறட்டுத்தனமான பொறியியல் எந்திரங்களையே உருவாக்கித் தள்ளுகின்றன. அதைப் பற்றியோ அல்லது அவ்வாறு பொறியியல் படித்து வெளியே வரும் லட்சக் கணக்கான மாணவர்களில் பெரும்பான்மையோர் வேலையற்று இருப்பதைப் பற்றியோகூட தனியாகத்தான் விவாதிக்க வேண்டும். அதைவிட முக்கியமாக விவாதிக்க நமக்கு சில இருக்கின்றன.

ஒரு காலம் வரைக்கும் 80 விழுக்காடு என்கிற அளவில்தான் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி விழுக்காடு இருந்தது. அப்போது பொறியியல் தேர்ச்சிவிழுக்காடு மிக நன்றாக இருந்தது. ஆனால் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி விழுக்காடு சற்றேரக் குறைய 100 விழுக்காட்டை நெருங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் பொறியியல் தேர்ச்சி விழுக்காடு 50 விழுக்காட்டிற்கும் சற்று கீழே போயிருப்பது உலக மயமாக்கலின் வலையில் பள்ளிக் கல்வித்துறை சாய்ந்ததின் விளைவே ஆகும்.

ஏறத்தாழ 65 விழுக்காடு மதிப்பெண்களோடு பொறியியல் கல்லூரிகளுக்கு வந்தவர்கள் சாதமைகளோடு திரும்பியபோது இப்போது இருநூறுக்கு இருநூறு கட் ஆஃப் எடுத்து வரும் பிள்ளைகளால் இயலாமல் போவது மதிபெண்கள் மற்றும் தேர்ச்சி விழுக்காட்டில் எகிரி நிற்கும் பள்ளிக் கல்வித்துறை தனது கல்வியின் தரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே காட்டுகிறது.

முன் எப்போதையும் விட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் ஆசிரியர்களும் மிக அதிக அளவில் உழைக்கிறார்கள். அலுவர்கள் அலுவலகங்களிலேயே அமராமல் பம்பரமாய் பறக்கிறார்கள். அதிகாரிகளின் கூட்டங்களை வாரா வாரம் உயரதிகாரிகள் கூட்டுகிறார்கள். அதிகாரிகள் ஏறத்தாழ வாரா வாரம் தலைமை ஆசிரியர்களின் கூட்டங்களை கூட்டி அவர்களை முடுக்கிவிடுகிறார்கள்.

தலமை ஆசிரியர்கள் ஆசிரியர்களை முடுக்கிவிட முக்கியமான பண்டிகை நாட்களைத் தவிர ஏனைய நாட்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் பிள்ளைகளுக்கு விடுமுறையே இல்லாமல் வகுப்புகள் நடக்கின்றன. ஆக மாணவர்கள் தொடங்கி உயரதிகாரிகள் வரைக்கும் ஓய்வின்றி உழைக்கவே செய்கிறார்கள். அதில் எல்லாம் யாருக்கும் இரண்டாவது கருத்தே இல்லை.

ஏற்கனவே சொன்னதுபோல் தேர்ச்சி விழுக்காடும் மதிப்பெண்களும் எகிரித்தான் பறக்கின்றன. இவை எல்லாம் இருந்த போதும் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் பள்ளிக் கல்வியில் ஏதோ குறை இருப்பதாக உணர்கிறார். அதனால் பொறியியல் கல்வி மிகவும் பாதிக்கப் படுவதாக கவலை[ப் படுகிறார். பொறியியல் கணிதம் என்கிற ஒரு தாளில் பன்னிரண்டாம் வகுப்பில் கணிதத்தில் இருநூறுக்கு இருநூறு எடுத்து வந்த மாணவர்களில் பெரும்பான்மையோர் தோல்வியுற்றபோது அன்றைய துணை வேந்தார் என்னதான் நடக்கிறது மேல்நிலைக் கல்வியில் என்று நொந்து கொண்டதாக அறிய முடிந்தது.

இதற்குக் காரணம் கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிற நிலையிலிருந்து  மதிப்பெண்கள் பெற வைக்க வேண்டும், ஒன்றுமே புரியா விட்டாலும் தேர்ச்சி பெற வைத்துவிட வேண்டும் என்கிற நிலைக்கு பள்ளிக் கல்வித்துறை சாய்ந்ததுதான் காரணம். ப்ளூப்ரிண்ட்டை கையில் வைத்துக் கொண்டு அதற்கேற்றார்போல் பாடம் நடத்த வந்ததின் மோசமான விளைவு இது. பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தில் பாதியை படித்தாலே 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெறலாம் என்கிற சூட்சுமத்தை இவர்கள் கையெடுத்துக் கொண்டதன் விளைவு இது.

புரிகிற மாதிரி சொல்வதெனில் ஒரு ஆங்கில ஆசிரியர் ஹோமோபோன் (HOMO PHONE) நடத்துவதாகக் கொள்வோம். அவர் ஹோமோ போன் என்றால் என்னவென்று நடத்துவார். ஒரே மாதிரி ஒலிக்கும் இரு சொற்களை எப்படி சரியாகக் கையாள்வது என்று சொல்லித் தருவார். சரியாகக் கற்ருக் கொண்டால் இரண்டுக்கு இரண்டு மதிப்பெண்கள் பெறலாம். தவறாகப் போகும் பட்சத்தில் இரண்டு மதிப் பெண்களும்  போய்விடும்.

உதாரணமாக,

Our PRINCIPAL is a man of PRINCIPLE என்று எழுதினால் இரண்டு மதிப்பெண்கள் கிடைக்கும். இதையே our PRINCIPLE is a man of PRINCIPAL என்று எழுதினால் ஒரு மதிப்பெண்ணும் கிடைக்காது. இதையே our PRINCIPLE is a man of PRINCIPLE என்று எழுதினால் ஒரு மதிப்பெண் கிடைக்கும். ஆங்கில ஆசிரியனும் மாணவரும் இப்போது ஒரு மதிப்பெண் போதும் என்கிற நிலைக்கு வந்து விடுகிறார்கள்.  ஒரு மதிப்பெண் மட்டுமே போதும் என்றால் அதற்கேன் படித்துக் கொண்டு, நடத்திக் கொண்டு. இரண்டு கோடுகளிலும் ஒரே வார்த்தையைப் போடு என்கிற அளவில் சுளுவாக்கிக் கொள்கிறார்கள்.

ஆக எந்த மாணவனும் ஹோமோபோன் பற்றி எதுவும் தெரியாமலேயே ஹோமோபோனுக்கு ஒரு மதிப்பெண் பெற்றுவிட முடியும். இது ஆபத்தானது என்பதை பள்ளிக் கல்வித்துறை உணர்ந்தாக வேண்டும்.

உணராத பட்சத்தில் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் ஒருமுறை பன்னிரண்டாம் வகுப்பு பாடங்களை நடத்த வேண்டும் என்கிற மாதிரியான துணைவேந்தரின் எண்ணத்தை நடைமுறைப் படுத்த வேண்டி வரும்.

படிக்க வைப்பதல்ல கற்பித்தலும் கற்க வைத்தலுமே தங்களின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை இந்தப் புள்ளியிலாவது பள்ளிக் கல்வித்துறை உணர வேண்டும்    

நன்றி: காக்கைச் சிறகினிலே


4 comments:

  1. மதிப்பெண் தருதல் தொடர்பான உதாரணங்கள் நன்றாக இருந்தது. ஈடுபாட்டோடு பணியில் இறங்கும்போதுதான் அம்முயற்சி வெற்றி பெறும். உத்திகள் மாறினால்தான் மேம்படமுடியும் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டிய நேரமிது.

    ReplyDelete
    Replies
    1. மாற்ற வேண்டும் தோழர்

      Delete
  2. நல்ல ஆய்வு அய்யா மதிப்பெண்களுக்காக ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு அதிலிருந்து ஒரு மாற்றாக மாணவர் திறன் மேம்பாடு முக்கியமாக கருதப்பட வேண்டும் அதற்க்கான மாற்று யோசனைகளை தங்களைப் போன்ற அனுபவம் மிக்க ஆசிரியரிடம் இருந்து எதிர்பார்கிறேன்! :)

    ReplyDelete
    Replies
    1. முதலில் மிகச் சரியானதும் நேர்மையானதுமான தங்களது பார்வைக்கும் வேண்டுகோளுக்கும் நன்றி.
      பள்ளிக் கல்வி உருப்பட வேண்டுமெனில் Valuation என்கிற நிலையிலிருந்து evaluation என்கிற நிலைக்கு கல்வியை நகர்த்திவிட வேண்டும். பிறகு அடுத்தடுத்து நகர்த்த வேண்டும்.

      நீங்கள் கேட்டதைஉங்கள் உதவியோடும் செய்வோம்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...